ஒரு தாயின் வலி தெரியும், தவிப்பும் கண்ணீரும் புரியும், தந்தையின் ரணம் எத்தனை குழந்தைகளுக்குத் தெரிகிறது?
படிப்பின் வாசல் பெரிது, வாசனை அதிகம், அள்ள அள்ள குறையாத செல்வத்தைத் தரும் அமுதசுரபியென எல்லோருக்கும் தெரியும், படிக்க இயலாத குழந்தைகளின் கதி என்ன, அவர்களுக்கென இச்சமுதாயத்தில் நாம் வைத்திருக்கும் இடம் எது?
கனவன் மனைவி அம்மா அப்பா அக்காத் தங்கை குழந்தைகள் சுற்றம் உற்றார் உறவு வீடு மனை சொத்து எல்லாம் பெரிது தான். ஒரு கனவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ‘அன்பு காட்டுவதில் ‘புரிந்துக் கொள்வதில்; விட்டுக் கொடுப்பதில்; அக்கறை செய்தலில் தாயிற்குச் சமம்தான். ஆக, மதிக்கத் தக்க உறவென்பது தெய்வத்திற்கு ஈடுதான்’ என்பது எல்லோருக்குமேப் புரிகிறது, யாருமில்லார் நம்மிடையே எத்தனையோ பேர் வாழ்கின்றனரே அவர்களின் கதி என்ன?
பை நிறைய புத்தகம், புத்தகம் நிறைய கனம், கனத்து கனத்து கடக்கும் பிள்ளைகளின் காலையிலிருந்து மாலைவரை படும் அவஸ்தை பள்ளிக்கூடத்து சுத்தம் செய்யும் தொழிலாளிமுதல் வீடு வந்ததும் மடியில் கிடத்திக் கொஞ்சும் அப்பாம்மா வரை எல்லோருக்குமே தெரிகிறது, அதை குறைக்கும் எண்ணத்தில் துளிகூட நமக்குள் ஒட்டுமொத்தமாய் எழவில்லையே ஏன்?
நம் பிள்ளைகள் பாவமில்லையா? அவர்கள் வருங்காலத்தின் வெற்றிப் பதக்கங்கள் இல்லையா? நம் தேசத்தைத் தாங்கப்போகும் தூண்கள் இல்லையா? பிறகவர்களை நாம் எங்கே வைத்திருக்கிறோம் எப்படி வளர்திருக்கிறோம் எதைநோக்கி படிக்கவைக்கிறோம்? இப்படி அடுக்கிக் கொண்டேப் போகும் பல கேள்விகளை கண்ணீர் சொட்ட சொட்ட திரைப்படம் வழியாக மனதிற்குள் அடுக்கிவிடுகிறது தோனி’ திரைப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் பிரகாஷ்ராஜின் கண்ணீர் நிரைக்கும் நடிப்பும்..
ஒரு நண்பர்களின் வட்டத்தை நம் எண்ணத்திற்கேற்ப நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்பதிலிருந்து, நாம் சரிஎனில் நம்மோடுள்ளவரையும் நம்மால் எப்படி சரிபடுத்த முடியும் என்பதையும் நாசுக்காக எடுத்துச் சொல்கிறதிந்த திரைப்படம்.
காவேரியாகவும் கார்த்தியாகவும் வரும் குழந்தைகள் இரண்டும் நடிப்பில் விஞ்சி நம் இதயத்தை நம் பிள்ளைகளின் உணர்வுகளால் நிறைத்தாலும், நம் பிள்ளைகளைப் பற்றி நாம் அறியாத முகாமொன்றை அல்லது கவனியாத திறமையொன்றினை அவர்களுக்குள்ளிருந்து தேடிப்பார்க்க மானசீகமாய் சொல்லித் தருகிறார் திரு. பிரகாஷ் ராஜ்.
ஒரு அலுவலின் ஸ்பரிசத்தையும் அது நமை கைவிடும் இடத்தின் அவலத்தையும், தட்டிக்கேட்பவனை குட்டிச்செல்ல கைகோர்த்து வரும் இச்சமுதாய இழிவையும், அதற்குத் துணைபோகும் அரசுசார் கைக்கூலிகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக நல்லோரைச் சுற்றிநிற்கும் மனிதரையும், அந்த மனிதரின் அதிர்வுகளால் தன் முகம் மாற்றிக் கொள்ளும் அரசாங்கத்தையும் விரல் விட்டு எண்ணினாற்போல் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு காட்சியிலும் காண்பித்து காண்பித்து மிக யதார்த்த நடையின் தோற்றத்தில் ஒரு நல்ல திரைப்படமாக நகர்கிறது இந்த தோனி திரைப்படம், என்றாலும் இத்தகைய நம் உணர்வுகளை சுமந்துவந்த ஒரு திரைப்படத்திற்கு நாம் அத்தனை போதிய ஆதரவினைக் கொடுத்திடவில்லையோ என்ற ஒரு குற்றஉணர்வு மனதை சுடத் தான் செய்கிறது.
பள்ளிக்கூடங்கள் நிறைந்த இடத்தில் நாகரிகம் வேகமாய் பிறக்கிறது நிலைக்கிறது எனும் நம்பிக்கை மாறி, ஒரு சமுதாயம் சரி இல்லையெனில் அந்த சமுதாயத்தை சார்ந்த பள்ளிக்கூடங்களும் சரியில்லை என்று வசனம் எழுத வைத்த இந்நிலைக்கு நாம் முழு பொறுப்பு என்பதை எப்படியும் நம்மால் மறுத்துவிட முடியாது
அப்படி சில நெஞ்சைப் பிளக்கும் வசனங்கள் நீண்டிருக்க, நேர்பட கண்கொத்திப் பாம்பாய் படக் காட்சிகள் அமைந்திருக்க, அச்சச்சோ என ஒதுங்கிக் கொண்டோமா வசீகரத் திரைப்படங்களை ரசிக்கத் தெரிந்த நாம்? நம் பிள்ளைகளின் கனவை நாம் சுமக்கிறோம் என்பதில் அக்கறை இருக்கலாம், அதை மாற்றி நம் கனவின் முட்டைகளையும் அதோடு சேர்த்துவைத்து அதன் மீதேறி அமர்ந்துக்கொள்ள நம்மக்கென உரிமை இருக்கிறது என்பதைத் தானே இத்திரைப்படம் கேட்கிறது?
என் மகனை நான் முதன் முதலில் கதற கதற பள்ளியில் விட்டுவந்தபோது அவன் அழுத அழை என் பாடை கடந்து போய் குழியில் வீழ்ந்து என்னுடல் எரிந்தாலும் உள்ளே ஈரப்பட்டுப்போய் கிடக்கும். நாளை இன்னொரு கண்ணீரின் கதறலை சுமக்க என் மகளையும் கொண்டுபோய் விடப்போகிறவன் தான் நானும், காரணம் நமை சுற்றியிருக்கும் நாம் போட்ட வட்டம் அப்படி.
மூன்று நான்கு வயதொத்த குழந்தையொன்று நான் அம்மாப்பாவை விட்டுப் போகமாட்டேன் என்று அழுவதில் இருக்கும் நியாயத்தை அதன் எதிர்காலம் இப்படி அமையவேண்டும் என்று நாம் கட்டிவைத்திருக்கும் கனவுகோட்டை எப்படி சமபடுத்திக் கொள்ளுகிறதோ தெரியவில்லை.
அதற்காக குழந்தைகள் படிக்காமல் இருந்தால் தகுமா? என்று கேள்வி வருமெனில் முதலில் படிப்பு என்பதன் அர்த்தம் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டிய இடத்தில் தான் நாமிருக்கிறோம்?
நான் நினைத்திருக்கிறேன்; பாட்டில் இசையில் இத்தனை ஈர்ப்பாக உள்ளானே இவனை இப்போதிலிருந்தே இசைத் துறையில் முழுமையாக ஆட்ப்படும்படி சேர்த்தால்லென்ன (?) பாதியை மருந்தாக சாப்பிட்டு விட்டு மீதியைக் கடைசியில் அவனுக்குப் பிடித்த அமுதம்போல் கொடுத்து என்ன பயன்? இன்றிலிருந்தே அவனுக்குப் பிடித்த துறையில் அவனை விட்டுவிட்டால் நாளை அதில் பெரிய சாதனையாளனாகவோ அல்லது அதில்சிறந்த நிபுணராகவோ அல்லது குறைந்த பட்சம் அவன் எதிர்பார்த்ததை அவன் அடைந்து, அவனுடைய வாழ்க்கையை அவன் முழுதாக அவன்விருப்பப்படி வாழ்ந்த திருப்தியையேனும் அவன் அடைய மாட்டானா? என்றொரு ஏக்கத்தைப் பற்றி நான் சிந்தித்திருக்கிறேன்.
ஆனால், மீண்டும் சுற்றம், இச்சமுதாயம், நம் பாழாப்போன அதே பழகிப்போன நம் வாழக்கையின் அதே தேய்ந்து தேய்ந்தும் மிஞ்சியுள்ள வட்டங்கள் என ஒவ்வொன்றாய் வந்து நமை மிரட்ட தர தரவென்று இழுத்துக் கொண்டுபோய் குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டுத் தானே வந்திருக்கிறேன்.
அதற்காக பள்ளிக்கூடமும், பாடங்களும், படிப்பும் வரமா சாபமா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல இந்த தோனி திரைப்படத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆய்வோ அல்லது என் சிற்றறிவோ அத்தனைப் போதுமானதல்ல. என்றாலும், படிப்பு நிச்சயம் வரம் தான், பள்ளிக்கூடங்கள் அறிவினையூட்டும் கோவில் தான், ஆசிரியர்கள் தெய்வத்தினும் முன்னதாகப் போற்றத் தக்க சிறந்த போற்றுதலுக்கு உரியவர்கள் தான் என்பதை ஏற்க, இப்போதிருப்பதைவிடவும் பெரிய ஞானமொன்றும் தேவையில்லைதான். ஆனாலும், அந்த படிப்பு எப்படி இருக்க வேண்டும்? ஆனால் இப்போது எப்படி இருக்கிறது என்பதில்தான் கேள்விகளும் குறையும் பலமும் பலவீனங்கங்களும் வருத்தமும் சூழ்ச்சியும் கொட்டிக் கிடக்கின்றன.
எல்லாமே வியாபாரமாகிப் போனதன் கொடுமைக்கு அப்பால் நிறுவப் பட்டிருந்த கல்விச் சாலைகளும் இன்று கடைகளின் வரிசையில் நின்றுப் போனது பெருத்த வருத்தைத்தையே அளிக்கின்றன என்பதைப் பற்றி தெள்ளத் தெளிவாக யோசிக்க வைக்கிறது இத் தோனி திரைப்படம்.
இப்படத்தின் ஒரு காட்சியில் கேட்கிறார்கள், இன்றைய கல்வி வரமா சாபமா என்று, அதற்கு பிரகாஷ் ராஜ் மொத்த கல்வியும் இன்றைய சாபமே என்று சொல்லுமிடத்தில் வசனம் குறித்த ஒரு சின்ன நெருடல் இருந்தாலும், அதையும் ஒரு பாதிக்கப்பட்டதொரு தந்தையின் மனநிலையில் நின்று பார்க்கையில் பெரிய குற்றமாகத் தெரியவில்லை. வேண்டுமெனில் சாபமே என்று சொல்வதற்கிணங்க கொடுமைகளை மட்டும் நம்மால் தினமும் செய்தியிலும் மற்றும் இன்றும் நமைச் சுற்றி நடந்துப்போகும் குழந்தைகளின் முகத்திலும் பார்க்கத் தானே முடிகிறது.
உண்மையில் பிரகாஷ் ராஜ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை, இருப்பினும் அவர் ஒரு நல்ல இயக்குனரும் என்பதைமீறி ஒரு நல்ல மனிதர், ஒரு திறமை மிக்க அரிய கலைஞன், நம் சமுதாய இழிவுகளைக் கண்டுத் துடிக்கும் பல இதயங்களில் ஒன்றிற்கு அவரும் சொந்தக் காரர் என்பதை இப்படத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் நிச்சயம் அறியலாம்.
நளினி என்று அற்புதமான தாய்மை நிறைந்த பாத்திரத்தை காட்டுவதோடு நின்றுவிடாமல், நல்ல நண்பர்கள், மனிதம் மிக்க மருத்துவர்கள், ஒரு ஒதுக்குதலை அல்லது தரந்தாழ்த்தலை எண்ணி மனசு ஏங்கிக் கிடக்கும் பள்ளிக்கூடத்து பீயுன் பாத்திரம், வட்டிக்கு பணம் கொடுத்து பதிலுக்கு இயலாதோரின் ரத்தம் குடித்து வாழ்ந்தாலும் ‘அவசரத்தில் ஓடிவந்து கைகொடுக்கும் ஒரு மனிதம் மிக்க மிக நல்ல மனிதரொருவரின் பாத்திரமென படத்தில் வரும் பலரை மிக நல்லோராகவே காட்டுவதோடு நின்றுவிடாமல், ஒரு தலைமை சரியாக இருக்குமெனில், இம்மண்ணின் அரசியல் தலைவர்கள் உயர்வாக நடப்பார்களெனில் நம் தேசமும் உயர்வானதாகவே உருவெடுக்கும் என்பதையும் நன்றாகக் காட்டியுள்ளார்.
இசைதான் அத்தனை அழுத்தமாக நெஞ்சில் ஒட்டவில்லை என்றாலும், கதை நகரும் திசைநோக்கி சற்று பயணிப்பதில் யாரது இசை போட்டதென்று எட்டிப்பார்க்கவைத்து, கடைசியில் கார்த்தி எனும் சிறுவன் மட்டையடி விளையாட்டில் ஒரே பந்தில் ஆறு ஓட்டத்திற்கான மதிப்பினைப் பெற்று ஆட்டத்தில் வென்று நிற்கையில் எழும் இசையென்னவோ அந்த கடைசியில் படம் முடிகையில் முடியுமந்த பாடல் என்னவோ அட ஆமாம்பா நம்ம இளையராஜா தான் என்று தலையசைக்கவே வைக்கிறது.
ஆனால் படத்தை இன்னும் கூட கொஞ்சம் பட்டை தீட்டி இருக்கலாம், படத்திற்கு பெயர் கூட வேறு ஈர்ப்பாக இன்னும் உயிர்ப்பாக திரைமொழியோடு ஒட்டுமாறு வைத்திருக்கலாம், நடிகர்கள் தேர்வில் இன்னும் சற்று கவனம் கொண்டிருக்கலாம் என்று ஏதோ ஓரிரு இடத்தில் எண்ணம் வந்தாலும், அந்த பிள்ளைகளுக்காக தவிக்கும், அவர்களின் எதிர்காலம் எண்ணி எண்ணி நெருப்பென தகிக்கும் பயத்தில் வாழும், உழைக்க உழைக்க உயிர்வரை தேயும் ஒரு நல்ல தாய்மை நிறைந்த தந்தையை நம் கண்முன் காட்டினாரே பிரகாஷ்ராஜ்……… அவருக்கு நன்றியும் வாழ்த்தையும் நிறையவே சொல்லலாம்க..
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
உண்மைதான், அற்புதமான திரைப்படம். நானும் கண்ணீர் விட்டேன். ஏன் பரவலாகப்பேசப்படவில்லை என்கிற சந்தேகம் எனக்கும் உண்டுதான்
LikeLike
கல்வி பற்றிய மீண்டும் மீண்டுமான ஒரு கலந்தாய்வு நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தும் படமாகவே நானிதைப் பார்த்தேன். பிரகாஷ்ராஜ் பாராட்டத் தக்க நல்ல கலைஞன் என்பதற்கு காஞ்சிபுரம் அடுத்து மிக நல்லதொரு படைப்பிது. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றியும் வணக்கமும்!
LikeLike