கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2)

இதற்குமுன்..

நாளேடு விற்குமந்த கடைக்காரன் ஜானகிராமனின் படைப்பை அங்கனம் மதிப்பற்று பேச மனமுடைந்து போனார் அவர்.

யார் தான் மதித்தார் என் படைப்பை’ என்றொரு வேதனை அவருக்கு மேலிட்டது. இப்போதெல்லாம் அதனால்தான் எழுதுவதை எழுதியவாறே போட்டுவிடுகிறார். புத்தகத்தைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. குப்பைப் போல’ விரக்தியுற்று அவரைச் சுற்றிக் கிடக்கும் படைப்புக்கள் ஏராளமாகயிருந்தன. ஆனால், அவர் இருக்கிறாரா இல்லையா அல்லது என்ன செய்கிறார் என்ன ஆனாரென எந்த கவலையும் அவரைப் பற்றி இந்த சமூகத்திற்கு கிடையாது என்பதே மிக வருந்தத் தக்கது.

எழுதுவதோடு நில்லாமல், ஒரு அங்கிகாரம் குறித்த தன் எதிர்பார்ப்பை அவ்வப்பொழுது அரசின் பார்வைக்கு அனுப்பவும் அவர் தவறவில்லை. வெளிவந்துள்ள தன் படைப்புக்களை எப்பாடுபட்டாவது அரசின் பரிசுகுறித்த தேர்விற்கும் இன்னபிற பார்வைக்கும் அனுப்பிவைப்பார். இப்போதைக்கு மக்களிடம் கொண்டு செல்ல இயலாவிட்டாலும், தன் படைப்புக்கள் எதிர்காலத்தில் பெறும் விருதுகளால் மீண்டும் திசைதிருப்பப் பட்டு மக்களை தன்பக்கம் பார்க்கவைக்குமோ’ எனும் எதிர்பார்ப்பு அவருக்கு மிகையாயிருந்தது.

தன் புத்தகங்களின் மதிப்பு என்றேனும் ஓர்நாள் உலக சுவற்றில் பொறிக்கப்படுமென்று முழுமையாய் நம்பினார். ஆனால் இக் கடைக்காரன் அந்த நம்பிக்கையினை எல்லாம் தகர்த்தெறியும் வகையில் பேசியது அவருக்கு மிகுந்த வலியை தந்தது. அப்போதும் தன் மனிதப் பண்பில் தான் வழுவலாகாது என்றெண்ணி – அவனைப் பார்த்து புறப்படுவதகச் சொல்லி –

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அந்த கடையிலிருந்த புத்தகங்களையெல்லாம் சேர்த்து வாரிக்கொண்டு அவன் கைகாட்டிய அந்த பேப்பர் கடைக்குப் போக, அந்த பழைய பேப்பர் வாங்கும் கடைக்காரன் அவரைப் பார்த்ததுமே ஓடிவந்து அத்தனை மரியாதை செய்தான். அவர் வந்துவிட்டதை எண்ணி இங்குமங்குமென தவித்தான், மனதின் வலிக்கு மருந்தாக ஏக மரியாதை செய்தான். கையெடுத்துக் கும்பிட்டான். கைபிடித்து அவரை உள்ளே அழைத்துவந்து இருக்கை தட்டி அமரவைத்து, அப்படியெல்லாம் எழுதிய புத்தகங்களை இங்கே போடவேண்டாமய்யா, நூறு ரூபாய்தானே நான் தருகிறேன் ஐயா’ என்று சொல்லி ஒரு நூறு ரூபாய் புதுத் தாளினை எடுத்து அவரிடம் நீட்ட அதை கையில் வாங்குகையில் கத்தி அழுதேவிட்டார் ஜானகிராமன்.

“என்னய்யா இது எத்தனைப் பெரிய படைப்பாளி நீங்க, நீங்கபோய் இப்படி கலங்கலமா, எங்களுக்கு நம்பிக்கையை சொல்லிக்கொடுத்துவிட்டு நீங்க கலங்கினா எப்படி ஐயா” என்றான்.

அவரால் பேசமுடியவில்லை. கைதுண்டு வைத்து முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று கத்தி அழுதார். இதுவரை அடக்கியடக்கி வைத்திருந்த பட்ட அவலங்கள் அத்தனையோடும் வாழ்வின் இன்னபிற துக்கங்களும் துயரங்களும் ஒன்றுசேர்ந்துக் கொள்ள, அவை மொத்தமும் உலகைமறந்து அழையாய் உடைத்துக் கொண்டு வந்தன அவருக்குள்ளிருந்து.

அவன் மீண்டும் அவரின் அருகில் சென்று தோள்மீது கைவைத்து வெளியில் அமர்ந்துள்ளீர்களே ஐயா’ என்று வருத்தப் பட்டு, குனிந்து அவரின் கைப்பிடித்து எழுப்பி வீட்டினுள்ளே அழைத்துபோய் ஒரு நாற்காலியை காட்டி மனைவியை அதைத் துடைக்கவும் செய்து அவரை அதில் அமருங்கள் என்று சொல்லி, மிகந்த பணிவோடும் பாசத்தோடும் அமரவைத்து ஒரு குவளை தண்ணீரையும் குடிக்கத்தர, வங்கிக் குடித்துவிட்டு, மீதியை அடக்கமாட்டாமல் அடக்கி தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு நன்றியுடன் அந்த பழைய புத்தகங்களை விற்கும் கடைக்காரனைப் பார்க்க, அவன் தன் தந்தையை பார்ப்பது போல் அவரை மிகுந்த கனிவுடன் பார்த்து “என்னய்யா இது, இத்தனை வருத்தத்தை மனதில் அழுத்தி வைத்திருந்தா உடம்பு என்னத்துக்காவுறது, உங்க பிள்ளைங்க யாருமில்லையா?” என்று கேட்க –

“இருக்காங்கப்பா, ஒரு மக இருக்கா(ள்), எனக்கு ஆம்பளை பசங்க கிடையாது” என்று பாதி பேசியும் பாதி கை ஆட்டியும் சொல்ல,

“அவுங்க உங்கக் கூட இல்லையா இப்போ? வயசாயி போச்சே, யாரையாவது கூட வைத்திருக்கலாமே”

“என்னோட வாழ்க்கை அவுங்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது தம்பி, என் பசியோ பட்டினியோ அது என்னோட போவட்டுமே”

“பெத்த மகள் தானேய்யா கூட இருந்தா தப்பில்லையே”

“தப்பில்ல தம்பி ஆனா வாழ்க்கை வித்தியாசப் படும். அவர்கள் வாழ்கையை அவர்கள் முடிவு செய்து, அவர்கள் விரும்பின மாதிரி சுதந்திரமா வாழ்ந்துக் கொள்ளட்டுமேன்னு நான்தான் அவளை தூரமா கட்டிக்கொடுத்துட்டேன். பொண்ணுவேறப் பாருங்க, மாப்பிள்ளைக்கு நாம சிரமமா இருந்திடக் கூடாதே. அவள் அவருக்கு மனைவியாயிருந்தாலும், நாம அவருக்கு இரண்டாம்பட்ச மனிதர்கள் தானே”

“இருந்தாலும் இப்படி உங்களை பார்ப்பது வருத்தமாத் தாங்கையா இருக்கு”

“வாழ்க்கை இப்படியெல்லாம்தான். அதை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் ராஜா. அடுத்து நடக்கப் போவதை இதென்று தெரியாமலே ஆழக்கிணற்றில் நம்பி கால் வைப்பவர்களில்லையா நாமெல்லாம்? ஆனால் என் அழைக்கான காரணம் இந்த நூறு ரூபாய் மட்டுமல்ல, அது பல வருடத்து அழை தம்பி.

என் மகள் எங்கள் வீட்டைவிட்டு என்று போனாளோ அன்றிலிருந்தேக் கனத்துப் போன மனதின் ஏக்கமது. பிறந்ததிலிருந்து வீட்டைச் சுற்றிச் சுற்றி அப்பா அப்பா என்று வந்தவள் திடீரென ஓர்நாள் வீட்டை விட்டுப் போவதென்பது’ உயிரை பெயர்த்து அவளோடு கொண்டுபோவதற்குச் சமம்.

அவள் உடனில்லாத வாழ்க்கை எங்களுக்கு ருசிக்கவே இல்லை ராஜா. ஆனால் நம் சமூகக் கட்டமைப்பினை யாரால் ஒருநாளில் மாற்றிடமுடியும். இதையெல்லாம் எழுதினால் யாருக்குப் புரிகிறது?”

“ஒருநாள் புரியுங்கையா, உங்களைப் போன்றோரின் கண்ணீரில் நனைந்து இந்த பூமியுருண்டை ஒருநாள் வெடித்தேனும் போகும், அன்று எல்லோருக்கும் புரியும்”

“முன்பொரு புத்தகத்தில் ஒரு மகள் தன் அம்மாவை நினைத்து அழுவது பற்றி “என் தாய் வீடு” என்று ஒரு கவிதை எழுதியிருக்கேன், படித்திருக்கீங்களா?”

“இல்லை ஐயா, எந்த புத்தகமென்று சொல்லமுடியுமா”

அவர் தன் பைக்குள் கைவிட்டுத் துழாவி அடியிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்தார். சில பக்கங்களைப் புரட்டி அந்த கவிதைக்கு வந்தார். அவரின் இதழ்கள் அசைந்து அனிச்சையாய் அக்கவிதையை வாசிக்கத் துவங்கின. சோகம் நிறைந்த அவரின் குரலில் கேட்போரின் மனதை தைக்கும் ஈட்டியென இறங்கின அக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும் –

என் தாய் வீடு

முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்;

என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாத தவணையில் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்;

முடியாவிட்டாலும் எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;

உதவி செய்யப் போனால்
வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்கென்று செய்துதர யாரிருக்கா?
என்பாள்.

என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்;

இப்போது எனக்கென்று யாருமேயில்லை.

நானெப்படி இருக்கேனோ என்று
வருந்த அம்மா போல் யார் வருவா???

அம்மா இல்லாத வீடென்றாலும்
எப்பொழுதேனும் அங்கேச் சென்று
அவள் இருந்த இடத்தை, தொட்ட பொருட்களை யெல்லாம்
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
எனக்கென்று அங்கே ஏதேனும்
வாங்கி வைக்காமலாப் போயிருப்பாள், என்று நினைப்பேன்.

ஒரு சொட்டுக் கண்ணீராவது
விட்டுத் தானே போயிருப்பாள்’

இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
எனக்கென்று அவள்
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
கண்ணீரேனும் ஈரம் காயாமல் இருக்காதா? என்றுத்
தோன்றும்.

ஆனால் –
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
அம்மா இல்லாத அந்த வீட்டில்
உனக்கென்னடி வேலை யென்று!!
                        *—————-*

அவர் வாசித்து நிறுத்த, அந்த பேப்பர் கடைக்காரனின் அருகில் நின்றிருந்த அவனின் மனைவி கண்களை கசக்கிக் கொண்டு வீட்டினுள்ளேப் போனாள்.

—————–+++——————+++——————–
தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2)

 1. nathnaveln சொல்கிறார்:

  கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

  Like

 2. தனபாலன் சொல்கிறார்:

  மனதை நெகிழ வைத்து விட்டது.
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  சிந்திக்க :
  “இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?”

  Like

 3. வித்யாசாகர் சொல்கிறார்:

  எழுத்துக்கு உணர்வென்று ஒரு முகமும், சிந்திக்க தூண்டுபவை என ஓர் உயிரும் உள்ளிருந்தாலும், அதற்குப்பின்; வெளியில் தெரியாத கண்ணீரும் உண்டு உறவுகளே…

  Like

 4. பிங்குபாக்: கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s