கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)

இதற்கு முன்..

ரு கடிதம் தாமதமாய் கிடைத்ததால் முடிந்து போனோரின் கதையெல்லாம் ஏட்டிலும் வராமல், எட்டி தபால்நிலையத்தின் கழுத்தையும் பிடிக்காமல், பட்டமரம் போல நம்மால் கண்டுகொள்ளப் படாமலே விடப்பட்டுள்ளது.

காய்ந்த மரங்களின் அடிப்பச்சை தொலைந்தபின்னும் அதன் மீது எழுதப்பட்ட எத்தனையோ உயிர்களின் வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிந்துக் கொண்டாயிருக்கிறது? எரிக்க கட்டைக்காகும் எனும் வரையிலான ஒரு சுயநலம் மட்டுமே காய்ந்த மரத்திற்கும் நமக்கும் இடையே இருந்துக் கொண்டிருக்கும் புரிதலாகயிருக்க –

ஜானகிராமனுக்கு அனுப்பப் பட்ட அந்த கடிதம், சென்னையை விட்டு சற்று ஒதுங்கிய தூரத்துக் கிராமம் அவர் வசிக்கும் கிராமம் என்பதால் டில்லியிலிருந்து வர தாமதமானதாகவும், உடன் இன்றும் ஒரு தந்தி அஞ்சல் வந்துள்ளதாகவும் சொல்லி இரண்டையும் தபால் காரர் கொடுத்துச் சென்றார்.

அதை வாங்கிப் படிக்கப் படிக்க கண்களிலிருந்து தானாக ஆனந்தக்கண்ணீர் தாரைதாரையாய் வடிந்தது ஜானகிராமனுக்கு. ஆங்கிலத்தில் மிக நல்ல புலமை பெற்றவர்கள் ஜானகிராமனும் அவரின் மனைவியும். எனவே இருவரும் மாறி மாறி படித்துவிட்டு மகளிடம் தர, அவளும் படித்துவிட்டுத் தன் தந்தையை ஓடிவந்து பெருமையோடு கட்டிக் கொண்டு அழுதாள்.

அத்தகைய மகிழ்வஞ்சலாக இருந்தது அந்தக் கடிதம். வாழ்நாள் சாதனையாளனுக்குக் கொடுக்கும் ஜனாதிபதி விருதினை அவருக்குக் கொடுக்கயிருப்பதாகக் கூறி’ இந்தக் கூரை வீட்டு எழுத்தாளனுக்கு வந்த தந்தி அது.

தந்தி மற்றும் கடிதத்தின் படி, உடனே இன்றே புறப்பட வேண்டுமென்றும், சென்னையிலிருந்து டில்லி வந்து சேர இத்தனை மணி நேரம் ஆகுமென்றும், வந்து டில்லியில் எங்கு தங்கவேண்டும், விழா நேரம் இன்னது, விவரங்கள் இன்னது என்றெல்லாம் விவரமாக எழுதி, விழா அழைப்பிதழும் வைத்து, சென்னையிலிருந்து வர பயணச்சீட்டும் முறையாக அனுப்பியிருந்தனர், அரசு சார்ந்த அந்த விருதின் குழுவினர்.

ஆனால் காலசுழற்சியைப் பாருங்கள், ஒரு விருதென்பது ஒருவரை வளர்ப்பதுதானென்றாலும் அது இவரின் வாழ்வில்மட்டும் முரணாக அமைந்துபோனதை வேண்டுமெனில் விதியென்று சொல்லி தேற்றிக் கொள்ளலாம்.

ஆக, மடலின் துரிதப் படி, வேறு வழியின்றி – தன் நோயுற்ற மனைவிக்கு மருத்துவம் பார்க்கக் கூட இயலாதவர் ‘ஊரிலிருந்து வந்த மகளிடம் தன் மனைவியை ஒப்படைத்துவிட்டு விருது வாங்க புறப்படுகிறார்.

வாழ்வின் இன்ப-துன்பங்கள் எல்லாமே அவருக்கு அவள் மட்டுமாகவே இருந்தபோதும் இதை அவரால் மறுக்கமுடியவில்லை. காரணம், மனைவியும் அதற்கேற்றார்போல் தன்னை வலிமைப் படுத்திக் கொண்டு போய்வாருங்கள் என்று கெஞ்சத் துவங்கிவிட்டாள்.

கண்ணீர் மல்க அவரின் கையை பிடித்துக் கொண்டு ‘தனக்கொன்றும் ஆகாது போய்வாருங்களென்றும், இத்தனை வருடத்தின் காத்திருப்பு இதுவெனவும், உலகறியப் போகும் ஒரு தனி மனிதனின் உலகம்சார்ந்த கனவிது என்றும், ஒரு இறுக்கமான நம்பிக்கையை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்கும் தருணமிது விட்டுவிடாதீர்கள் என்றும் தைரியம் சொல்லி அனுப்பிவைக்கிறாள்.

“அப்படி ஒருவேளை ஏதேனும் எனக்கு நேரின் உடனே அழைக்கிறேன், ஆனால் ஒரு முறை அழைத்தால் கூட உடனே பேசுங்கள்” என்கிறாள்.

“நீயிருக்கும்வரை மட்டுமே நானிருப்பேன் ஜானகி, நீயில்லா உலகில் எனக்கு ஒரு நொடியும் வேலையில்லை, உன் உயிர்பிரிந்தால் என் உயிரும் பிரியும், நான் உன் ராமன், உன் உயிரோடு மட்டுமே ஒட்டியுள்ள ராமன் ஜானகி, இந்த ஜானகியின் ராமன் நீயின்றி ஒரு கணமும் இருக்க மறுப்பேன்’ இது இயற்கை என்றோ செய்திட்ட தீர்மானம் இல்லையா” கண்ணீர் பெருகி வார்த்தையுடைந்து அவர் அவளை நோக்கிக் கேட்க, அவரின் கைகளை எட்டி அவள் இறுகப் பிடித்துக்கொள்கிறாள். அந்த ராமனின் ஜானகிக்கு கண்களிலிருந்து இத்தனை வருடத்து வாழ்வும் கண்ணீராய் வடிகிறது.

என்னதான் ஆனாலும் இவர்களுக்கென்று அதை தட்டிக் கேட்கவோ நலம் விசாரிக்கவோ வேறு யார் இருக்கிறார்கள்? இதுபோன்ற ஏழ்மைக் குடிகளுக்கு உதவ எந்த பணக்காரக் கடவுளும், உடனே வாசல் திறந்துவந்து அழும் கண்ணீரை துடைத்துவிடுவதில்லைதானே..? அவர்களுக்குள்ளே அவர்களாகவே அவர்கள் எழுந்தோ விழுந்தோ பின் தனது வாழ்வை நேற்படுத்தியும் முரண்படுத்தியுமோ வாழ்ந்து கொள்கிறார்கள். அது பாவமாகவும் பிழைக்கான பலனென்றும் யாராலோ எதற்கோ பின்னாளில் கணக்கிட்டுக் கொள்ளப்படுகிறது. அப்படி ஜானகிராமனும் அவரின் குடும்பமும் கூட அவர்களுக்குள்ளாகவே அவர்களை ஒருவரை மாற்றியொருவரென ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர்.

மகளும் தாயும் தந்தையுமாய் அழுத அவர்களின் சப்தமெலாம்’ நிமிடங்களைக் கடந்தும் அந்தக் கூரைவீட்டின் அரை வெளிச்சத்தில் மீந்த இருட்டின் நெருக்கத்தோடு அடுத்தடுத்த கட்ட நகர்வாய் கலந்து போகிறது.

ஒரு கட்டப் பொழுதில், அவரவர் விலகி அவரவர் வேலையை பார்க்கின்றனர். மெல்ல மெல்ல நேரம் நகர்ந்து அவர்கள் அவரை வழியனுப்பிவைக்க தக்க ஏற்பாடுகளை செய்து, இதோ.. ஜானகிராமன் புறப்பட்டு, ரயில்நிலையம் வந்து, தனக்கான சீட்டினைப் பிடித்து வீட்டைப் பற்றி நினைத்தவாறே அமர்ந்து கொண்டுள்ளார்.

ரயில்  புறப்படயிருக்கும் பதைபதைப்பும், உடன் க்க்கூ….. எனும் சப்தத்தையும் முழங்கிக் கொண்டு ரயில் நிற்க, அதன் பக்கவாட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு அருகில் நிற்போர், சாய்ந்துநிற்போர் எல்லாம் அங்கிருந்து விலகி ஒதுங்கி தூரப் போயினர்.

சிலர் ஓடிவந்து எட்டி ரயில்கம்பி பிடித்து வாசலில் ஏறிநின்று தலைமுடி தடவி சரிசெய்துக்கொண்டனர். குருவிகள் ரயில் நிலையத்தின் நீண்ட வளாகத்தில் வேயப்பட்டிருந்த இரும்புக் கூரையிலிருந்து தொங்கும் மின்விளக்குகளிலிருந்து தாவி ரயிலின் ஜன்னலுக்கும், ஜன்னலிளிருந்துத் தாவி மின்விளக்குகளுக்குமென பறந்து கொண்டிருந்தன.

காகங்கள் சில வெளியே தரையில் விழுந்து கிடக்கும் உடைந்த அரையுணவுப் பொருட்களை பொறுக்கித் தின்றுகொண்டிருந்தன. ஜானகிரமனுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிந்து தன் கன்னத்தின்மீது வெற்றியின் வெப்பமென வடிகிறது.

அதைத் துடைக்கும் எண்ணம் கூட இன்றி தன் ஏதேதோ நினைவுகளில் மூழ்கிக் கொள்கிறார் அவர். வயோதிகம் ஆங்காங்கே அவருக்கு நிறையவே வலிக்கத் துவங்கியது. அவைகளை எல்லாம் பொருத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவரின் எண்ணமெல்லாம் விரிந்து அந்த விருது கொடுக்கும் இடத்தை நோக்கி செல்கிறது.

‘எனக்கு விருது கிடைக்கப்போகிறது. என் இத்தனை வருட உழைப்பிற்கான, என் நம்பிக்கைக்கான அங்கீகாரம் கிடக்கப் போகிறது. ஆனால் இது எனக்கான மதிப்பல்ல, என் எழுத்திற்கான மதிப்பு. கடவுள் என் படைப்பிற்கு அருளிய வரம். அதை பத்திரமாக கொண்டுசென்று தக்கோரிடம் சேர்த்துவிடவேண்டும். யார்யாருக்குக் கொடுக்க இயலுமோ அவருக்கெல்லாம் கொடுத்துவிடவேண்டும். அது என் பொறுப்பு, அதற்குத் தான் போகிறேன் நான், அதற்குத் தான் போகிறேன் நான், வேறு எந்த மாயைக்கும் மயங்கியல்ல’ என்று தனது எண்ணத்தை அழுத்தமாக தன் மனதிற்குள் இருத்திக்கொண்டிருக்கையில், இடையே மாப்பிள்ளையின் நினைவுகளும் திடீரென வந்து இடை புகுந்து கொள்கிறது. ஆம் அது ஒரு எதிர்பாராது நிகழ்ந்த ஒரு மனநிறைவு மிக்க செயல். ஜானகிராமனின் தற்போதைய வாழ்க்கைக்குக் கிடைத்த அவருக்கான ஒற்றை சந்தோசமது.

இங்ஙனம் விருது பற்றியும், டில்லிக்குப் போகவேண்டியுள்ளது என்பதும் மாப்பிள்ளைக்கு அறியவர, முதலில் இப்பேற்பட்ட ஒரு நிலையில் ஜானகியம்மாவை தனியே விட்டுவிட்டுப் போகும் நிலை வருகிறதே என்றொரு வருத்தம் மேவிட்டாலும், இது ஜானகிராமனின் உழைப்பிற்கு கிடைத்த ஒரு வெற்றியும் என்பதை மனதில் எண்ணி ஓடிவந்து அவரைக்கட்டியணைத்து, பாராட்டி, பாராட்டியதோடு நில்லாமல் ‘நீங்கள் ஒரு பெரிய படைப்பாளி, நீங்கள் வென்றுவிட்டீர்கள், உங்களின் வெற்றிக்கு என் மரியாதையிது’ என்றுச் சொல்லி அவரின் காலிலும் விழுந்து தொட்டு வணங்கிய மாப்பிள்ளையை எண்ணி எண்ணி பூரித்துப் போனார். நிறைவில் மீண்டுமொரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஜன்னல் கம்பியில் பட்டுத் தெறித்தது.

திடீரென ஐயோ இங்கே மாப்பிள்ளை நின்று கொண்டிருந்தாரே என்று நினைவில் வர, கண்களைத் துடைத்துக் கொண்டவராய் நிமிர்ந்து வெளியே சற்று தூரத்தில் பார்த்து மாப்பிள்ளையைத் தேடுகிறார். மாப்பிள்ளை சற்று தூரத்தில் இடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, அந்நேரம் பார்த்து ரயில் புறப்படுவதற்கான முன்அறிவிப்பாக க்க்கூ………………….. எனுமந்த நீண்டதொரு சப்தம் முழங்க எல்லோரும் உடனே முனைப்பாக அவரவர் இருக்கையில் அமர்ந்து ஜன்னல்பக்கம் பார்த்து வழியனுப்ப வந்தோருக்கு கையசைத்து பயணம் சொல்ல –

ஜானகிராமனும் சற்றுக் கலவரப் பட்டு மாப்பிள்ளையைப் பார்க்க, அவர் எழுந்துவந்து ஜன்னலின் அருகில் நிற்கிறார். தன்னை வழியனுப்ப வந்த மாப்பிள்ளைக்கு தனது எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாதவராய், கையை மட்டும் வெளியே நீட்டி போய்வருகிறேன், போய் விருது வாங்கியதும் அழைக்கிறேன், ஜானகியை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி உடைந்த வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள –

ரயில் தன் சக்கரங்களை கிர்.. கிர்..ரென்று சுழற்றிக் கொண்டே ஓடத் துவங்குகிறது. மாப்பிள்ளையை மகளை மனைவி ஜானகியை தான் வாழ்ந்த வீட்டை, ஊரின் வாசத்தையெல்லாம் விட்டு விலகிப் போகும் ஜானகிராமனைத் தூக்கிக் கொண்டு ரயில் எங்கோ தூரமாக வேகமாக ஓடத் துவங்குகிறது.

மேலே பரவும் ரயில்வண்டியின் புகை போல மனதெல்லாம் பரவும் சோகமும் வெற்றியின் அழுகையுமாய் ஜன்னலில் சாய்ந்து, கண்களை பாதியாய் மூடிக் கொள்கிறார் ஜானகிராமன். ரயில் அவரை சுமந்து செல்லும் நிறைவில் வெகு ஒய்யாரமாய் புதுடில்லியை நோக்கி விரைகிறது…

—————–+++——————+++——————–
தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)

  1. தனபாலன் சொல்கிறார்:

    அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில் :
    “நீங்க மரமாக போறீங்க…”

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தங்களின் வருகைக்கும் ‘அருமை’க்கும் நன்றியும் நிறைய அன்பும் தோழர். எழுதுபவரின் வலியை சொல்லி ஆவதொன்றுமில்லை. என்றாலும் வலி இதென்றும், இப்படி உள்ளதென்றும் படிப்போர் அறியட்டுமே…

      Like

  2. பிங்குபாக்: கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

  3. nathnaveln சொல்கிறார்:

    அருமை.
    தொடருங்கள்.
    வாழ்த்துகள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றியும் அன்பும் அய்யா…, வாசகரை அதிகநேரம் துரத்தும் அல்லது நீண்டு படிக்கவைக்கும் சிரமம் உறுத்தினாலும் இது ஒரு படைப்பாளிகளின் நிலை குறித்த வெளிச்சத்தை தரும் என்ற நம்பிக்கையில் இங்ஙனமே தொடர்கிறேன். விரைவில் முடியும்.. இத்தொடர்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக