42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!

மிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது
மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது
மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட
மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே
சில மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்;

நவீன ஆடைகொண்டு மறைத்தும்
மறைக்காமல் அவளும்
உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும்
சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும்
காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்;

அவளுக்கு நான் பிடிக்கும்’ என் ஆண்மை பிடிக்காது
அதென்ன ஆண்மையெனில் சிறப்பா? அப்போ
பெண்மையும் சிறப்பு தானே?’ என்பது அவள்
அடிக்கடி கடித்துகொள்ளும் மிளகாய் கேள்விகளில் ஒன்று;

‘பெண்மை சிறப்புதானே, அதை ஏனப்படிக்
காரமாய் கேட்கிறாய்’ என்பேன்

‘ஆண்மையை தூக்கி தலையில் வைத்தாடுபவர்களின்
கால்களுக்கிடையே பெண்மை நசுக்கப்படுவதைக்
காண்பவரெவர்?’

இது அவளின்
விடுதலை வெப்பப் பற்களில்
கடிபடும் இரண்டாம் மிளகாய்..

காதல் சர்க்கரைத் தூவி
இதயங்களை சேர்த்துவிட்டால்
அடிமைத்தனம் அன்பினில் அடிபட்டுப் போகும் வா’ என்பேன்

இப்படி –
மிளகாய் சிவப்பில் அடிக்கடி ரத்தமும் வடியும்
ரத்தத்தை முத்தத்தால் காதலால் நனைத்தெடுப்போம்

மீண்டும் அவள் கேட்பாள் “ஆண்கள் ஏன் எஜமானர்களா?”
இல்லை என்று சொல்லிப் பயனில்லை; ஆமென்றால்

ஏன்
அதெப்படி
என்ன அவசியம்
யார் ஆக்கியது அவர்களை யென
ஆயிரம் சொற்களைக் கோர்த்து
ஒற்றைப் பார்வையில் பார்ப்பாள்;

பார்வை சுடும்
வார்த்தை சுடும்
எண்ணம் கொதிக்கும்
ஆயினும் மனதால் வருடிக் கொடுப்பவள்
தாயன்பில் சொக்கவைப்பவள்
குணம் வேறு மனம் வேறு தானே அதை மறப்போமென
விட்டுவிட்டு அவளோடு நடப்பேன்;

எனக்கென விட்டுக் கொடுப்பதாய் எல்லாம் நினைக்காதே
உன் உணர்வு உனக்கு
என் உணர்வு எனக்கு’ என்பாள்

‘அது தான் தெரியுமே..’

‘என்ன தெரியும்?’

‘பெண்ணெனில் தேவதை
ஆண் என்ன ஆண், பெண் தான் தாய்மை கொண்டவள்
புனிதமான மனதாள் பெண்
அவளால் தான் ஒரு ஆணை தாங்கிக் கொள்ள முடிகிறது

நீயும் பெண் தானே
ஆணை வெறுத்தாலென்ன
பெண்மையின் உணர்வு பூத்தவள் தானே நீயும்’ என்பேன்

வாய்மூடுவதற்குள் வார்த்தைகளின் ஈட்டி பாயும்
என்ன பெண்? என்ன பெண்?
பெண்ணென்றால்? பாவமா? விட்டுக்கொடுக்கிறாயா?
யாரடா நீ; யார் நீ; எது வழி வந்தாய்?
யாருக்கு விட்டுக் கொடுக்கிறாய் ? எனக்கு விட்டுத் தர நீ யார்?
எனக்கு தூபனைத் தூவ நீ யார் ?
பெண்ணை நேரே இப்படி ஆராதிக்க அசிங்கப்பட மாட்டாயா நீ?

நான் சொன்னேனா? நீ தான் அழகன்
நீ தான் உயிர்
உன் அழகில் சொக்கி உன் பின்னால் நடக்கிறேன்
நானென்று சொன்னேனா?
நீயில்லை என்றால் ஒரு உலகம் இருண்டு போகுமெனில்

அதை தூக்கி எரிபவள் நான்; தெரியுமா உனக்கு?
என்ன நினைத்தாய் பெண்ணெனில்?

நினைத்தால் அழைப்பாய்
படுப்பாய்
கலைப்பாய்
நாங்கள் கையில் மூடிக்கொண்டுப் போன ஆண்டுகளைப் பார்
தலைமுறை தலைமுறையாய் –
நசுக்கப்பட்டுக் கிடக்கிறோம்; போதாதா?
இதோ, காலில் போட்டுவிட்டோம்; பார்க்கிறாயா இனி?
பெண்ணெனில் யாரென்று பார்க்கிறாயா?

அவள் வாயை மூட ஒரு முத்தம் போதுமானதாக
இருந்தது;
அதற்கு உரிமை மறுப்பவளல்ல அவள்
ஆனாலவள் விழுங்கியிருந்த ஆண்களின் மீதான கோபத்தில்
என் பாட்டன்கள் வைத்த சூடு அதிகமிருந்ததால்
முத்தங்களை மறுத்துக் கொண்டேன்,

மூத்தக் குடிமீதேறி
இறங்கி
காரி உமிழ்ந்தது
அவளின் இரு கண்களும்,

நகக்கண் இன்றி கீறிய நிறைய விரல்களின் பதிவு
அவளின் கன்னக் குழியோரம்
வரிவரியாய் பதிந்து கிடக்க – எளிதாய் துடைத்துவிட
என் போன்றோர்களின் புரிதலோ பண்போ பாசமோ
அத்தனை போதுமானதாக இல்லை;

அவள் நூறு பேய்களின் பசியில் பார்த்தாள்
அவள் பார்ப்பதன் கோபத்தில் அத்தனை ஆண்களின்
கயமைத்தனம்
பெண்களை ஓர் காலச் சங்கிளியில் கட்டிப் போட்டதன்
குற்றத்தை அடக்கிய பெரும் பழி
எதிர்க்கப் போதாத திராணியில் திமிரி கிடந்தது;

குடித்துவிட்டு அடித்தவன்
பெண்ணெனக் கலைத்தவன்
பெண்தானே என்று அழைத்தவன்
பெண்; பெண்; படிப்பெதற்கு? போ சமையென்று சிரித்தவன்
சமைந்ததை சடங்காக்கியவன்
சம்சாரி, சம்சாரியல்லாளென்று பிரித்தவன்
கலப்பில் கற்பினைப் புதைத்தவன்
புதைத்த கையாலே பின்வந்து கற்பை பறித்தவன்
பின்னொரு நாளில் கற்பின்மைக்கு நகைத்தவன்
கர்ப்பத்தின் மீது உதைத்தவன்
கர்ப்பத்தைக் கலைக்க காதலித்தவன் என
அத்தனை வக்கிரங்களின் மீதும் ஏறி நின்றுக்கொண்டு
என் மேல் பாயும் ஈட்டிகளில்
வஞ்சக் கணக்குத் தீர்க்க தயாரானாள்;

அவளை எனக்குப் புரிந்தது
அவளுக்கு முன் அழுத அநேக பெண்களின் அழுகை
அதிலிருப்பது புரிந்தது
இனி பிறக்கும் ஆண்களின் பார்வையில்
பெண் ஒரு சுதந்திரத் தீயெனக் காட்ட – அவள் உயர்த்திப் பிடித்த
வார்த்தைகளின்
வெப்ப சுவாலையில்
காதலை வெளிச்சமாக மட்டும் கண்டேன் நான்;

நான் பேசவில்லை வா போகலாமென்றேன்
மௌனமாக நடந்தாள்
ஒரு புற்தரை பார்த்து அமர்ந்ததும்
என் கைகளைப் பற்றிக் கொண்டாள்

நேராக என் கண்களை ஆழமாகப் பார்த்து
‘இன்று மாலை
ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்களைத் திரட்டி
ஒரு போராட்டம் நடத்தப் போகிறேன், வருவாயா’ என்றாள்

‘ம்ம்.. போகலாம்’ என்றேன்

எழுந்துக் கொண்டோம்
கைவீசி நடந்தோம்..

‘என்னைப் புரிகிறதா?’ என்றாள்

‘ம்ம்.. புரிகிறது’ என்றேன்

‘என் அப்பாவும் ஒரு ஆண் தான்’ என்றாள்

சிரித்துக் கொண்டேன்

‘என் அப்பாவில் கூட எனக்கு தாய்மை தெரிகிறது
அது பிடிக்கிறது
என் கோபம் என் அப்பாவின் மீதல்ல
எனது அம்மாவின் கணவர் மீது;

கணவர்களுக்கு
மனைவி எனும் பெண் என்று துச்சமானாளோ
அங்கிருந்து வருகிறது எனக்கான கோபம்’ என்றாள்;

நானென் கைகளை நீட்டி
‘ம்ம் என் கைகளைப் பிடித்துக் கொள்’ என்றேன்

அவளென்னைப் பார்த்தாள்

‘நீ விரும்பினால் பிடித்துக் கொள்’ என்றேன்
என் கையைப் பிடித்து தன் விரல்களோடு பின்னிக் கொண்டாள்

‘உன்னை எனக்கு மிகப் பிடிக்கும்
நீ கூட என் அப்பா மாதிரித் தான்
எனை இரண்டாவதாய் தாங்குபவன் நீ’ என்றாள்

நான் சிரித்துக் கொண்டேன்

‘எனை உனக்குத் தெரியும்
உன்னை எனக்கு நம்பமுடிகிறது’ என்றாள்

சிரித்துக் கொண்டேன்

‘ஏன் பேச மறுக்கிறாயா?
பேசு..
பேசுடா என்று சொன்னால் விரும்புவாயா? வேண்டாம்
அது வேண்டாம்
டா.. டி.. யில் ஒரு உதாசீனம் வருகிறது
சர்வசாதாரணமாக அதற்குள்லிருந்து
அகந்தை துளிர்த்து விடுகிறது
எனவே வா.. போ.. போதும், அன்பு அடியாழம் தொடுமிடத்தில்
உரிமை மீறிக் கொள்ளலாம்
அதற்கென பேசாமல் எனக்கு தலையாட்டி நிற்காதே
நீயும் பேசவேண்டும்
சம உணர்வு புரிந்து பகிரவேண்டும்
இன்னொரு அடிமையை தோற்றுவிப்பதற்கல்ல
இதுபோன்ற
என் கோபம்’

‘புரிகிறது
நீ பேசு
நீ பேசினால் தான்
பேசாதோரின் விலங்கு உடையும்
நீ பேசினால் தான் பட்ட அடியின் ஆழம்
எதுவரை என்று காட்டுவாய்
நான் வலிக்கும் என்று சொல்வதைவிட
நீ வலிக்கிறதென்று காண்பிப்பது உரைக்கும்’

அவள் மௌனமானாள்
உதட்டில்
அவளை சரியாக உணர்ந்த என் காதல்
நனைந்து புன்னகையாகப் பூத்துக் கொண்டது அவளுக்கு

எனக்குத் தெரியும்
அவள் கோபம் தீருமிடத்திலிருந்து பல
சுதந்திரப் பறவைகள் வானில்
வெளிச்சம் நோக்கிப் பறக்குமென்று
எனக்குத் தெரியும்
அதற்கு அவளோடு சமமாக நடப்பதில் எனது
செய்யாது சேர்ந்த பாவமும் தீரட்டுமென்று எண்ணினேன்

அதற்குள் என் அம்மா அழைத்தாள்

அலைபேசி பார்த்து அம்மா என்றேன்

பேசு என்றாள்

‘என்னமா…’ என்றேன்

‘உனக்கொரு பெண் பார்த்து வந்தோம்பா’ என்றாள்

‘ஏன் அவளுக்கொரு
ஆண் பார்க்க அவர்கள் வரவில்லை யென்று’ தோன்றிற்று

‘என்னப்பா, ஏன் பேசாமலிருக்கிறாய்
அத்தனை அழகு அவள், அடக்கமானவள்
என்ன சொல்கிறாய் முடித்துவிடலாம் தானே’ என்றாள் அம்மா

‘இல்லைமா, என்னை ஒரு பெண்ணிற்குப் பிடித்துள்ளது
எனக்கும் அவளை மிக பிடிக்குமென்றேன்

அவள் என் தோள்மீது சாய்ந்துக் கொண்டாள்
தாங்கிக் கொண்டிருப்பதாய் எண்ணாமல் நடந்தேன் நான்

என்னிரண்டு கால்களும்
அவளினிரண்டு கால்களும்
ஒருசேர நடக்கத் துவங்கிற்று..

எங்களின் காலடிப் புழுதி பறந்து
யாரை யாரையோ எச்சரிக்கைத் துணிந்திற்று
யார்யாருக்கோ சிரிப்பைப் பரிசளிக்கத் துவங்கிற்று..

ஒருவர் கால்களை ஒருவர்
பார்த்துக்கொண்டே நடந்தோம்..

எங்களின் காலடி சப்தத்தில்
யாதொரு அடிமைத்தனமுமில்லை

இடதுகால் வலதுகால்போல
எங்களின் இரண்டு கால்களும் நடக்க நடக்க
சிநேகம் மட்டும் கைகளுள் இறுகிக் கிடக்க
மனதைப் பின்னிக் கொண்டு –
மாலைப் போராட்டத்தை நோக்கிச் செல்கிறோம்;

எங்களின் பின்னால் நிறைய ஆண்கள்
வந்துக் கொண்டிருந்தனர் பெண்களோடு!!
——————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to 42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!

  1. சாந்தி சொல்கிறார்:

    /நீ பேசினால் தான்
    பேசாதோரின் விலங்கு உடையும்
    நீ பேசினால் தான் பட்ட அடியின் ஆழம்
    எதுவரை என்று காட்டுவாய்
    நான் வலிக்கும் என்று சொல்வதைவிட
    நீ வலிக்கிறதென்று காண்பிப்பது உரைக்கும்’/
    வெகு நாளைக்குபின் அழகிய கவிதை.. ஆழமான புரிதலுடன்.. ரசித்தேன் வாழ்த்துகள்..

    Like

  2. Umah thevi சொல்கிறார்:

    // காதல் சர்க்கரைத் தூவி
    இதயங்களை சேர்த்துவிட்டால்
    அடிமைத்தனம் அன்பினில் அடிபட்டுப் போகும் வா’ என்பேன்//
    அருமை!!

    Like

  3. செய்தாலி சொல்கிறார்:

    வரிகளை
    வாசிக்கையில்
    அடிமைத்தனத்தை எதிர்க்கும்
    ஒரு பெண்நோவியத்தை
    உணர முடிந்தது

    ஆழமான
    அர்த்தங்கள் பொதிந்த
    அற்புதமான அழகிய கவிதை

    Like

  4. munu.sivasankaran சொல்கிறார்:

    வணக்கம்..! ஒருசிலக் கவிதைகளை நாம் எழுத முயல்கிறோம்.! ஒருசிலக் கவிதைகள் அதன் போக்கில் தன்னைத்தானே எழுதிக்கொள்கின்றன..! அது கவிதைக்கும் கவிஞனுக்கும் உள்ள நெருக்கத்தைப் பொறுத்து நிகழ்ந்து விடுவது..! தொடரட்டும் அந்த நெருக்கமான உறவு என வாழ்த்தி மகிழ்கிறேன்..!
    ” அவள் என் தோள்மீது சாய்ந்துக் கொண்டாள்
    தாங்கிக் கொண்டிருப்பதாய் எண்ணாமல் நடந்தேன் நான்” ithu… ithuthaan kavithai .nanri..!

    Like

  5. கோவை மு சரளா சொல்கிறார்:

    //குடித்துவிட்டு அடித்தவன்
    பெண்ணெனக் கலைத்தவன்
    பெண்தானே என்று அழைத்தவன்
    பெண்; பெண்; படிப்பெதற்கு? போ சமையென்று சிரித்தவன்
    சமைந்ததை சடங்காக்கியவன்
    சம்சாரி, சம்சாரியல்லாளென்று பிரித்தவன்
    கலப்பில் கற்பினைப் புதைத்தவன்
    புதைத்த கையாலே பின்வந்து கற்பை பறித்தவன்
    பின்னொரு நாளில் கற்பின்மைக்கு நகைத்தவன்
    கர்ப்பத்தின் மீது உதைத்தவன்
    கர்ப்பத்தைக் கலைக்க காதலித்தவன் என//

    இவர்கள் உண்டாக்கிய காயங்களும் , வலிகளும் இன்னும் ஆறாத நெருப்பாய்

    நெஞ்குள் எரிகிறது வித்யா …….. உங்கள் எழுத்துக்கள் கொஞ்சம் வலிபோக்கினாலும்

    இன்னும் ரணம் இருக்கிறது மரபில் குத்தி கிழித்த புண்கள் இவை ……………….

    நான் நினைத்ததை நீங்கள் எழுதியிருகிறீர்கள் . ( இங்கு நான் என்பது பெண்ணினம் ) உங்களை போன்று ஆணினம் உணர ஆரமித்தால் ஆரோக்கியமான சமூகம் உருவாகும் .

    தொடர்ந்து எழுதுங்கள் வித்யா…………….

    Like

பின்னூட்டமொன்றை இடுக