ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும்
நீர்க்குமிழியென
உடைகிறது என்
ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’
கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து
சிறுவர்கள் சுழற்றும்
மாவலியிலிருந்து உதிரும்
நெருப்புமீன்களாக பறந்து பறந்து
வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக்
கனவுகளும் ஆசைகளும்..
எட்டி கிளை நுனி பிடித்திழுத்து
பறித்துக் கொள்ளும் இலைகளாகவும்
உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும்
மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும்
எம் கனவுகள் இத் துரோக மண்ணில்
காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும்
கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்;
இறக்கை முறித்து –
உயிர் உதிர்த்து –
உடல் முடைந்த பின்னலாக
காலத்தின் கண்களில் விரிக்கப்பட்ட எம்
கனவுகளின் ஒற்றை அர்த்தம்
ஒரு தமிழினத்தின்
ஒற்றை விடுதலை மட்டுமென புரியும் நாளில்
எம் கனவுகளுக்காய் முளைக்கும்
மொத்த சிறகுகளையும் எப்படி
முறித்துவிடுமிவ்வுலகு…?
நசுக்கப்பட தலைகளும்
வெட்டப்பட்ட கைகளும்
வெடித்துச் சிதறிய மார்பும்
மனதின் கருமை பூசிக் கொண்ட நிர்வாணமும்
தனக்கான கேள்விகளை
சுமந்துக் கொண்டுதானே மண்ணில்
ரத்தத்தால் நனைக்கப் பட்டிருக்கிறது?
இப்போதது தேசத்தின்
விடியலை நோக்கி –
நாங்கள் விட்ட உயிரின் ஈரத்தில் துளிர்க்கும்
எம் தமிழீழ பிறப்பின் இறக்கைகளாக
மேலிடப்பட்ட பிணக் குவியல்களை விளக்கிக் கொண்டு
பிறக்கின்றன..தான்,
இருந்தும் –
அவ்வப்பொழுது கைகோர்த்துக் கொள்ளும்
தமிழரின் நிரந்தரமற்ற ஒற்றுமையுணர்வில்
எந்த பாம்பும் பல்லியும் பயந்து –
தன் வாலை சுழற்றிக் கொள்வதில்லையே; எங்கள் முன்
மாறாக –
அது எம் முகத்தின் மீதேறி
தலை வரை கால்தூக்கிவைத்து மிதித்து – எம்
சுதந்திரத்தை இம்சிக்க இம்சிக்க –
ரத்தம் வழியும் முகத்தில்
எம் விடுதலையின் கனவு
அந்த பழங்கிணற்றின் அடியில் உடையும்
நீர்குமிழியென உடைந்துதான் போகிறது…,
இதலாம் கடந்தும்
அக்கனவு உடையா விடியலொன்று
மீண்டும் எம் ஈழ திசையில் பூக்கும்..
அந்த பூப்பின் வாசத்தில்
தமிழின விடுதலையின் குரல் – பெரும்
சப்தமாக ஒருநாள் உலகெங்கும் கேட்கும்..
கருப்பழிந்துப் போனதொரு விடுதலையின்
வெளிச்சம் நிறைந்த காற்றொன்று எங்களின் –
வெள்ளைக் கனவுகளின் மீது –
தின்மமாய் பட்டுச் செல்லும்..
ஒரு இனத்தின் விடியல்
அன்று எங்களுக்காய் விடியும்!!
——————————————————————————————————
வித்யாசாகர்
//எம் தமிழீழ பிறப்பின் இறக்கைகளாக
மேலிடப்பட்ட பிணக் குவியல்களை விளக்கிக் கொண்டு
பிறக்கின்றன..தான்//
நல்ல வரிகள்..
LikeLike
நன்றிகள் ஐயா. இது ஒரு இனப் பற்றின் துடிப்பு மட்டுமல்ல, ஒரு வலி வலியும் கூட..
வலிகளாகவே மிஞ்சுகின்றன, தீருவது எக்காலமோ..
LikeLike