உங்களுக்கொன்று தெரியுமா
நாங்களெல்லாம் அனாதைகள்;
அம்மா இருந்தும் அப்பா இருந்தும்
மண்ணிழந்த அனாதைகள்..
மண்ணெண்றால் உயிரென்று புரிய
ஊர்விட்ட அனாதைகள்;
ஆடிப்பாடி ஓடி விளையாண்ட இடம்
காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்;
தவறிழைத்தோம்.
அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு
வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி
உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்;
எங்கள் மண்; எங்கள் வீடு; நாங்கள் பிறந்து கத்திய போது
அதன் அழுகையை துடைத்து சிரிப்பாக்கிய சுற்றம்
சீவ சீவ பச்சைபிடித்த பசுமை
உயிர் வார்த்த பூமியென –
அனைத்தையும் பயந்து பயந்து தொலைத்த அனாதைகள்;
தெரு தாண்டி தெரு தாண்டி
நாடுகளை கடந்துநின்று தன் நாடுவேண்டி நிற்கையில்
வெடித்து வெடித்து வருமெங்கள் அழை; ரத்தமென வடியும் கண்ணீர்
யார் சாபத்தை துடைக்கவோ (?) எந்த கடலை நனைக்கவோ (?)
எத்தனை ஊர் போனோம்; எங்கெங்கோ ஓடினோம்
யார் யாரோ வீடு கொடுக்கிறார்கள் –
கொடுத்தாலும் நாங்களங்கே அகதிகள் என்பது வலியில்லையா?
அனாதைக்கும் அகதிக்கும் எத்தனை தூரம் இடைவெளியென்று
எங்களின் குழந்தைகளைக் கேட்டால்
கண்ணீரால் கதை சொல்லும்..
காதுபட தன்னை ‘ஓடிவந்தவர்கள்’ ‘ஓடிவந்தவர்கள்’ என்று
கேட்டு கேட்டே வளர்ந்த வலியை ஒரு கவிதையாகவாவது பாடும்..
யாரறிகிறார்கள் எங்கள் மனதை?
யாருக்குப் புரிகிறது எங்கள் வலி?
தரையில்கிடக்கும் கொட்டாங்குச்சி கண்டாலும் வலிக்கும்
வட்டநிலவு பார்த்தால் வலிக்கும்
சொட்ட இனிக்கும் தேன் தமிழ் கேளாமை வலிக்கும்
விட்டுவிட்டு வந்த வாசல் நோக்கி –
ஒரு சொட்டுக் கண்ணீருள்ளே சொட்டிக்கொண்டேயிருக்கும்..
குடும்பமே வாசலில் படுத்துறங்க, நடு இரவில்
குண்டு பல விழுந்து திசை நான்கில் பச்சை உடல் சிதற
உயிர் பிழைத்த தகப்பனோ தாயோ பிள்ளையோ பக்கத்து வீடோ
பொருக்கி பொருக்கிக் கூட்டிய சதைகள் நினைவில் ரத்தமாக நனையும்..
சந்தைக்கு நடந்த நாட்கள்
பள்ளிக்கு படிக்கப் போன தெருக்கள்
பகலிரவு வணங்கிய கோயில்கள்
நட்பு பகிர்ந்த வீடும் உறவுகளும் என்னாயிற்றோ (?)
யார் யார் எங்குள்ளனரோ (?) இல்லையோ (?)
சத்தமின்றி காதுகளில் இன்னும் குண்டுகளாகவே
வெடித்துக் கொண்டிருக்கும் அவர்களின்
நினைவுகளை மீட்கும் நாளென்று வருமோ (?) வராதோ (?)
இந்த கட்டைகள் எல்லாம் வேகுமோ (?) வேகாதோ (?)
வெறும் அகதிகள் பெயரெழுதி –
அகதிகளின் விடுதியோரம் அனாதையாகப் புதைக்கப்பட்டும்
நாட்டில் குண்டுகளோடு வெடித்துச் செத்ததாய்
தேடிக் கிடைக்காத உறவுகள் எங்களைத் தெரிந்துக்கொள்ளுமோ ?
வரி வரியாய்.. வலி வலியாய் வலிக்கிறதே அறிவீரா ?
அறிவீர்; அறிவீர் உலகத்தீரே;
நாங்கள் வந்தால் அகதிகள் வந்ததாய் அறிவீர்,
நாங்கள் போனால் அகதியில் ஒன்று குறைந்ததாய் அறிவீர்;
நாங்கள் அழுததை..
தவித்ததை..
மான்டதை யாரறிவீர் ???
மண் அறியும்; எங்கள் மண் அறியும்
மண்; எங்கள் அடயாளம், மண்; எங்கள் தாய்
மண்; எங்கள் வீடு, மண்; எங்கள் உரிமை
மண்தான் மண்தான் மண்தானெங்கள் மூச்சு;
அந்த மண்ணுக்கு மட்டுமே முடியும்
எங்களின் பிணத்தின் மீதெழுத்தப்படும்
‘அகதி’ யென்னும் ஒற்றைக் கரையை யழிக்க!!
——————————————————–
வித்யாசாகர்