இரத்தம் உறையும் வேகம்போல்
என்னுள் அடர்ந்துப் போன உன் நினைவில்
வலிக்கிறது அம்மா அந்த நாட்கள்..
நான் சிரித்த முகம் மட்டுமே
பார்த்த உனக்கு
என் போர்வைக்குள் அழுத நரக இரவுகள் பற்றித்
தெரிந்திருக்க உனக்கு வாய்ப்பில்லைதான்..
தடுக்கிவிழுந்தால் அம்மா என்று மட்டுமே
கத்தத் தெரிந்த பிள்ளைக்கு –
அம்மா தவறிப் போவதென்பது
எத்தனைப் பெரிய வலி?
அந்த வலியையும் நீயிருக்கும்போதே
நானடைந்தேனென்பதே ரணம் பூத்த
அந்த நாட்களின் –
கொடூரமம்மா..
உனக்கு அப்போதெல்லாம் அடிக்கடி வருமது
வயிறு பிசைந்து
காலெட்டி உதைத்துக் கொண்டு அழுவாய்
படுக்கையில் விழுந்து துடிப்பாய்
நீ துடிக்கும் வலி பார்த்து நான் மனமொடிந்துபோவேன்
என்னம்மா என்று கேட்பேன்
ஒண்ணுமில்லை போ என்பாய்
துடிக்கிறாயே என்பேன்
அது அப்படித் தான் வயிறு வலிக்கிறதென்பாய்
ஐயோ அம்மாவிற்கு வயிறு வலிக்குதே பாவமென எண்ணி
மருந்து தேடி அலைந்தால் – ஆங்காங்கே
ரத்தம் நனைந்த துணிகள் சுருட்டி சுருட்டி கிடக்கும்
கேட்டால் அதலாம் அப்படித் தான், நீ போ
அதைத் தொடாதே என்பாய்;
ஏதோ புரியாமல்
கண்ணீர் துடைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்
ஆசிரியை அங்கே புற்றுநோய் பற்றி பாடம் நடத்துவாள்
வயிறு வலிக்கும், ரத்த வாந்தி வரும், உங்கள் வீட்டில் அம்மாவை
நேரத்திற்கு உணவுண்ணச் சொல்லுங்கள் என்பாள்,
அடிவயிறு எனக்குப் பிசையும்
அழுவேன்
அம்மா அம்மா என்று நினைத்துருகுவேன்;
உனக்கொன்று தெரியுமா அம்மா
நான் காதலித்திருக்கிறேன்
காதலிக்காக உயிர்விடவும் துணிந்திருக்கிறேன்
அவளின்றி வாழவே முடியாதெனும் வலியைச் சுமந்து
பல நாட்ககளைக் கடந்திருக்கிறேன்
இருந்துமவளைக்கூட உனக்காக விட்டேன் அம்மா;
நீ வேண்டுமா
அவள் வேண்டுமா என்று வந்தபோது
நீ போதுமென்று நின்றுகொண்டேன்..
அம்மா எனில் எனக்கு
அப்படி உயிர்,
உயிரென்ன உயிர்’ என்னம்மா எனக்கு
உயிரினும் பெரிது;
ஒரு உதிரம் சொட்டிவிடும் சடுதியில்
உனக்காக நான்
என்னை விட்டுவிடுவேன் அம்மா,
இதுவரை இறைவனிடம் கூட
இதையே அதிகம் கேட்டிருப்பேன் ‘நீயிருக்கும் வரை மட்டுமே
நானுமிருக்கவேண்டுமென்று’
பிறகு புரி
நீயில்லாமல் போவாயோ
எனும் பயம்
எனக்கு எத்தனைக் கொடிது.. ?
ஆனால் நீ இருக்க மாட்டாய் இனி’ என்று
வெகு துச்சமாய் சொல்வாய்,
கோபம வந்தால் ‘நான் செத்துப் போவேன் போ’ என்பாய்
எனக்கு உடம்பெல்லாம் அதிரும்,
உண்மையில் நீ எனைவிட்டுப் போய்விடுவாயோ என்று
பயம் வரும்,
இரவுகள் கடக்கும் முன் அவைகளை என்
கண்ணீரில் நனைத்தெடுப்பேன்,
எங்கேனும் அந்த ரத்தம் நனைந்த துணிகள்
இருக்குமா என்று மீண்டும் எழுந்துத் தேடுவேன்,
இருக்கும் –
ஓலைக் கூரையின் உள்ளே சொருகியோ
அல்லது வீட்டுக்குப் பின்
வீசியோ யிருப்பாய் நீ..,
எடுத்து வைத்து
பார்த்து பார்த்து அழுவேனம்மா நான்..,
நீ ஓடிவந்து பார்த்துவிட்டு
டேய் இதலாம் ஏன் எடுக்கிறாய் அறிவுகெட்டவனே போ அங்கே என
கடிந்துக் கொள்வாய்,
ஏம்மா உனக்கு இப்படி என்பேன்
அதலாம் அப்படித் தான் போ
பெரிய பெரிய ஆராய்ச்சி இப்பவே’ என்பாய் கோபத்தில்
மறுநாள் எழுந்து ஏம்மா நீ பாவமில்லையா என்பேன்
நீ என் முகமள்ளி ‘அதலாம் ஒன்னுமில்லைடா செல்லமே
நீ படிக்க கிளம்புன்னு சொல்லி
துரத்திவிடுவாய்,
உன் வார்த்தைகள் உனக்குச் சரி
எனக்கு சரி இல்லையே அம்மா..?
அது வெறும் தீட்டுதுணி என்று
அன்றே எனக்குச் சொல்லிக் கொடுத்தால்தானென்ன ?
மாதவிடாய் இப்படி ஆகும் என்று சொல்வதில் என்ன பெரிய தவறு..?
ஆனாலும், ஏதோ அது உனக்கான கூச்சம்
உன் வாய்க்கு அகப்பட்ட அச்சம்
நீ மறைத்துக் கொண்டாய் – ஆனால்
அது என்னை எத்தனைப் பெரிய நரகத்தில் தள்ளியதென்பதை
நீயறியமாட்டாய்,
இதைப் படிக்கும் பெண்கள் அறியட்டும் போதும்;
அவர்களின் பிள்ளைகளேனும் – நாளை
தனது அம்மாவிற்கு புற்றுநோய் போல் என்று
எதையோ ஒன்றை நினைத்து –
என்னைப் போல் இனி அழமாட்டார்கள்..
————————————————————–
வித்யாசாகர்
இதே போல் ஒரு சம்பவம் எனக்கும் நடந்துள்ளது வித்யா.
ஆண் பிள்ளைகளான உங்களுக்கு இதுபோன்ற சந்தேகம் வருவது சகஜம் தான், ஆனால் பெண்பிள்ளைகளாக எங்களுக்குமே கூட அப்படி ஏமாருமொரு நிலை வந்தது. ஒரு முறை நல்லிரவில் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சண்டை. ஏற்கனவே ஒரு முறை சண்டை வந்தபோது அப்பா அடித்து விட்டார், சில் மூக்கு உடைந்து ரத்தம் பொலபொலவென ஆறாய் பெருக்கெடுத்தது, நாங்கள் துடித்து விட்டோம். கத்திக்கதறினோம், அம்மாவிற்கு என்னமோ ஆகிவிட்டதென. அம்மாவும் அந்த ரத்தத்தோடு சண்டையிட்டார். அப்பா பதறித்தான் போனார். சில் மூக்கு உடைவது வலியில்லை என்பது வளர்ந்த பிறகுதான் தெரிந்துக்கொண்டோம். அவ்வளவு அமளியிலும் வலியில்லை சும்மாதான் அந்த ரத்தம் வருகிறதென்று அம்மா சொல்ல்வே இல்லை.
அதின்ரி, அந்த நல்லிரவின் சண்டையின் போது.. கராமுரா என சத்தம் வேறு, அப்பாதான் அடித்துவிட்டாரோ என நாங்களும் அம்மாவிற்கு பாதுகாப்பாக வந்து அவரின் அருகிலேயே விடியும் வரை உட்கார்ந்திருந்தோம். மறுநாள் காலை காலையில் விடிந்ததும் அம்மா எழுந்து நடக்கும் போது, அவரின் பாவாடை நனைந்து, நடக்கும்போது சொட்டு சொட்டாக ரத்தம் சிந்துவதைப்பார்த்து கண்ணீர் விட்டோம். இரவில் அப்பா அடித்து விட்டார்போலும் அதான் உள்ளடி பட்டு இவ்வளவு ரத்தம் சிந்துகிறதென்றெண்ணி, அப்பாவை அடியோடு வெறுத்து ஒதுக்கினோம். நான் அடிக்கவேயில்லை அம்மா அவளை. அவள் நாடகமாடுகிறாள், நம்பாதீர்கள் என எவ்வளவோ அப்பாவும் சொன்னார், நாங்கள் அப்பாவை வெறுத்தோம். அம்மாவும் அந்த உதிரம் அப்பா அடித்ததால் வரவில்லை என ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஆனால் சொல்லியிருக்கலாம்.
பிறகு, நாளாகி நாங்கள் வளர்ந்து, காலப்போக்கில் எல்லாம் புரியவரும் போது, சம்பந்தப்பட்டவர் நம்முடன் இல்லாமல் போகும்போது, மனசு வலிக்கிறது தான்.
இதுவரையில் யாரும் சொல்லாத ஒரு பதிவு இது. வாழ்த்துகள் வித்யா.
LikeLike
மனதை சற்றும் மூடாமல் பகிர்ந்துக் கொண்ட கருத்துப் பகிர்விற்கு மிகுந்த நன்றியானேன் தோழி. உண்மையில் நாம் மூடிவைக்க வேண்டாத சில விஷயங்கள் தான் குடும்பத்தின் சில அறியாமைக்கும் காரணமாகிவிடுகிறது. அதோடு நில்லாமல், ஒரு அறியாமை கடந்து அதன்பின் அதைச் சார்ந்த வேறுவிதமான பல மூர்க்க குணங்களும் அதோடு சேர்ந்து வளர்ந்துபோகும் அளவிற்கான வித்தாகவும் அந்த நாம் அவசியமின்றி மறைத்த சில விஷயங்கள் ஆகிவிடுகிறது. உண்மையில், அம்மா எனும் ஒரு உச்சத்தை அப்பா எனும் ஒரு உச்சத்தை சில இடத்தில் ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணோ இடறவிட்டு தான்தோன்றித் தனமாக நடந்துக் கொள்ளும் அவல நிலையிலிருந்தே இம்மண்ணின் களையக் கூடிய பல காளான்கள் முளைவிட்டுவிடுகின்றன..
அதற்காக எதையும் இங்கிதம் மீறி பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்பதல்ல நம் எண்ணம், தெரியாமல் கேட்கும் ஒரு கேள்விக்கு தக்க பதிலை நாகரீகமாக சொல்லித் தரலாமே, சரிஎனில் சரி என்றும் தவறு எனில் தவறென்றும் சொல்லித் தரலாமே, அதோடும் நின்று விடாமல், நம்மிடம் கேட்கவேண்டியதை நம் பிள்ளைகள் கேட்டுத் தெரிந்து ஒரு பொது தெளிவோடு அவர்கள் வளரத் தக்க அரிய பெற்றோராக நாமேனும் இனி இருப்போமே என்றெண்ணி வருகையில் மனதில் வலித்திருந்த சில நினைவுகளையே இங்கு பொது விழிப்பு எதிர்நோக்கி பதிவுசெய்தேன். அதை நயமாக தக்க சான்றோடு எடுத்துரைத்த தங்களுக்கு மிகுந்த நன்றிகளும் வணக்கமும்..
அதோடு, யாரும் நம்மைவிட்டுச் செல்வதில்லை.., எங்கேனும் அவர்களின் நினைவு நம்மை எண்ணி இப் பூமியில் சுழன்றுக் கொண்டே இருக்கும், அந்த சுழற்சியின் ஒரு நெருக்கத்தில் உங்களின் இந்த மனபாரம் அந்த அப்பாவிற்கும் அம்மாவிற்கும் புரியவரும், அப்போது இருவரும் தனை அறிந்த மகிழ்ச்சியில் உங்களையே ஆசீர்வதிப்பார்கள்.. வாழ்க!!
LikeLike
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வித்யா……சூப்பர்…………………….கவிதை!
LikeLike
மிக்க நன்றியும் வணக்கமும் உங்களுக்கும் உரித்தாகட்டும்!
உண்மையில் இதற்கான வார்த்தைகள் கிடைக்க எனக்கும் எத்தனையோ வருடங்கள் கடந்துதான் போனதென்பதையும் இங்கே பதிவுசெய்கிறேன்..
LikeLike
நாகராஜன் P.M. எழுதியது:
\\அந்த பயம்
கடுகளவும்
கருணை இல்லாமல்
இதயத்தைக்
கருவேலம் முள்ளில்
சொருகி சொருகி
உருவுகிறது//
வித்யாசாகர் குவைத் எழுதியது:
அழுத்தமாக சொல்லும் சொற்களில் வெளிப்படுகிறது உங்களின் தாயன்பு, அது ஒரு நடந்திராத கனவின் கணத்திற்குள் வாழ்கிறோம்..
என் செய…
வலி வலிது.. தோழர்!
நன்றி; கூகுள் பிளஸ்
LikeLike
ஒரு பிள்ளையின் மனதில் தன் தாயைப் பற்றின வலிகளின் உணர்வுகளை இதுவரை எவருமே சிந்தித்திராத, அல்லது சிந்திக்க மறந்த அறியாமையை தெளிவுபடுத்திய உமக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும்
ராணிமோகன்
LikeLike
பெண் என்பவள் தாய்மை நிறைந்தளவு நட்பும் நிறைந்தவள் என்பதால் வெறும் இதுபோன்ற சிலதை மட்டும் பேசி அலசி நமை நாம் சரிபார்த்துக் கொள்ளலாம் எனும் நம்பிக்கை தோழி..
அதோடு ஒரு தாயின் உயந்த அன்பை, ஆற்றிக் கொள்ள இயலாத அவளின் இழப்பு பற்றிய பெருந்துயரை, அப்படி நம் வாழ்வின் இடையே வரும் மறுக்கக் ஒக்காத அக்கொடுந் தருணத்தின் நினைவின் வலியை சற்று மொழிபடுத்தும் ஒரு ஈடுபாடும் கூட..
தங்களின் கருத்திற்கு மிக நன்றியும் வணக்கமும்..
வித்யாசாகர்
LikeLike
வணக்கம்..! குழந்தைகளுக்கு உடலியல் கூறு பற்றிய அறிவு இருக்கவேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை..! ஆனாலும் சிலவற்றைப் பற்றி பருவ வயதிற்கேற்ப புரிதல் இருந்தால்தானே நன்றாக இருக்கும்..! ஒருவரின் அனுபவம் பகிர்தலாக இருக்கலாம்..! பாடமாக இருக்கவேண்டிய அவசியமில்லையே..! உடற்கல்வி அறிஞர்களின் எத்தனையோ அமர்வுகளுக்குப் பின்னும் முடிவேய்தாமலேயே இருக்கிறது..! பார்ப்போம்… தங்களின் ஆதங்கம் ஆய்வுகளைத் தூண்டட்டும்..! நன்றி..!
LikeLike
வணக்கம் ஐயா, நிச்சயமாக இது என் சுய அனுபவம் தான், பாடம் எல்லாம் இல்லை. அதோடு, அது எனக்கு அத்தனைக் குழந்தைப் பருவமும் இல்லை, நான் ஏழாவதொ எட்டாவதோ படிக்கும்போது ஏற்பட்ட மன உளைச்சல்கள் இது. அந்த பன்னிரண்டு பதின்மூன்று வயதில், தீட்டு மாதவிடாய் புரியாவிட்டாலும், இது வருந்தக் கூடியது இல்லப்பா, இது அம்மாவுக்கு அப்படித் தான் மாதம் மாதம் வரும் அதுக்கெல்லாம் நீ பெருசா ஐயப்படவேண்டாம், வளர வளர தெரியவரும்னு சொல்லியிருந்தால் கூட போதுமானது தான்.
பொதுவா புரிய அறிவு வளர்சியுள்ள வயதில் புரிதல் ஏற்படத்தக்க, அறியாமை விலகத் தக்க, நன்மைக்குரிய விளக்கங்களை மட்டுமே தாயின் வழிகேட்க விழைகிறேன் அன்றி எனது எண்ணமும் வேறில்லை. என்றாலும், குறிப்பாக இது பொம்பளைச் சமாச்சாரம், அல்லது இதுபற்றி உனக்கேன், அல்லது பெரியவங்க பேச்சு என்று சொல்லி முற்றாக சில விடயங்களைத் தவிர்ப்பதைக் காட்டிலும், சிறுவராயினும் புரியும் வகையில் இயற்கையான யதார்த்த தெளிவு குறித்த விளக்கத்தை அவர்கள் மாற்றிப் புரிந்துக் கொள்ளத் தகாத வகையில்; மேலோட்டமாக அபாய குழப்பத்தையோ ஐயத்தையோ தவிர்க்கும் விதமாக எடுத்துச் சொல்லலாம் தானே?
ஒரு உதாரணத்திற்கு முகிலுக்கு நான்கு வயது முடிவுறும் தருணமிது, அவன் எவ்வளவு விவரத்தோடும் தெளிவோடும் சொல்வதைப் புரிந்து, புரியாததை ஆய்ந்துப் பார்க்கிறான் என்றும் அறிவீர்கள். அதுபோன்ற கடந்த தலைமுறைகளைக் காட்டிலும் கூடுதல் புரிதலோடுதான் இப்போதைய குழந்தைகள் இருக்கின்றன.. வளர்கின்றன.. இந்நிலையில், அவனுக்கு கண்ணில் இப்படி ஒரு சங்கதி பட அவன் என்ன செய்வான் ‘அப்பா அம்மாவுக்கு ரத்தம் வருது என்பான்,
அதற்கு நாம் சின்ன குழந்தையாயிற்றே என்று விட்டுவிடுவதை விட,
“அது ரத்தமில்ல செல்லம், அம்மாவுக்கு அது மாதம் மாதம் வரும், நீ சிறுநீர் போற இல்லையா, அது மாதிரி அது” என்று மேலோட்டமாக அவனுக்கு ஏதோ அபத்தமாக புரிந்துக் கொள்ளாத அளவிற்கு சொல்லிவிட, ஒருவேளை “அம்மா அழுவுறாங்களேப்பா” என்று அவன் கேட்கக் கூடும்,
அப்படி கேட்டால் “இப்படி நடக்கும்போது வலிக்கும்பா, அம்மா பாவம் தான், ஆனா இதலாம் நாம மறுக்க முடியாது, ஒரு நாள் இரண்டு நாள்ல சரியாயிடும் செல்லம் சரியா.., இது நீ வருத்தப்படுற அளவுக்கு விசயமில்லை, அம்மாவுக்கு பாப்பா வளர்ந்தா பாப்பாவுக்கெல்லாம் இதுமாதிரி இயற்கையா நடக்கும், மீதியை நீ பெருசா ஆயிட்டபிறகு ஏன் வலிக்குது என்னன்னு எல்லாம் விரிவா படிச்சி கேட்டு தெரிந்துக்க்லாம் சரியா”
எனுமளவு சொல்ல அது அவர்களுக்கு புரியத் தானேச் செய்கிறது ஐயா. முழுதாக எல்லாம் புரியாவிட்டாலும், சரி அப்பா தான் சொல்றாரே, அம்மா தான் சொல்றாங்களே ‘பயப்பட ஒண்ணுமில்ல’ன்னு ஒரு புரிதல் அவர்களுக்கு ஏற்படுதல் குழப்பத்தை தவிர்க்கவல்லது தானே..
எல்லாவற்றையும் நாமே அவசியமின்றி சொல்லித் தருவதானா நிலை அல்ல, கேள்வி வருகையில் அவர்களுக்கு குழப்பமில்லா பதில்களும், அந்தந்த வயது பருவம் சார்ந்த மாறுதல் குறித்த பாதுகாப்பு குறித்த விளக்கங்களும், உடல்நலம் பேணக்கூடிய வகையிலான படிப்பும்’ பெற்றோர்வழியும் பயில்விப்போர்வழியும் எல்லோருக்குமே அவசியமானதே எனும் தேவையை இக்கவிதையின் வழி முன்வைப்போம்..
தங்களின் கருத்திற்கு மிகுந்த நன்றியும் வணக்கமும்..
LikeLike
ஒரு குழந்தையிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று மிகவும் அழகாக சொன்னீர்கள்.
ஒரு வித்தியாசமான அருமையான கவிதை இது. பாராட்டுக்கள்!!
LikeLike
நன்றி உமா. குழந்தைகள் நாம் வளர்ப்பவர்கள் தானே நன்றாக வளர்ப்போமே., அவர்கள் நன்றாக நல்லோராக வல்லவர்களாக வளரவே வந்துள்ளனர்; திசைதிரும்புமிடம் நம் கவனக் குறைவினாலும் இயலாமையினாலுமே நிகழ்ந்துவிடுகிறது..
LikeLike
அருமை.
LikeLike
நன்றி ஐயா.., உங்களின் பாராட்டு கருத்திற்கான நம்பிக்கையை தருகிறது. நன்றியும் வணக்கமும்..
LikeLike
மு. சரளா தேவி எழுதியது:
பால்ய வயதின் இனம் புரியா தெளிவற்ற கேள்விகளின் பதில்களை தேடி அலையும் ஒரு சிறுவனின் மனநிலை வெளிப்பாடு ஆய்வுக்குரிய கவிதை வித்யா……….
ஆழ மனதின் விடை கிடைக்கா பல கேள்விகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கு இன்னும் சமூகம் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்கமுடியாமல் சில புதைந்துதான் போகின்றன ……… அவற்றில் அவிழ்க்கப்பட்ட ஒரு கட்டு இது. இன்று தேவையான ஒன்றும் தான் …….. அதை வார்த்தைகளில் வடிவம் கொடுத்த வித்யாவிற்கு என் வாழ்த்துக்கள்..
LikeLike
மின்மடலுக்கு நன்றி சரளா. எழுதுவது வெறும் என் கடன் மட்டுமல்ல, நாளைய சமுதாயத்ததின் நலன் தாங்கி எழுதும் அக்கறையையும் மிகைப்படுத்திக் கொள்ள முயல்கிறேன் தோழி..
LikeLike
…வணக்கம் அண்ணா அருமை என்று எப்படி சொல்ல்வது அத்தனையும் வலிகள் சுமந்தது உங்களின் அத்தனை படைப்புக்களையும் நான் தவறாமல் படிப்பவன் நாங்கள் முள்ளி வாய்க்காலில் பட்ட அத்தனை வலிகளையும் நீங்கள் உணர்ந்து பல படைப்புக்கள் தந்து உள்ளீர்கள் எங்களின் வலிகளை வியாபாரம் ஆக்கிய பல இந்திய ஊடகங்கள் மத்தியில் எங்களை உங்களின் உறவு போல் நினைக்கும் உங்களின் மனதுக்கு நன்றிகள் அண்ணா
LikeLike
என்னன்புத் தம்பிக்கு வணக்கமும் இன்னும் நிறைய அன்பும்பா.., எங்களால், எனைப் போன்றோரால் எழுத்துக்களைக் கூட்டி அழ மட்டுமே முடிந்தது, வேறென்ன செய்தோம்.. இன்னும் அதன் ரணம் வலித்துக் கொண்டே தானுள்ளது சந்திரன்…
வலிக்க வலிக்க எழுவோம்..
துடிக்க துடிக்க
விடுதலையின் உணர்வினைக் கூட்டுவோம்!!
LikeLike