5, நீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு!!

1
நான் உனைக் கடந்துப்
போகும்போதெல்லாம்
என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று
நீ எட்டி என்காலைத் தொட்டு
உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்;

இன்று நீ எனைக் கடந்துச்
செல்கிறாய் –
எதேச்சையாக உன் கால்
என்மீது பட்டுவிடுகிறது;

நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை
நானுன் கால்தொட்டு –
என் கண்களில் ஒற்றிக் கொண்டேன்

நீ உடனே பதறி விலகி நின்றதில்
நான் அதலாம் ஒன்றும் தவறில்லை போ’ என்று சிரித்ததில்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு
கொஞ்சமேனும் புரிந்திருக்கும் – நீயும்
நானும் ஒன்றுதான் என்று!!
————————————————————————————

2
வீ
ட்டில் அதிரசம் செய்தாய்
எடுத்து ஒரு துண்டு கடித்தேன்

ஐயோ  ‘சுகரு’ கூடும் வையுங்க என்று சொல்லி
வாயிலிருந்துப் பிடிங்கிக் கொண்டாய்;

தெருக் கடையில் குழந்தைகளுக்கு
இனிப்பு வாங்குகையில் ஒன்றெடுத்து
வாயில் வைத்தேன் வேண்டாம் வேண்டாமென்று
கெஞ்சினாய்;

பிறகு சர்க்கரையே இல்லாமல்
தேநீர் கொடுத்தாய்
கசப்பு முகத்தில் அறைய’

எனக்குத் தேநீரே வேண்டாம்
ஆளைவிடு என்றேன்
மன்னிக்கக்  கேட்டு வருத்தப்பட்டாய்
கசந்ததையும் கண்மூடிக் குடித்தேன்;

ஒரு திருமணத்திற்கு ஆசிகூற போனோம்
திருமணம் முடிந்து பந்தியிலமர
பாயாசத்தை முதலாக தட்டில் வைத்தார்கள்
நீ  என்னையேப் பார்த்தாய்
நான் பாயாசத்தை தொடக் கூட இல்லை;

இப்போதெல்லாம் இனிப்புகளை
எனக்காக இல்லையென்றாலும்
உனக்காக நான் தின்பதில்லை’ என்று நீ
புரிந்துக் கொண்டாய்ப் போலும் – உனக்கும் பாயாசம்
வேண்டாம் என்றாய்;

கொஞ்ச நாள் கழித்து ‘சுகர் டெஸ்ட்’ செய்தார்கள்
அத்தனை ஒன்றுமில்லை – கொஞ்சம் இனிப்பு
தின்னலாம் என்றார் மருத்துவர்

நானுன்னைப் பார்த்துச் சிரித்தேன்

நீ மருத்துவரையே பார்த்தாய்
இந்தப் பாவி மனுசன்
இப்படியா சொல்லிவைப்பான் இவரிடமென்று நீ
நினைத்திருப்பாய்  போலும்

உன் கண்களில் கடுகு பொறிய
உனைப் பார்த்து மகன் சிரித்துவிட
நானும் சிரிக்க அதற்குள் நீ

அதிக இனிப்பில்லாமல்
வேறு என்ன செய்துதரலாமென யோசித்துக்
கொண்டிருந்தாய்,

நான்  உனக்குக் கட்டிய தாலியை நீ பிரித்து
எனக்குக் கட்டிய ஒரு மரியாதையில்
கரைந்துப் போயிருந்தேன்;

மனதால் இருவரும் இருவேறு மாற்றங்களில்
சமமாகவே இருந்தோம்!
——————————————————————————–

3
ன்ன பார்க்கிறீர்கள் என்றாய்
உன் முகத்தில் பொட்டில்லாமலும்
அழகாகத் தான் இருக்கிறாய் என்றுசொல்லி
சிரித்தேன் நான்;

ஐயோ விழுந்துடுச்சான்னு சொல்லி நீ
விழுந்து ஓடி
சாந்தெடுத்து கண்ணாடி பார்த்து நெற்றியில்
வட்டமாய் வைக்க

உனக்குப் பின்புறமிருந்து
அதேக் கண்ணாடியில்
என் முகமும் தெரிய

நான் அந்த என் முகத்தினுள்ளே
உன் பொட்டில் திணித்துள்ள என் உயிர்ப்பின் நியாயத்தை
தேடிக் கொண்டிருந்தேன் –

நீ
இப்போ எப்படியிருக்கு என்று கேட்டு
பொட்டோடு என்பக்கம் திரும்பினாய்

நான் –
பொட்டு நல்லாருக்கு
அதிலிருக்கும் நாங்கள்தான்
நல்லாயிருந்திருக்கவில்லைப் போல் என்றேன்,

நீ உடனே ‘ஏன், அந்த உங்களில்
நாங்களும் தானே இருக்கிறோம்
அதனால் வருந்தாதீர்கள்
அதலாம்  அப்படித் தான்’ இனி மாற்றினாலும்
வலிக்குமென்றாய்;

வலிக்கும்தான்
இருவரும் இருக்கிறோம் தான்
நீயில்லாமலில்லை தான்…., ஆனாலும்

இருவரும் நடக்கும் சாலையில் நீ மட்டும்
சுமக்கிறாயே என்றேன்;

விதித்ததை சுமக்கிறோம்
விடையேது வாருங்கள்’ என்று நீ
கையிழுத்துவிட்டு உள்ளேப் போனாய்,

நான் அவ்வப்பொழுது
இதுபோன்ற இடங்களில் நின்றேப் போகிறேன்

காரணம் கேள்விகளின் ஓட்டையில்
பதில்கள் அத்தனை அடைவதேயில்லை!!
—————————————————————————————–

4
லையில் மல்லிகை வைத்து
அருகில் வந்தாய்

ஆ… நல்ல வாசம் என்றேன்

தலையை திருப்பிக் காட்டி
நல்லாருக்கா என்றாய்

பெண் நீ; எப்படியும் அழகுதானே
என்றேன்;

அதலாமில்லை பூ சரியாக இருக்கா
பாருங்கள் என்றாய்

ம்ம் சரிதான் என்றேன்

இன்னும் கொஞ்சம் ஒரு சுற்று
சுற்றவேண்டுமா
நீட்டனுமா
இல்லைப் போதுமா? என்றாய்

உனக்குப் போதுமெனில் விடு
வேண்டுமெனில் வை என்றேன்
எப்படியும் நீ அழகுதானே என்றேன் மீண்டும்;

நீ சிரித்துக் கொண்டே
தலைகுனிந்து உள்ளேப் போய்
நீளமாக பூ தொங்க இரண்டுமூன்றாக வைத்துக்கொண்டு
சிரித்தமுகமாக வெளியே வந்தாய்;

வந்ததும் என்னிடம்
சரி புடவைக் கட்டவா
இல்லை சுடிதார் அணியவா என்றாய்

உனக்கு  எது வசதியா இருக்குமோ
அதுபடி செய் என்றேன்

நீ மீண்டும் உள்ளே ஓடிபோய்
புடவை கட்டிக்கொண்டு
வாசல் வந்தாய்
போலாமா என்றாய்;

சரி என்று நானும் தலையாட்டி
கதவடைத்து
இருவரும் இறங்கி தெருவில் நடந்தோம்

நான் முன்னே தனியே நடந்தேன்
நீ சற்று வேகம் கூட்டி ஓடிவந்து
என் கைபிடித்துக் கொண்டாய்;

ஆக, எதையுமே நான்
உனக்குப் பிடித்தாற்போல் தான்
உனை வைத்திருக்க நினைப்பேன்; நீ
எனக்கு ஏற்றார் போலிருக்கவே எப்பொழுதும்
விரும்பினாய்,

உன் விருப்பத்தில் எனக்கும்
இணக்கமும் மகிழ்வும் உண்டு, காரணம்
அதையும் அது உன் உணர்வென்று மதித்தேன்;

என்றாலும்
நீ சார்ந்து இருப்பதற்குரிய
அவ்வப்பொழுதிற்கான என் கவலை
நம்மைப் பற்றியதல்ல –
அடுத்த தலைமுறையைப் பற்றியது!!
————————————————————————————–

5
வீ
டு பெருக்கி வாசல் பெருக்கி
கோலமிட்டாய்;

பெருஸ்ஸ்ஸ்ஸா பேசுறியே
நீ போய் இதலாம் செய்துக் கொடேன் என்றார்
என் நண்பர் ஒருவர்.

செய்வேனே, ஏன் செய்தாலென்ன
கொடு என்று கேட்டு வாங்கி ஒருநாள் முழுக்க
பெருக்குவது துடைப்பது கழுவுவது சமைப்பது என
அனைத்தையும்  நானே செய்தேன்,

சரியான பொண்டாட்டிதாசன் இவனென்று
என் வீட்டுத் தெருவின்
இந்த முனையிலிருந்து அந்தமுனை வரை
பெண்கள் பேசி கேலி செய்து சிரித்தார்கள்;

அவர்களுக்குப் புரியவேயில்லை
நான் பெருக்கியது –
அவர்களின் வீட்டுக் குப்பையையும் சேர்த்துதானென்று!!
——————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s