விடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம்.
நட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த நண்பர்களாக பதிகிற பாத்திரப் படைப்புகள் நிறைந்த சிறந்த குழந்தைகளுக்கான இன்னொரு திரைப்படமிந்த ‘மெரீனா’
காதல் பறித்தாலும் பறிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் வாடிப்போகுமொரு மலர்; அதை வாசமுள்ளவரை நுகர்ந்து, வாடிய பின் அதிலிருந்து தெளிந்தும் கொள்வோர் வாழ்க்கையின் அடுத்தப் பக்கத்திற்கு அநிச்சையாய் நகர்ந்துக் கொள்கின்றனர் என்னுமொரு பாடத்தை காட்சிகளாக உள்ளடக்கி முடிகிறது இம்மெரினா திரைப்படம்.
படிப்பு ஒன்று மட்டுமே வரையறைக் கடந்த புகழ், படிப்பு ஒன்று மட்டுமே மறந்தாலும் மதிப்பை சேர்க்கும் உழைப்பு, படிப்பு மட்டுமே பிறப்பிடத்துக் கோடுகளை அழித்து வெற்றியின் சாட்சிகளோடு ஒருவரை மற்றவரிடத்தும் சரிசமமாக்கி நிற்கவைக்கிறது’ அதை வயிற்றிற்கு ஒரு வேளைச் சோறு வேண்டி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ‘உயிர்பொக்கிஷமாய் கொடுக்க திரைப் பிரயத்தனம் கொண்டு உருவாக்கிய அரிய முயற்சியின் நற்பலனிந்த ‘மெரினா’ திரைப்படம்.
காதல் லீலைகள், காமக் குற்றங்கள், கடவுள் பிரச்சாரங்கள், கட்சிப் போராட்டங்கள், குடிசைவாசிகளின் கண்ணீரில் நனைந்த பல இதயங்களின் வாழ்ந்த தடங்கள் என அனைத்தையும் மிதித்துக் கொண்டு கடக்கும் உப்புக் காற்றின் அசைவுகளுக்கிடையே இன்றும் அனாதையாய் விழும் பிணங்களின் மரணவலிக்கு காரணமானவர்களைப் பிடித்து; முதியோரைக் காப்பாற்ற இயலாத பிள்ளைகளை மனசாட்சியின் கூண்டில் நிறுத்தி காரி உமிழ்கிறது. அவர்களின் கை கொண்டே அவர்களின் குற்றத்தின் கண்களில் குத்தும் விரல்களென ஒரு முதியவரின் பாத்திரத்தின் மூலம் வீரியம் கொள்கிறது இந்த ‘மெரினா’ திரைப்படம்.
சாதாரண மக்களின் கதையை படைப்பாக்கிச் செல்வதன் மூலம்’ இக்காலத்தின் ஒரு மூலப் பதிவு நிலைக்கப்பெறுமென்றும், அவர்களின் வாழ்க்கையை நல்ல திசை நோக்கி முடுக்கிவிட்ட பயனும் திரைப்படத்திற்கு மிஞ்சுமென்றும் நம்பியிருக்கிறார்போல் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். அவரின் நம்பிக்கையை குறையின்றி காப்பாற்றி இருக்கின்றனர் சிறுவர்களாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள். அந்த தாத்தாவக நடித்த ஐயாவும் சரி, பாட்டுக்காரராக வந்தவரும் சரி, தபால்காரராக வந்தவரும் சரி பாத்திரங்களின் நடிப்பு பிசகாத ஒரு இடத்தை தனது தனித் திறனாலும் தக்கவைத்துள்ளனர்.
பெரிதாக சொல்லுமளவிற்கான கதாநாயக நாயகியின் அவசியமொன்றும் அத்தனை இப்படத்தில் இல்லை என்றாலும் சோற்றுத் தட்டில் வைக்கும் ஒரு பகுதி இனிப்பு போல தன் பங்கினைத் திரமாக செய்துள்ளனர் சிவகார்த்திகேயனும், ஓவியாவும்.
ஐயா ஜெயப்பிரகாஷ் அவர்கள் ‘பசங்க’ திரைப்படத்தில் நெஞ்சில் குத்திக் கொண்ட மதிப்புக்கு நிகரான ஒரு மெடலை இப்படத்திலும் விட்டுச் செல்லவில்லை. அவர் வந்துசெல்லும் ஒரு இறுதிக் காட்சியில் ‘யாரும் இத்தேசத்தில் அனாதையில்லை, உங்களுக்கு அரசு இருக்கிறது. அரசு அத்தனையும் கொடுத்து இருக்கிறது. கொடுத்ததை எடுத்து உடுத்தி தனை திருத்திக் கொள்ளும் திறனும் பெற்றவர்கள் நீங்கள் பிள்ளைகளே, படிப்பை சுமக்கும் வயதில் உழைப்பை உங்களுக்குள் திணிக்காதீர், படிக்க மறவாதீர், படிப்பு உங்களையும் எங்களையுமென சேர்த்து நம் எல்லோரோடு நம் நாட்டையும் வளர்க்கிறது’ வாருங்கள் பாடசாலை செல்வோமென்று மிடுக்காக அழைக்கிறார்.
ஆக சிறுவர்களின் குறும்பு, வளர்பவர்களின் திறன், வறுமையின் கொடூர முகம், சரியாக வளர்க்காததன் குற்றம் என ஒரு உளவியல் சாட்சியினை சில காட்சிகளாக முன்வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பும், அவர்களைப் பற்றிய அக்கறையும் மிக முக்கியம் என்பதை மனதில் அழுத்தமாக பதியவைக்கும் இதுபோன்ற திரைப்படங்களை நன்றியுடன் திரையரங்குகளில் சென்றுக் காண்போம்.
இனி வரும் சமுதாயம் படிப்பினால் வெகு விரைவாக நகர்ந்து வாழ்வின் சிகரத்தை எல்லோருமாக எட்டிப் பிடித்துக் கொள்ள இப்படி ஒவ்வொரு கல்லாக திரைப்படத்தின் மூலமும் நகர்த்துவோம்.
நன்றிகளுடன்..
வித்யாசாகர்