1
வீட்டிலிருந்து வெளிவருகிறாள்
காதலென்றான் அவன்,
காதலி என்றாள்
பைத்தியமானான் அவன்,
குழந்தை என்றாள்
பெண்ணெனில் தேவதை என்றானவன்,
தங்கை என்றாள்
உயிர்விட்டானவன்,
அக்கா என்றாள்
அம்மாவிற்கு ஈடென்றான் அவன்,
அம்மா என்றாள்
தெய்வமென்றான் அவன்,
மனைவி என்றாள்;
அடிப்போடி… என்றெண்ணிவிட்ட இடத்தில்
நெஞ்சு நனைக்கிறதந்த வேறுபாட்டு விஷம்..
————————————————————–
2
அப்பாம்ம்மா தான் எனக்கு முக்கியம்
காதலில்லை
சொன்னாள் பெண்
என் புருசன்
நான் போவேன்
போனாள் பெண்
பெண்ணா பெத்துட்டாளே
முண்டச்சி
முகத்தில் குத்தினாள் பெண்
முப்பது பவுனு பத்தாது
நாப்பது போடு
சட்டமாக கேட்கிறாள் பெண்
அவுங்களை கட்டிக்குனு அழ
நம்மால முடியாது
வெளியில் துரத்தினாள் பெண்
இனி ஒருநிமிஷம் கூட
இங்கிருக்கமாட்டேன்
தனிக்குடித்தனம் போனாள் பெண்
பெண் விடுதலை
பெண் விடுதலை
உரக்கக் கத்தினாள் பெண்
பெண்ணின்
சுதந்திர வாசல் திறக்கும் சாவி
பெண்ணிடமே இருந்தது –
எல்லாவற்றிற்கும் பின்னால் நின்றிருந்தான் அவன்..
————————————————————–
3
மனிதர் மனிதராக
பதிக்கப்படுகையில்
ஆண் பெண் அவஸ்தை குறையும்..
பெண்ணும் ஆணும்
இருவேறு சமப்பொருள்..
இடையில் திரிந்த
நீ.. நான்..
பெண்.. ஆணாக.. மாறிய புள்ளியைத் தேடுங்கள்
அழித்துவிடுவோம் –
விடுபடட்டும் மனிதர்கள் மனிதர்களாக..
————————————————————–
4
எனக்குள்
யார் யாரோ இருக்கிறார்கள்
‘நான்’ மட்டுமே
எங்கும் முந்திக்கொள்கிறது..
நான்’ கொல்லப்பட்டபின்
தெரியுமவர்கள் –
நிறைய மதிக்கப்படுகிறார்கள்..
————————————————————–
5
எப்படியோ உள்நுழைந்து விடுகிறது
யாரோ ஒருவரின்
பார்வையும்
வார்த்தைகளும்..
இப்படிக்கு –
நான் என்று மட்டுமே யெழுதி
கிழிபடுகின்றன தாள்கள்..
————————————————————–
6
ஒரே காற்று தான்
உள்நுழைந்து வெளிவருகையில் வரும்
வெவ்வேறு சப்தத்தின் ஆழத்தில்
அடைபட்டுள்ளது பிரபஞ்சத்தின் மூலம்..
காற்றில் கூட கலப்படம் நடக்க நாம்
காரணமாகி விட்டதில் –
மூலம்’ இருக்கு இல்லையாகவே நகர்கிறது காலம்..
———————————————————–
7
யாரின் கண்பார்த்துப் பேசுகையிலும் –
உள்ளே உருளும் அந்த உருண்டைக்குள்
நிறைய கேள்விகள்
கண்சிமிட்டிக் கிடக்கின்றன..
கேள்விகளைக் கேட்பதைவிட
தலைகுனிந்துக் கொண்டுப் பேச
தயாராகின்றன தலைகள்..
———————————————————–
8
சோறு வடித்து
குழம்பு வைத்து
சாப்பிட்டு விட்டு படுத்ததும்
உறங்கிவிடுகிறோம்..
சோறு வடிக்காத
குழம்பு வைக்காத
சாப்பிடாத யாரைப் பற்றியும் ஏன் நமக்குக் கவலையில்லை.. ?
கவலை’ வேறு வேறு கால்பரப்பிக்கொண்டு
படர்கிறது உலகத்தின் கண்களில்;
உலகிற்கு வலிக்கையில்
நமக்கும் வலிக்கிறது..
————————————————————–
9
ஊர் நிறைய கிணறுகள்
நீச்சல் குளமுள்ள வீடுகள்
மண்தோண்டினால் தண்ணீர்
தாகத்தில் அலைந்தன பறவைகள்..
நெடுக நடக்கின்றன மாடுகள்
நெட்டி நிற்கின்றன அடுக்குமாடிகள்
குடிக்க பாலில்லை குழந்தைக்கு
அசையாமல் நிற்கின்றன கட்டிடங்களும் மாடுகளும்..
————————————————————
10
எல்லாவற்றிற்கும் காரணம் ஆணென்று
எழுகிறதொரு குரல்..
இல்லை இல்லை பெண்ணென்று
புலம்புகிறது மற்றொரு குரல்..
இரண்டையும் பார்த்துச் சிரிக்கிறது
எழுதுகோல் –
நானென்று ஒப்புக்கொள்ள யாருமில்லை..
————————————————————
வித்யாசாகர்
கவிதை வடிவில் ஒரு சிறுகதை –
LikeLike
வடிவத்தைவிட சிந்தனையை மட்டுமே பெரிதாகக் கருதுகிறேன். எட்டும் உயரம் சரியெனில் எழுத்தாக இருப்பதில் மட்டுமே நிறைந்துப் போவேன். தங்களின் கருத்திற்கு நன்றி சகோதரி..
LikeLike
வணக்கம் ..! கவிதைகள் இந்திய முத்தங்களாக இனிக்கின்றன..!இங்கிலீசு முத்தங்களாக சலிக்கவில்லை,,!5 , 4 , 7 ,9 இந்த வரிசையில் உள்ள கவிதைகள் சிறப்பான பாராட்டுக்குரியவை..! கடவுள் எப்படி எங்கும் நிறைந்திருப்பதாக கருதுகிறீர்களோ அதுபோல்தான் கருத்துக்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன ..! நான் ஏற்க்கனவே கூறுவதுபோல் சிந்தனைகளின் சங்கிலியின் கண்ணிகளை பிரித்து உங்களால் எந்த கருத்துக்களையும் சுயம்புவாக கூறிவிடமுடியாது..! ஆகவேதான் நமக்கு இந்த குற்றவுணர்ச்சி! தாள்கள் வேண்டுமானால் கிழியலாம்..! மனம் கிழிய வேண்டாம்..! தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்..! வாழ்த்துக்கள்..நன்றி..!
LikeLike
வணக்கம் ஐயா, இது வேறென்ன இந்திய அவலம் தானே பின் அதுவாக இனிப்பதில் மாற்றிருக்காது. அதோடு சுயம்புவாக நிற்கவேண்டி எந்த தவமும் இல்லை; சுயம்பில்லை என்று சொல்லும் உணர்வுதான் இது.. குற்றவுணர்ச்சியும் இல்லை, யதார்த்தத்தை யதார்த்தமாக பகிர்ந்துக் கொள்ள எண்ணியது மட்டுமே. கூடுதலாகப் பார்த்தால், அது எழுத்துப் பற்றிய பார்வையினுடைய கவிதையே அல்ல. அதற்கும் ஒத்துப் போகிறது எனலாம். ஆயினும் பொதுவாக நம்மில் நிறைய பேரின் நடத்தைகள் பாவம் பிறரைச் சார்ந்துகொள்கிறது. சிலநேரம் நாம் பார்க்கும் பார்வை யாரோ இதுபோல் பார்ப்பார்களே என்பது போல் தோன்றும், நாம் செய்யும் செயல்கள், கையசைவுகள், அதாவது உடல்மொழி பிறரை ஒத்துப் போகும். பாதி நமக்குப் பிடித்தாற்போல் செய்யும் வேறொருவரின் வார்த்தைகள் செயல்கள் நமக்கும் பிடித்துப் போக அதைத் தெரிந்தே மாற்றிக் கொள்கிறோம், மற்றொரு பாதி நமையறியாது நம்மில் அது கலந்துப் போகிறது’ எனுமொரு சங்கதியையே அங்ஙனம் –
//எப்படியோ உள்நுழைந்து விடுகிறது
யாரோ ஒருவரின்
பார்வையும்
வார்த்தைகளும்..// என்றெழுதினேன். மீண்டும் இன்னும் சற்று கடந்து பார்த்தால், அதைக் கூட நாம் நம் செயல்களாக அசைவுகளாகத் தானே காட்டிக் கொள்கிறோம்? அப்படியே தானே நகர்கிறது காலம், நாள்காட்டியின் ஏடுகளைப் போல் நிறையப் பேரைக் கடந்து கடந்து கற்றும் கற்காதும் வென்றும் வெறுமனேவும் தானே கிழிந்தொழிகிறது நம் பொழுதுகள்? அதைத்தான் இங்கே –
//இப்படிக்கு –
நான் என்று மட்டுமே யெழுதி
கிழிபடுகின்றன தாள்கள்.. // என்றெழுதினேன்.
மற்றபடி என் எண்ணத்தினை எழுத்தாக அங்கீகரித்துக் கொண்ட உங்களைப் போன்றோரின் எங்கும் நிறைந்த கருத்தினை எல்லாவற்றிற்கும் மேலானதாய் மதிக்கவே முயல்கிறேன். அம்மதிப்போடு நிச்சயமென் எழுத்துகளும் தொடரும்.. நன்றி!!
LikeLike