சாப்பாடென்ன சாப்பாடு
அது வெறும் நெஞ்சுக் குழிவரை
விழுங்கி விழுங்கா உன் நினைவு
அதலாம் கடந்து
கடந்து நிற்கிறது மகளே..
ஏழையின் குடிசையில்
அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில்
நீயும் பிறந்தாயே..
விதவை என்றாலே
வெற்று நெற்றியில் காமம் தடவி
வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று
கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க
கண்ட கழுதையெல்லாம் வந்து நிற்க’
பின்; மனிதர்களை விரட்டி விரட்டி
ஓயாத கைகொண்டு
எந்த வீட்டில் நான் உனக்கான விளக்கேற்ற மகளே ?
உனக்கு சோறூட்டி பசிதீருமோ
ஆடைகட்டி அழகு கூடுமோ
அடுத்தவர் நாக்கில் பாடாது இவ்வெளியெங்கும் படர்வாயோ
ஒரு ஆறடிப் பள்ளத்துள் –
வாழ்க்கை அர்த்தமற்றுப் போகையில் நீ
வெறுங்கட்டையென வீழ்வாயோ என
அஞ்சிய காலத்தை எனைபோல் கடந்தவர் யாருமில்லை மகளே..
நீ ஆடிப்பாடி சிரிக்கையில்
வெம்பி உள்ளே முடங்குமென்
அழுகையின் தடந்தனை நீ கூட மிதித்துக் கடந்திருப்பாய்
மீண்டுமொரு சிரிப்பிலதைத் துடைத்திருப்பாய்,
அதலாம்விட்டு’ மிடுக்காய் இவளென் மகளென
துடிதுடிக்க கால்தூக்கி நிற்கும் முள்குத்தியவனைப் போல நான்
உனை தாங்கிநிற்பேன்;
பகலில் கொஞ்சம் தூங்கி
இரவில் விழித்திருப்பேன்..
விளங்கச் சொன்னால்
உன் சிரிப்பிலும் பயம் வரும்,
அதை மறைக்கும் வதைதனில்
தலைப்பின்னல் வகிடு தப்பும்,
பழைய ரிப்பன் உன் தலையிலேரும்
வாடிய பூ இருந்தால் வைத்தனுப்பிவிட்டு
வாய்ப்பொத்தி
அழுத கண்ணீர் பூத்து –
நீ வரும்வரைக் காத்திருப்பேன்..
உள்ளேக் கசப்பிருந்தும் உனை எண்ணி
இனித்துக் கொள்வேன்,
வீட்டுக்குள்ளே சிங்காரித்து – ஒரு
இரவெல்லாம் பார்த்துக் கிடப்பேன்,
விடிகாலையின் பனியில் நனைந்து
நீ பூக்குமழகில் நடுங்கிக் கிடப்பேன்,
கலைத்துப் போடும் உன் அழகில் உதிர
நீ திட்டும் வசவை சேகரிப்பேன்..
எதிரே மிதிபடும் பாதங்களுன் உடலை
கனவில் தின்னும் காலுடைப்பேன்,
வீடெல்லாம் ஒரு தீ கொளுத்தி
என் மனசெரியப் போட்டுவைப்பேன்,
எடுத்ததற்கு எல்லாம் நீ ஏச்சு என்பாய்
எழுதா விதியை
அழுது அழுது தீர்ப்பேன்..
எனக்கறுந்த தாலி முடிஞ்சி நீ வளமா
வாழ் மகளே;
கருவேல(ம்) முள்ளுதச்சி கடங்கார(ங்) கண்ணு வச்சி
உன் பதின்ம வயசைப் பறிக்காம
ஒரு கரஞ்சேர்க்கப் படும்பாடு
இந்த தனியாளு தாயிக்கு
பொட்டழிஞ்ச வலி மகளே..
சமைந்ததாய் சொல்லி சொல்லி
சுமக்கிறேன்னு தெரியாம
கடிச்சிதிண்ணும் பார்வையில கொடுநாகம் திரியுமூரு,
காசுபணம் காட்டி காட்டி
கழுத்தறுக்க பயத்தை மூட்டி
உன் கால்கொலுசின் கவிதைப் பாடி
உன் உடம்பைத் தின்னும் பய காடு..
உயிரறுக்கும் நொடிநொடிக்க
கருதரித்து வந்தவளே
கனவன் புல்லா(ய்) முளைத்தாலும்
என் மூச்சு தாங்கும் ஒருஉசிரே
பூவுபொட்டு இல்லாம இந்த வெள்ளை வாழ்க்கைப்
போனாபோது..
உன் நிறைந்தநெற்றி பொட்டுசிவக்க
மஞ்சள் முகமா பூத்து வாழு,
உன் புருஷன் பேரை முன்னபோட்டு
இந்த விதவைப் பேரை அழிக்கப் பாரு,
என் வெள்ளைப் புடவை கொஞ்சம் கிழித்து
நீ தொட்டுவிடா(த) தூரம் போடு..,
உன் மெட்டிஒலி சப்தத்துல –
என் மிச்ச வாழ்வில் வண்ணம் சேரு!!
—————————————————
வித்யாசாகர்
மோரு சுப்ரா எழுதியது:
படிச்சதும் ஒரு சோகமான ஃபீலிங் வந்திடுச்சி..
——————————————————————–
வித்யாசாகர் எழுதியது:
மன்னியுங்கள்..
அவையம் காக்கும் ஒரு கோழி தன் முட்டைகளின் மீது வந்து யாரேனும் கைவைக்க வந்தால் படபடத்து நமை கொத்த சீறி வருமில்லையா, அப்படியொரு அவஸ்தையோடு தன் மகளை பொத்தி காத்துக் கொண்டிருக்கும் கணவரற்ற தாய்மார்களின் கண்ணீர் சிந்திய வெப்பத்தில் கனன்றுப் போனதுண்டு. என்னதான் அவர்களுக்கு அன்று உதவியிருந்தாலும் அவர்களுக்கான காயம் நிறைய ஆறாததன் வடு இன்னும் மனதிலுண்டு..
நம்மருகில் அங்ஙனம் இருக்கும் தாய்களின் வதைதனை இயன்றவரை புரிந்துதவுவோம்..
——————————————————————–
நன்றி: வல்லமை, பண்புடன், பிரவாகம் மற்றும் முகநூல் தோழமைகளுக்கு..
LikeLike