அது ஒரு சொட்டு சொட்டான மரணம்
வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டுவதும்
மகிழுந்து வாங்குவதும் அப்படித்தான் – அது ஒரு
சொட்டு சொட்டான மரணம்;
அதிலும் போறாத காலம்
வாங்கிய வண்டி பழுதுபட்டு வீழுமெனில்
பணம் கட்டி மீட்பதைக் காட்டிலும்
உயிர் விட்டொழிதல் கூடுதல் சுலபம்;
வேறென்ன –
வாழ்க்கையில் முதல் முதாலாய்
வாங்கிய மகிழுந்தில் அதிகம் போன இடம்
பணிமனையென்றால் வலிக்காதா?
ஒரு மிதிவண்டியில்
மணி மாற்றும் கதையல்ல அது; மகிழுந்தில்
ஒரு பொருள் மாற்றுவது,
ஓடும் இதயம் நின்று ‘ஐயோ என துடித்துவிடும் வலியது’ என்று
மகிழுந்திற்கோ –
பணிமனைகளுக்கோ எக்காலும் புரிவதில்லை;
அறுத்து அறுத்து சதையை
பிய்த்துக் கொடுப்பதுபோல்
பணத்தைப் பிடுங்கி பிடுங்கி
அழ வைக்கிறது ‘கடனில் வாங்கிய பழைய வண்டியும்
கட்டி கட்டி ஓய்ந்திடாத வட்டியும்;
உறங்கி விழிக்கையில்
ஒரு பயம் வண்டியைக் குறித்தும் வந்துவிடுவது
நடந்து ஏறி –
பல மலைகளைக் கடப்பதைக் காட்டிலும் வலிது;
திடீரென ஏதோ போய்விட்டது
இத்தனை ஆயிரம் செலவாகுமென்று சொல்லி சொல்லி
ஐந்து பத்து கணக்குப்போல பிடுங்கி
ரத்தம் குடிக்கும்
பணிமனை குறித்த பயத்தில்
திகிலாக அடிக்கடி கனவு கூட வருவதுண்டு
யாரை நம்புவது
நம்ப மறுப்பது என்றே
புரியாதளவு மனிதர்களை – இந்த பணிமனைகளும்
அடையாள படுத்துகின்றன என்பது
தற்காலிகமாக கண்டுநோகும் வலியிலொன்று;
அண்ணாயெனும் வார்த்தைக் கூட அவர்களுக்கு
அடுத்த பணம் சுரண்டலுக்கான ஆயுதமென்றுப் புரியவே
ஒரு மகிழுந்து வீணாகி
இரு மடங்கு செலவாகி – பின்
அரைவிலைக்கு அதை விற்கப் படுதல் கொடுமையில்லையா?
அப்படி எதற்கு இயலாதவனுக்கு
எவரெஸ்டில் ஏறி –
தேனீர் பருக ஆசை? என்று ஒரு கேள்வி
பார்ப்போருக்கு வருவதுண்டு,
இது ஒரு ஆசை அல்ல, கனவு
முட்டி மோதி கட்டும் வீட்டைப் போல
இருபது வருடம் நடந்து நடந்து தேய்ந்த கால்களுக்கு
ஒரு நாளேனும் அமர்ந்துபோகும் ஆயுள் கனவு;
பெரிய மனிதரென்று எண்ணி நம்மைப்
பார்பவர்களுக்கு தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ள
ஆசைப்பட்ட அற்ப அறிவின் விளைவு;
வாடகைக் காருக்கு பணம் தந்து தந்தே
பாதி சம்பளம் போனதாய் எண்ணி வருந்தியதில்
தனைமீறி வந்துவிட்ட சோர்வு;
எங்கு மகிழுந்து இல்லையேல்
வேலையில்லை என்று திருப்பி விடுவார்களோ என
பாலைவன வாசலில் நின்று பயந்த மனதிற்கு
‘வாங்கித் தான் பார்ப்போமே’ என்று கொண்டிட்ட
அசாத்திய துணிச்சலின் கனவு அது;
அதற்காக,
கனவெனில் என்ன; பணத்திற்கு உடனே கால் முளைத்துவிடுமா
சக்கரம் உருள உருள தேயும் கால்போல
வட்டி கட்ட கட்ட உயிர் சொட்டிப் போகாதா?
என்ன சொட்டும்?
என்ன சொட்டும்?
வட்டி கட்டி வண்டி வாங்கியது
எத்தனை மடத்தனம்?
ஆம்; மடத்தனம் தான்
மடத்தனம் தானென்று ஒரு ஐந்து மாதத்திற்கு முன்பு
தெரிந்திருக்குமேயானால்
இந்த வட்டிக்கு வாங்கிய பணத்தில்
இந்த வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு வருட வதை
கொஞ்சம் குறைந்திருக்கலாம்;
என்றாலும், அதெல்லாம் அன்று
வாங்கியப் போது புரியவில்லையே
ஏறி அமர்ந்து கண்ணாடி மூடி
குளிர்காற்று முகத்தில் அடிக்க
பாட்டு கேட்ட சந்தோசத்தின் விலை இன்னதென்று அன்று
எண்ணத் தோன்றவில்லையே;
இன்று மட்டுமென்ன
இன்று என்னதான் புரிந்தாலும் கூட
இன்றும் இதை விற்றுத்தொலைக்க முடியவில்லையே,
மகிழுந்தை ஒரு ஓரம் நிறுத்திவிட்டு –
இருக்கையில் சாய்ந்து யோசிக்கிறேன்,
நீந்திக் கடந்துவந்து நடுக்கடலில் நிற்பவரின் பிரம்மிப்பில்
பெருமூச்சொன்றைவிட்டுத் தீர்த்து மீண்டும் புறப்பட எண்ணுகையில் –
இலவசமாகக் கேட்கிறது அந்த இன்னொரு சப்தம்
சப்தத்தோடு ஆடியது வண்டி
யாரோ தூக்கி குலுக்கியது போல குலுங்கியது
இழுத்து இழுத்து ஓடி நின்று ஓடி
இதோ படாரென ஒரு உதை உதைத்து விட்டதுபோல்
காற்றில் சட்டென அணைந்த விளக்குபோல்
வண்டியும் நின்றுபோனது;
இறங்கி ஒரு ஓரம் நிற்கிறேன்
என் மகிழுந்து தனியே அனாந்தரமாக நிற்கிறது
என் பணமெல்லாம் வட்டிமொத்தமும் சேர்ந்து
காற்றில் படபடவென அடித்து ஒவ்வொரு தாளாக
பறப்பதுபோல் ஒரு உணர்வு என் கண்முன் காட்சியாகிறது;
நான் அதிலிருந்து ஒற்றைத் தாளைக் கூட எடுத்துக்கொள்ள
விரும்பாமல் ‘எல்லாம் பறந்து போ.. போ’வென்று சபித்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல் விர்ரென்று நடக்கிறேன்;
எங்கோ என்றோ நான் எவர் பணத்திலேனும்
சிரித்து மகிழ்ந்திருக்கலாம்
அதற்கு இந்த இழப்பு ஈடாகிப் போயிருக்குமென்று’ எண்ணிக் கொண்டு
தெருவைக் கடந்து நிற்கிறேன்
ஒரு அரசு பேருந்து வருகிறது
சட்டைப் பையில் கைவிட்டுப் பார்க்கிறேன் – பயணச் சீட்டு வாங்க
சில்லறை இருந்தது;
கண்களை அழுந்த மூடிக் கொண்டேன்
உள்ளேயிருந்த இருட்டில் –
மகிழுந்திற்கான கனவு கொஞ்சமும் இல்லை..
—
வித்யாசாகர்
அருமையான கவிதை.
LikeLike
நன்றி ஐயா. வலிகளின் வேர்களில் நஞ்சு பாய்ச்சும் உணர்வு; ஏழ்மை நிலையில் வட்டிக்குக் கடன் வாங்குவதும் என்று கருதுகிறேன். இயன்றவரை அதை எல்லோரும் தவிர்த்தல் அவசியத்தில் ஒன்று. அல்லது கொடுப்பவர்கள் புரிந்து ஒரு கட்டுப்பாட்டிற்கென வட்டியின் விக்கிதம் குறைத்துக் கொடுத்தலும் ஏழ்மையின் கண்களில் ஈட்டி பழுக்க ஏற்றுதலை மாற்றும் வழியை தரலாம்..
LikeLike
அருமையாக சொன்னிர்கள்..பல பேர்களுடைய வாழ்க்கை இப்படிதான் போய் கொண்டு இருக்கிறது.
LikeLike
மிக்க நன்றி உமா. பொதுவில் நாம் சம்பாதித்து நம் செலவில் ஒரு மகிழுந்து வாங்குவது என்பது வேறு.
ஒரு அவசரத்தில் பல தேவைகளின் காரணங்களை முன்னிறுத்தி எப்படியோ ஆசைக்கும் தேவைக்குமென சேர்த்து ஒரு மகிழுந்தினை அருகதையின்றி வாங்கிவிட்டால் கூட இந்த பணிமனை பணியாளர்கள் படுத்தும் பாடு மிகக் குற்றத்திற்கு உரியது.
ஒரு உதாரணத்திற்கு கிட்டத்தட்ட அவர்கள் முன்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கித் தந்ததற்குத் தக ஈடுள்ள பொருட்களை நான் இரண்டுதினம் முன் நேரிடையாகச் சென்று வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிவந்தேன்.
அப்போது தான் அவர்களின் முழு காவாளித்தனம் முழுமையாகப் புரியவந்தது. எனக்கு அப்போது ஏமாந்த பணத்தைவிட ஏமாற்றிய பண்பற்ற செயலே அதிகம் வலித்தது. யாரை நம்பித்தான் பின் வாழ்வதோ இவ்வுலகில்?
என்றாலும், அதையும் மீறி எங்கோ ஒரு நல்லிதயங்களும் நியாயம் தர்மம் என்று பேசத் தக்க முறையில் இச்சூழலுக்கு மத்தியிலும் இன்றும் வாழ்ந்துவருவதால் தான் இன்னும் சில இரண்டாம்தர குடிகளின் மகிழுந்துகள் அவர்களின் பாரத்தை சுமந்து நன்றியுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன..
LikeLike
சொட்டு சொட்டான மரணம்….வலிமிகுந்த வரி…! அதுவே..கவிதையை அதிவேக சாலைக்கு இழுத்துச் சென்று விடுகிறது..! பணிமனைப் பயணங்களின் பாதிப்பு கவிதையை உச்சப்பட்ச வேகத்திற்கு கொண்டு செல்கிறது..! வண்டி சாலையில் நின்று விடும்போதுதான் கவிதைக் காற்றின் வேகமெடுக்கிறது..! என்ன.. மிகுந்த செலவு வைத்துவிட்டக் கவிதை..!
LikeLike
நன்றி ஐயா. கவிதைகள் வாங்க, காடுகனக்கும் பாரம் பாடுபொருள் ஆகிறது என்பதை அநேகம் பேர் அறிவர். அதை அருகில் இருந்து பார்த்த உங்களைப் போன்றோரே எழுத்தோடு எனையும் அறிவீர்கள். எனது வலியும் புரிவீர்கள். இது பொதுவான ஒரு வலிக்குரிய கவிதை எனதுணர்வில் ஆக்கப்பட்டுள்ளது, அவ்வளவே. விடுமுறை நாட்கள் மனதிற்கு நிம்மதி சேர்க்கும் நல் வாசமோடு நகரட்டும்…
உறவுகளை; விசாரித்தேன் என்று சொல்லுங்கள் ஐயா!
LikeLike
அற்புதமான கவிதை கவிஞரே
வரிகளில் மனிதனின் ஆசையும் அவன் நேரிடும் சங்கடங்களையும் மிக அழகாய் ஆழமாய் சொல்லியபோது
மெய்சிலிர்த்தேன், சற்று சோகத்தில் ஆழ்த்தி ஆழமாய் சிந்திக்கவைத்தது உங்களின் இந்த அற்புத கவிதை
வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் கவிதையின் வரிகள் இன்னும் விடாமல் என்னை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறது
கவிஞருக்கு என் நன்றிகள்
LikeLike
வதைகளின் வார்த்தையிது, வலிக்க வலிக்க ருசிக்கிறது. தங்களின் அன்பு மிகு எழுத்தினில் இதயம் நிரம்பி வழிகிறது. மிக்க நன்றியும் அன்பும் வாழ்த்துக்களும் மனதின் அடியாழத்திலிருந்து பொங்கியதில் மௌனமாய் இவ்விடமிருந்து கடந்துபோனேன்..
LikeLike
what a fantastic words. it is real in life events. go ahead. best wishes. i am unable to express my feeling in tamil. s.ravichandran,postman,emaneswaram,paramakudi taluck,ramnad district. skype a/c ravichandran20011.cell no.9443467201
LikeLike
வணக்கம் அன்பிற்குரியோர். உங்களுக்கு என் கவிதை பிடித்தமை எண்ணி மிக மகிழ்ந்தேன். வாழ்வின் அனுகூளமாக எண்ணுகிறேன் எனக்குக் கைவந்த எழுத்தை. அதன் நம்பிக்கையில் நான் செலவிடும், அர்ப்பணிக்கும் நேரம், அவஸ்தை.. இன்னபிற அனைத்திற்கும் உங்களைப் போன்றோரின் வார்த்தைகளும் அன்புமே பரிசு. தங்களுக்கு எல்லாம் நலமும் கிடைத்து நலமோடு வாழ எண்ணம் நிறைகிறது. நன்றியும் அன்பும்!
தமிழில் தட்டச்ச இச்சுட்டியை சொடுக்கி பின் அதன்வழி முயற்சித்துப் பாருங்கள். வாழ்த்துக்கள்.. http://vidhyasaagar.com/2009/12/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/
LikeLike