11, உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்!

முகமெல்லாம் கரி பூசி; பூசிய கரிக்கு உணர்வு கூட்டி; உணர்வின் உச்சத்தை படச்சுருளில் தோய்த்து என் முன்னோர் வாழ்ந்த கதையொன்றை திரைப்படமாக்கி, அதன் நெளிவுசுளிவு பிசகாமல் காட்ட எடுத்த பாராட்டத்தக்க திரையுலக பிரயத்தனம் இந்த ‘அரவான்’.

உண்மையில் ஒரு பிறவி முடிந்து இருநூறு வருடங்களுக்கு பின்னே போய் உடல்கட்டை விழ மீண்டும் திரையரங்கம் விட்டு வெளியே வருகையில் ஒரு தமிழராகவே மறுபிறவி எடுத்து நான் பிறந்துவந்ததொரு உணர்வு; படம் பார்த்து வந்து ஒரு நாள் ஆனபின்புமுண்டு எனில் அது இயக்குனரின் வெற்றியும் அப்படத்தில் நடித்த நடிகர்களின் உழைப்பிற்கான வெகுமதியுமன்றி வேறில்லை.

இதுபோன்ற படங்களுக்கெல்லாம் விருதெல்லாம் ஒரு பெரிய வரம்பு கிடையாது; நாம் நம்மை அறிய சற்றேனும் முற்படுவோமெனில், செய்வதிலிருந்து சற்று திரும்பிநின்று நம் பண்பு மாறாமல் பிறர் நன்மைக்கென நம் வாழ்தலை சிந்தித்து மாற்றியமைத்துக் கொள்வோமெனில் அதொன்றே இதுபோன்ற படத்தின் உழைப்பை ஈடுசெய்யும். அப்படியொரு மகத்தான திரைப்பொக்கிஷம் இந்த வசந்தபாலனின் அரவான்.

முக்கியமாக படத்தில் நமை ரசிக்கத் தூண்டிய முக்கியதொரு சிறப்பு என்னவெனில் அது படம் முழுக்க நீளும் தமிழ் உச்சரிப்பு, தமிழ்ப்படம் என்றுச் சொல்லத் தக்க மொழித் தரம், ஆங்காங்கே வந்துப்போகும் மிக நல்லத் தமிழ்பெயர்கள்… என வெகுவாய் படம் பல நன்மதிப்புகளோடு நீண்டாலும் “அன்றும் நீ இப்படி வெறும் ‘குடித்துக் கொண்டும், கேளிக்கையோடு கடந்துப்போயும், பெரியதொரு லட்சியமின்றி வாழ்ந்தும், வெறுமனே சாதிக்கும், மதத்திற்கும், ஊருக்கும் பகைக்குமிடையே தான் கடந்தாயடா வாழ்க்கையை’ என்பது போல ஒரு குறிப்பிட்ட சட்டத்திற்குள் அடங்குவது போல் தெரிந்தாலும்’ இது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குட்பட்டு, தனிப்பட்டதொரு கதைக்கு அகப்பட்டு, இரு ஊருக்கு மத்தியில் நின்று நம் உயிரின் மதிப்பை பேசத் துணிந்த திரைப்படம் தானே’ என்று எண்ணுகையில்; பின்னே ஆம் அதனூடையிலும் நம் கண்ணிய வாழ்க்கை இத்தனை நயமாகக் காட்டப்பட்டுள்ளதே என்று மனது நிறைந்துதான் போகிறது.

என்றாலும், இப்படியொரு படமா இந் நாட்களில் என்று பிரம்மித்து விடுமொரு பெருமூச்சிற்கிடையே, இப்படத்திற்குத் தகுந்தாற்போல் கதை வசனம் எழுதிய திரு.சு. வெங்கடேசன் அவர்களை பாராட்டாமல் இருப்பதற்கில்லை. திரும்பும் திசையெல்லாம் அதிர்வையும், அழகையும், அதிதீர மண்ணின் செழுமையையும், ஆட்டம்பாட்டத்தையும் கண்களுக்குள் விழித்திரை அதிர பார்க்கும் பார்வைகளையும் காட்சிகளையும் மிகத் திறமாக சிரமப்பட்டு அழகாக மிடுக்காக பதிந்துத் தந்த ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுக்கள். வாள் வேல் கத்திகளோடு சண்டை, மாடுகளின் மீது சவாரியில் சண்டை, மஞ்சுவிரட்டு என கடினமானதொரு சூழல்களை லாவகமாக சண்டைக்காட்சி படுத்திய சண்டைப் பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள். நம்மை கொஞ்சம் அந்த ஊருக்கே கொண்டுபோய் நம் பழைய நாட்களை கண்முன் நிறுத்திய கட்டிடக் கலைஞருக்கும் பாராட்டுக்கள். பற்களில் கரைபூசி ஒரு பழமை உணர்வை பார்ப்போருக்கு புகுத்த எண்ணிய இயக்குனரின் எண்ணத்திற்கு ஏற்ப பாத்திரங்களின் முகத் தோற்றங்களை மாற்றி புதிய கதாநாயகியைக் கூட பழைய பெண்மணியாகக் காட்டிய ஒப்பனைக் கலைஞருக்கும் பாராட்டுக்கள். இழை இழையாய் உள்ளே காட்சிகள் பதிய இசை இசையாய் உணர்வில் நிரம்பி “நிலா நிலா போகுதே என்றும், ஊரே ஊரே என்னப் பெத்த ஊரே..” என்றெல்லாமும் உணர்விலும் சிந்தனைகளிலும் நிறைந்துவழியும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையென தன் முதல் படத்தை வெற்றிப்படமாகத் தக்க வைத்துக் கொண்ட இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். சிங்கம் போல் கர்ஜித்தும், நட்பின் வழி நிறையும் சகோதரத்துவப் பாசம் காண்பிப்பதில் தத்ரூபம் காட்டியும் நடித்த பசுபதிக்கும், ஆதியை ஒளித்துக்கொண்டு சின்னாவை, வரிப்புலியை மட்டுமே அத்தனை ஆழமாக மனதுள் பதியவைத்த ஆதிக்கும், என் போன நாட்களின் தமிழச்சி முகங்களை வனப்பேச்சி மற்றும் வெள்ளெருக்கம் பூ வழியாகக் காட்டிப்போன இரு கதாநாயகிகளுக்கும், அம்மாவாக நடித்த நடிகைகளுக்கும், வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்தவருக்கும் மற்றும் வில்லன் போல வந்து கடைசி வரை பகையாளியாகவே நிற்கும் கரிகாலனுக்கும் இன்னபிற நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆக, வெறும் ஒரு திரைப்படம் என்பதை விட்டுத் தள்ளிநின்று இக்கதையின் காரணமென்ன, இது சொல்லவரும் கரு என்னவென்று பார்ப்போமே உறவுகளே;

ஒரு உயிர் என்பது எத்தனைப்பேரின் முடுச்சி? ஒரு குடும்பம் என்பது எத்தனை ஜென்மத்தின் பந்தம்? ஒரு காலதவத்தின் பேறுகளை பெறுவதற்கரிய ஒரு பிறப்பல்லவா இம்மானிடப் பிறப்பு? அதை அறுப்பவனின் கைகளை’ அறுப்பவனையும் கொலையாளி என்கிறது இந்த ‘அரவான்’ திரைப்படம்.

சதைபிசைய கலந்து, எலும்பு ஊடுருவி, நரம்பு பரவி, ஒரு உயிரை வார்ப்பதென்பது எத்தனைப் பெரிய தவம்; பத்துமாத வலி என்னவென்று பெற்றவளின் வலியுணரா மிருகத் தனமல்லவா கொலை ? அதை நீ செய்தால் வேறு, நான் செய்தால் வேறா என்று செவிட்டில் அறைந்து கொல்பவர் மொத்த பேரையும் கேள்வி கேட்கிறது இந்த அரவான் திரைப்படம்.

வீடு நட உயிர் பலி, கோயில் கட்ட உயிர் பலி, காவல் பார்க்க உயிர் பலி, களவு ஒழிக்க உயிர் பலி, கல்லுக்கு பூஜை செய்தாலும் பலி; கடவுளுக்கு நேந்திவிடக் கூட பலி பலி பலி என மொத்தத்தில் தன் கண்ணெதிரே துடிக்க துடிக்க இன்னொரு உயிரை மாய்க்க எவனொருவனுக்கு உரிமை பிறந்து எந்தக் கொம்பின்வழியே முளைத்துக்கொண்டது என கதற கதற அழவைத்து யோசிக்க வைக்கிறது இத்திரைப்படம்.

தவறு திருந்ததான் தண்டனையே தவிர; தவறை இன்னொரு கொலையால் மறைக்க இல்லையே என்பது; அக்கால வேகத்திலிருந்து வளர்ந்து’ செழித்து’ குழாய் மாட்டி’ கணினியில் வேலையும் செய்து பின் காலாட்டி சோறும் தின்று’ உறவுகளின் சிரிப்பில் இன்றும் உயிரை அடக்கிக் கொண்டிருக்கும் நமக்கெப்படி புரியாமல் போகிறதோ?

என் நண்பன் செத்தால்; நானும் சாகிறேன், என் அம்மா செத்தாள் நானும் சாகிறேன், என் அப்பா செத்தால் அண்ணன் செத்தால் தம்பி செத்தால் மகன் மகள் மனைவி செத்தால் துடிக்க துடிக்க சாகிறோமே, வாழ்விற்கும் வலிக்கிறதே, சிரிக்க சிரிக்க வாழ்ந்தாலும் இடையிடையே ஒரு சொட்டுக் கண்ணீரால் இதயம் உள்ளே அவர்களை எண்ணி நனைகிறதே; அது கொடுமையில்லையா? கொடுமை எனில் பிறகு மரணம் எப்படி ஒரு தண்டனையாகும்? மரணம் எப்படித் தீர்வாகும்? ஒரு அரசின் தீர்ப்பில் நுழைந்த தர்மமறுக்கும் கொடுஞ் செயலில்லையா மரணதண்டனை? என அங்காங்கே நிறுத்தி நம்மை யோசிக்கக் கேட்கிறது இத்திரைப்படம்.

ஊரை காக்கும் ஆதி என்றொரு நாயகன். களவிலிருந்து காவல் பிறக்கும் என்றொரு நம்பிக்கையை இன்னொரு ஊருக்கு மொத்தமும் தரவல்ல நாயகன் இறக்கிறான். தன்னை கொல்லும் மரணம் கூட இன்னொரு கையினை கரையாக்கி விடுமோ என்று அஞ்சி அந்த அரிவாள் வாங்கி தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு சாகிறான். அப்படி அவன் சாகும் காட்சி அங்கே நம் மனதையும் அறுத்தே முடிகிறது. அவனைப் போல எத்தனை ஆதிகள் நம் கண் முன் இறக்கப்பட்டு செய்தியில்; தூக்குப் போடப்பட்டது, மரணதண்டனைக் கொடுக்கப் பட்டது என்று இலகுவாய் சொல்லக் கேட்டு நகர்ந்து போய்விடுகிறோமே; அவர்களுக்கும் இப்படி ஒரு குடும்பமிருக்காதா? அவர்களின் தண்டனைக்கான நீதியும் சரியாகத் தான் வழங்கப்பட்டிருக்குமா? என்ற கேள்வியை மனிதாபிமானத்தோடு சிந்திக்கச் சொல்கிறது இந்தத் திரைப்படம்.

கொலைக்கு கொலை தான் நீதி, ஒருவர் மரணத்திற்கு இன்னொரு மரணம் தான் கதி என்பதை ஏற்பது எத்தனைப் பெரிய முட்டாள் தனம் பார்த்தீர்களா அறிவாளிகளே? என்று நையாண்டி செய்யும் இக்கதையின் நீதி புரியாதவர்கள் இருந்தால் அவர்களை உடனே தூக்கில் போட வேண்டும் என்றாலும் முதல் மனிதராய் நாமே அவர்களை மன்னித்து விடுவோம்.

“சாவுக்கு பயந்து ஓடலை ஆத்தா; தடயத்தைத் தேடி தான் போனேன், அங்கே உண்மை இருந்தது தடையமில்லை” எனும் வசனம் படத்தின் உச்சம். திருடப் போனாலும் களவு போன இடத்தில் ரத்தம் பார்க்க மாட்டோம், கன்னிப்பொண்ணு படுத்திருந்தாலும் உத்துப் பார்க்க மாட்டோம்” என்று பாட்டில் கூட ‘தமிழன் களவாளியாக இருந்தபோதும் தனக்கென்று தனியொரு நீதி வைத்துதான் நெறியோடு வாழ்ந்தான் என நம் கண்ணியத்தை பாடலாக்கிய பாடலாரிசிரியருக்கும் பாடல்களிலும் இத்தகைய கவனம் செலுத்திய இயக்குனருக்கும் ‘இத் தமிழனாகப் பிறந்த பிறப்பின் அத்தனை முழு நன்றிகளும் காணிக்கையாய் உரித்தாகும்.

படத்தின் இடம் ஒன்று, பாடல் ஒன்று, கதை ஒன்று என்றெல்லாம் எங்கும் எதிலும் சிதைந்துப் போகாமல் என் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண்ணின் கதையை ஒரு தூசு பிசராமல் காட்டிய முயற்சியும் உழைப்பும், எனை நம்பும் திரையுலக தமிழர்களுக்கு எதனையேனும் நான் கொடுத்தே தீருவேன் என்று எண்ணிய திரைத்துறை சார்ந்த அக்கறையும் இயக்குனரின் மீது மதிப்பை இலக்கின்றி கூட்டுகிறது.

ஊருக்கு கட்டுப்பட்ட மனிதர்கள், பெரியவர்கள் சொன்னதை படைத்தவன் சொன்ன வாக்காக எண்ணிய தமிழர்கள், கடவுளின் பக்தியை; தன் வாழ்தலின் கண்ணியத்தின் பேரில் கடைபிடித்த நம்பிக்கையைக் கொண்டு மனதின் அடியாழம் வரை ஈர்ப்பேற்படுத்திக் கொண்ட ஒரு இனத்தவரின் வரலாற்றில் ஒரு துண்டு எடுத்து அதில் ஒரு தூசளவு கதையில் கோர்த்து கதைக்குத் தக பாத்திரம்மைத்து, அந்த பாத்திரங்களினூடே மனதின் மொழிப்பற்றில்லா இடமெல்லாம், இனப்பற்றில்லா இடமெல்லாம் என் மொழியுணர்வையும் இனம் குறித்த அக்கறையையும் உரம் போல் இட்டு முடிகிறது இப் படம்.

சிரித்துக் கொண்டு, ஒய்யாரமாய் திரிந்துக் கொண்டிருப்பவனை அழைத்து நீ இந்த நாளில் இறந்து விடுவாய் என்று சொன்னால் அது அவனது மிச்சமுள்ள நாட்களை எத்தனை பாதிக்கும்? அவனைக் கடந்து அவனோடுள்ள யார் யாரை அது வலிக்கச் செய்யும்? அதனால் அவன் சென்று நிற்கும் கடைசி இடத்தின் நிலை என்ன என்பதையெல்லாம் சற்று கதையினூடே நியாயமாக யோசிக்கவைக்கிறது சின்னாவின் பாத்திரமும்; நண்பனின் கண்ணியத்தை நம்பி தன் உயிரை வீரமாக நின்று விடத் துணியும் வீரனின் கதாப் பாத்திரமும்.

அவர்களை விடக் கொடுமை அவர்களின் மனைவியின் கண்களில் தெரியும் விரக்தி? வாக்கப்பட்ட வாழ்வே சாபமான கொடூரம், விதி என்று சொல்லி வாழும் போதே இரக்கமின்றி தலைவெட்டிச் சாய்க்கும் மடத்தனம் என அத்தனையையும் உயிர்பார்வையில் வடிய வடிய காண்பிக்கிறார்கள் அந்த சின்னாவின் வீரனின் மனைவியிலிருந்து பரத்தின் பாத்திரத்திற்கு காதலியாக வரும் அஞ்சலியின் பாத்திரம் வரை.

பிறகென்ன; தவறிற்கு வேறு என்ன தான் தண்டனை? தப்பு செய்தவனையெல்லாம் கொள்ளாமல் விட்டால் நாளை கொடும் பாவிகளால் நாடு குட்டிச்சுவராகிப் போகாதா? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். நமக்குத் தெரிந்தே ஐம்பது ஆண்டுகளை கடந்து விட்டோம், இதுவரை எந்த பாவியை தூக்கில் ஏற்றி நம் தேசத்து தர்மத்தை நிலைநாட்டி விட்டது நம் அரசாங்கமும் (?) அரசியல்வாதிகளும் (?) அவர்களுக்கு பின் நின்று பெரிதாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களும்? தவறு செய்பவன் இன்னும் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறான், அதை அவர்கள் வேடிக்கைப் பார்க்கும் அளவிற்குதான் நமது கட்டமைப்பும் இருக்கிறது. ஒரு காவலாளி ஓரம் நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்க அவர் கண்முன்னே ஒரு கொலை நிகழ்ந்து கட்டை சரிய அவரால் அதிர்ச்சியில் அந்த தேனீரை கீழே போடவோ அல்லது குடிக்காமல் வைத்துவிட்டு தலையிலடித்துக் கொண்டுப் போகவோ தானே வளர்த்து வைத்திருக்கிறோம் நாம் நம் சமூகத்தை? அவர்கள் சரியாக இருந்தும் இருக்கவிடா பின்னனி யாரால் அமைக்கப் பட்டது? ஒரு காவலாளிக்கு தவறாக நடப்பதைவிட கண்ணியமாக நடப்பதற்குத் தக சூழலை வெகு கடினமாக்கிய அரசியலை யார் சமைத்துத் தந்தது இந்த மண்ணிற்கு? எல்லாம் நாம் தானே? பிறகு பழிக்கும் கேளிக்கைக்கும் ஆளாகும் காவலாளிகளையோ அவர்கள் பிடித்துக் கொன்றுபோடும் “என் கவுண்டர் எண்ணிக்கைகளுக்கோ” பொறுப்பு நாமும் இல்லையா? நமை சார்ந்த நாம் உருவாக்கிய கட்டமைப்பு இல்லையா? ஆம் எனில், முதலில் உயிர் வலிது என்று புரிவோம். தவறின் சுவடறியா பலர் கம்பிகளின் பின்னே தன் வாழ்நாட்களை கயவர்களாக தொலைத்துக் கொண்டுள்ளனர் அவர்களின் கறையை அகற்றும் முன்; தூக்கு கயிறுகளில் இருந்து தப்புவிப்போம், சரி தவறே புரியாமல் தலையை கிள்ளும் முறை மாற்றி விட்டு; தண்டனையை திருந்த மட்டும் அளிப்போம், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் வித்யாசம் புரிந்து மனிதர்களை காக்க முற்படுவோம் என்கிறது இப்படத்தின் மூலக் கருத்து.

இப்படத்தின் படி பார்த்தால், இதுபோன்று வரும் நிலையில் நமக்குத் தெரிந்த ஒரு நண்பனோ நமக்கு உடன் பிறந்த அண்ணனோ அக்காதம்பியோ தங்கையோ இப்படியொரு நிலைக்கு ஆளாகிப் போனால்மட்டுமே நமக்கு உடனே வலிக்கும் சுயநலவாதிகளாகியுள்ளோம் என்கிறது; ஆனால், அப்படி தினம் தினம் உலகின் ஏதேனும் ஒரு மூலையில் அதர்மத்தின் கயிறு தனில் தொங்கும் ஒரு உயிரைப்பற்றி நாம் அத்தனைக் கவலை பட்டிருப்போமா எனில் இல்லை என்பது நமக்கேத் தெரியும். ஆனால் இனி படுவோம் உறவுகளே, நம் மாண்புதனை மறப்பதற்கல்ல, ஒரு புல் பூண்டிற்காகக் கூட வருந்தியவன் தமிழன்; பின் உயிர் பலியிடுதல் என்பது வலிதில்லையா?

தவறுகள் தண்டிக்கப்படவேண்டும், திருத்தப்பட வேண்டும் என்பதற்கும், தவறிழைத்தோர் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கும் இடைப்பட்ட தூரம் என்பது ஒரு உயிரின் அளவு எனில், பல உயிர்களின் முடுச்சி எனில், பல குடும்பத்தின் பல ஜென்ம பந்தமெனில்; ஒரு காலதவத்தின் பேறினை வாழ்ந்துத் தீர்க்கவல்ல மனித பிறப்பின் சிறப்பு எனில் அதைப்பற்றி நாம் யோசிக்க வேண்டாமா?

அங்ஙனம், திருந்துவதற்கு தரும் தண்டனைக்கும், கொன்றுவிட்டால் தீரும் எனும் நீதிக்கும் இடைப்பட்ட வித்யாசம் என்ன என்று காட்டி அதற்குத் தகுந்த தீர்ப்பை நம்முள்ளிருந்து எப்படி எடுப்பதென்று நம்மையே யோசிக்கவைப்பதே இப்படத்தின் குறிக்கோளாகக் கருதுகிறேன். காரணம், இப்படத்தின் கதாநாயகனானவன் ஒரு பெண்ணின் கை பிடித்து, அதாவது தன் மனைவியின் கைபிடித்துக் கொண்டு ‘உன்னோடு நான் நூறு வருஷம் வாழ வேண்டும்’ என்று கேட்கும் ஒரு ஆன்மாவின் மனதில் எத்தனை ஆசை துடித்துக் கொண்டிருக்கும்? அவனின் கழுத்துத் துண்டிக்கப் படுகையில் அந்த உயிர் அவளுக்காக எத்தனை அழுதிருக்கும் ?

இப்படி, ஒவ்வொரு வீட்டில் ஒரு பிணம் விழுகையிலும் அந்த பிணத்தினை ஒரு குழந்தையாகப் பெற்றெடுத்த அந்த தாயின் வயிறு எப்படி நெருப்பென பற்றியெரியும் என்பதை பரத்திற்கு அம்மாவாக நடித்தவரின் கண்ணீர்காட்சி காட்டுகிறது. அந்த பிணத்தின் தாலிக்கு கழுத்தை நீட்டிய மனைவியின் வாழ்க்கை எப்படி நரகமாகும் என்பதை வீரனின் கழுத்து வெட்டப் படுகையில் நாக்குக் கடித்து கத்தும் அவனின் மனைவியின் உணர்ச்சி வெடிக்கும் கண்கள் அதிர அழும் முகம் காட்டுகிறது.

இப்படி படம் நெடுக நமை உறையவைக்கும் அளவிற்கு நடித்தோரை; நடித்தோர் என்பதைவிட வாழ்ந்தோரை வைத்து படமெடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர் திரு. வசந்தபாலன் என்பதே ஏற்கத் தகுந்ததாக உள்ளது. அதிலும் குறிப்பாக பசுபதி ஆதி என வரிசை நீண்டாலும், ஆதி எத்தனை நல்ல நடிகர் என்பதை ‘மிருகம்’ படத்தின் இரண்டாம் பாக கலைத் திறனை உற்று நோக்கியோருக்கு அறிந்திருக்கக் கூடும். அறியோதோருக்கும் இப்படம் அப்பட்டமாகக் காட்டுகிறது அவரின் உச்சியடைந்த நடிப்புத் திறனை.

உண்மையில் இப்படத்தில், வெறும் நடிப்பென்று இல்லை, கொஞ்ச கொஞ்ச கேட்கும் தமிழ் மொழியாகட்டும், காதுகளில் காட்சியின் உணர்வினை தகிக்கும் இசையாகட்டும், வீரம் தீரம் எனில் என்ன என்று, ‘வாழ்ந்த தமிழர் வாழ்வில் தேடினால் கிடைக்கும்’ என்று நம்புவதற்குச் சான்றாக அமைத்த சண்டைக் காட்சிகளாகட்டும், நடுகள் தெய்வவழிபாடு கோணாமல் காண்பித்த இலக்கிய முறையாகட்டும், எல்லாமே மிக கவனமாக தெளிவாக கையாண்ட சிரத்தை மிக துல்லியமாகத் காட்சிகளின் முழுதும் தெரிகிறது.

வெறி வஞ்சம் மெல்ல ஊடுருவி எதிராளியோடு சேர்த்து தன்னையும் அழிக்கிறது என்பது இப்படத்தின் இனொரு பொதுக் கரு. மனிதம் நிறைய நிறைய பிறந்து மனிதம் தழும்ப வாழ்ந்த ஒரு இனம் எங்கோ எதனோடோ சிக்கிக் கொண்டு தூக்கு தண்டனையின் பின்னே இன்றும் நின்று தனை கொன்று குவிக்கும் பாவத்தை இனியேனும் தீர்த்துக் கொள்ளாதா எனும் ஏக்கம் படம் முடிந்து வெளி வருகையில் மனதின் ஆழம் வரை இல்லாமலில்லை. மரணதண்டனையை மறுப்பதென்பது தீயோரை வளர்க்க வேண்டும் இலக்கின்றி அவரை விட்டுவிடல் வேண்டும் என்பதற்கல்ல. நீதி தவறிய பாண்டிய மன்னனிலிருந்து இந்தப்படத்தின் காட்சிகள் வரை நீதி பொய்த்தமைக்கு சாட்சியாகிறது. கோவலன் முதல் இந்த சின்னா கதைப்பாத்திரம் வரை எத்தனைப் பேர் இப்படி தான் செய்யாத தவறுக்கு மாண்டுபோயுள்ளனர். அவர்களை எல்லாம் நம்மால் திருப்பித் தர முடியுமா? மனிதனையும் மிருகத்தையும் ஆராய்ந்து மிருகத்தனமுள்ளவரை மனிதரைக் காக்கும்பொருட்டு கொன்றொழிக்கவே மரணதண்டனை முடிவுக்கு வரப் பட்டிருக்கும், ஆனால் இன்று மிருகங்கள் தெருவில் சுற்ற மனிதர்கள் நிறைய கொல்லப்படுகிறார்கள் என்பதை சிறைச்சாலை சென்று அங்குள்ளோரின் உண்மை நிலை கேட்டு அவர்களின் இன்ன பிற வாழ்வு நிலை அறிவோருக்கேப் புரியும்.

தவறு செய்வோரை தண்டித்தல் என்பதை யாரும் மறுக்கவில்லை, மறுக்கப் படவேண்டும் என்று மன்றாடுவது மீட்டுத் தர இயலா உயிரை துச்சமாகப் போக்கும் மரணத்தை மட்டுமே, மரணம் ஒரு தண்டனையாவதை மறுப்போம் என்றளவில் மட்டுமே. அதிலும் அதுபோன்று வழங்கப்படும் தீர்ப்புகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட சாட்சிகளில் எத்தனை எத்தனை அரசியல் நிகழ்கிறது? செய்தவனை விட்டு செய்யாதவனை தூக்கிலிட்டு அநீதி அழிவது மட்டுமின்றி அக்குடும்பத்தின் நிலை என்ன? என இப்படி சிந்திக்க நெடுந்தூரம் இன்னுமுள்ளது உறவுகளே. சட்டென்று உடனே முடிவுக்கு வர இயலா நிலையாயினும், மிக அவசரமாக’ ஒரு உயிர் போதலையேனும் தடுத்து நிறுத்தும் துரிதத்தில் நாம் இதுபற்றி கலந்து பேசி ஆராய்ந்து போராடியேனும் ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டும்’ என்பது பற்றி இப்படத்தின் வழியே சிந்திக்க ஒரு வாய்ப்பளித்த ‘அரவான்’ பட இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இப்படத்தில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளுக்கும், ஒளிப்பதிவு, இசை, கட்டிடக்கலை, சண்டைக்காட்சி அமைத்தோருக்கும், இன்ன பிற உழைப்பைத் தந்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றிகளும்!

_வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to 11, உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்!

  1. தனபாலன் சொல்கிறார்:

    வித்தியாசமான விமர்சனம் ! நன்று ! நன்றி நண்பரே !

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி நண்பரே.., மிகப்பிடித்திருந்தது படம் எனக்கு, இன்னொரு முறை கூட திரையரங்கில் சென்று பார்க்க ஆசை; இங்கே இதுவரை போட்டதே அபூர்வம். மிக நல்ல வரவேற்கத் தக்க திரைப்படம். பொழுதைப் போக்கும் மக்களுக்கிடையே நமக்கான பொழுதுகளை ஆக்கித்தரவல்லது இதுபோன்ற திரைப்படங்கள்..

      Like

  2. மணிக்கன்னையன் சொல்கிறார்:

    விமர்சனமே இப்படத்தினை கண்முன் காட்சிபோல்…….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அப்படியா. நன்றி தோழமை. பொதுவாக விமர்சனம் செய்பவர்கள் முழுக்கதையினை சொல்லிவிடுகின்றனர் பின், படம் பார்க்க ருசிக்குமா என்ன அங்கனம் இல்லாமல்; அந்த படத்தின் மூலம்னமக்கு ஏற்பட்ட ஏற்படுத்தக் கூடிய பாதிப்பினை பகிர்வதே நியாயம் மிக்கது என்று எண்ணுகிறேன்..

      இப்படத்திலும் ஆங்காங்கே நிறைய குறைகளை சுட்டியுள்ளனர் நட்புறவுகள். ஆனால் என்னைக் கேட்டால், அவர்கள் தவறல்ல; தவறு எங்கிருப்பினும் எடுத்துக் கூறல் தவறல்ல, அது அவர் மேலும் அவரை திருத்தி நாளை நல்லதொரு திரைப்படத்தை மேலும் தரமாக தர முயற்சிக்கலாம். நல்ல படம் தரமான படம் எனும் வித்தியாசங்களை அறுத்தெறியலாம். அதே நேரம் குறையையே கூறினால் போதுமா; அவரின் உழைப்பிற்கு ஒரு ஆசுவாச முயற்சி வேண்டாமா, இத்தனை நாள் உறங்கா கடின உழைப்பை தோள் மீது சாய்த்து சமன் செய்துக் கொள்ள வேண்டாமா, நாங்கள் இருக்கிறோம் செய்யுங்கள் என்று அவரை உற்சாகப் படுத்த வேண்டாமா? அதற்குத் தான் என் இந்த நேர்மறை விமர்சனம். தவறும் குற்றமும் இங்கில்லை; அதை கான்பிப்போர் கான்பிக்கட்டும். நாம் நல்ல வரவேற்கத் தக்க விடயங்களை வரவேற்பதில் கவனம் கொள்வோம். வரவேற்பின் புத்துணர்வில் நாளை மேலும் பல அதிசயங்களை எதிலும் செய்வான் தமிழன்’ என்பதற்கு இதுபோன்றோரை பாடுபொருளாக்குவோம். அவ்விதத்தில் இது ஒரு நன்றிக்குரிய படம் தான்..

      Like

  3. kovaimusarala சொல்கிறார்:

    இது விமர்சனம் என்று சொல்லி முடிக்க முடியவில்லை நம் முன்னோர்களோடு வாழ்ந்த அனுபவத்தை படம் பாக்கும் போது ஏற்படுத்துகிறது அதை அப்படியே விட்டுவிடாமல் அந்த உணர்வுகளை உள்ளிழுத்து வெளியிடும் வித்யாவின் வார்த்தைகளில் இன்னும் வாழ்கிறார்கள் நம் முன்னோர்கள்

    இதை விட ஆழமாய் அழுத்தமாய் ஒரு விமர்சனத்தை யாராலும் கொடுதுவிடமுடியாது உள்ளம் நெகிழ்கிறது உங்களின் வரிகளை படிக்கையில் …..

    Like

  4. சித்திரவீதிக்காரன் சொல்கிறார்:

    அரவான் படம் குறித்த உங்கள் பதிவு அருமை.அரவான்-காவல்கோட்டம்-அரிட்டாபட்டி என்ற எனது பதிவை வாசித்துப்பாருங்கள்.

    அரவான் – காவல்கோட்டம் – அரிட்டாபட்டி


    அரவான் எடுக்கத்தொடங்கியதிலிருந்தே என்னை ஈர்த்த படம். பகிர்விற்கு நன்றி.
    -சித்திரவீதிக்காரன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றியும் அன்பும் நிச்சயம் பார்த்து கருத்திடுகிறேன். இன்றைய திரைப்படம் என்பது நமது வாழ்வியலை நாளைக்குமென பதிந்து வைப்பதாய் இருத்தல் வேண்டும் என்பது எண்ணம்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக