வயிற்றில் யாரோ
கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும்
அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும்
வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும்
எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே
சகிக்க ஒப்பாத உணர்வு மேவும்
எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின்
கால்வீங்கும்
நீட்டினால் மடக்கினால் நின்றால்
அமர்ந்தாலும் வலிக்கும்
இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும்
அயர்ந்து அயர்ந்து கண்கள் மூடிப் போக
ஒரு மயக்க நிலை உடம்பெல்லாம் பரவி
கண்கள் சிலநேரம் சொருகி நிற்கும்
அதையும் தாங்கமறுப்பதாய் காதில் விழும் வசவுகளை
இன்னொரு வலியாக பெண்மை பொருத்தேக் கொள்ளும்
பின், மாதம் நெருங்க நெருங்க
முதுகுவலி முறித்துயெடுக்கும்,
நாட்கள் நெருங்க நெருங்க
அடிவயிறு பிய்ந்ததுபோல் வலிக்கும்,
நேரம் நெருங்கிவிடுகையில் –
உயிரோடு பச்சைசதை கிழியும்,
எலும்புகள் உடைந்ததுபோல் வலித்து வழிவிட நீங்கும்
உயிர்வழி அகற்றி இன்னொரு உயிர் ஜனிக்கும்;
கண்களின் வெளிச்சத்தை
யாரோ பிடுங்கிக் கொண்டதுபோல்
முற்றும் இருண்டு படாரென ஒரு வெளிச்சம் வரும்;
அதுவரை கூடநின்ற மரணம் –
குழந்தைப் பிறந்ததும் தனை விட்டுவிலகும்;
சோவென பெய்தமழை பட்டென நின்ற அமைதியில்
மனது ஒரு புது அமைதியை –
எதையோ உயிர்வலிக்க இறக்கிவைத்த நிம்மதியை அடையும்;
உடல் உயிர் உறவு வீடு உலகம் எதையுமே
மறந்த அந்த ஒரு நிர்வாண தருணத்தை உணர்த்திய
அந்த அடிவயிறு அறுத்த எனது வலிக்கு யார் பொறுப்பு ?
நிச்சயம் நானில்லை எனில் –
எனக்குப் பிறந்த அந்த பெண்குழந்தைக்கு மட்டும்
நானெப்படி பொறுப்பானேன் ?
காலம் வயிற்றில் தங்கி
பிச்சி உதறிப் போடுகையில் தனக்கான ஒரு பிறப்பினை
அதுவேப் பெற்றுக்கொள்ள – இடையே
கனம் தாங்கி வலி தாங்கி ஒரு மரணம் கடந்து வந்து
பின்பும் சபிக்கப் பட்டவள் நானெனில்; அது
இம்மண்ணின் குற்றமேயன்றி எனதில்லை..
———————————————————
வித்யாசாகர்
நண்பரே உமது எழுத்துக்களும் வலைத்தளமும் அருமை …வாழ்த்துக்கள்
LikeLike
எழுத்தை ஒரு வரமாக கேட்டு; அந்த வரத்தில் நமக்கான மனிதத்தை வளர்க்கத் துடிக்கும் ஒரு சிறியோனின் தவிப்பு நிறைந்த தளமிது. இதற்கு உங்களின் வாழ்த்து உரிய பலம் சேர்க்குமென்று நம்புகிறேன்..
நன்றியும் வணக்கமும் தோழமை!
LikeLike
கடவுள் தனது படைப்பில் எல்லாமே சமமென்று நினைக்கிறார். அவர் செய்த தவறு மனிதனுக்கு சற்று அரைகுறை அறிவு கொடுத்தது. அதனைக் கொண்டு எல்லாமே நாம்தான் என்று தலைகனம் கொண்டு தலை கால் புரியாமல் ஆடவைத்தது, நல்லவர்களின் மனதை அழவைத்தது, எல்லோருக்கும் ஒரு காலம் வரும் அது நல்லோருக்கு மன களிப்பை தரும்.
வாழ்க வித்யாசாகர்
சரவணன்
LikeLike
கடவுள் சமமென்று நினைக்கும் இடம் வேறு சகோதரர். இதில் உயிர்பூக்கும் ஒரு வதையை விட்டு வெளியே வருகையில், மீண்டும் தலையில் அடிக்குமொரு சில்லறைத் தனம் “பெண்ணா பெத்துக்குனா முண்டை” ன்றது இல்லையா?
இதுபோன்ற வசவுகளை பல வீடுகளில் கண்டுள்ளேன். குறிப்பிட்டு இவரை என்று சொல்ல முனையவில்லை, ஆயினும் இன்றும் பலர் ஆணைப் பெற்றுக் கொள்கையில் மகிழ்வும், பெண்ணைப் பெற்றுக் கொள்கையில் ஒரு சலிப்பையும் காட்டுகிறார்கள். குழந்தையில் ஆணோ பெண்ணோ இரண்டுமே வரம் தான் என்பது வேறு, இவ்விடத்து கோரும் நியாயம் அது ஒரு பெண் முடிவெடுக்கும் விசயமல்லாத பட்சத்தில் அதன் வருத்தத்தை அவரின் சுய எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தின் வலியை ஏன் அவ்வலி சுமந்த பெண்மீது இடவேண்டும்? என்பது மட்டுமே.
எனவே அங்ஙனம் நேரும் ஒரு வருத்தத்தை நீக்கி பிறப்பது ஆணோ பெண்ணோ என்பதைக் காட்டிலும் பிறப்பது பூமிப் பந்தினொரு புதுக் குழந்தை எனும் மகிழ்வை மட்டுமேற்று’ நீங்கள் சொல்லுமந்த எல்லோருக்கும் நல்லோருக்கான களிப்பினைத் தரும் காலத்திற்கு காத்திருப்போம், இயலுமெனில் அங்கனமொரு காலத்தை நாமே சமைப்போம் என்று கேட்டு இவ்விடம் மிக்க நன்றியையும் அன்பையும் விடுத்து, உங்களின் வாழ்த்துக்கு மகிழ்ந்தும் கொள்கிறேன். வணக்கம்.
LikeLike
அருமையான கவிதை வித்யா.
கவிதையின் கருவிற்கு அப்பாற்பட்ட எனது ஒரு கருத்தை இங்கே முன்வைக்கிறேன். மன்னிக்கவும்.
//சோவென பெய்தமழை பட்டென நின்ற அமைதியில்
மனது ஒரு புது அமைதியை –
எதையோ உயிர்வலிக்க இறக்கிவைத்த நிம்மதியை அடையும்// இல்லை, அதன் பிறகுதான் வலியே ஆரம்பமாகும். சுமப்பது கூட சுமையில்லை. பெற்றெடுப்பது கூட வலியில்லை, ஆனால் பெற்றபின் வலியோடு குழந்தையை அரவணைக்கின்றோமே… சொல்லமுடியாத வலி அப்போதுதான் ஆரம்பமாகும்.
பூமியில் பாதம் வைக்கமுடியாது, உடலில் மின்சாரம் பாய்வதைப்போல் ஒரு ரணமான வலி வரும். எப்படிப்படுத்தாலும் தூங்க முடியாது. குழந்தை வெளியான அந்த விஸ்தாரமான கர்பப்பை சுறுங்கும்; அப்போது ஒரு வலி வரும்…., பால் கட்டிக்கொண்ட மார்பின் ஒரு வலி, காம்புகள் வெடித்து குழந்தை அதை உறிஞ்சும் போது.. வருமொரு உயிர்போகும் வலி…. ஆண்களால் விளக்கவே முடியாது இவைகளை.
எல்லோரும் தாய்மையைப் போற்றுகிறேனென்று பத்து மாத பந்தத்தைத்தான் போற்றுகிறார்கள். அதன் பின் வரும் வலி, பெற்ற குழந்தையை வெறுக்கும் அளவிற்குக்கூட கொண்டுச்செல்லும். சரியான அன்பு, அக்கறை, அரவணைப்பு இல்லையென்றால் மனநோயே வந்துவிடும்.
LikeLike
வணக்கம் விஜி.., மனமாற ஏற்கிறேன், உங்களுடன் மறுக்கவோ பின் மன்னிக்கவோ என்ன உண்டு. தாய்மையின் வலிதனை ஒரு துளி சொல்ல நினைத்த காரணம் ஒன்றே ஒன்று தான், அது; முழு வலியைப் பற்றி சொல்வதற்கல்ல. இந்த சுமப்பின் வலியை மட்டும் சொல்லி, வெறும் பிறப்பு வரை மட்டும் பேசி, இத்தனை வலியை நானாகவா ஏற்றுக் கொள்கிறேன், மறுக்க முடியாமல் அல்லவா சுமக்கிறோம், பிறகு எனக்குப் பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதன் வசவு மட்டும் எப்படி என் தலையில் விடிகிறது? எனும் கேள்விக்கான முடிச்சியைக் காட்டி பெண்மையின் நியாயத்தைக் கேட்க மட்டுமே இக்கவிதையின் கரு அமைந்துள்ளது.
அந்த ஒரு வட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்ததில்; கனக்க கனக்க சுமந்து, அந்த சுமை இறங்குவதில் ஒரு கணநேர அலாதி ஏற்படுமில்லையா? வலியின் உச்சம் இறங்கி சில மணித்துளிகள் உடலும் மனசும் எல்லாம் மறந்த ஒரு அமைதி நிலையை, மயக்கநிலையை, வலிதுறந்த நிலையைக் கொள்ளுமில்லையா? அந்த ஒரு குறிப்பிட்ட தருணத்தை மட்டுமே அங்கு எடுத்துக் கொண்டிருந்தேன். அதன் பின் நேரும் அவஸ்த்தைப் பலதை உடனிருந்து மனைவியோடு மனதால் அனுபவித்திருக்கிறேன். அவைகளை மறுப்பதற்கில்லை. நிச்சயம் ஒரு ஆண் எந்த தருணத்தில் உடனில்லாவிட்டாலும் இந்த குழந்தைப் பேற்றிற்கு முன்னும் பின்னும் மட்டும் நிச்சயம் உடனிருத்தல் அவளின் காலத்திற்குமான நன்றிக்கு உரியதாகுமென முன்பேக் கூட எழுதியுள்ளேன். என்றாலும் அவைகளுக்கெல்லாம் பலம சேர்க்கும் உங்கள் வலியின் ஆழம் கடந்து; கடைசியாய் சொன்ன //சரியான அன்பு, அக்கறை, அரவணைப்பு இல்லையென்றால் மனநோயே வந்துவிடும்// எனும் வரியின் சிந்திப்பை நிச்சயம் ஒவ்வொரு ஆணும் குடும்பமும் ஏற்கவேண்டுமென கேட்டுக் கொண்டு, நானும் ஏற்று, நன்றியில் நிறைகிறேன் சகோதரி..
LikeLike