28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..

காதல் வற்றிப்போன மனசு
காமம் ஆங்காங்கே –
முளைவிட முளைவிட தலைகொத்தித் தின்ற
பறவையின் மனோபாவத்திற்கிடையே தெரியும் முகங்களை
பெயர் சூட்டிடாததொருக் கவிதையின் வரிகள்
படித்துக் கொண்டிருக்க..

உயிர்வரை சுரக்குமந்த உணர்வில்
தன் புத்தகத்தில் எழுதிய பெயரிலிருந்து
டையிரியில் குறித்ததை தொடர்ந்து
நெஞ்சு கிழித்தெழுதிய உன் பெயரின்
நினைவாழம் வரை –

காதலின் வலி உன்னடையாளமாகவே பதிந்திருக்க
தலையில் கைவைத்துக் கொண்டு அமர்கையில்
திறக்கிறது அந்த பள்ளிக்கூடத்து வாசல் கதவும்
நீ நடந்துவந்த முதல் காட்சியும்..

இன்னும் சற்று நேரம் தலைநிமிராமல்
உள்ளே பார்க்கிறேன் –

நீ சிரிக்கிறாய்
பேசுகிறாய்
கண்சிமிட்டுகிறாய்..
அந்த நாட்கள் பசபசவென இதையத்திற்குள்
பசுமை பூக்கிறது..

திறக்காத உன்வீட்டு ஜன்னலின் ஓரம்
நான் நின்றிருந்த கால்வலி – உள்ளே இன்று
நெஞ்சுக்குள் வலிக்கிறது..

நீ பேசியதெல்லாம் உனக்கு
நினைவிலுண்டா..?

என்ன சொன்னாய் அன்று (?)
வானமும் பூமியும் பிரியும்
காற்றும் மழையும் பிரியும்
கடலும் அலையும் பிரியும் நாம் பிரியமாட்டோம் என்றாயே…?

எங்கே அந்த வார்த்தைகள்..?

யாருக்கேனும் காதல் வந்தால்
சிரிப்பார்கள்,
காதல் தோற்றுப் போனால்
அழுவார்கள் –
நாம் இறந்துவிடலாம் என்றாயே…?

எங்கிருக்கிறாய் இப்போது ?

காற்றுக்கும் கால் முளைக்கும்
ஒடித்துவிடுவார்கள்,
காதலுக்கும் கால்முளைக்கும்
ஒடிக்கப் பார்ப்பார்கள்,
நாம் அவர்களுக்குமுன் நமக்கான ஒரு தனியுலகில்
நம்மை துரத்திக் கொண்டே போவோம்
நிற்குமொரு புள்ளியில் நாம் பறப்பதற்கான சிறகுகள்
நிஜ காதலால் பூக்கும் கலங்காதே என்றாயே…?

கண்கள் ரத்தத்தில் கலங்குகிறது இப்போது
வருடங்கள் கடந்தும் வலிப்பதை
எப்படி உணராமல் போனாய் நீ ?

புத்தகத்திற்குள் மயிலிறகு வைத்து
எடுத்துப் பார்க்கையில் அதற்கடியில்
என்னைப் பிடிக்கும்
என்னைமட்டும் பிடிக்கும்
நிறைய பிடிக்குமென்று எழுதியிருந்த
அந்த ஒருசில வரிகளுக்குள்தானே
உயிர்சிக்கிக் கிடந்தேன் நான்.. ?

மதம் வேறு என்றாய்
கடவுளை வெறுத்தேன்,
ஜாதி வேறு என்றாய்
உறவுகளை விட்டுவந்தேன்,
உலகம் நம் காதலை ஏற்குமா என்றாய்
உலகத்தையே மறந்தும் கிடந்தேனே;
எனையெப்படி மறக்கத் துணிந்தாய் ?

அம்மா பார்த்துவிட்டு அழுத பின்னும்
உன்னை விட்டுபிரிய முடியாதெனச் சொல்லி
அம்மாவின் அழையை கூட
உனக்காக சகித்துக் கொண்டதை
நீ அறியாமலே நான் தாங்கிக் கொண்டேன் எத்தனையோ நாட்கள்..

அதற்குப் பிறகும் –
பச்சைகுத்தி
உன் பெயரெழுதி
வாழ்க்கையயை உனக்குள்
முடிந்துவைத்திருந்ததையெல்லாம்
பேசக் கூட உன்னிடம் அவகாசமில்லாத
அந்த நாட்களில் எத்தனை முறை நான்
இறந்திருப்பேன் தெரியுமா… ?

கடைசியாய்
கிழித்துப் போட்டுவிட்ட என் கடிதங்களோடும்
மனதோடும் நான் வெறுமனே
தனிமையில் புதைந்துப் போக –
எதற்கோ என்னைப் பார்த்த அந்த கடைசி நாளில்
‘பிறிதொரு நாளில் கண்டால் அன்று பேசு’ என்று சொல்லிவிட்டு
தலைகுனிந்துக் கொண்டே
விசும்பி விசும்பி ஓடினாய் –

அங்கிருந்து
சேகரித்து வைத்திருந்தால்
நானழுத அழையில்
எத்தனை பூமிப்பந்து நனைந்து சொட்டியிருக்கும் தெரியுமா ?

அவள் பதில் சொல்ல இயலா
என் தனிமையின் கேள்வியை உடைக்குமொரு
ஈரத்தில் நனைந்து எழுகிறது ஒரு
பெருமூச்சு –

அதை நனைக்கும் கண்ணீரில்
பிரதிபலிக்கும் குரலாய் கேட்கிறது
‘அப்பா எனுமந்த சப்தம்’
நிமிர்ந்துப் பார்க்கிறேன் –

“ஏம்பா..” என்று கேட்டுக் கண்டே வந்து
கண்ணீர் துடைக்கிறாள் என் மகள்

நீ அந்த கண்ணீருக்குள் கரைந்த கதை
அவள் கைகளில் ஒட்டிக் கொண்டிருந்தது

ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு
அவளோடு எழுந்து நடக்கிறேன்..

நாம் கண்டுபிடித்துவிடுவோம்
கவலைபடாதீங்கப்பா என்று சொல்லிக் கொண்டே
தும்பிகளின் வால் பிடித்துக் கொண்டு அவள் ஓடுகிறாள்..

ஏதேதோ உன்னைப்பற்றி பேசிக் கொண்டே
போகிறாள் அவள்;

என்னால் உள்ளே அழ மட்டுமே முடிந்தது..
————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to 28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துகள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒரு இதயத்தின் ஓசையாக மட்டுமே யொலிக்க முயற்சிக்கிறது இக்கவிதை. இடையே இன்னொரு இதயமும் எப்படியோ சேர்ந்தே வலிக்கிறது. அது எனதாகவும் பிறரின் முகத்தோடும் கூட வலிப்பதில் கவிதை நீள்கிறது’

      என்றாலும் தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா..

      Like

  2. வித்யாசாகர் சொல்கிறார்:

    Ramesh Ph.D to tamizhsiragugal

    வலியும்
    ரணமும்
    வடுவும்
    கண்ணீரும்
    கவலையும்
    ஏக்கமும்
    பிரிவும்…
    இந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது… இருக்கும்…
    —————————————————————–
    இனிக்கும் சர்க்கரை இனிப்பதுபோல்; கசக்கும் காதலாய் இவ்வுணர்வு சில இதயத்தில் கசந்தேப் போகிறது காரணம் நம் கட்டமைப்பின்றி வேறில்லை. அதையெல்லாம் மாற்றிப் போடும் மனநிலையோடு அடுத்த கட்ட முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும்…, முழுக்க முழுக்க காதலைப் பற்றி முன்பு ‘அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்’ என்றொரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். தற்போது ‘பறக்க ஒரு சிறகு கொடு’ என்றொரு படைப்பு வெளிவர உள்ளது. இது போன்ற படைப்புக்களில் காதல் வெறும் பதிப்பாக மட்டுமில்லாமல் அதன் இருபக்க சிந்தனைகளை அலசும் புரியத்தக்க உணர்வாக பதியப் பட்டிருக்கவேண்டும் முயற்சியாக உள்ளது.

    நன்றி: தமிழ் சிறகுகள்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s