“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)

ம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் போல் மனதை வருத்தங்களும் மிக ஆழமாக தைத்திட்ட பல ஊர்களின் கதைகளைச் சேகரித்து அதை திரைமொழியில் படமாக்கிய சங்ககிரி ராஜ்குமாரின் கனவு சுமந்த உழைப்பிந்த வெங்காயமெனும் சீர்திருத்தத் திரைப்படம்.

ஓலையில் வேய்ந்த கூரையின் அழகு, பாட்டியின் முகத்தில் பெற்றவளை பார்த்த ஏக்கம், ஏழ்மையின் வீட்டில் கண்ணிய விளக்கெரிந்த வெளிச்சமென, எல்லாம் கடந்து ‘அழுத்தமான ஜோதிட நம்பிக்கையால் எதையும் அலசிப்பார்த்திடாது அல்லலுறும் ஒரு கிராமத்தின் கதையென’ படமெங்கும் பார்க்கும் பார்வைநரம்புதனில் பதைப்பையூட்டும் திரைக்கதையின் காட்சிகளாக மனதை கவ்விக் கொள்கிறது இப்படத்தின் சில பாத்திரப் படைப்புக்கள். குறிப்பாக அந்த தெருக்கூத்தாடியின் நடிப்பும் அவரைச் சார்ந்த கதைப்பின்னலும் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.

அவருக்கடுத்து, அதிக மினுக்கலில்லாத என் தங்கச்சியைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதாநாயகி’ போதுமான மிடுக்கோடு நேர்த்தியாக நடிக்கத் தக்க இளைஞனாக ஒரு கதாநாயகன்’ மனதில் பாசமாக ஒட்டிக் கொள்ளும் பாட்டியும் பாட்டியின் பேரனாக இயக்குனர் சங்ககிரியுமென அவர்களின் வரிசையில் மகளின் மகனின் நன்மைக்கென எண்ணி எதற்கும் இசைந்துவிடும் பெற்றோரையும் காட்டி நமை முகம் சுளிக்கவைக்கும் பாத்திர படைப்புகளின் மூலம் நம் மூடதனங்களை உடைத்தெறிகிறார் இயக்குனர்.

காடெரியும் தீயில் கடுகளவு விட்ட நீர்போல, நாடெங்கும் தலைவிரித்தாடும் ஜோதிட நம்பிக்கையை, அதுசார்ந்து நடக்கும் அதர்ம அட்டூழியங்களை, அதனால் அழிந்த குடும்ப வலி நிறைந்த காட்சிகளை வெள்ளித் திரையில் ஒருசில துளிகளாகக் காட்டி நம்மை மூடர்களாக்கும் சில மனித ஜடங்களின் முகத்தின்மீது  காரி உமிழ்கிறார்.

சில தொழிநுட்பக் குறைபாடு, இசையின் ரசம் போதுமானதாக இல்லாமை, ஆட்கொண்டுவிட்டதனால் அதை ஆட்பட்டபடியே காட்சிபடுத்திய சில இடங்களின் முனைப்பு, மேலும் படத்தின் பாத்திரங்களையொட்டிய  அழுத்தமான வசனங்கள் சில காட்சிகளில் போராமை என படம் பார்க்க வரும் சாதாரண ரசிகர்களை சற்று முகம் சுருக்கவைத்தாலும், முழுக்கப் படம் பார்த்த ஒருவரையேனும் திருத்திய நன்றி இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரைச் சாரும்.

துடிக்க துடிக்க ஒரு குழந்தையின் கழுத்தறுக்கும் சுயநலம் எத்தனை மனிதத்தன்மையற்ற செயலென்று அறிந்த இவ்வுலகில் தான் இன்றும் நடக்கும் கொடுமையொன்றை நெஞ்சம் பதைக்க காண்பிக்கிறார். உள்ளே ஒரு சாபம் அப்படிச் செய்யும் அத்தனைப் பேர் மீதும் பட்டுத் தெறிக்கிறது அந்தக் காட்சியில். அந்த சிறுவன் கத்தித் துடிக்கும் அந்தக் கதறலின் சப்தத்தில் கண்மூடிக் கொள்ளும் நாம் அத்தகைய ஒரு வாய்ப்பை நமைச் சார்ந்த யாருக்குமே தராததொரு சமூகத்தை மீட்டமைக்கவேண்டிய நிலையிலும் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும்.

கடவுள் ஒரு புனிதத் தன்மையெனும் எண்ணத்தை வலியுறுத்திய பல மகான்களின் அதே நிறத்தில் இன்றந்த கடவுளையே வெறுக்கச் செய்யும் பல பாதகர்கள் வாழும் பூமி பாவத்தால் கனக்கிறது. ஆங்காங்கே வெடித்தும், நீரில் மூழ்கியும் நீரற்றும் அழிகிறது உலகமெனில் அதற்குக் காரணமான பல அதர்மங்களின் முதலிடமாக வகிக்கும் போலிச் சாமியார்களை அசிங்கப் பாத்திரமமைத்து அவர்களின் உண்மை முகங்களை உலகிற்குத் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.

போலிச் சாமியார்களின் சுயநல வெறியை, நம்பிக்கையின் ஆழத்தில் விழுந்துக் கிடக்கும் மனிதர்களை தன்வசப்படுத்திக் கொள்ளும் அவர்களின் கீழ்தனத்தை, பக்தர்களின் கண்களை கடவுளின் பேரால் மறைத்து தன்னை லாவகமாக வளர்த்துக்கொள்ளும் அபார வளர்ச்சியின் பொருளாதார சூழ்ச்சியை என்றெல்லாம் போலிச் சாமியார்களின், ஜோதிடப் பித்தர்களின் காம குரோத முகங்களை அப்பட்டமாகக் காட்டி அத்தகைய தவறுகளை இழைப்போர் முகத்தில் ஏழு ஜென்மத்திற்குமான சாபத்தை வாரியடித்து தனது முதல் படத்திலேயே சமூக சீர்கேடுகளைப் பற்றிப் பேச துணிவுகொண்ட இயக்குனரின் முயற்சிக்கு’ சமுதாய அக்கறைக்கு நன்றிகூறும் கடமையுணர்வும் நமக்குண்டு.

இவரை மட்டுமின்றி, இவரோடு ஒத்து நடித்த, படத்தின் முழுமைக்கும் உடன் நின்று ஒத்துழைத்த, படம் வந்தபின்பும் சென்றடைந்திடாத நிலையில் அதை மீண்டும் தன் பெயரில் வெளியிட்டு நம் போன்றோரின் கண்களில் மீண்டும் இப்படத்தைக் காண்பித்த இயக்குனர் திரு. சேரன் மற்றும் அனைவருக்கும் ஒரு ரசிக மனதோடு இப்படத்திற்கான பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.

ஆடல் பாடல் காதல் காதலென்று மட்டுமே ஆயிரமாயிரம் படங்கள் வந்துப் போன கலைத் தெரு ஒன்றில், ஒரு கட்டைதுடைப்பானை யெடுத்துக்கொண்டு நம்முடைய இழிவுகளைத் துடைத்தெறிய திரைப்பயணமொன்றைத் துவங்கியிருக்கிறார் இயக்குனர் சங்ககிரி, அவருக்கு வாழ்த்து கூறும் இதே தருணத்தில் –

சமகாலத்தை சுயகற்பனையின் சித்தரிப்பின்றி சமகாலமாகவே பதிந்து, அதன் குறைநிறைகளை அதன்போக்கில் அலசி, அதன் நன்மை தீமைகளை அதனூடாகக் காட்டி, அதுசார்ந்த சீர்திருத்த எண்ணங்களை மட்டுமே அப்படத்தின் வசனங்களாக வைத்து, பொருத்தமான அதேநேரம் சற்று வசீகர தலைப்பிட்டு, தன் சுய விருப்புவெருப்புக்களை விட்டு விலகி ஒரு கலையை கலைக்காக படைத்து அதை மக்களுக்கும் உதவும்வண்ணம் மக்களிடம் கொண்டு சேர்ப்பாரெனில் இன்னும் இவரால் ‘இதைவிட பல நல்லபடங்களை செய்யமுடியுமென்று நம்பி, பார்க்காதவரையும் வந்து படம் பார்க்கவைக்கும் திறன் இவரின் திரைமொழிக்கு உண்டென்று வாழ்த்தி என் மனம் நிறைந்த நன்றிகளோடிங்கே நிறைவு செய்கிறேன்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொற்களின் போர் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to “வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)

  1. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

    நல்ல விமர்சனம் தந்தீர்கள்.
    சமூக அக்கறை கொண்ட படைப்பாகத் தெரிகிறது.
    இங்கு வெளியடப்படவில்லை.
    டிவிவி யும் வரவில்லை.
    பார்க்கும்போது உங்கள் விமர்சனம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி ஐயா, ஒவ்வொரு படைப்பிற்கு பின்பு உழைப்பிருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்குப் பின்னும் பலர் ரத்தத்தை வியர்வையாகச் சொட்டியுல்லார்கள். அதிலும் இப்படம் அவரின் விருப்பத்திற்காக கொஞ்சமும் மக்களுக்காக நிறையவுமென சமுதாய அக்கறையோடு செய்து திரையிடப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே துணிந்து நம் இழிவுகளைச் சாடியுள்ளார். இன்னும் மேலும் மேலும் அவர் பல நல்ல படங்களைச் செய்ய நம் கருத்துக்களும் ஒத்துழைப்பும் மிகக் கைகொடுக்குமென்று நம்புகிறேன் ஐயா. நீங்களும் அதற்கு பலம் சேர்த்தமைக்கு மனதார்ந்த நன்றியும் வணக்கமும்..

      Like

  2. விளக்கமான விமர்சனம் சார்… பாராட்டுக்கள்…

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்… நன்றி…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      பழைய கோவிலின் கோபுரத்து கல் இடுக்குகளில் ஆங்காங்கே அழகுற முளைத்த சில செடிகளைப் போல அசிங்கமாக நம் அரிய கலாச்சாரத்திற்குள் புகுந்துக் கொண்ட தீவினைகள், அவசியமற்ற நம்பிக்கைகள், அல்லது கூடுதல் நம்பிக்கைகள், அல்லது வேறு பல விரையம் மிக்க செயல்கள் என பல வளர்ந்துவிட்டிருக்கிறது. அவைகளை யாருக்கும் வலிக்காமல் வெட்டியெறிய கலைகளின் வழியே கூறும் இப்படத்தின் போன்ற அறிவுரைகள் நம் ‘இடமிருந்து வலம் வரையென’ எல்லோருக்குள்ளும் தைக்க; பின் காலம் மெல்ல மெல்ல மாறுகையில் அந்த அசிங்க செடிகள் உதிர்ந்து, அழகிய கோபுரமாக நம் கலாச்சாரமும் மக்களும் நம் வாழ்வும் மட்டுமே மிச்சப்பட்டு’ கனகம்பீரமாக ஒரு இனம் வாழும் நிலை அமையலாம்.., அதை தமுழரின் சிறப்பாக உலகம் நாளை கொண்டாடலாம்..

      தங்களின் வாழ்த்திற்கு நன்றி. வணக்கமும்..

      Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      பழைய கோவிலின் கோபுரத்து கல் இடுக்குகளில் ஆங்காங்கே அழகுற முளைத்த சில செடிகளைப் போல அசிங்கமாக நம் அரிய கலாச்சாரத்திற்குள் புகுந்துக் கொண்ட தீவினைகள், அவசியமற்ற நம்பிக்கைகள், அல்லது கூடுதல் நம்பிக்கைகள், அல்லது வேறு பல விரையம் மிக்க செயல்கள் என பல வளர்ந்துவிட்டிருக்கிறது. அவைகளை யாருக்கும் வலிக்காமல் வெட்டியெறிய கலைகளின் வழியே கூறும் இப்படத்தின் போன்ற அறிவுரைகள் நம் ‘இடமிருந்து வலம் வரையென’ எல்லோருக்குள்ளும் தைக்க; பின் காலம் மெல்ல மெல்ல மாறுகையில் அந்த அசிங்க செடிகள் உதிர்ந்து, அழகிய கோபுரமாக நம் கலாச்சாரமும் மக்களும் நம் வாழ்வும் மட்டுமே மிச்சப்பட்டு’ கனகம்பீரமாக ஒரு இனம் வாழும் நிலை அமையலாம்.., அதை தமுழரின் சிறப்பாக உலகம் நாளை கொண்டாடலாம்..

      தங்களின் வாழ்த்திற்கு நன்றி. வணக்கமும்..

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி