இதயம் இடிந்துவிழுந்த இடத்தில்
பிறக்கிறது கவிதை,
ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம்
வடிக்கக் கேட்கிறதென் கவிதை;
காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம்
வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை,
காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில்
கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக் கேட்கிறதென் கவிதை;
இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா
மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை,
இளைய பருவத்தில் கண்ட உலகை, பாதி கைவைத்து மறைத்த
பகையோரை எண்ணித் தகிக்கிறதென் கவிதை;
குடும்பம், காதல், வெற்றி, பணம் பணம் பணமென்று
திரியுமொரு சுயநல திணித்தலை எதிர்க்கத் துடிக்கிறது கவிதை,
பிறரை, பிறர் வலியை, ஒரு மலர் கசங்கும்
சூழலைக் கூட தவிர்க்கக் கெஞ்சுகிறதென் கவிதை;
இனம் மானம் அறிவு மொழிதனை
உணர்வினில் உயிர்பதிக்க உருக்கொள்கிறது கவிதை,
உலகின் பார்வைக்கு நிறம் மாறி’ தன் உணர்வறுந்துப் போனோரை
எழுத்தின் கூர்மையில் செவ்வனேச் செதுக்கப்பார்க்கிறது என் கவிதை;
வரலாறு தெரியாத, தெரியத் தராத, தெரிய முனையாத
என் பிள்ளையிலிருந்து பாட்டனைவரை எதிர்க்கத் துணிகிறது கவிதை,
இனி வரும் காலத்திலேனும் – நகர்வின் துளி நிழல்களையும்
நாளைக்கெனச் சேகரிக்க சுயசார்பு துறந்து பிறக்கிறதென் கவிதை!
மதிக்கத் தக்கவன் மனிதன், மன்னிக்கத்தக்கவன் மனிதன்
அன்பிலும் பண்பிலும் ஏன் அடிநெருப்பிட்டால் எரிந்து எட்டி
சூரியனையும் சுடத்தக்கவன் மனிதன்’ என்றுணர், நம்பு,
நம்பினால் உன்னால் எல்லாம் முடியுமமென்கிறது என் கவிதை;
மொழி உணர்வு கொள், இன உணர்வு கொள், மனிதம் பரப்பு
உலக அரங்கில் தெளிவின்முகத்தை தமிழராய் பதிய வை;
காட்சிகளில் பதிந்த வலியை தன் வெற்றிகளால் துடைத்து எறி
காணுமுலகம் காணுமோர் நாள் நாம் மூத்தக் குடியெனப் புரி;
என்று எழுத்தில் கர்ஜிக்க இயல்பில் பிறக்கிறதென் கவிதை!!
————————————————————————————-
வித்யாசாகர்
குவைத்தில் பல நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்களை குடும்பத்தோடு வரவழைத்து, அவரவர் திறமைக்கேற்ப வாய்ப்புக்களை வழங்கி, எல்லோரையும் அவ்வப்பொழுது ஒன்றுகூட்டி, மிக சிறப்பாக தமிழர் பண்பாடு மாறாமால்’ தமிழர்களின் திறனை பலவகைகளிலும் மேம்படுத்தும் வகையில் விழாக்களை எடுத்து நடத்திவரும் “தமிழ்நாடு பொறியியல் குழுமம்” (TEF) கடந்த வாரத்தில் நடத்திய கவிதைப் போட்டிக்கென அவர்கள் தந்த தலைப்பிற்கு எழுதிய என் கவிதையினை இங்கே நன்றியுடன் சமர்ப்பிக்கிறேன்..
LikeLike
மிக அற்புதமான கவிதை
LikeLike
நன்றி உமா.. உங்களைப் போன்றோரின் தொடர் ஆதரவும் அன்புமே என் படைப்புக்களுக்கான பலமும்.. பின் சிலநேரத்து பாடுபொருள்களும்..
மிக்க நன்றியும் வணக்கமும் உறவே..
LikeLike
வாசிக்கவும், ரசிக்கவும் அற்புதமாய் இருக்கிறது தங்கள் கவிதை. பகிர்விற்கு நன்றி.
LikeLike
மிக்க மகிச்சி தோழமை, அணையும் விளக்கை கையில் ஏந்தி வளைத்து அணையாமல் நிறுத்திக் கொள்கிற ஆதரவின் மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கை ஏற்படுகிறது; தங்களைப் போன்றோரின் உந்துதலின் பேரில்..
LikeLike