16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில்
நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன்
நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை..

எழுந்து ஓடிவந்து நீ
என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து
விலகும் தூரத்தில் –
விடுபடுகிறேனம்மா நான்..

சுற்றி சுற்றி நீ ஓட
உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர
நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால்
நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி
கடக்கிறேன் கடக்கிறேன் மகளே..

கட்டிப்பிடித்துக் கொண்டு என்
மார்மீது நீ உறங்கிய பொழுதுகளில்
உன் தலைதடவிக் கொண்டே
இந்த நீ என்னோடிருக்க யிலாத நாட்களை எண்ணி அழுதிருக்கிறேன்
அப்படிப்பட்ட இந்த நாட்கள் –
இப்போது எப்படி வலிக்கிறது தெரியுமா.. (?)

உண்மையில் பிரிவு கனமென்று எனக்குத் தெரியும்
உன் பிரிவின்கனம் பெரிது மகளே..
ஓடிவந்து உடனே பார்க்க முடியாமல்
நினைத்தபோது உடனே பேசிடயியலாமல்
தவிக்குமுன் பிரிவு மிகக் கொடிது;

நீ நடந்த வீடு வலிக்கிறது
நீ அப்பா அப்பா என்று அழைத்த வார்த்தைகள் வலிக்கிறது
நீ தொலைபேசியில் பேசிவிட்டு நிறுத்தும் கணம்
வீட்டிற்கு வந்து நீ போனபின் நிலவும் தனிமை
எல்லாமே வேதனை; வேதனை மகளே..

மீண்டும் பேசினாலென்ன
வேண்டுமெனில் வந்து பார்த்தாலென்ன என்று
மிகச் சாதாரணமாக எண்ணத் தோணும்,
நான் நினைத்த போதெல்லாம் பேசினால்
எண்ணியபோதேல்லாம் வந்து பார்த்திருந்தால்
நான் வந்துசென்ற பொழுதுகளில் –
நம் மாப்பிள்ளையின் வீடு தேய்ந்தேப் போயிருக்காதா.. ?

உன் அம்மா பாவம்
உனக்காக என்னென்னவோ செய்வாள்
ஏதேதோ வாங்கக் கேட்பாள்
முடியாத பொழுதுதனில் எங்களின் ஓரிருவேளைப் பசியை யடக்கியேனும்
உனக்காக ஏதேனும் வாங்கி வருவோம் – நீ அதை வாங்கிக் கொண்டு
உள்ளே கொண்டுபோய் பிரித்துப் பார்ப்பாய்
அதை வாங்க நாங்கள் பட்ட கஷ்டம் உன் கண்களிலிருந்து
கண்ணீராய்ச் சொட்டும்;
உன் சொட்டிய கண்ணீரின் ஈரம் பார்த்து
எங்களுக்கு இன்னுமிரண்டுநாளின் பசி போகும்..

மாமியார் உபசரிப்பார்
மாமனார் நட்பு பரிமாறுவார்
மாப்பிள்ளையும் அன்பு செய்வாரென்று அறிந்தாலும்
எங்களின் கவனமெல்லாம் உன்மீதே யிருக்கும்,
அவர்கள்
உன்னை எப்படி நடத்துகிறார்களென்று நாங்கள்
பயந்து பயந்து பார்ப்போம்,
நீ நாங்களிருக்கும் தருணத்தை மகிழ்வாக எண்ணி
அருகே அருகே வந்து நிற்பாய்,
என்னென்னவோ கேட்க எண்ணி வார்த்தை போதாதவளாய்
உடம்பு தேவலையா உடம்பு தேவலையா என்பாய்,
நாங்கள் எல்லாம் சரியாதாம்மா இருக்கு, நீ பத்திரமென்று சொல்லிவிட்டு
புறப்படுகையில் –
உன் கண்கள் சிவக்கும்,
கண்ணீர் இமையில் நிரம்பி குவியும்,
மாப்பிள்ளை உன்னைப் பார்க்க நீயதை துடைத்து
முகத்தை முந்தானையில் மறைத்து விம்முவாய்,
நாங்கள் துடைத்துக் கொண்டதுகூட இல்லை
யாருக்கு யார் துடைக்க ?
இரண்டு பேரும் அழுதபடியே வீடு வருவோம்..

இதோ இன்று அந்த காலங்கூட கடந்துவிட்டது
அவளுமில்லா என் நாட்கள்
நீயுமில்லா நாட்களோடு இரட்டிப்பாய் உதிர்ந்து உதிர்ந்து
வீழ்கின்றன..

மரணத்தின் நெருக்கத்தில் எல்லாம்
கண்முன்னே விடுபடாது காட்சியாகிறது,
நீ நடந்தது பேசியது வளர்ந்தது எங்களைவிட்டுப் போனது
எல்லாம்
ஒன்றுவிடாமல்
நினைவினுள் வலித்து வலித்து நகர்கிறது மகளே..

உண்மையில் நீ
இருந்தும் இல்லாமலுமே எங்களைக் கொல்கிறாய்..

எவர் சட்டமோ யிது?
எப்படி சாய்ந்த தராசோ இது?
பெண்ணைப் பெற்ற வயிற்றில் யாரிட்ட நெருப்போ..யிது…….(?)
நாசமாகப் போகட்டும் நாடென்று
ஒரு சமூகத்தை அழிக்கும் கோபமொன்று
சாபமாகிப் போனதே’ யார் காரணமிதற்கு மகளே…?

நீயில்லாத பொழுதுகள்
உன் நினைவுகள் ஒன்றே’ ஒன்றே
எங்களை வாழ்விக்கவும்
உயிர்கொல்லவும் செய்வதன் கொடுமையை நீதியின் அகராதியில் எழுதாத
பிழையொன்றினை யார் செய்தார்?

எந்த அப்பாவிற்கு அம்மாவிற்கு
பெண்ணைப் பெற்றிடாத வயிறொன்றிலிருந்து முளைத்ததோ
இந்த பெண்ணை பெற்றவரிடமிருந்து பிரித்தனுப்பும் யுத்தி;

போகட்டும் மகளே – ஒரு தோசைபோல
திருப்பியாப் போட்டுவிடமுடியுமிச் சமூகத்தை ?
வலிக்கும் வலியொன்றே எனைப் போன்ற
அப்பாக்களுக்கு மிச்சம்..,

வலிக்க வலிக்க ஒழியுமிந்த பூமி
மனிதர்கள் சம மனிதர்களாக வாழாத
வேற்றுமைக் கோடுகளின் வழியே
அழியுமிந்த உலகம்,
அழியட்டும்
எல்லாமழிந்துப் போகட்டும்
பின் யாருமற்ற ஒரு பரந்தவெளியில்
மீண்டும் பிறக்குமொரு சமநிலை பூமிதனில்
நீ எங்களின் வீட்டிலும் நாங்கள் உன் வீட்டிலும்
யாரின் பிரிவுக்கு யாரும் ஆட்பட்டுக்கொள்ளாமல் வாழுமொரு வாழ்க்கை
மலரட்டும்..

அதுவரை புலம்பிக் கொண்டிருக்கும்
எனைப்போன்ற அப்பாக்களுக்கு ஆயுளில் பாதி குறைந்து
அவர்கள் சிந்தும் கண்ணீரில்
அது கரைந்துப் போகட்டும்..

உனக்கு நினைவிருக்குமா தெரியவில்லை
நீ
புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பாய்
நான் தூர உனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பேன்
நீ எழுந்துவந்து
அப்பா நான் திரும்பச் சொல்கிறேன் பாருங்கள் என்பாய்
இடையே ஓரிரு வரிகள் வார்த்தைகள் மறந்துப் போகும்
என்ன படித்தாய் நன்றாக படி போ என்பேன்
நீ எங்குநான் அடிக்கப்போகிறேனோ என்று பயந்து
வெகுநேரம் அமர்ந்து நன்றாக படித்துக்கொண்டு மீண்டும் வந்து ஒப்பிப்பாய்
உன் பார்வை எங்கு என் கைநீண்டு விடுமோ எனும்
புள்ளியிலேயே நின்றிருக்கும்
நான் விரைப்பாக அமர்ந்திருப்பேன்
உள்ளே உன்னை அடித்துவிடக் கூடாதே என்று துடித்திருப்பேன்
அந்த துடிப்பு இன்று உடம்பெல்லாம் பரவிக்கிடக்கிறது மகளே..

அப்போது அன்று நீ பாடம் ஒப்பிக்கையில்
உன் கண்களில் தெரிந்த அந்த பயத்தை எண்ணி எண்ணி
இன்று அழுகிறேன் மகளே..

காப்பி பிடிக்கும் உனக்கு
அதும் நான் குடித்துவிட்டு கடைசியாய் கொடுக்கும்
அந்த கொஞ்சந் தான் வேண்டுமென்பாய், நான்
இப்போது காப்பியே குடிப்பதில்லை, என்றேனும் குடித்தாலும்
குடித்து முடியும் முன் அருகில் நீ நிற்கிறாயா என்று
திரும்பிப் பார்ப்பேன்
மனசாறுதலுக்குப் பார்த்துவிட்டு கொஞ்சத்தை கீழே ஊற்றுவேன்
அதேப் பழக்கத்தில் நீ வீடுவந்தபோது காப்பி கலக்க
கடைசியில் கொஞ்சத்தை கீழே ஊற்ற..,
அதைப் பார்த்து நீ கலங்கிப் போக.., நானெப்படியம்மா சொல்வேன்
மறப்பேன்.. உனை மார்மீது சுமந்த பாசத்தை… (?)

அழுது அழுது கண்ணீரில் மிதக்கும்
வாழ்க்கை கொடுமை மகளே,
வீடெல்லாம் என்னவோ நீயில்லாமல்
கருப்பு பூசியது போன்ற –
ஒரு ரணம் பூத்துக் கொண்டுள்ளது தெரியுமா..

போகட்டும்..
இன்னும் கொஞ்ச நாட்கள்..

இப்படியே உன்னை நினைத்து நினைத்து
ஒரேயடியாக ஓர்நாள் விழுந்துப் போவேன்,
அன்று –
உன் நினைவால் மட்டுமே என்னுயிர் இழுத்துக் கொண்டிருக்கும்
அது தெரியாத ஊரார் ஒருவேளை மண்ணிழைத்துப் போடுவார்கள்
உயிர் நிற்கவில்லையே என சோறு கரைத்தோ
இனிப்புனு நுணுக்கியோ
உப்பு சுட்டோ
காரம் உடைத்தோ எனக்கு எதெது பிடிக்குமென்று கேட்டு
வாயில் போடுவார்கள்,
உயிர் அவைகளை வெளியில் துப்பிவிட்டு நீ என்
தோளில் அமர்ந்துச் சுற்றிய நாட்களை
அசைப் போட்டுக் கொண்டிருக்கும்..

நீ கேள்வியுற்ற உடன் வாரி முடியாமலே ஓடிவருவாய்
வழியெல்லாம் நீ கேவி கேவி யழுவாய்
ஐயோ என் மகள் அழுவாளோ என்றுபயந்து போகாமல் என்னுயிரை
இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பேன்
நீ துள்ளி ஆடிய இதே வீட்டில் வீல்.. என்று கத்திக்கொண்டு உள்நுழைவாய்
அப்பா அப்பா என்று கதறி கதறி அழுவாய்
தலைப் பிய்த்து முகம் கீறி மார்பில் அடித்துக் கொண்டு அழுவாய்
அதைக் காண சகியாமல் –
என் மூச்சு மெல்ல மெல்ல நின்றுபோகும்..
————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to 16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    வலியின் சுவடு பதியும் முயற்சி இது. ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்தேனும் நம் சமுகம் மாறிக் கொள்ளாதா எனும் ஏக்கமிது..

    படிப்போரிடமிருந்து வலிக்கான வருத்தமும் மன்னிப்பும் கோரும் மனநிலையில் நான்..

    வித்யாசாகர்

    Like

  2. Umah thevi சொல்கிறார்:

    அழ வைத்து விட்டீர்கள்.
    என் அப்பாவின் செல்ல மகள்ளாகிய நான் அவரை
    பிரிந்து வரும் ஒவ்வொரு கணமும் அவருடைய கண்ணீரே என்னை வழி அனுப்பும்.
    உங்கள் கவிதை ஒரு தந்தையின் உணர்வுகளை மிக அழகாக சொல்லுகிறது.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மன்னிக்கவும் உமா..

      ஒரு கணவனாக தன் மனைவி உடன் வருவதை எண்ணி மகிழ்வில் வீடு திரும்பும் நான் அவருடைய தந்தையிடமிருந்து தாயிடமிருந்து இன்ன பிற உறவுகளிடமிருந்து அவரைப் பிரித்துவரும் அந்த தருணத்தை, அந்த வலியை எப்படி யதார்த்தமாக ஏற்கிறேன்? இப்படியொரு நீதி எவ்விதம் சரி? இதையெல்லாம் ஏற்கத் தக்க ஒரு சமகால மனிதனாக இச்சமூகம் எப்படி என்னை ஆக்கியது? அப்படிப்பட்ட சமுகத்தை இனி நாம் எப்படி மாற்றுவது???

      எங்கே மாறிநிற்கையில் நாம் யாருக்கும் வலிக்காமல் வாழ இயலும்?

      என் நீளும் கேள்விகளின் வலியிது உமா..

      Like

  3. 2008rupan சொல்கிறார்:

    வணக்கம் அண்ணா

    மிகவும் அழகாக உள்ளது மகளைப்பெற்ற ஒவ்வெருஅப்பாமார்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது நல்லசொற் பிரயோகங்கள் கொண்டு எழுதப்பட்டள்ளது ..வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

  4. zulfir சொல்கிறார்:

    Excellent work. Keep it up.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தங்களின் கருத்திற்கு நன்றியும் மிக அன்பும் தோழமை..

      ஒவ்வொன்றாய் வார்த்தை நகர்த்தி நாமேற்படுத்தும் நம் சமூகத்தின் மாறுதலில் இனி வரும் தலைமுறையினரின் கண்ணீரையேனும் துடைக்க முடியுமெனில் மகிழ்வோம்..

      Like

  5. கவிப்ரியன் சொல்கிறார்:

    கவிதை மிக அருமை! நெஞ்சம் வலிக்கிறது நண்பரே! வாழ்த்துக்கள்!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றியும் மிக அன்பும் நண்பர். வெளியில் சொல்லபாடாத நிறைய உணர்வுகள் இன்னும் நமக்குள்ளே புழுத்தே கிடக்கின்றன.. அவைகளை தமிழ்கொண்டு மொழிபடுத்தினால் வலிக்கிறது..

      Like

  6. suji சொல்கிறார்:

    வணக்கம் அண்ணா,

    மனதைத் தொட்ட அப்பா மகள் உறவுபற்றிய கவிதையிது. படிக்கும்போதே கண்கள் சிவந்தன. இதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அப்பா மகள்களுக்கே சமர்ப்பனமாகும்..

    என்றும் அன்புடன்..

    சுஜி

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிமா.., காலங்கலாமாக வெளி உலகிற்குத் தெரியாமலே நிறைய இதயங்கள் வெறும் சதையாக மட்டும் செத்து மண்ணில் புதையுண்டுள்ளன; அவைகளுக்குள் இப்படியும் பல வலிகள் மறைந்து மக்கி போயிருக்கலாம்..

      Like

  7. வித்யாசாகர் சொல்கிறார்:

    பானு மொஹிதீன் எழுதியது: //ஐயோ என் மகள் அழுவாளோ என்றுபயந்து போகாமல் என்னுயிரை
    இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பேன்//
    ———————————————————–
    காயத்ரி வைத்தியநாதன் எழுதியது :‎//நான் நினைத்த போதெல்லாம் பேசினால்
    எண்ணியபோதேல்லாம் வந்து பார்த்திருந்தால்
    நான் வந்துசென்ற பொழுதுகளில் –
    நம் மாப்பிள்ளையின் வீடு தேய்ந்தேப் போயிருக்காதா.. ?//

    எந்த வரிகளைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை சகோ..மொத்தமும் அருமை..:)
    ———————————————————–
    வித்யாசாகர் எழுதியது:
    நன்றியும் நிறைய அன்பும் சகோ.. இதெல்லாம் ஒரு வலியின் வரி.. பானு..

    நன்றி: முகநூல், வித்யாசாகர் குழுமம்

    Like

பின்னூட்டமொன்றை இடுக