அது ஒரு கொடிய நாள்
அன்று தான்
முதன் முதலில் ஒருவரின்
மரணம் பற்றி கேள்வியுற்றேன்
அவர் இறந்துவிட்டார் என்றார்கள்
இறப்பதென்றால் என்ன என்றேன்
இறப்பதெனில் –
இல்லாதுபோவதென்றார்கள்
இல்லாதுயெனில்
இங்கிருந்து இல்லாமல் போவதா
அல்லது எங்குமே இல்லாதுப் போதலா? என்றேன்
அறிவிருக்கா உனக்கு? தத்துவம் பேசுமிடமா-யிது?
அவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் செய்தார்
நான் விலகிச் சென்று
கூட்டம் நிரம்பி நின்று அழும் அந்த வீட்டிற்குள் நுழைந்தேன்
அங்கே கதறி கதறி அழுகின்றனர்
இறந்தவரின் வீட்டார்
அக்கம்பக்கமெல்லாம் கூட கண்ணீர் வழித்து வழித்து வீசி
அழுது கொண்டிருந்தது
அம்மாவும் அங்கே நின்று கதறியழுதாள்
அண்ணா அண்ணா என்று அவரைப் பார்த்துக் கதறினாள்
கேட்டதற்கு ‘என்றோ சிறு வயதில் அவர்கள்
ஒருசேர விளையாடிய நட்பென்றாள்
என்னால் அங்கே ஒரு கணம் கூட
நிற்க இயலவில்லை
ஊரார் அழ, அம்மா அழ
அழை எனக்குப் பெரிதாக வலித்தது
எனக்கும் அழை அழையாக வந்தது
அழுதுகொண்டே வெளியேவந்த அந்த நாள்
மரணம் என் பின்னாலும்
தொடர்ந்து வந்த நாள் போலும்..
உண்மைதான்
உண்மையாகவே அன்றிலிருந்து
மரணம் என் பின்னாலும் வரத் தொடங்கிற்று
பின்னால் வந்த மரணம்
பின் மெல்ல வீட்டிற்குள்ளும் தங்கிப் போகுமென்று
அன்றைக்கெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை
இன்று
மரணமென் வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து
என் தலையில் ஏறி நிற்கிறது
அம்மா இறந்தாள்
அப்பா இறந்தார்
உற்றார் உறவினர் உடன்பிறந்தோர்
வீட்டில் வெளியில் என
கண்முன்னே நிறையப்பேர் இறந்தார்கள்
நான் மட்டும் இறக்காமலே அழுதுகொண்டு நிற்பது
எப்படி வாழ்வின் சாத்தியமாகிப் போனதோ (?)
கேட்டால் விதி
தலையெழுத்து என்கிறார்கள்
இந்த விதி, தலையெழுத்து, மரணம்
மண்ணாங்கட்டியை எல்லாம் எவர் திணித்தார்?
பிறந்து அழுது அழுது
அழுதே யிறப்பது எத்தனை வலி?
காலத்திற்கும் வலிக்கும் மரணத்தின்
வலியோடு பிறந்த மனிதன்
எத்தனைச் சாபத்திற்குரியவனோ (?)!
உண்மையில் –
உயிர்பிரிதலினும் கூடுதல் வலி
உடனிருப்போரைவிட்டு விலகுவது,
பிரிவதென்பது,
பிரிவதென்பது பெரு வலி
சாபத்தின் பெருவெளி
அந்தப் பெருவெளியில்
பிரிவின் பெரு வலியினூடே நகர்கிறது அந்த நாள்
அந்த நாளின்
அக் கொடிய நாளின் நினைவுகள்
நினைக்க நினைக்க வலிக்கும் மரணமென வலுக்கிறது;
ஒருவேளை என் மரணமும் அப்படித் தானோ
அத்தனை நீளமோ
சொட்டி சொட்டி கடைசியாய் விழுமந்த துளி நீரோடு
உருவி
ஒரு எழுத்தென வீழுமோ;
அப்படி வீழுமெனில்
நிச்சயமந்த வீழும் கடைசி எழுத்தின் முதற்புள்ளி
மரணத்தை முதன்முதலாய் முன்மொழிந்த அந்த கொடிய நாளின்
விடிகாலையாய் மட்டுமேயிருக்கும்…
—————————————————————–
வித்யாசாகர்
உங்களின் மரணத்தின் வாசனை
கவிதை வரிகளை வாசிக்கையில் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது
நான் கற்பனையில் கிறுக்கிய நேற்று வரை வாழ்ந்தவன் என்ற கிறுக்கல்
உங்களின் இந்த கவிதை வாசிப்பின் முடிவில் ஒரு மெய் உணர்ந்தேன்
கற்பனை வரிகளுக்கும் உயிரோட்டமுள்ள வரிகளுக்கும் உள்ள வியாசம்
உங்களின் கவிதை உண்மையில் சோகத்தில் ஆழ்த்தி ஆழமாய் யோசிக்க வைத்தது கவிஞரே
சிறப்பான கவிதை உயிரோட்டமான வரிகள்
LikeLike
மரணம் பற்றிய ஆறா வடுக்களின் ஒரு புலம்பலிது அவ்வளவே. ஒவ்வொரு முறையும் சரிந்து வீழும் ஒரு கட்டைபோல் மனிதன் உயிர் அற்றுபோய் சாய்ந்த போதெல்லாம் அழுது அழுது சேமித்த உணர்வுகளின் சேமிப்பின் உருவமிந்த வரிகள். ஏதோ ஒரு சிந்தனையை தூண்டி உணர்வில் உணர்ச்சி நிறையுமொரு இடத்தில் வேறொரு பதில் கிடைக்குமோ என்றொரு ஏக்கத்தில் பதியப் பட்டுள்ளது. தங்களின் ஆழ்ந்த கருத்திற்கு நன்றியும் வணக்கமும்!
LikeLike
வணக்கம் …
தங்களின் வரிகள் எம்மை மிகவும் கவர்ந்துள்ளது
“”உண்மையில் –
உயிர்பிரிதலினும் கூடுதல் வலி
உடனிருப்போரைவிட்டு விலகுவது,
பிரிவதென்பது,””
தங்கள் மைத்துனனின் குவைத் பயணத்தின் மூலம் இவ்வரியை உணர்கிறேன் …
LikeLike
பிரிவு பாசத்திற்குத் தக உறவை வலிதாக்கி விடுகிறது அய்யப்பன். நட்பை பிரிவது என்பது வெளிச்சம் அணைந்த இருளின் அறையில் திடுமென சென்று நிற்கும் தருணத்தை உணர்வது போன்று’ பிற அனைத்தையும் விட்டகன்று தனியே நிற்பதை நினைத்துருகும் வலி;
பொதுவில்; பிரிவு கொடிது…
LikeLike