தங்கத் தமிழரின் தங்க முகம், அது
தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம்
தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர்
மனிதரைக் கொல்லும் கோர முகம்;
நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம்
அவன் கிரீடம் கூட – மதுரை
ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில்
அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்..
நித்யானந்தா என்று சொன்னால்
கேட்க கேட்க தமிழருக்கசிங்கம்
சகிக்க முடிந்த சீர்கெட்டோர் அங்காள
எம் முதுமதுரைக்கு தாளா பங்கம்;
பொண்ணு ருசி பார்த்தவனும், பணத்தை மென்றுத் தின்றவனும்
தன் தீராப் பசிக்கு வாங்கி’ விற்றான் தங்கம்,
நம்ம கூரைப் பிய்ந்த ஓட்டையையும், எரியும் வயிற்றின் நெருப்பையும்
இன்னும் நாம் அணைக்கவேயில்லை, பிறகு ஏன் நமக்குத் தங்கம்?
அங்கே கொட்டிக் கொட்டிக் கிடக்குது தங்கம்
இங்கே ஒரு சவரன் தாலிக்கேப் பஞ்சம்; அங்கே
கால்மிதிக்கக் கிடக்குது தங்கம், இங்கே என்
அக்கா தங்கைத் தாலியை கட்டாமலறுக்கிறது தங்கம்;
காதுமூக்கு திறந்து கிடக்க
பூட்டாத் தங்கம் எம் வாழ்வைப் பார்த்துப் பறிகசிக்கும்,
ஈனர்கள் வாழும் மண்ணில் பின்வாசலும் – கதவடைக்கும்
பணப்பெட்டிக் கண்டால் போதும் – கயவர்
வாயில்கூட தங்கம் பல்லாய் முளைக்கும்;
தங்கமறுத்து தங்கமறுத்து நம் சுகத்தை எல்லாம்
தங்கத்தில் புதைத்தோம்; பூட்டிவைத்த அலமாரி காக்க
இரவு பகல் தூக்கம் தொலைத்தோம்
வாங்கும் பாதிசம்பலத்திலேனும்’ ஒரு கல்லுத் தங்கம் வாங்கி
மாசக் கடைசியில் அடகு வைத்தோம்;
அடகுவட்டி வாங்கி வாங்கி அவன்வீடு மாடியாச்சு – நாம
வெச்சநகைய மீட்டாம சுகரும் பிரசரும் ஏறிப் போச்சு,
நாளும் சிந்தும்வியர்வைச் சேர்த்து’ வெச்ச நகையை மூட்டும் முன்னே
அதுகூட முழுகிப் போச்சு; அன்னைக்கு இரவு
சோற்றுகூட’ அதுவும் சேர்த்துப் பட்டினியாச்சு;
என்ன இருக்கு தங்கத்துல
எதுக்கு அதுன்னு விட்டுத் தொலை,
வீழும் சொட்டு வியர்வைமுத்தில்
வீடு வாங்கி பெருமை யடை;
மூடமறுக்கும் பெருமக்களே
விலைக்குப் போன கயமைத் தனம்,
வந்தேறி நம்மண்ணில் நின்றாள – என் வீட்டுக்
காலண்டரில் அட்சைய திதியின் அவலம்;
இருப்பவனெல்லாம் மினுக்கிக் கொள்ள
என் இல்லா தங்கச்சி தெருவில் வர
இருப்பவனுக்கு சிரிப்பு வேறு; தங்கத்தை
தெருவில் போடு, பிறகு பாரு மதிப்பு ஏது?
எவன் வந்து முடிவிட்டானோ – வெறும்
பொருள்வைத்து அவன் நலம் செய்வானா?
கொட்டிக் கேட்கும் தங்கத்தை விட்டுப் பாரு என்னினமே
வீட்டில் இருக்கும் பெண்ணவளின் சிரிப்பு
சிரிக்க ஜொலிக்கும் தங்கமன்றோ?
கட்டி இறுக்கிய நெருக்கத்தில்
ஒரு கோடு கிழிக்கும் தங்கம் உதறு,
ஒரு தாலி கயிற்றை மஞ்சளிட்டு
காலம் கனக்க தொங்கவிடு,
வீட் டை கோயிலை செருப்பைக் கூட
தங்கத்தில் செய்த புத்தியை யறு
காலண்டர் சொல்லும் பாடத்தை
கண்மூடி ஏற்க மறு;
நீ உதறிவிட்ட தங்க ஆசையில்
ஒவ்வொன்றாய் முளைக்கும் என் ஏழைத் தாலி பாரு;
நாளை பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ
அதை புதைக்கும் குழியில் உன் தங்கத்தைப் போடு!
—————————————————-
வித்யாசாகர்
கூகுளின் தமிழ்சிறகுகள் குழுமத்திலிருந்து திரு. சிவபிரகாசம் எழுதியது:
//நண்பரே தங்க மறுப்புக் கொள்கை நன்றாக உள்ளது //
வித்யாசாகர் எழுதியது:
நன்றி நண்பரே; வெள்ளிக் கிழமையன்று ‘குவைத் தமிழோசைக் கவிஞர்கள் மன்றம்’ நடத்திய ‘சங்கத் தமிழ் தங்க விழாவில்’ பாடியக் கவிதையிது.
வேறொன்றுமில்லை, எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்குமோ எனும் எதிர்நோக்கு தான். இல்லாதவனைப் பார்த்து கொல்லாதே கொல்லாதே என்பதை விட; கொல்லத் துணிவதன் சூழ்சுமம் தேடி, பின் கிடைத்த பாடுபொருளிது.
குறிப்பாக இதன் நன்றி குவைத் தமிழோசைக் கவிஞர்கள் மன்றத்தையும், இதைப் பற்றி எழுதக் கேட்ட ஐயா கவிஞர் திரு. முனு. சிவசங்கரன் அவர்களையுமேச் சாரும்..
LikeLike