கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)

ட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் இரவுகளில் சமூகத்தின் விடிவையெண்ணி உறக்கம் தொலைத்த எழுத்தாளர் ஜானகிராமனின் மனைவிக்கு வயது அறுபத்துமூன்று. லட்சலட்சமாய் சம்பாதித்தபோது காலம் துணைநிற்குமென்று நம்பி, சம்பாதித்த பணத்தையெல்லாம் புத்தகங்களாய் அச்சிட்டு வீடெல்லாம் நிரப்பியவருக்கு இருந்த ஒரே மகளும் திருமணமாகி மறுவீடு போக கட்டியழக் கொட்டிக்கிடந்ததெல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே.

தான் செய்துவந்த மேலாளர் பணியைக் கூட விட்டுவிட்டு, சமூகம் பற்றி எழுதுவதே தன் தலையாயக் கடமையென்று எழுத்துலகிற்கு வந்தவர். விற்றதை விற்காததாய் சொல்லி சில பதிவர்கள் தருமந்த சொற்ப பணத்தையும் இல்லையென்று வந்தோருக்குக் கொடுத்துவிட்டு, பேருக்கு சொத்தென இருந்த மணையில் முக்கால்வாசியை விற்று மகளுக்கு திருமணத்தையும் நடத்திவிட்டு, மூன்றுவயது இளையவளான தன் அன்பு மனைவிக்கு சொச்ச இடத்தில் ஒரு ஓலைக் குடிசையினையும் கட்டி’ அதில் போதிய உணவற்று உடையற்று’ இப்போதெல்லாம் வெறும் நம்பிக்கையில் நாட்களை கடப்போர் வரிசையில், தன் வாழ்வையும் சேர்த்துக் கடப்பவர் இந்த எழுத்தாளர் ஜானகிராமன்.

காலத்தின் கொடூரம் பாருங்கள், தன் மனைவியின் நோயிற்கு மருத்துவம் பார்க்கக் கூட வழியில்லாமல் போன நிலையில், இன்றவரின் மனைவிக்கு நெஞ்சிவலி அதிகாமகிவிட மருத்துவமனைக்குக் கூட்டிப்போகவும் வழியின்றி மருந்து மட்டும் வாங்கிவருவதாக சொல்லிவிட்டு, ஒரு பை நிறைய தன் புத்தகங்களை வாரிப் போட்டுக்கொண்டு சென்னையின் ஒதுக்குப்புறத்திலுள்ள அந்த கிராமத்திலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள அந்தப் பேரூரின் புத்தகக் கடையை நோக்கிச் செல்கிறார்.

எழுத ஆரம்பித்தபோது பை பையாய் தன் புத்தகங்களை தூக்கிக் கொண்டு கடை கடையாய்த் திரிந்தவருக்கு நடக்கவே கால்வலிக்குமிந்த முதிர்ந்த வயதில் ஒரு பை நிறைய புத்தகம் சுமப்பது கடினமாகயிருந்தது. காலையில் கருந்தேநீரும் மதியம் இரண்டு சோளமும் கிழங்கும் சுட்டு மனைவிக்கு தந்துவிட்டு மீதம் இருந்ததைத் தின்றவருக்கு தன் பசியை வெளியில் காட்டிக்கொள்ளக் கூட முடியாத ஓர் சூழ்நிலை இருந்தது.

சோளமும் கிழங்கும் தின்றதிலிருந்தே மனைவிக்கு நெஞ்சிவலி கூடிவிட மருந்து வாங்க தன் புத்தகத்தை சுமந்தவராய் நடந்தே அந்த கடை முன் வந்து நின்றார். புத்தகப் பையை கீழே வைத்துவிட்டு கடைக்கு வெளியேயிருந்த குடத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு கடைக்காரரைப் பார்க்கிறார், அவன் இவரைக் கண்டதும் ஏதோ கவனியாதது போல் வேறு பக்கம் திரும்பி வேறு வேலை பார்த்துக்கொண்டிருந்தான். நடுத்தர வயது தான் அவனுக்கு. ஜானகி ராமன் அவனுக்கு அப்பா வயதைக் கூட நெருங்கியிருப்பார், என்றாலும், மரியாதை நிமித்தம் சிலருக்கு யாரையுமே அண்ணா என்று அழைப்பதே அவ்வட்டாரங்களில் பழக்கமாயிருந்தது. அவனும் அம்மாதிரியே அவரை அண்ணா என்றே அழைத்திருந்தான்.

“வணக்கம் தம்பி, நலமா இருக்கீங்களா?”

“ஆங்… வணக்கொம்ணா, ஏதோ போதுணா”

“வியாபாரம்லாம் நல்லாப் போகுதா?”

“என்ன பெரிய வியாபாரம், பெங்களூர்ல கடை போட்டு நல்லா ஓடுச்சாம் அதை நம்பி நாமலும் போடுவோமேன்னு இங்கே போட்டேன்”

“அப்புறமென்ன சுத்துப்பட்டு எல்லாம் நீங்கதானே விக்கிறீங்க?”

“எண்ணத்த வித்தோம், பெங்களூரை நம்பி சென்னையில கடைப்போட்டது எங்க தப்பு. இங்க புத்தகம் விக்கிறதுக்கு நாலு கடையில போயி சுலபமா டீ ஆத்திட்டு வந்துடலாம்”

“நெசமாவா???!!”

“வேறென்னணா, நாலு நின்ன இடத்திலேயே படிச்சிட்டுப் போகும், ஒன்னு அதுலையும் கொஞ்சம் விலை குறைச்சி குடேன்னு கேட்கும், ஒன்னோ ரெண்டோ சொன்னமாதிரி பணம் கொடுத்து வாங்கும், அதுலயும் ஒரு தினுசிருக்கு மூணு எடுத்துட்டு ஆள் பார்க்கலைன்னா ஒன்ன பையில போட்டுட்டு மீதியை மட்டும் ரெண்டுன்னு கணக்கு காட்டும், நம்ம பொழப்ப சொல்லுணா, தெரியாத் தனமா வந்த தொழில்ணாயிது”

“இல்லப்பா நம்ம புது புத்தகம் ஒன்னு அப்போ வெளிவந்து பெரிய அளவுல பேசப் பட்டதா சொன்னேனில்லையா அதுல ஒரு பத்தோ இருபதோ உங்க கடைக்கும் போடலாமேன்னு கொண்டுவந்திருக்கேன்”

“அப்படியா!! பத்து வேணாம், வேணும்னா ஒரு அஞ்சு கொடுத்துட்டுப் போங்க, போட்டுவைக்கிறேன், ஒரு மூணு மாசம் கழிஞ்சிவந்து பாருங்க வித்தாக் காசுதரேன் இல்லைன்னா இல்லை”

“ஒரு அவசரம் தம்பி என் மனைவிக்கு…..”

“அய்யய்யோ.. இந்தாங்க, நீங்க சாந்திரம் வந்து அண்ணனைப் பாருங்க”

“இப்போ அவசரமா ஒரு நூறு ரூபா வேணும் ராஜா..”

“வரவங்க அவசரத்துக்கெல்லாம் உதவ நானென்ன சாமி பைனான்சா நடத்துறேன், நாலு பேப்பர் வித்தாதான் எனக்கே காசு. அதுலயும் நீங்க ஏதாவது காதல், கட்சி, அரசியல்னு திகுதிகுன்னு எழுதினாலும் பரவாயில்லை, ஏதோ விக்கும்னு ஏலம் போட்டாவது வித்துடலாம். அப்படியே படிக்கத் தெரியாதவன் வாங்கினாக் கூட, அவனுங்க கேர்ள் பிரண்டுக்கு பரிசா கொடுத்துட்டுப் போவானுங்க, நீங்க என்னாடான்னா வாழ்க்கை’ தானம்’ தர்மம்னு எழுதுறீங்களே, யார்னே வாங்குவா இதலாம்? சும்மா இங்கப் போட்டு இடத்தை அடைக்கச் சொல்றீங்களா?”

பாவம் ஜானகிராமன். சுள்ளென்று உரைத்தது அவருக்கு. அவன் சற்று கூச்சல் போட்டே பேசினான். சுற்றிமுற்றி இங்குமங்கும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துக் கொண்டார். வெட்கமாக இருந்தது. எத்தனை இரவுகளைத் தொலைத்து எழுதிய புத்தகமிது, ஒரு நாளேடு விற்பவனே இப்படி’ புத்தகத்தின் தரம் பார்க்காமல் குறைவாக எடைபோட்டுப் பேசுவது வருத்தமாக இருந்தது. ஆனால் மனைவிக்கு முடியலையே, பணம் வேணுமே, இவனை விட்டால் இன்னும் ஐந்து மைல் தூரத்திற்கு இங்கே புத்தகம் வாங்குமளவிற்கு வேறெந்த கடையுமே கிடையாதே, வேறென்ன செய்ய, பொறுத்துக்கொண்டார்.

கருணை கேட்கும் முகத்தோடு அவனைப் பார்த்து – “நீங்க சொல்வதை என்னால் எதிர்க்க முடியாது தம்பி, விக்கிறவங்க நீங்க, உங்களோட வருத்தத்தை சொல்றீங்க, வேணும்னா என் காதல் புத்தகம் இருக்கே ‘சிங்காரி”ன்னு ஒன்னு அதை கொண்டு வரவா?”

“கொண்டுவந்து????”

“ஒரு நூறு ரூபாய் கொடுங்க போதும், இருபது புத்தகங்கள் தரேன், விற்கலைன்னா பிறகு வந்து பணம் கொடுத்துட்டு புத்தத்தை திரும்ப எடுத்துக்குறேன்”

“இல்லண்ணா, அதலாம் சரிவராதுண்ணா, நீ மின்ன போட்டுப் போன புத்தகங்களே அப்படியே இருக்கு, வேணும்னா அதையும் தரேன் கொண்டுபோய் அதோ அங்க நாலு கடை தள்ளியிருக்கே அந்த பழைய பேப்பர் கடைல போடு, எடைபோட்டு உடனே காசு தருவான்”

ஜானகிராமன் வெடுக்கென அந்தக் கடைக்காரனை நிமிர்ந்துப் பார்த்தார். தன் எழுதுகோலால் தன்னைக் குத்தி இங்கேயே மாய்த்துக்கொண்டாலென்ன என்றுத் தோன்றியது. கொடுக்கும்போது சிரிப்போடு வாங்கிக்கொள்ளும் சமுகம்’ இல்லையென்று உதவிக்கு வந்தால் இப்படித்தான் நன்றிமறந்து பேசுமோ’ என வருத்தம் வந்து நெஞ்சடைக்க, கண்கள் தானே கலங்கிற்று.

—————–+++——————+++——————–
தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)

  1. தனபாலன் சொல்கிறார்:

    அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    Like

  2. SHAN NALLIAH NORWAY சொல்கிறார்:

    GREAT…BOOKS BUYING COOPERATIVES…MAY BE A SOLUTION…!!! WRITERS+READERS+SELLERS+GOVT LIBRARIES CAN COOPERATE!

    Like

  3. பிங்குபாக்: கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

  4. nathnaveln சொல்கிறார்:

    வேதனையாக இருக்கிறது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s