“திரைப்படத்திற்கு ஒரு புது மொழி இருக்குமெனில் அதை இனி இவ்வுலகம் தமிழரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சொல்லித் தருவோர் முன்வரிசையில் நம் பாலாஜி சக்திவேலை முன்னிறுத்தலாம். மனதை அறுக்கும் காட்சிகளிடையே முகம் அதட்டாமல் ஒரு அறிவுரையை உள்புகுத்தும் பாடலை அமைப்பதெப்படியென இந்தப்படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப் பார்க்க திகட்டாமல் உணர்வில் ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பாத்திரத்திற்கு ஏற்றார் போல் புதுமுகங்களைத் தேர்ந்தெடுக்க இவருக்கே ஒரு புதிய விருதை கொடுக்கவேண்டி அறிமுகப்படுத்தலாம்” இதையெல்லாம் நான் சொல்லவில்லை, நீங்கள் சென்று படம் பார்த்தாலும் உங்கள் எண்ணமும் இப்படித்தானிருக்குமென மெச்சிக்கொள்ளத் தக்கப் படமிது “வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது”.
உண்மையில் சப்தமில்லாமல் ஒரு யுத்தம் என்பார்கள், இது சப்தத்தின் ருசியில் ரசனை தேன் கலந்த யுத்தம். ஆம், மனம் அதிர அதிர கண்முன் காணும் பல கொடுமைகளை காட்சிபடுத்தி இச்மூக அவலத்திற்கு எதிராக ஒரு போர் தொடுக்கிறது இத்திரைப்படம், அதில் தொக்கிநிற்கும் வெற்றியை நமையறியாமலேயே நம் மனசோடு சேர்த்துத் தட்டிச்செல்கிறார் இப்படத்தின் இயக்குனர் திரு. பாலாஜி சக்திவேல்.
காதல் எது? தர்மம் எது? ஏழ்மையின் தவிப்பு என்ன? பணத்திமிர் எப்படி இருக்கும்? படிப்பின் உயரமெவ்வளவு? பதவிகளின் குற்றங்கள் யாவை? ஒரு வெள்ளைவேட்டி எங்கே எப்படிக் கரைபட்டு நம் கண்ணில் உறுத்துகிறது? நம் குழந்தைகள் அனுபவிக்கும் வலி என்ன ? ஏன் ? எவ்வாறு அதை சற்றேனும் நாம் நம் கண்முன் கண்ட காட்சியாக உணரலாம் ? எப்படிப் பின் அதை சரிபடுத்திக்கொள்ளலாம்? இனி நீதி எந்த புள்ளியில் தன் கண்களைத் திறக்கும்? தர்மம் என்று’ எங்கு’ எப்படி நின்று கர்ஜிக்கும்? இப்படியான பல கேள்விகளை மனதில் சுமந்து இப்படத்திற்குச் செல்வீர்களேயானால், திரும்பி வருகையில் பதிலை இப்படத்தில் தொலைத்திருப்பீர்கள். காரணம், நாம் தொலைக்க இருப்பதை எல்லாம் பத்திரமாக சேகரித்து தமிழ் திரையுலகிற்குப் பெருமைசேர்க்க ஒரு திரைப்படம் செய்திருக்கிறார் இயக்குனர் திரு. பாலாஜி சக்திவேல்.
உழைப்பை தன் வியர்வையை ஒவ்வொரு சொட்டாக இடம்பார்த்து இடம்பார்த்து தெளிவாக சிந்தித்து சிந்தப்பட்ட ஒரு ஈர மனதின், அக்கறையுள்ள ஒரு மனிதரின் திட்டமிட்ட ஒரு கலைக்குவியல் இத்திரைப்படம் என்றாலும் அது மிகையில்லை. அந்தளவிற்கு, திரைப்படமென்பது ஒரு பொழுதுபோக்கிற்கானது எனுமிடத்தை உடைத்தெறிந்து நம் இனி வரும் காலத்தைக் கொஞ்சம்’ நமக்கென ஆக்கித் தர முயலுமொரு கலைப் பிரயத்தனம் இத்திரைப்படம்.
வசனமும் திரைக்கதை நகரும் அதிர்வும் புரிய புரிய நகரும் காட்சிகளும் முகம் சுழிக்க வேண்டாத, மனசு கோணாத ஒரு யதார்த்த வாழ்வை சுருள்படுத்தி படப்பெட்டிக்குள் அடைத்த திறனும், சண்டை’ பாட்டு’ குத்து’ வெட்டு’ காமம்’ கொலை’ கொள்ளை என எதையுமே பெரிதாக எதிர்பார்த்திடாமல் தான் சொல்லவந்த விசயத்தைமட்டும் மிக சாதுர்யமாக நம் அறிவுக்குள் அகப்படுத்திய லாவகமும் உண்மையில் விருதுகளை துச்சப்படுத்தி ஒரு உயர்ந்த மனநிலையில் பெரிய சிம்மாசனமிட்டு அதில் அந்த பாலாஜி சக்திவேல் எனும் ஒற்றை மனிதரை பொக்கிஷமாக பத்திரப்படுத்திக் கொள்கிறது மனசு.
அவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? அவரின் திரைப்படத்திற்கான காரணங்கள் என்ன? எங்கே அவரை முன்வைக்கத் துடிக்கிறார் என்று மண்டை முழுதும் ஒரு இயக்குனரின் சமூக அக்கறையை மட்டுமே எண்ணி எண்ணி பிரம்மிக்கத் தக்கதொரு திரை வேள்வியை நடத்தி படம்பார்க்க வந்த அத்தனைப்பேரின் கைத்தட்டல் சப்தத்தோடு மனது கனக்க கனக்க காதல் காதல் என்று மனது கத்தி கத்தி முடிகிறது இத்திரைப்படம்.
துள்ளளில்லாத ஒரு காதல் கதையை மனசு துள்ள துள்ள நிரப்பி வருகையில், அது நிரம்பிய இடத்தை இதுவென்று அந்த ஒற்றைப் பாடல் சொல்கிறது பாருங்கள்;
வானத்தையே எட்டிப் புடிப்பேன்
பூமியையே சுத்தி வருவேன்…
உன் கண்ணக்குழி அழகினில்தான்
என் கற்பனையை நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக் குழி மீதுதான்டி
என் நிம்மதியை நான் புதச்சேன்;
அடி பெண்ணே நீயும் பெண் தானோ
இல்லை பிரம்மன் செய்த சிலை தானோ…
என்றுவருமந்த ஒரு பாடலுக்கு மொத்த விருதையும் வாரித் தரலாம். அத்தனை இப்பாடலில் என்ன தானிருக்கோ(?) எவ்வளவு ரகசியமுள்ளே கொட்டிக்கிடக்கோ(?) இப்பாடலில் எது சிறப்பு? வரியா? இல்லை பாடியதா? அல்லது இசையா? வெறும் பாடலிட்ட இடமா எனில், மொத்த சிறப்பும் உண்மையில் முழு இப்படத்திற்கே உரியதுங்க, மனசை இசையால் அறுப்பது என்னன்னு கேள்வி கேட்டா அதுக்கு இந்த பாடலை உதாரணம் சொல்லலாம். அத்தனை பொருத்தமான இடத்தில் இப்பாடல் முழுமையாய் ஒலிக்க, படம் முடிந்தும் திரையரங்கம் விட்டு வெளியேற முடியமால் முழு பாடலையும் வாசலில் நின்று கேட்டேனும் உச்சுக் கொட்டிவிட்டே நகர்ந்தன படம்பார்க்க வந்த மொத்த கூட்டமும்.
ஒரு இடத்தில் ஜோதி வேலுவின் தன்மீதான காதலை அறிகிறாள், அவனின் நியாயத்தைப் புரிகிறாள், இனி நீதி வேணும், ஆனால் நிலையான பொதுதர்மம் குறித்த அறிவு நிறைவில்லா மனிதர்களுக்கு மத்தியில் எங்கு கிடைக்கும் தனக்கான நீதி என்றெண்ணி முடிவை தானே தீர்மானிக்கிறாள், அந்த முடிவு சரியென்று மொத்த சனத்தையும் கைதட்ட வைக்கிறது ஒரு கடிதம். வரிக்கு வரி பட்டைதீட்டிய கத்தியில் வெட்ட வெட்ட விழும் கழுத்துபோல அவளின் குரலில் அந்த நயவஞ்சகன் அந்த கடிதத்தைப் படிக்க படிக்க திரையரங்கிற்குள் அதுபோலவே தவறு செய்து அமர்ந்திருக்கும் மனிதர்கள் இருந்திருப்பின் செத்து அவரும் விழுந்திருப்பர். அல்லது திருந்தி விட்டேன் நன்றி என்று இந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு கடிதமேனும் எழுதி இருப்பர்.
இப்படத்தில் இன்னொரு பெரிய சிறப்பு உண்டு. அது மிக நேர்த்தியாக நடித்த புதுமுகங்கள். சுழலும் ஒவ்வொரு படச்சுருளிலும் யாரேனும் ஒருவரின் வாழ்க்கைக்கான வாசலை திறக்கும் முயற்சியில் வெகு ஒய்யாரமாய் வென்றுவிடுகிறது இப்படம்.
ஒரு பார்வை அழகு, பேச்சு ரசம், நடை வசனம் யதார்த்தம், நடிப்பு, ‘நடிப்பு இதுக்குமேல வேறென்ன வேணுமென’ நாம் சமாதனப்பட்டுப் போன இடத்தில் பெயர்வரிசை கொண்டுவிடுகிறார்கள் இப்படத்தில் நடித்த மொத்தப்பேரும் வருங்கால சிறந்த நடிகர்களென.
ஒரு மகனைப் பெற்றவன் சிங்கத்திற்கு தகப்பனாகிறான், அதே ஒரு மகளைப் பெற்றவன் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திரிகிறான்; அதன் கனம் புரிந்துவிடும் புள்ளியில் நம் சமூகம் திருந்திக் கொள்ளும். ஆனால் –
தெருவில் ஒரு பெண் நடக்கையில் தென்றல் வீச, அந்த தென்றலைப் பெற்ற வயிற்றில் விஷம் சுரக்குமொரு பயத்தை ஏற்படுத்திய நம் சமூகம் எத்தனை சரி?
எதிரே வரும் ஒரு வாலிபன் பார்க்கும் பார்வைக்கெல்லாம் தன் மகளை சந்தேகப் படும் அப்பாக்களையும், சந்தேகப் படாத அப்பாக்களை ஏமாற்றி தன் மனதை ஏமாற்றத்தால் சுமக்கும் மகள்களையும், ஏமாற்றியும் ஏமாந்தும் நிற்கும் நம் மகன்களையும், எல்லோரின் சூடுபட்ட காயத்திற்கும் தன் இதயத்தில் வலிக்க வலிக்க ரணமேற்படுத்திக் கொள்ளும் அம்மாக்களையும், அத்தகு காதலையும், அக்காதலின் எதிர்ப்பையும், காதலின் மீதான ஒரு செயற்கைத் தன செய்கைகளையும் இச் சமூகத்தில் யார் திணித்தார்?
பள்ளிக்குச் செல்ல சடைப் போட்டு, சீருடையுடுத்தி, புத்தகப் பை நிறைய தன் தவிப்பை நிரப்பி அனுப்பிவிட்டு மாலையில் திரும்பிவரும் மகளுக்கு நல்ல புத்தியை குடு சாமீன்ன்ன்னு அழுற பெற்றோரின் அழை எத்தனை இளைஞர்களுக்குப் புரியும்?
ஆசிட் ஊத்துறதும், அரை ஆடையில் படமெடுத்து ரசிப்பதும், பாதிவகுப்பில் வெளியேறி பிடித்தவரோடு வருத்தமொழித்து அலைவதும், சும்மா பொழுதுபோக்கிற்குக் காதலிப்பதும், பொழுதுதெல்லாம் இதயத்தை ஒரு வெற்றிடம் அமர்ந்து மென்றுத் துப்புவதும், காதலில் வாழ்க்கையை தொலைப்பதும், கண்முன்னே ஒரு சமூகம்’ ஒரு பண்பட்ட இனம்’ இப்படிக் கெட்டுச் சீரழிவதுமா ‘நம் அய்யன் திருவள்ளுவன் காட்டிய பாதையில் நடப்பது?
காதல் தப்பில்லை, ஆண்பெண் சமபங்காக அமர்ந்து முகத்திற்கு நேராக நட்பு கொள்வது தவறல்ல, பெண்கள் வெளியேறி விண்வெளியை எட்டிவிட்டதும் பெருமைதான், ஆண்கள் தன் சகதோழிகளை மதிப்பதும், அக்காத் தங்கைகளுக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்து ஒரு பெருந்தன்மை சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதும் ஒருபுறம் பெரிதுதான், ஆக இப்போதைய மாற்றங்கள் எல்லாமே சரி எனில், வேறெது தவறு?
என இத்தனைக் கேள்விகளையும், அத்தனைக் கேள்விகளுக்கான பதிலையும் மிக சமமாக கலந்துவைத்துக் கொண்டிருக்கிறது இந்த வருட தேசிய விருதிற்கான இத்திரைப்படம் “வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது”.
சென்று திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கும் அதன் உண்மைப் புரியும். ரசனைப் பூரிக்கும். இன்னொருமுறை படம் பார்க்க மனசு விரும்பும். ஒரு புனிதமான அன்பு எனில் என்னவென்று உணர்வீர்கள். மனதும் மனதும் காதலிக்கும் அதிர்வில் ஒரு நன்னடத்தை ஆழ நேசிப்பிலிருந்து துளிர்விட அகந்தை அடிபட்டு, சகிப்புத் தன்மை கூடி, விட்டுக் கொடல் உயர்ந்துப் போய்’ ஒரு பெருந்தன்மை மனதெல்லாம் வியாபிக்கத் தக்க பரிசுத்த உணர்வொன்று மரணம் வரை நிலைகொள்ளுமந்த இடம் இப்படத்தினாலும் புரியும்.
அந்தப் புரிதலில் திருத்தத்தைக் கண்டுக்கொள்வீர்கள் எனில், அதன் நன்றியை நம் இயக்குனர் திரு பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும், இப்படத்தின் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இன்னும் திரைக்குப் பின்னிருந்து உழைத்த மொத்தப்பேருக்கும், மறக்காமல் இப்படத்தின் நடிகர்களுக்கும் சொல்லிவிடுங்கள்…
அனைவருக்கும் என் நன்றிகளோடு..
வித்யாசாகர்
- படங்களுக்கு நன்றி: கூகுள், இந்தியா ஃகிளிட்ஸ்
இடைவெளிக்குப் பின் சற்று திரைவேகத்தில் கொஞ்சம் தொய்வும்; அந்த தொய்வே பின் வரும் முடிவை பெரிதாகக் கருதத் தான் எனும் யுத்தியும்,
ஆபாசமே இல்லாமல் ஆபாச குற்றங்களைக் காட்டும் படமிது என்று சொல்லுகையில் ‘அந்த மகிழுந்திற்குள் இருந்து ஆர்த்தியை மேலிருந்து காட்டும் காட்சியும்,
கடைசியில் காட்சி முழுதும் திரையில் முடிந்து பெயர் வருமிடத்தில் ஜோதியின் முழு முகத்தையும் காட்டியவாறே முடிக்காமல், ‘திராவகம் பட்ட பாதி முகத்தை சடாரென ஒரு காற்று வீசி அடிக்க அந்தக் காற்றினால் முக்காடு வந்து மூடி அந்த பாதி சிதைந்த முகத்தை மறைத்துக் கொள்ள, மீதி அழகிய முகம் மட்டும் ஒரேயொரு கண்ணின் அமைதியான வலிமிக்க பார்வையோடு தெரியுமிடம் அந்த பாடலும் ஒலிக்க, பெயர் வரத் தொடர்ந்திருக்குமேயானால்; இன்னும் கூட அந்த நிறைவு முழுமை பெற்றிருக்கும்;
அதுபோல், ஆர்த்தி கடலைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஓடி குதித்து அலைகளோடு விளையாடிக் குளிக்கும் காட்சியின் போது பின்னணியாக ஒளிரும் இசையை இன்னும் நான்கு தரப் படுத்தி இருக்கலாம்.
இப்படி அவரவர் எண்ணத்திற்கேற்ப சில திருத்தங்களும் நிறைகுறைகளும் மனதில் தோன்றினாலும் அதையெல்லாம் தூக்கி கடாசிவிட்டு மனதார மெச்சத் தக்க படம் தான் இது என்பதில் ஐயாமேயில்லை..
LikeLike
எமது திரைப்படங்கள் ஒரு புதிய திசையில்
செல்வதை உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது.
அருயைாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
LikeLike
நன்றி ஐயா, உணர்வு ததும்பும் படமிது. உண்மையில் தமிழரிதில் (மீண்டும்) வெல்வர் போல்; இன்றைய திரைமொழிக்கும் தமிழ்’ பாடம் கற்பிக்குமொரு மொழிக்கு ஈடாகவே இன்றைய மாறுபட்ட நிறைய அரிய திரைப்படங்கள் வந்துகொண்டிருப்பது ஒரு ஆறுதலைத் தருகிறது. காலத்தை வென்றுநிற்கும் ஒரு இனத்திற்கு ‘நம் வாழ்தலை யதார்த்தம் இடறாமல் பதியும்’ இன்றைய கலைஞர்களின் திறன் நமக்கு எதிர்காலத்தில் நம்மைப் பற்றி பேச பயன்படலாம்..
LikeLike