அடப்போடா அது
பொம்பளைங்க சமாச்சாரமென்று
போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின்
பார்வையே மாறிப் போனதோ (?)
அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி
அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன்
உள்ளே வரும் அவள் அம்மா ‘நீங்க வெளியப் போங்க
என்று என்னை அனுப்பி விட
என்னம்மா நீ வருகிறாய்
நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய்,
நான் ஆட்டோ கூட்டி வந்ததும்
இருவருமேறி இரு புறம் உட்கார்ந்துக்கொண்டு
என்னைப் பார்த்து –
நீ வேறு ஆட்டோவில் வா என்கிறீர்கள்,
நான் ஓடி வேறு ஆட்டோ பிடித்து
மருத்துவமனைக்கு வந்தால் – நீ இங்கேயே இரு
நாங்கள் பார்த்துக் கொள்வோமென்று சொல்லி
என்னை வெளியே நிற்கவைத்துவிட்டு
நீங்கள் மட்டும் உள்ளேப் போனீர்கள்,
குழந்தை பிறந்ததும் அழைத்து காட்டிவிட்டு
பெண்ணோ ஆணோ சொல்லிவிட்டு
சரி போ
வெளிய நில்லு குழந்தைக்கு பால் தரனும்
என்பீர்கள்,
இடையிடையே எட்டிப் பார்த்தால்
ஆம்பள புத்தி பாரு.. போ போய் அந்த பக்கம் நில்லு
என்று வைவீர்கள்,
நான் இப்படித் தான் போல் இதலாமென்று நினைத்துக்கொண்டு
வீடு வந்து
ஏதோ ஒரு தவிப்பில்
பிரிவின் ஆற்றாமையில்
கண்ணீரின் வெப்பத்தில் தவித்துபோய் –
இரவுகளைக் கடத்திவிட்டு
அப்படியே நாளிரண்டும் கடந்து
பின் – அடுத்தடுத்து அவளைப் பார்க்கவருகையில்
அவளின் பார்வையையும் அழகையும் கண்டு பூரிப்பேன்
எட்டி எட்டி அவளை மீண்டும் பார்ப்பேன்
வலித்ததோ? அழுதிருப்பாளோ? பாவமவள் என்றெல்லாம் நினைப்பேன்
ஆனால் என் எல்லை குழந்தையைப் பார்ப்பது வரையுமேயிருக்கும்
அவளிடம் பேசிட யார்யாரிடமெனக்கு அனுமதி வேண்டுமோயெனும்
அச்சம் மேவி வெளியேறி நிற்கவேண்டியிருக்கும்,
அவளேனும் எனை அழைத்துப் பேசமாட்டாளா என்றுகூட
ஏக்கம் வரும்..
பின் –
குழந்தைக்கும் எனக்கும் அவளுக்குமான நாட்களின்
இடைவெளியில்
எல்லாம் மறந்துப் போகும்..
அடுத்த முறை பிரசவிக்கிறாள் அவள்
அருகே வந்து நிற்கிறேன் நான்,
அம்மா நீ எனைப் பார்த்து
நீ போ என்கிறாய்
நான் கெஞ்சுகிறேன்
அவளுடைய அம்மா உள்ளே நீங்கள் நின்றால்
நாங்கள் எப்படி நிற்பது என்றாள்
மருத்துவச்சி தெய்வம்; நீங்கள் வெளியே போயிடுங்கள்
கணவர் நிற்கட்டும் என்கிறார் உங்களைப் பார்த்து
எப்படியோ போவென
முனகிக் கொண்டே நீங்கள் வெளியேப் போக
நான் அவளின் வலி சகித்து
உயிர் தாங்கி நின்றேன் அவளுக்கருகிலேயே..
அறுத்த இடம் மருந்திட்டு
குளிக்க தோள் கொடுத்து தாங்கிநின்று
கால்கழுவ மனமுவந்து கழுவி
நான் பெறாத மகளைப் போல அவளைப்
பார்த்துக் கொண்டேன்..
அவள் பார்க்கும் பார்வையின் நன்றியுணர்வின்
நெடுகிலும்
எங்களின் ஆயுளுக்குமான வேர்கள்
நிரம்பிக் கிடந்தன..
இடுப்பு மடிந்து அவளுக்கு வலிக்கையில்
எங்களின் இரண்டுக் கண்களிலும்
செர்ந்தே
அவளுக்கான கண்ணீர் சொட்டின..
காம்பு வெடித்து மார்பு வலிக்கையில்
மருந்திட மட்டுமே
கைகள் ஏங்கின,
குருதி பொங்கி கால்வழி வழிய
ஐயோ செப்டிக் ஆச்சோ என மருத்துவச்சி தேடியே
கண்கள் அலைந்தன
எழுகையில் தடுமாறி
மெல்ல நிமிர்ந்து அமர்ந்து
காலூன்றி நடக்க எத்தனிக்க ‘தைய்யலிட்ட இடம் வலிக்குமா
சுருக்குனு குத்துமோ யென எனக்கே
முதலில் குத்தி மனசு வலித்தது..
உறவைப் புரிந்து
எங்களை உயிரில் புதைத்துக்கொண்ட அந்த நாட்கள்
இன்றும் எங்களுக்குப் பிரிந்தொரு நாளிருந்தாலும்
உள்ளே
வலிக்க வலிக்க அன்பை விளைத்தன
அவளோடு மட்டுமா நின்றுப் போனது
அந்த நாட்களின் அசைவுகள்?
இல்லையே;
குழந்தை அசைவை ரசித்து
அவளுக்கு அசைவில் வலிக்காமல் அமர்ந்து
வந்தோருக்கு வணக்கம் கூறி
ஒரு வாழ்க்கையின் தவத்தை
கணவனாய் மனைவியாய் நாங்கள் அனுபவித்ததே
அந்த பிரசவ நாட்களில் தானே..
உண்மையில் அது ஒரு போதிமரத்து நிழற்கூடம்
அங்கே ஆண்களே நிச்சயம் இருங்கள் – ஏனெனில்
அன்றெல்லாம் –
எங்களுக்கான காமம் எங்களிடம் இல்லவேயில்லை
நட்பில் நிர்வாணம் அடைகொண்டுவிட்டது
அவள் அவிழ்த்துப் போட்ட ஆடைகளை சுருட்டி
ஒரு தாயன்பு துவைத்துக் கொண்டது
அவள் கால் கை தெரிந்த இடமெல்லாம்
என்றோ சேர்ந்திருந்த நன்றிகளில் நீர்த்துப் போய் கிடந்தது
விலகிய புடவையின் ஓரமும்
அவிழ்ந்த பாவாடையின் நாடாக்களும்
பச்சை உதிர்த்து பூட்டிக்கொள்ள மட்டுமே கைகளை அழைத்தன
படுக்கையில் அவள் மேலே படுத்திருக்க
அவள் தூங்கும் நிம்மதியில் நான் கீழே தரையில் படுத்து
இரவுகளை வெளுத்திருந்தேன்
இருட்டில் அசந்து கண்மூடி படாரென
குழந்தை கத்துச்சோ
அவளுக்குத் தூக்கம் கெடுமோ என்றெண்ணி
விழிக்கையில்
அவள் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருந்த தருணம்
தருணம்தான்,
உண்மையில்
அன்பில் அவள் அவன் அற்றுபோய்
நாங்கள் நாங்களாக இருந்தோமப்போது…
எங்கள் பிள்ளையின் பிரசவம்
அந்த நாட்களில் தான்
எங்களையும் எங்களுக்கே பெற்றுத்தந்தது என்பதை
நிச்சயம் மறுப்பதற்கில்லை!!
———————————————————————
வித்யாசாகர்
அருமை!!
LikeLike
நன்றி உமா..
ஒரு மனைவிக்கு கனவன் உடனிருகக் வேண்டிய தருனமாய் இக்காலங்களைச் சொல்லலாம். அது நிச்சயம் அவர்களுக்குள் ஒரு இயல்பனா வாழ்வு நிலையின் புரிதலை ஏற்படுத்துமென்று ஒரு நம்பிக்கை வாழ்பனுபவமாய் உள்ளூருகிறது..
LikeLike
பிரசவ வேதனையையும் உறவின் ஆழத்தையும் கவிதையாய்………அருமை நண்பரே!!
LikeLike
உறவின் உன்னதம் புரிதலில் இருப்பதாகவே உணர்கிறேன். அப்புரிதலின் இடைவெளியை அகற்றுமொரு முயற்சியாகவே இக்கவிதைகள் புனையப் படுகின்றன. அதற்கு பலமாய் உங்களின் கருத்தும் பதிந்தமைக்கு நன்றியும் வணக்கமும்!!
LikeLike
வணக்கம்..!
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு..! குறள்….1193 .
காதலிப்பதை விட காதலிக்கப் படுவது…வாழ்வின் மீது பெருமிதத்தை உண்டாக்குமாம்..!
அதுதான் கவிதையாகப் பொங்குகிறதோ..!
இல்லற வாழ்வில் இன்பம் துன்பம் எதுவெனினும் இருவருக்கும் ஆனதே..என்பதை வாழ்ந்து காட்டுகிறீர்கள்..! ஒருவரின் அழுகைக்கு இன்னொருவர் கண்ணீர் விடுவது காதலில் மட்டும்தான் என்று கவிதை கலங்கவைக்கிறது..!
பெண் என்பவள் ஆணின் சுகத்திற்கு மட்டுமே படைக்கப் பட்டவள் என்ற ஆணாதிக்க சமூகம் பெண்களின் துன்பத்தில் பங்கெடுத்துக்கொள்ளாமல் இருந்த காலத்தில் பெண்கள் தங்களின் வலியை வேதனையை ஆண்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை..! பகிர்ந்தாலும் பயன் இருந்ததில்லை..! அந்த எண்ணத்தின் மிச்சமே இன்றையப் பெண்களை கணவனிடம் வெளிப்படுத்திக்கொள்ள தயக்கம்கொள்ள வைக்கிறது..! உங்களைப் போன்றவர்கள் அந்தத் திரையை விலக்க முற்படும்போது அவளின் காதலை முழுமையாக பெரும் ஆகச் சிறந்த இல்லறத்தை அடைந்து விடுகிறீர்கள்..! வாழ்த்துக்கள்..!
LikeLike
நன்றி ஐயா. என் பார்வைக்குப் புலப்பட்டவரை இதுவென்று எண்ணியிருந்தமைக் கடந்து அதற்கப்பாற்பட்ட அவஸ்தையின் விளக்கம் தெளிவைத் தருகிறது.. மூத்த பிறப்பின் அடையாளம் இதுவென்று அமைகிறேன்!!
LikeLike
மின்தமிழ் குழும பெரியோர்களுக்கு நன்றியும் மதிப்பும் வணக்கமும்..
https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/2GrhyrEBEeg
LikeLike