உயிரில் உருகி உருகி ஒருதுளி விழ
விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி
அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம்!
புல் முளைத்தால் நெல்லாக்கி
நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து
பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க
கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்!!
படம் காட்டி எழில் கூட்டி மொழி வார்க்கும்
மன்னன்; பண்பிலோ அன்பிலோ குறையிலா
நன்னன்; குளிர்மழை அடைமழை படமழைப் பொழிய
ஐயா இலந்தையே பெயர்தந்த ‘படமாமணி’ வாழ்க! என வாழ்த்தி..
கவியரங்கத் தலைமை திரு. ந.உ. துரை அவர்களுக்கும்.. வணக்கம் கூறி, பெரியோர் அனைவரையும் வணங்கி இதோ இறுதியாய் எழுகிறது விடியலின் முதல்கூவல் போல, பாதி உள்ளும் வெளியுமாய்… என் படைப்பு..
தலைப்பு: விண்முட்டிய கண்களுக்குள்; மீண்டுமொரு கனவு’ முட்களுக்கும், ரோஜாவிற்குமாய்!!
உடம்பெல்லாம் சிறகு முளைத்த தருணமது;
பறந்தொரு தினம் வெற்றியின் தலையிலமர்ந்த
மரணம்போல்; தனிமை தகிக்க தகிக்க நின்ற பொழுது அது;
வானம் நீண்டு விரிந்த பரந்தவெளிச் சாலையொன்றில்
மேகங்களெல்லாம் – எனை
அண்ணாந்துப் பார்த்துச் செல்ல,
நான் எட்டிய உயரத்தின் கடைவிளிம்பிற்குச் சென்று
தரை தேடி
கையில் அழுந்த மூடியிருந்த
நம்பிக்கையெனும்
ஒற்றை ஏணி பிரித்து – எனைத் தூக்கி நிறுத்திய
உயரத்திலிருந்து கீழே தலை தாழ்ந்துப் பார்க்கிறேன்
பூமி கடுகென சிறுத்துப் போயிருக்க –
சறுக்கி சறுக்கி விழுந்த நாட்களை
அடுக்கி அடுக்கிச் சேகரித்த ஏணி – இனி
கீழுள்ளவருக்காய் பயன்படுமென எண்ணி – என்
நம்பிக்கை மொத்தத்தையும்
அனுபவச் சட்டங்களால் கட்டி
தூக்கித் தரையில் வீசப் பார்கிறேன் – தரையில்
கடுகென சிறுத்த பூமியின் தலையில்
ரோஜா பூக்கள் சிரித்துக் குலுங்கிக் கொண்டிருந்தன
முட்கள் அதற்கு காவல்நின்று
காதலால் ரோஜாவை மணக்கச் செய்தன;
முட்களின் முதுகிலோ –
ஒது தேசத்தின் ஏக்கம் கொட்டிக்கிடந்தது;
இன்றைக்குள் நாளையை சேகரித்துக்கொள்ளும்
கனவு பல காத்துக் கிடந்தது;
எரியாவிளக்கின் இருட்டிலிருந்து – நெருப்பில்
கருகிய உடலின் காரணம் வரை’
அந்த முட்களின் சோம்பலில் முடங்கிக் கிடந்தன;
இலக்கியம்
இனப் பற்று
ஆராய்ச்சி
மொழியுணர்வு
புதிய கண்டுபிடிப்பு என
எந்த வெங்காயத்தின் மீதும் அக்கறையின்றி
பூத்துக் குலுங்கிய ரோஜாவின் மடியில் தலைவிரிக்கவே
முட்கள் கனவு கண்டன; காத்துக் கிடந்தன;
மொழி நம் அடையாளம்
தாய்மொழி நமை ஈன்றவளின் பெருமைக்கு நிகர்
தமிழ் நம் பிறப்பின் பேறு என்பதையெல்லாம் மறந்து
குழல் இனிது
குடி பெரிதென
லட்சியமின்றி வாழ்ந்த நாட்களையெல்லாம்
குப்பிகளில் நிரப்பி’ ரோஜாவின் பெயர் திணித்து
வெறுமனே வாழ்க்கையை கடந்துத் தீர்த்தன;
இனக்கவர்ச்சியை உயிரென்றும் –
உடல் பொருள் ஆவியென்றும் சொல்லி
ரோஜாவிற்கென முட்களும்
முட்களுக்கென ரோஜாக்களும் ஆங்காங்கே
ரயில் தண்டவாளத்தில் தலையைக் கவிழ்த்தன;
அணுப்பொழுதும் பிரிந்து வாழ
கனவில் கூட எண்ண மறுத்து –
அம்மா அப்பாக்களை மட்டும்
அனாதை விடுதியில் தள்ளின;
அக்காத் தங்கைகளின்
கட்டப்படாத தாலியை
வரதட்சணையால் அறுத்தன;
கைம்பெண்களின் கண்களில் காம
ஈட்டி வைத்துக் குத்தி –
குடித்த போதைக்கு ருசிசேர்க்க
தெரு வம்பையெல்லாம் விலைபேசி வாங்கின;
போர் போரென மாண்டலும்
அரசியல் அடி தகர்ந்து நாம் வீழ்தலும்
மனிதரின் ரத்தம் லஞ்சத்தால் குடிக்கப் படலும்
கலை மூழ்கி நம் பாரம்பரியம் மூழ்கி
கலாச்சாரமெல்லாம் ஆடம்பர ஆபரனங்களுக்குள்
அடங்கிப் போவதுமெல்லாம் –
ரோஜாவின்’ முட்களின்’ கண்களில் கொஞ்சமும்
குத்தவில்லை;
ரோஜாவிற்கு பரிசளிக்க அஞ்சரப்பெட்டி
அடகுக்குப் போனதும்,
காதலனுக்கு காத்துக் கிடக்க அப்பாவின் நம்பிக்கை
அரைநாள் விடுமுறையானதும்; அத்தனைப்பெரிய
குற்றமாக அவர்களுக்குத் தெரியவேயில்லை;
கடல்பொங்கி உடல் மிதப்பதும்
கரைதாண்டி உயிர் மரிப்பதும்
மழை வந்து மனிதம் நனைவதும்
வாடிக்கையாய் போனதில் மனம் முட்களுக்கும் ரோஜாவிற்கும்
கல்லாய் ஆயின –
சோற்றிற்கு பிள்ளைகள் தட்டேந்தி
திருடி
கொல்லையடித்து
கொலை செய்து
பொய்யும் புரட்டுமாய் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை
தடுக்க’ திருத்த’ எள்ளளவும் அவர்களுக்கு எண்ணமில்லை;
யாருக்கு இருக்கோ இல்லையோ
எனக்கு கோபம் தலைக்கேறி வந்தது
நேரே சென்று அவர்களின் கன்னம் பிடித்து
இழுத்து நான்கு அரை விட்டாலென்ன என்று கோபம்
பொங்கி பொங்கி வந்தது;
பொங்கிய கோபத்தின் பதட்டத்தில்; கை நடுங்கி
அந்த நம்பிக்கையெனும் ஏணி
திடுமென கை நழுவி தரைவழி விழ –
நான் தடுத்து பிடித்துவிடவெல்லாம் முனையவில்லை;
ஏதேனும் ஒரு ரோஜா
முட்களைச் சுமந்தேனும்
அந்த ஏணியின் வழியே ஒரு நாள்
இங்கே வராமலாப் போகும்?
வரட்டும் வரட்டும்
வரும்வரைக் காத்திருப்போமென விட்டுவிட்டேன்…
_வித்யாசாகர்
கூகுளின் சந்தவசந்த இலக்கிய குழுமத்தின் படமொழிக் கவியரங்கத்தில் பங்குபற்றிய கவிதை.
நன்றி: சந்தவசந்தம்
LikeLike
அருமை இனிமை
வாழ்த்துக்கள்
சரவணன்
கத்தார்
LikeLike
நம் இளைஞர்கள் புடைத்தெழுந்து துடைத்தெறியும் அழுக்குகளில் நமக்கான சாபம் கழுவிப்போகுமென்று எனக்கொரு நம்பிக்கை. அதையும் கடந்து பெண்களின் மோகத்தில் ஆண்கள் பலர் தனது வாழ்வின் அர்த்தத்தை உணராது பெண்களின் பின்னால் அலைந்தாலும் அந்த பெண்ணானவள் அந்த தாயானவள் நமக்கான நம் இலக்கைக் காட்டி இம்மனித இனத்தின் வெற்றிக்கான இலக்கை எட்டவைப்பால் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளூர ஊரியதில் இப்படி எழுதத் தோன்றியது..
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றியும் வணக்கமும்..
LikeLike
மிக அருமை! கவிதை மிக அழகு!
LikeLike
நன்றி உமா, எங்கு பெரிதாக இருக்க நம் உறவுகள் கசந்துக் கொள்ளுமோ என்று எண்ணினேன், இருப்பினும் கவியரங்கக் கவிதை வேறு என்பதால் சற்று நீண்டுக் கொண்டாலும், இச்சமூகத்தின் விடிவு குறித்தும், இன்றைய நம் இளைஞர்களின் ஒருபக்கமான பார்வையில் கண்படும் நடத்தைக் குறித்தும் சிந்திக்கையில் மனதின் ஆற்றெடுத்த உணர்வுப் பேருக்கே இது..
தங்களின் பாராட்டிற்கு மகிழ்வும் வணக்கமும் உமா..
LikeLike
அருமை.
வாழ்த்துகள்.
LikeLike
நன்றியும் மிக அன்பும் ஐயா, நம் கூகுள் குழுமத்தின் கவிதை ஜாம்பவான்களோடு கைகோர்த்துக் கொண்ட இக்கவிதைக் குறித்து மகிழ்ச்சி தான் என்றாலும், அவர்களின் சந்தம் மாறாத பாடல்களுக்கு முன் இது வெறும் வார்த்தைக் குவியல் போல் ஆகிப்போனதாக உணர்ந்தேன், எனினும் இது ஒரு உணர்வின் மொழி படுத்தலுக்குரிய இடம் மட்டுமே என்பதில் மனதாறிப் போனது ஐயா..
தங்களின் வாழ்த்து குறித்து மிக மதிப்பும் வணக்கமும்!
LikeLike