51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..

த்தனை படபடப்பு அன்று
இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும்
ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய
அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம்?

அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த
தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய்
எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே –
எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ?

உயிர் அறுந்து கிடந்த பிணமெரித்த வாடை
உணர்வைப் பெருக்கி ஒரு ஓலமிட வைத்து
அக்கா அம்மா அப்பா ஐயோ குழந்தை குழந்தை என்று
கத்திப் புரண்டோமே நினைவிருக்கா?

கைகால் முறிந்து ஈமொய்க்க ஒரு
கரிஎடுத்துப் பூச துப்பில்லை என் கண்ணடைத்த
தெய்வமே நீ நாசமாப் போ..வென
விட்ட சாபத்தின் மிச்ச வலிகள் நின்றுவிட்டனவா ?

நீயில்லை நீயில்லை நீயுமில்லையா
பிறகு நான் மட்டுமெதற்கு யென ஒவ்வொரு உடம்பையாய்
திருப்பிப் பார்த்துவிட்டு கடைசியாய் – தன் கழுத்தையும்
அறுத்துக் கொண்டோரின் பாவங்களெல்லாம் தீர்ந்தேப் போச்சோ?

தொலைகாட்சி கத்தியதும்
இணையங்கள் அலறி அழுதுவடித்துத் தீர்த்ததும்
கூட்டம் கூடி கோசம் போட்டதும், ஒற்றுமைத் தீயை
வான்வரை எரித்ததும் ஒட்டுமொத்தமாய் ஒழிந்தேப் போயினவா?

எதற்குள் அடங்கிப் போயிருக்கிறோம் இன்று ?
தோல்வியின் கொட்டடத்தில் அவன்போடும்
ரத்தம் நனைந்த சோற்றைத் திண்ண – நம்மினம்
எப்படித் தயாராகிவிட்டது ?

இல்லை, தயாரில்லை, உயிரோடு சேர்த்து
விடுகிறோமிந்த அடிமைத் தனத்தையும் வா’ வந்து
கூட நில்லென்றால் நிற்க –
இந்த உலகத் தமிழினம் தயாராகிவிட்டதா?

இல்லை, இதுபோதும், கொலையில்லா இந்த வீடும்
இனி கொடுமை செய்யாத அரசும்
நாங்கள் தனித்து நடக்குமிந்த தெருக்களும்
இரத்த  ஈரம்காய்ந்த மண்ணும் போதுமெனில்’

நம்பி –
விட்டுவிட்டு –
நமக்கென்ன என – நாம் நிற்குமிந்த ஏதேனும் ஒரு தேசத்தின்
ஓரக் கோடுகளின் மீது அண்டி நின்றுக் கொள்வோமா?

வேறென்ன செய்வோம் சிந்தியுங்கள் உறவுகளே..
நாட்கள் நகருமொரு புள்ளியில் நாம் வாழ்ந்ததாய்
அல்லது நம்மினம் வீழ்ந்ததாய் –
எதை எழுதிவைக்க தயாராகிறோம் நாம்; சிந்தியுங்கள்!!
———————————————————————–
வித்யாசாகர்

குரல் வழி கேட்க இங்கே சொடுக்கவும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to 51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..

  1. Umah thevi சொல்கிறார்:

    மனசு வலிக்கிறது.

    Like

  2. munu. sivasankaran சொல்கிறார்:

    சாவின் முன்னால் அமர்ந்து அழுது அழுது ஓய்ந்து சோர்ந்திருக்கும் நேரம் உறவு ஒன்று உள் நுழையும் வேளை ஓவென்று கத்தல் வெடிக்குமே.. அதுபோல்தான் உங்கள் கவிதை எங்களை கத்தவிடுகிறது.. ! நன்றி சொல்லும்முன் நா வரலகிறது..!

    Like

  3. வித்யாசாகர் சொல்கிறார்:

    வலையின் மிகுதியில் வந்த கோப வார்த்தைகள் தான் ஐயா இது..

    Like

  4. வித்யாசாகர் சொல்கிறார்:

    ஒரு விரலொடிந்தாலே வலிக்கும், நகம் கொய்தால் உயிர்போக வலிவலிக்கும்; உயிர் கொய்யப்பட்டால் அங்கே ஒரு இனம் அழியும் சடுதியில் மொழியும் கலாச்சாரமும் கூட அழியாதா? ஆக மொழியின் சறுக்கலில் இனத்தின் ஒரு பாதி மக்களை துள்ளத் துடிக்கக் கொன்ற இந்நாளை எங்கனம் மறப்பது? அல்லது எந்த மனநிலைக் கொண்டு நினைப்பது ?

    முள்ளிவாய்க்காலில் உயிர்விட்ட உறவுகளுக்கு நினைவேந்தலும் என் எஞ்சிய தமிழினம் இரண்டாம் பட்ச அடிமை வாழ்வை தகர்த்து சுதந்திர மண்ணில் மகிழ்வோடு வாழ முழு எண்ணம் நிறைதலுமாய் இந்நாள்.. மே’ 18

    Like

பின்னூட்டமொன்றை இடுக