27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

ழை விட்டொழிந்து
இலையில் நீர் சொட்டுமொரு காலை..

வானொலியின் சப்தத்தில்
மழையிடித்த வீடுகளின் விவரமறியும்
தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு…

சரிந்த கூரைப் பிரித்து
மூங்கில் நகற்றி – உள்ளே
அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து
தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்..

மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின்
மரங்களோடு கலந்த மண்வாசம்..
அதைக் கழுவி விடுகையில்
பாட்டி திட்டிக் கொண்டிருந்த அழகியத் தமிழின்
அதிக கெட்ட வார்த்தைகள்..

வாசல் கொடியின்
சிதறியிருக்கும் மல்லிகையும்
வேப்பம்பூக்களும்
புளியம்பழமும் முருங்கைப் பிஞ்சும் ஒடிந்த கிளைகளும்..

வேலியின் ஓரமெல்லாம் வளர்ந்திருந்த
ஒதியமரங்களின் விழுந்த கிளை வெட்டி
வாசலில் அடுக்கிவிட்டுக் குடித்த
ஒரு சொம்புத் தண்ணீர்..

மழைவாசம் பரவியிருந்த
தெருவில் நடந்து
நலம் விசாரித்து வந்த அந்த
பழைய வீடுகள்; மனிதர்கள்…

நனைந்த வீட்டின்
மழை யொழுகிய சந்துகளில் பீறிட்ட
கற்றைக் கற்றைச் சூரிய வெளிச்சம்..

நனைந்தத் தரையின்
சகதி விலகி நிற்கையில்
கூட்டமாக முட்டிமோதிக் கொண்டு ஓடிவந்த
மாடுகளின் கால் குளம்பிலிருந்துத் தெறித்து
முகத்தில் அடித்த மழைத் தேங்கிய நீர்..

எல்லாவற்றிர்க்கும் மேலாக –
ஓடிப்போய் அமர்ந்த கொல்லைப்புறமெல்லாம்
மழைநீர் நிரம்பியிருக்க –
கனத்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு
இடம் தேடித் திரிந்த –
மழைப் பெய்த இரவின் விடிகாலைப் பொழுதுகள்..

இப்படி எல்லாமே நான் அமர்ந்திருந்த விமானத்தின்
ஜன்னல் வழியே தெரியும் மழையில் நனைந்த
நினைவுகளாய் ஈரப்பட்டுக் கொண்டிருக்க –

சொட்டிவழியும் என் கண்ணீரையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு
மேலே எழுகிறது விமானம் – ஒரு
காய்ந்த தேசம் நோக்கிப் போக!!
————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to 27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

  1. Umah thevi சொல்கிறார்:

    அற்புதம்!!..எப்படி தான் உங்களுக்கு, இப்படியும் எழுத தோணுகிறதோ…?
    ஆழ்ந்த ஞானம்..பாராட்டுக்கள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி உமா. அதில் சில திருத்தங்களும் இருந்தது. திருத்தியுள்ளேன். என் குறைகளை மறைத்து பாராட்டும் மனசு பெருசுதான் என்றாலும், சிறுபிழைகள் ஏதேனும் இருப்பினும் அதை உடனே அறியத் தரவும். இது பல வேலைகளுக்கு மத்தியில் ‘ராட்டினத்தில் சுற்றுபவன் தெருவை எட்டிப் பார்ப்பதுபோல்” ஒரு பணி. என்றாலும் எனது கடமை என்று இயன்றதை செய்துக் கொண்டுள்ளேன். அதேநேரம் தவறுகளை திருத்திக் கொள்ள எப்பொழுதுமே தயாராக இருப்போம். புடுகை என்பதை புழுக்கை என்றும், மழையில் புணர்ந்த என்ற வார்த்தையை மாற்றி நனைந்த என்றும் மாற்றியுள்ளேன். தங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க இவ்விவரமிங்கே சொல்லப் படுகிறது. மிக்க நன்றியும் அன்பும் உமா…

      Like

  2. munu. sivasankaran சொல்கிறார்:

    மழையின் மற்றொரு முகம்..!
    துயரங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள்
    பின்பு வேடிக்கைப் பார்ப்பவர்களாக
    உயரத்து யன்னல்களில் ஒதுங்கிப் போகிறார்கள்..!
    நிலத்தியல்பால் நீர்த் திரிவது மட்டுமல்ல..
    மனிதர்களும்தான்…!
    கவிதையின் கவலைக்கு என் கனத்த நன்றி..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்களுக்கும் ஐயா, மனசு நனைந்து போகும் மழை சாபமான இடத்தைக் காட்ட எழுதியது. இடறி மழையின் தாளத்தில் விழுந்து வலியை தொட்டு தடவி ரசிக்கத் துணிந்துவிட்டது மனசு. உள்ளே நீங்கள் புரிந்த கவலைக்கான வரிகள் அழுந்தி அப்படியே கிடக்கின்றன. தங்களின் பிழை திருத்தத்திற்கு நன்றி. திருத்திவிட்டேன்!

      Like

  3. nathnaveln சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துகள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றிகள் ஐயா. தவத்தின் வரம் போல் மழை; என்றாலும் நெருப்பாகி எரிப்பதற்கு ஈடாக நனைத்துக் கொள்கிறது. இதுவரை ஒவ்வொரு முறை மழைவரும் போதும் எனக்கு அந்த கூவத்து நதி சாலையின் பக்கவாட்டில் வசிக்கும் கூரைவீடுகளும், கடலோரத்தில் மூக்கொழுக நிற்கும் சிறுபிள்ளைகளும், இலவச மருத்துவமனையில் வரிசையில் நின்று மருந்து வாங்கி அதை உணவுண்டப் பின் உண்ண வழியின்றி தேநீர் அருந்தியோ ஒரு பண்ணு வாங்கித் தின்றோ மாத்திரை விழுங்கும் அந்த ஏழ்மைக் குடிகளே என் நினைவின் வழி வந்து கண்ணீரில் நனைந்து நிற்கின்றனர்..

      Like

  4. வித்யாசாகர் சொல்கிறார்:

    Geetha Sambasivam to tamizhsiragugal:

    😦

    வித்யாசாகர்: வருத்தம் தான், ஏழைகளை நினைக்காத மழை வேண்டுமெனக் கத்தினால் நின்று எங்கு பூமி வெடித்து விடுமோ என்றொரு பயமும் வருகிறது சகோதரி
    ————————
    //Thevan to tamizhsiragugal:

    இப்படியும் மழையின் பெருமையை சொல்லலாமோ?

    அருமை//

    வித்யாசாகர்: ஆடுகள் குளுப்பாட்டித் தான் வெட்டப்படுகிறது. இங்கே, மழையை வெட்டிட முடிவதில்லை, உயிர்ப்பொருளாகவும் இருப்பதால்..
    ————————
    //jaya to tamizhsiragugal:

    நிஜங்களை தத்ரூபமாய் எழுதி…கற்பனைக்கு வேலை வைக்காமல்…கண் முன்னே விரிய வைத்துள்ளீர்..
    உங்கள் எண்ணத்தாணி மழையை சிற்பமாக்கியிருக்கு……//

    வித்யாசாகர்: ஒரு இடத்தில் மழை இல்லையாம் மரணம்; ஓரிடத்தில் ஒரே மழையாம் மரணம், மழையை என்ன செய்ய? கவிதை மட்டுமே கண்டதுபோல் எழுத முடிந்தது… சகோதரி!!
    ————————-
    அன்பின் சீனா to tamizhsiragugal

    //அன்பின் வித்யாசாகர்

    அருமை அருமை – புயலின் – மழையினால் ஏற்படும் துயரங்களை அழகாக எழுதியமை நன்று. அயலகம் செல்லும் நேரத்தில் மழை படுத்தியபாட்டினை அருமையாக கவிதை ஆக்கியமை நன்று.

    நல் வாழ்த்துகள்
    நட்புடன் சீனா//

    வித்யாசாகர்:ஆம், ஆரம்பத்தில் புகைவண்டியில் பயணிக்கையில், இப்பதின்மூன்று ஆண்டுகளாக விமானங்களில் பயணிக்கையில் வீட்டைப் பிரிந்த வலியின் பாரத்தை மழை தன் முகக்கண்ணாடியில் காண்பித்ததுண்டு.. அழுதுகொண்டே தலைகுனிவோம். வீட்டிற்கும் எங்களுக்குமான இடைவெளி மனதைவிட்டு வெளியே நீண்டுக் கொண்டேயிருக்கும்…
    ————————–
    //Ramesh Ph.D., to tamizhsiragugal

    கவிதையின் வருணனை நடை மிகவும் சிறப்பு… கிராமத்தின் உயர்வும் தாழ்வும் விமானத்தின் உயரம்தான்…//

    வித்யாசாகர்: கிரமாம் கண்களில் பச்சையாய் பசுந்துக் கிடக்கும் உணர்வுதான் எங்களுக்குள் வருடங்களைக் கொட்டி நிறைக்கிறது. அதன் ஆழ ஓரத்தில் இந்த மழைக்கான நினைவுமுண்டு… உறவே..

    நான் கடைசியாய் ஊரில் கண்ட மழை முன்பு எதோ ஒரு தீபாவளியின் போதான மழை என்று எண்ணுகிறேன்..
    ————————–
    RRavi Ravi to tamizhsiragugal

    காட்சிப் படுத்திய நல்ல கவிதை .விமானப் பயணத்தில் ஜன்னல் ஓர இயற்கை ரசனை நானும் உணர்ந்து உள்ளேன்

    வித்யாசாகர்: தூரிக் கொண்டிருக்கும் வான ஈரத்தை ஒரு சிறு கண்ணாடி மறைத்துக் கொள்ளும் மனதின் அடர்பொழுது தருணமது. எதிரே சப்தம் குறைக்கப்பட்ட ஒரு காட்சியாக மழை வர உள்ளே கத்தும் மனதை அடக்கமாட்டாமல் மூடிய கண்களுக்குள் பதிந்த பதிவின்; பின் மூண்ட ஏழ்மையின் வலி நினைவில் எரியும் நெருப்பிது…

    நன்றி: தமிழ் சிறகுகள் குழுமம்.

    Like

  5. மனோஜ் பிரபாகர் சொல்கிறார்:

    நான் துபாயில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகின்றது…..
    ஆதலால் இந்த கவிதை எனக்காகவே எழுத பட்டது போல் இறுகிறது

    நன்றி

    மனோஜ் பிரபாகர்

    Like

  6. vitivu சொல்கிறார்:

    very good sir,and i felt this same my village

    Like

பின்னூட்டமொன்றை இடுக