மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!!
எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும்.
வாழ்வின் வலிக்கும் தருணங்களுக்ககவே படைக்கப்பட்ட என் உறவுகளின் மண் இனி நம் படைப்புக்களால் துடித்து எழுமென்பதை தன்னிந்த கவிதைத் தொகுப்பின் மூலமும் நிருபித்திருக்கிறார் நம் கவிஞர் நடா சிவராசா.
காலங்காலமாக கவிதைகள் புனையப்படுகின்றன, பின்பும் பின்பும் கவிதையின் ஊற்று பெருக்கெடுத்தே நிரைகிறது உலகின் மனசாட்சியும், உன்னத மனிதர்களின் வாழ்வும். அவ்வழியில் இப்படைப்பின் ஆசிரியர் திரு. நடா சிவாவும் இத் தமிழுலகில் நிலைத்து இன்னும் நடைப் போடும் தூரம் வெகுதொலைவுண்டு என்பதற்கு இந்த முதல் படைப்பு ஒரு முத்தாய்ப்புச் சான்று எனலாம்.
புத்தகம் நிறையும் அலமாரியின் அளவிற்கு புத்தகத்தின் சாராம்சம் படித்தோரின் நினைவில் நிறைந்துள்ளதா எனில் ஆம் என்றுச் சொல்லத் தக்க படைப்புக்கள் மிகச் சிலதே நம்மைச் சுற்றிக் கிடக்கின்றன என்றாலும் அதன் வரிசையில் இனி இந்த கவிதைகளின் தொகுப்பையும் சேர்த்துக் கொள்வோம். வெறும் வலிகள் பாடுபொருளாகி நின்றுவிடாமல் சமூகத்தின் அக்கறை நிறைந்த பக்கங்கள் ஒவ்வொன்றும் இவரின் கவிதைக்குள் அடங்கிப் போயிருப்பது மிகச் சிறப்பு.
உதாரனத்திற்கு –
“காவியத் தாயின் தூரிகைப்
பற்றியெரிதல் கண்டு
பதறியதே பைந்தமிழர் நெஞ்சமெலாம்;
நீராய்ப் பூத்த நீற்றின் மேல்
சத்தியம் செய்துன் நாள்
மாறாதழிப்பேன் இப்பாதகச் செயல் செய்தவன் புனை” என்று கொள்ளும் வார்த்தையின் ஆழத்தில் பொங்குவது பாரதியின் கோபமல்லவா?
இன்னொரு இடத்தில் புது யுகம் படைப்போமென்று சொல்லி உலக முகத்தின் மீது எழுத்தை வாரி இறைக்கும் சாட்டையடிப் பாருங்கள்
“தர்மம் செய்யும் தமிழனைக் கொல்
அவர்கள் வாழும் நிலங்களையும் கொள்
போதிமரம் சொன்னது பூமியில் கலியுகம்” என்கிறார் பாருங்கள், கையருந்து காலுடைந்து உயிர் கொன்று வீழ்த்தப்பட்ட என் சகோதர உறவுகளின் காலடியை கண்ணீரால் கழுவி அதன் மண்ணெடுத்து உயிர் பறித்தவனின் மீதேயெறியும் லாவகமில்லையா இது?
இப்படிச் சொல்லிக் கொண்டே நீண்டு கடைசியில் –
“கறைபடிந்த பூமியை கவிமழைப் பொழிந்து
கழுவிக்காப்போம் கவிஞர்களே;
கலியுகம் களைந்து புதுயுகம் படைப்போம் வாருங்கள் தோழர்களே”
என்கிறார், உண்மையில் கவிஞர்களின் எழுத்தாளர்களின் நல்ல படைப்பாளிகளின் சிந்தனைக் கதறல்களுக்கு காதுகொடுத்தே ஆகும் கட்டாயத்தில் தான் நம் உலகமின்று திணறி நிற்கிறதோ என்றொரு பதைப்பு எனையறியாமல் என்னுள் எழுந்ததை மறுக்க முடியாமல் உணர்ந்தேன்.
அதுபோல் உயிரோடு இருக்கும்போது வீணன் அறிவிலி வெட்டிப் பயலென்று தூற்றும் இதே உலகம் அவன் இறந்துப்போன பின் அவனை வீரன் சூரன் வல்லவன் நல்லவனென்றெல்லாம் போற்றுமொரு பாங்கும் இம்மண்ணில் இயல்பென்று சொல்லுமொரு கவிதையும் சிறப்பு.
இன்னொரு கவிதை வருகிறது ‘பெருமைக்கோர் பெருங்குளம்’ என்ற தலைப்பில். அதில் வரும் –
“தளத்தால் பெரியகுளம்
தவச்செடிகள் நிறைஞ்ச குளம்
ஊரின் நடுப்பக்கம்
ஒருச் சாஞ்சு படுத்த குளம்;
மழை தந்த நீரோட
மண்கொண்ட நிறத்தோட
வனமெல்லாம் வளம் வந்து
வளமாய் நிரைஞ்ச குளம்;
செல்லச்சாமி மடம் நின்று
துள்ளி குதித்தாட
சிறுவருக்கும் பக்குவமாய்
அமைந்த குளம்;
வேளாண்மை நெல்லுக்கும்
விவசாய மண்ணுக்கும்
விடுவாய்க்கால் வழியோடும்
விசாலப்பட்ட குளம்” என்று நீள்கிறது தன் ஊர் அருமை பற்றிப் பாடும் பா’ வொன்று, அங்கே நெஞ்சம் கவிமழையில் நனைவது போல் நனைய நனைய அக் கவிதையினை ரசித்தேன்.
“அரைத்தூக்கம் கலையும் முன்னே
அம்மாவின் கையில் தேனீரும் சகக்றித் துண்டும்
அலுப்புமுறிய அரைக்குளியல் ஆறுபுத்தகமும்
கையில் எழுதுகோல் பெட்டகமும்
எட்டியுதைக்கும் எட்டாத துவிச் சக்கரமும்
ஒற்றையடிப் பாதையில் ஒற்றைக் கையினால் ஓட்டமும்
ஆலமரத்தின்கீழ் ஆரம்பக் கூடலும்
அணிவகுத்து நின்று நமச்சிவாய ஓதலும்” என்று பால்ய வயதின் நினைவுகளை வரிகளுக்குள் நிறைக்கும் தமிழின் அழகு காண்கையில் என் ஈழ உறவுகள் கைபிடித்து ஆளுக்கொரு கையில் எழுதுகோலை எழுதத் தினைத்தாலென்ன என்றொரு ஏக்கம் முளைவிட்டெழுகிறது.
“கற்ற நம் தலைப்பாகைகள் காணுமே
இது போதுமென்று
தன்னலம் பேணி உன்னிலம்
பறிகொடுத்தனரே தமிழா;
ஏனென்று நீ கேட்க ஏலாமல்
ஒளிந்து மறையலாமா?
நலிந்த ஏழைத் தமிழன் நீயென்ற
நகைப்பினை ஏற்கலாமா சொல்?” என்று கேட்கும் இக்கேள்வி உண்மையில் உலகத் தமிழரின் சட்டைப் பிடிக்கும் நியாயமான கேள்வியன்றி வேறில்லை. ஆக இப்படி இனிக்க இனிக்க உரைக்க வலிக்க என சிந்தனைத் தூண்டும் பல படைப்புகளின் மூலம் ஒரு புதுக் கவிஞரை அறிமுகமாகும் பழுத்த கவியை வாழ்த்த வாருங்க உறவுகளே. திண்ண திண்ண திகட்டாத பழம் போல் இப்படைப்பினை எங்கு கண்டாலும் ஒரு வாங்கிச் சென்று ஒரு ஓரமமர்ந்து முழுதாக படிக்கக் கோருமென் அன்பை ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையோடு இவ்விடம் என் அணி பூட்டும் ஆசையில் கூட்டிய உரையை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் பிற படைப்புக்களோடு இவர் கைகோர்க்கும் உறுதியில் நிறைகிறேன்.
இனி என் வார்த்தைகளை வாரி ஒருபுறம் எறிந்துவிட்டு உங்களின் கண்கொண்டு பாருங்கள். சிந்திக்கக் கேட்குமிடத்தில் சிந்தியுங்கள். நல்லதை எடுத்து வழிநடத்தி அல்லதை விட்டு இக்கவிஞரை வாழ்த்தி இன்னும் நான்குப் படைப்பாளிகளுக்கான வாசலைத் திறவுங்கள். அத்தனைப் பேரின் சமூக அக்கரையிலும் மூழ்கி முத்தெடுத்ததுபோல் பிறக்கட்டும் நமக்கான புது உலகம்.
உண்மையில் இப்படைப்பினைப் படிக்கையில் இவரின் முதல் படைப்பென்றெண்ணாது, மரம் பற்றியும் மனிதர் பற்றியும் சமஅளவில் பேசுமொரு பெரும் படைப்பாளியின் மனநிலை கொண்ட ஆழத்தை இப்புத்தகத்தில் காணமுடிந்தமையில் அணிந்துரை எழுதவேண்டி பெருமைக் கொண்டேன். ஒரு விதை பூமியில் விழும் கணம் அதன் கனவுகள் எப்படி உலகலாவி விரியுமோ அப்படி ஒரு ‘தாய்மை நிறைந்த கண்களோடு’ இவரின் முதல் படைப்பினைப் பார்க்கையில் பூரிக்கும் நெஞ்சமெலாம் நிறைந்தேப் போனேன். எங்கும் பச்சை உதிராமல் உயிரறுந்து போகும் கடைசி நொடிவரை பசுமைப் பூத்திருக்கும் ஒரு அரிய விருட்சத்தின் பலனாக இவரின் படைப்புகளும் இவ்வுலக மக்களுக்கு பயன்பட்டு இவரின் புகழும் திக்கெட்டும் கால் பரப்பி உலகமெலாம் நிறையட்டும்!
வாழ்த்துக்களுடன்..
வித்யாசாகர்