1
இன்று நாளை என
வாங்க செருப்பில்லாமலே தேய்ந்த கால்கள்
சில்லறையில் வாங்கிய ஊறுகாய் தவிர்த்து
குழம்பு காணாத சோறு
வளையிடாமலேயே வணக்கமிட்ட கைகள்
தைத்த ஆடை உடுத்தாமலேயே சுருங்கிய தோல்
பொட்டலம் பிரிக்கையில் மட்டுமேப் படித்த படிப்பு
பாதுகை கைகடிகாரம் அலைபேசி வானொலி மிதிவண்டி
ருசியான உணவு என –
இன்னபிற எல்லாமே கனவாகவே போன வாழ்க்கை;
இறந்த பின் மட்டும் இயந்திரத்தில் எரியுமுடல்!!
——————————————————
2
ஒரு குருடி
ஒரு முடவன்
ஒரு விதவை
ஒரு மலடன்
ஒரு அனாதை
ஒரு பரதேசி
ஒரு நோயாளி
ஒரு முதிர்கன்னி
இவர்களைச் சுற்றியிருக்கும் நம் உலகில்
கேட்கும் சிரிப்புச் சப்தம் அசிங்கமானது;
அல்லது அவர்கள் தொலைத்த சிரிப்பிற்கு
காரணமானது!
——————————————————
3
சுடுகாட்டில்
நிறைய மண்டையோடுகள் கிடந்தன
எதிலுமே ஜாதியில்லை மதமில்லை;
அதை எரித்தவர் மேல்
திணிக்கப்பட்டிருந்தது
ஜாதியும் மதமும்!
——————————————————
4
பிச்சையெடுப்பது தவறெனில்
கொடுப்பதும் தவறு –
கோசம் எழுப்பினார்கள்;
சற்று தூரத்தில்
ஒரு வயது முதிர்ந்த பாட்டி
மயக்கத்தில் கிடந்தாள்..
பிச்சைப் பாத்திரத்தில்
அவள் அனாதை என்று எழுதப்பட்டிருக்கவில்லை..
——————————————————
5
தேனிரில் முக்கி பொறையும் பன்னும்
தின்றுக் கொண்டிருந்தன பிள்ளைகள்
அப்பா ஒரு குவோட்டரில் மூழ்கி
ஆஃபில் வெளிவந்து
ஒரு ஃபுல்லோடு ஆடி ஆடி வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்
அம்மாவிற்கு பசி நெஞ்சிலும் இருந்தது
அவளைப் பற்றிக் கவலைப் பட
அவள்கூட இல்லை
அவளுக்கு பிள்ளைகளே பெருங் கவலை
அவர்களை அவள்
தான் செய்த
இரண்டாம் பாவமாக எண்ணிக் கொண்டிருந்தாள்
அவர்களுக்கு ஒரு மினர் தேனீரோ
ஒரு முழுதாகக் கிடைத்த பன்னோக் கூட
பெரிதாக இருந்தது
அதெல்லாம் தெரியாமலே
அடுத்தத் தெருவரை பேசிக் கொண்டது ஊர்
அதுக ‘குடிகாரன் பிள்ளைகள்’ என்று
கொடுக்க வக்கில்லாதவர்கள் அவர்கள்
பாவம்
குழந்தைகளின் வயிற்றில்
பன்னும் தேநீரும் மட்டுமே எழுதப் பட்டிருந்ததைப்
பற்றி அவர்களுக்கு எந்த கவலையுமில்லை
அம்மாவிற்கு அது கூட இல்லை…
தாலியை சுமப்பதற்குப் போராடவே
பெரியவளானவள் அவள்
அப்பா வரும் தெருவைப் பார்த்து
ஓடிக் கொண்டிருந்தாள்
அவளுக்கு அப்பா மட்டுமே உலகம்
குடித்தாலும் கொன்றாலும்
அவர் மட்டுமே கடவுள்
பாழாய்ப்போன கடவுளும்
சமூகமும்..
போகட்டும்
யார் எப்படி வேண்டுமோப் போகட்டும்
யாரைப் பற்றியுமே கவலையில்லாத அப்பா
அப்பாவிற்கு தான்
அவளும்
அவர் கையிலிருந்த பாட்டிலும்
வேறு வேறாகவேயில்லை..
——————————————————
வித்யாசாகர்
ஒவ்வொரு
வரிகளை வாசிக்கையிலும்
என்னகம் நெகிழ்ந்ததை
வெறும் வார்த்தைகளில்
எப்படிச் சொல்வேன் கவிஞரே
கவிதைகள்
ஒன்றொடு ஓன்று ஒளிர்கிறது
வரிக்
கோர்வையும்
சொல்லாக்கமும்
ஆழமான சமூகப் பார்வையும்
கவிஞரின் கவிச் செம்மையை காட்டுகிறது
இந்த சின்ன வாசகனின் வாழ்த்துக்கள்
LikeLike
தங்களின் வாழ்த்திற்கும் மனம் திறந்த கருத்திற்கும் நன்றி. சின்ன உளிக் கொண்டுதான் பெரிய சிலைகளும் செதுக்கப்படுகின்றன. இதில் உளியின் உருவம் கடந்து அதன் மகத்துவத்திற்கு நிகரானவர் நீங்கள். வந்துவந்து செல்லுங்கள். செல்லும்போது உங்களுக்குள் ஒட்டிக் கொண்ட உணர்வுகளில்; நானும் கொஞ்சம் கவிதையாக கலந்துக் கொண்டிருப்பேன் எனில் போதும் மகிழ்வேன். மிக்க அன்பும். நன்றியும். வணக்கமும்..
LikeLike
“ருசியான உணவு என –
இன்னபிற எல்லாமே கனவாகவே போன வாழ்க்கை;
இறந்த பின் மட்டும் இயந்திரத்தில் எரியுமுடல்!!”
ஏழைகளின் கண்ணீரின் உப்புத்தன்மை அறிந்தவர்களால்
மட்டுமே இந்த உணர்வு பூர்வமான எழுத்துக்களை உதிர்க்க முடியும்
உங்களின் கவிதைகளை தெறிக்கிறது வர்ண வேறுபாடு காணும் வன்மையாலர்களுக்கான கண்டன குரல் ‘
“இவர்களைச் சுற்றியிருக்கும் நம் உலகில்
கேட்கும் சிரிப்புச் சப்தம் அசிங்கமானது;”
சுய நலமிக்க இந்த சமுகத்தை சுட்டெரிக்கும் கோப கனல்களின் வெப்பம் உணருகிறோம்
கவிஞன் என்பவன் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற இலக்கணமாக இருக்கிறீர்கள் வித்யா .
சமூக களைகளை கிள்ளிஎரிவதொடு நின்றுவிடாமல் வேரோடு வெட்டி எறியவும் பாடுபடுவோம்
வெறும் கேளிக்கை பேசும் வார்த்தைகளை கவிதையாக காட்சிக்கு வைப்போருக்கு பெரும் பாடமாய் உங்கள் கவிதை இருக்கும் .
LikeLike