ஒரு நெடுமரத்தின் இலைகள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து
வேரறுபடும் நிலை;
மண் வாரி முகத்திலெறிய
நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய்
உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்;
உயிர் முடிச்சவிழ்ந்து
துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில்
ஒரு விளக்கு அணைந்த இருட்டு;
அனல் காற்றில் வெப்பமேறி
வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட
விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் வலி;
மழை சொட்டி சொட்டி நனைந்த வீட்டில்
பற்றியெரியும் –
பாலூட்டப் படாத வயிறு;
பொக்கைவாய் பற்களில் மெல்லக்
கனவுகளின்றி –
மரணத்தின் பசியூறும் தருணம்;
கடல்மீன்கள் வறுபடும் வாணலியில்
வறுபடாமலே –
துடிக்குமென் உயிர்;
அஞ்சறைப் பெட்டி திறந்து சில்லறை தேடி
ஒற்றை ரூபாய் நாணயமெடுத்து நெற்றியில் ஒட்டி
நான் படுத்துக் கொள்ளுமொரு காலை;
இப்படி வலியின் வாசல்களெல்லாம்
தேடியலைந்த கண்களுக்கு –
இதுவரைக் கிடைக்கவேயில்லை – அந்த ஒரு கவிதை!!
—————————————————–
வித்யாசாகர்
ம்ம்ம் அழகு
மிகவும் அருமையான கவிதை
நல் கவி தந்தமைக்கு நன்றி கவிஞரே
LikeLike
தங்களின் வருகைக்கு நன்றி. தங்களின் ரசனை எண்ணத்தை வலுவூட்டுகிறது, நன்றி.
தங்களின் தளத்தின் கவிதைகளும் நன்று. செய்தாலி என்று கண்டதன் ஈர்ப்பில் தங்களின் தளத்திற்கு வந்தேன். செய்தாலி என்பதன் அர்த்தமுண்டா? அல்லது சையத் அலி மருவி வந்த பெயரா? எனினும் கவிதையின் பாடுபொருளும் அதைக் கூறும் நடையும் உச்சம். மிக்க வாழ்த்துக்களும் அன்பும்..
LikeLike
செய்யத் அலியின் சுருக்கம்தான் செய்தாலி
சும்மா பெயருக்கு மட்டும் (பொருள் அர்த்தம் ஏதும் இல்லை )
என் வலைத் தளத்திற்கான உங்களின் வாக்குகள்
இந்த ரசிகனை பாராட்டிய அன்புக் கவிஞருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
உங்களின் ”உடைந்த கடவுள்” கவிதை தொகுப்பிற்கு
கவிதாயினி தோழி லதாராணி எழுதிய கட்டுரை வாசிக்க நேர்ந்தது
அந்த கட்டிரையின் வரிகளின் தாக்கம் தான்
தங்களின் தளத்திற்கு என்னை ஈர்த்தது
உங்கள் தளத்திற்கு தாமதமாக வந்தமைக்கு
மிகவும் வருத்தப் படுகிறான் எனக்குள்ளிருக்கும் என் ரசிகன்
தமிழ் தோட்டம் வலைத்தள நிர்வாகி
தோழர் யூஜின் அவர்கள் உங்களின் தீவிர ரசிகர்
அவர்தான் உங்களைப் பற்றியும் உங்கள் கவிதையைப் எனக்கு அறிமுகப் படுத்தினார்
இன்னும் நிறைய கவிதைகள் படைக்க இந்த ரசிகனின் வாழ்த்துக்கள் பிராத்தனைகள்
LikeLike
நன்றி நன்றி. செய்தாலி மிக நன்றாக உள்ளது. தோழி லதாராணி அவர்களுக்கும் அன்புத் தம்பி யுஜினுக்கும் மானசீகமாக நன்றியும் நிறைய அன்பும். தொடர்ந்து இணைந்திருங்கள். அதுபோல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கவும் வாழ்த்துக்கள்….
LikeLike
அருமை.
வாழ்த்துகள்.
LikeLike
நன்றி ஐயா.. தங்களின் வருகைக்கான எதிர்பார்ப்பில் என் கவிதைகளும் தனை எனக்குள் புனைந்துக் கொள்கின்றன போல்; நன்றிகளோடு!
LikeLike