3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)

கொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து வெளியேறி இமிக்ரேசனில் நுழைந்து வணக்கம் தெரிவிக்கிறானவன் ஆங்கிலத்தில்..

“பாஸ்போர்ட் கொடு..”

“ம்ம்.. “

“உன் பேரென்ன ?”

“கலிங்கா தராசி”

“இந்துவா ?”

“இல்லை”

“எங்கிருந்து வர? “

“இந்தியாவுலருந்து”

“இங்க எதுக்கு வர ? கடும் போர் நடக்குது தெரியுமில்ல.. (?)”

“தெரியும், நான் போற இடத்துல சண்டையெல்லாம் இல்லைன்னு சொன்னாங்க”

“எங்க போற? ஸ்பெசல் பர்மிசன் எதனா இருக்கா?”

“ம்ம்.. கெண்டி க்கு போறேன், அங்கிருக்கும் கெண்டி சிங்கள பௌத்த மையம் ஒரு உலகளாவிய மாநாடு நடத்துது அதுக்குப் போறேன்”

“அழைப்பிருக்கா?”

“ம்ம்”

“எங்கே காண்பி”

“இதோ., அழைப்பும் அனுப்பி, அதோட அரசிடம் ஒப்புதல் வாங்கியும் அனுப்பியிருக்காங்க பாருங்க”

“ம்.. ம்.. சரிதான் என்ன விசயமா போற”

“உலக பெளத்த ,மாநாடு நடக்குதுல்ல; அதுல கலந்து பேசப்போறேன்”

“நீயா?”

“ஏன், பௌத்தம் நான் பேசக்கூடாதா? பௌத்தத்தின் கோட்பாடு, ஆசையை அறு, அதுவே துன்பத்திற்குக் காரணம், ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம், மனம் சொல் செயல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும், எப்போதும் உண்மையே பேசவேண்டும், எல்லாம் உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பன எனக்கு மிக பிடிக்கும்..”

“ஓ.. மகிழ்ச்சி மகிழ்ச்சி இங்க எதைப் பற்றி பேசப் போற?”

“பௌத்தம் சொல்லித் தரப்போறேன்”

“வாட்………….., நாங்க நாடு தழுவிய பௌத்தமதத்தினர், எங்களுக்கேவா..?” என்றவன் கேட்பதற்குள் அவன் முந்திக்கொண்டான்.

“உங்கள் மண்ணில் தானேடா பாய்கிறது ரத்த ஆறு? அதிலென்ன முகம் கழுவிக் கொண்டுள்ளனரா உங்களுடைய பௌத்த துறவிகளெல்லாம்? என்று வெடுக்கென கேட்கநினைத்திருப்பான் போல, அதை மறைத்துக்கொண்டு “எல்லோருக்கும் பரவலா தெரிலை இல்லையா, அதான் நான் அதைபத்தி பேசப் போறேன்” என்றுசொல்லி மழுப்பினான்..

“ஓ.. சரி சரி எங்கருந்து வரீங்க?”

“வடக்கு நாடு, தமிழகம்..”

“நோ நோ … தமிழனா நீ ? நீ ஆங்கிலத்துல பேசவே உன்னை எங்க இனம்னு நினைத்தேனே, உனக்கெல்லாம் அனுமதி கிடையாது வெளியே போ..”

“எனக்கு சிறப்பு அழைப்பு இருக்கு, நான் பௌத்தம் பத்தி பெருசா பேசப் போறேன்..”

“உள்ளேப் போனா உயிருக்கு நாங்க உத்தரவாதம் இல்லை பரவாயில்லையா?”

“யாருக்குதான் இங்க இருக்கு?”

“வாட்…………..?”

“இங்க நம்ம எல்லோருமே அப்படித் தானே, உங்களை மாதிரி தானே நானும்னே(ன்)”

“சரி சரி.. ம்ம்.. பாஸ்போர்ட் புடி, அதோ அந்த அறைக்குப் போ, உள்ள யாரும் இருக்க மாட்டாங்க சும்மா போயிட்டு உள்ள நில்லு, பீப் சத்தம் வந்ததும் வெளிய போய்டு”

அவன் சோத்துப் பொட்டலத்தை எடுத்து வெளியே மேஜையில் வைத்துவிட்டு உள்ளேப் போக, அந்த ஆர்மியும் கூட ஒருவரும் ஓடி வந்து அவசரமாக அந்த பொட்டலத்தை எடுத்துப் பிரிக்க அவன் உள்ளிருந்து வெளியே வந்து ஐயையோ அது சோறுங்க வாசனை அடிக்கும் அதான் வெளியவைத்தேன் என்றிழுக்க, ஆர்மிகாரர்கள் அவசரமாக அதைப் பிரித்து மேலே கிளறி சற்று கீழேயும் கொட்டிவிட ஒரு ஊசி போன நாற்றம் வேறு அடிக்கவே கண்கள் பிதுங்க மூடியும் மூடாமலும் அவனிடம் நீட்டினார்கள். அவன் அதை வாங்கி மடித்துவைத்துக் கொண்டு நன்றி கூறியவாறு வெளியேறினான்..

“உன் நன்றி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சிறப்பு காவல்படை உன்னை கண்காணிச்சுகிட்டே இருக்கும், எங்கு அத்துமீறினாலும் அங்கே உன் உயிர் விலையின்றி போகும்; எச்சரிக்கை!!”

‘எங்கள் உயிர் விலைபோயிதான் வருடங்கள் பல ஆகுதேடா..’ என்று நினைத்துக் கொண்டே அந்த ஆர்மிக்காரனைப் பார்த்து முறைத்தான் கலிங்கன் எனுமந்த வாலிபன்.

“என்ன பார்க்குற ?”

“ஒண்ணுமில்ல மிக்க நன்றி..”

“நன்றியெல்லாம் வேண்டாம் போ..”

“கலிங்கன் ஏதோ மனதிற்குள் முனகிக் கொண்டே விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அவனை கொண்டுபோக வந்த நபரை சந்தித்து அவரோடு வண்டியிலேறி கெண்டி மாநகரை நோக்கி விரைந்தான்..

இடையே இடையே அவனை கொண்டுசெல்ல வந்த ஓட்டுனர் ஏதேதோ கேட்டு விசாரித்துக் கொண்டே வந்தான்.

“எப்போ..ண்ணே பொறப்புட்டீங்க”

“ஊர்ல இருந்து காலைல புறப்பட்டேன், மதியம் சென்னை வந்து விமானம் ஏறுனதும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துட்டன் மன்னாரு..”

“எதனா கேட்டானுங்களா ஏன் போற என்ன விசயம்னு?”

“கேட்டான் கேட்டான்..”

“போர் நடக்குறதால தமிழன்னா உள்ளேயே விடுறதில்லைன்னு கேள்விபட்டேன் (?)”

“ஆமா, முதல்ல அப்படித் தான் பண்ணான், பிறகு பௌத்த மாநாடுன்னு நீ அனுப்புன கடிதம் காட்டுன பிறகுதான் போடான்னு விட்டுட்டான், அது போகட்டும் –

எப்படி இருக்கு நிலைமை, மண்ணை மீட்பாங்களா?”

“எங்கண்ணே.., உயிரை கொடுக்குறாகண்ணே பாவம், எப்போ யார் சாவுறான்னு தெரியமாட்டேங்குது, அதுலயும் வன்னி முழுக்க நெருப்பும் புகையுமா அடஞ்சி கெடக்கு”

“இவனுங்க ஓயவே மாட்டாங்களா? நம்ம மக்களுக்கு விடுதலையே கிடைக்காதா? செய்தியில காட்டும்போது மட்டும் ஏதோ ஒண்ணுமேயில்லாத மாதிரி காட்றானுங்க, நாங்க கூட ஏதோ போர்தான் முடிவுக்கு வந்துடுச்சோன்னு நம்பிட்டோம், பிறகு நீ அனுப்புன மின்னஞ்சல் பார்த்துதான் எல்லாமே அதிர்சியானோம், இனி இங்க ஒரு உயிர் மண்ணுல விழுந்தாக்கூட அங்க ஒரு புரட்சி வெடிக்கும், தமிழன்னா என்னன்னு இனி காட்டனும்டா, இங்கே பாத்தியா பட்டன்ல கேமரா வெச்சிருக்கேன்..”

“ஐயோ ஏர்போர்ட்ல புடிக்கில”

“அவுங்கப்பன் இல்லை அவனோட பாட்டன் வந்தாக் கூட என்னைப் புடிக்கமுடியாது”

“தனியறை சோதனை ?”

“எல்லாம் செஞ்சாங்க”

“அப்புறம் எப்படி”

“பார்ட்ஸ் கொண்டுவந்தேன் மன்னாரு”

“ஓ….ஹோ..”

“வெளிய வந்து உனக்காக நின்னப்பதான் டாய்லெட்ல வெச்சி பிக்ஸ் பண்ணேன்”

“ஓ..”

“இங்க பாரு.. மன்னாரு..”

“அண்ணே அண்ணே ஆர்மிகாரன் வரான் கையை கீழ போடுங்க அந்த பையை எடுத்து கீழே வையுங்க..”

“ஹேய்.. நில்லு நில்லு..”

“ .. “ வண்டி உறுமி நின்றது

“எங்கருந்து வறீங்க..”

“கொலம்போவுலருந்து”

“ஏன் அங்கே போன?”

“விமானநிலையத்துலயிருந்து.. இவரைக் கூட்டியாறேன்”

“எந்த ஊரு நீ இந்தியாவா?”

“ஆமாங்க..”

“பாஸ்போர்ட் எங்க ?”

“இதோ..”

“உன் பேரென்ன ?”

“கலிங்கா!!”

உன்னை கேட்டனா? ஏன் சாருக்கு பேர் தெரியாதா நீ கீழ இறங்கு முதல்ல’

“பேரு கலிங்காங்க., தராசி குடும்பம்”

“ஓ சிங்களமா?”

“முன்ன போனவங்க, அப்படி கூட இருக்கலாம், முழுப்பேரு கலிங்கா தராசியா, தராசின்னுதான் கூப்பிடுவாங்க. ஊரு தமிழ்நாடு, இந்தியா” அவனே கலிங்கனே குனிந்து ஆர்மியை வணங்கிவிட்டு சொன்னான்.

“நீ..நல்லவநாத் தான் தெரியற –

இவன் யாரு…., ஏன்டா அவனுக்கு நீ பெரிய ஆளா?”

“இல்லீங்க, நான் வண்டி ஓட்றவனுங்க, அவரைக் கூப்பிட வந்தேன்”

“எங்க போறீங்க ரெண்டுபேரும்..”

“கெண்டி பௌத்த மாநாட்டுக்கு போறோம், இதோ அழைப்பிதழ் இருக்கு.. பாருங்க”

“ஓ அப்படியா, புத்தம் சரணம்.. புத்தம் சரணம்…, போங்க போங்க.., யாராச்சும் கேட்டா இந்த அழைப்பிதழை முதல்ல காட்டுங்க”

ஓ.. சரி சரியென்று தலையாட்டிவிட்டு, ஏறி வண்டியில் அமர்ந்ததும் கலிங்கனுக்கு சற்று வியர்த்துதான்போனது”

“தமிழன்னாலே சிங்களன்கிட்ட ஒரு மரியாதையே இல்லல்லே மன்னாரு ?”

“மரியாதையா ? இழிவா பார்ப்பாங்கண்ணே, (இ)தோப் பாருங்க இங்க ஒருத்தன் வறான்.. “

“இவனும் கேட்பானா?”

“ஆயிரம் பேர் வந்தா ஆயிரம் பேரும் கேப்பான், பேசாத இருங்க”

“நிறுத்து நிறுத்து, எங்க போற ?” லட்டி வைத்து வண்டியின்மீது தட்டுகிறான் அந்த ஆர்மிகாரன்

வண்டியை உடனே நிறுத்த –

“எங்க போற ?”
“கெண்டிக்கு..”

“எங்கருந்து வர ?’

“நான் கெண்டி, அவரு தமிழ்நாடு, இந்தியா”

“நீ என்னத்துக்கு? பாஸ்போர்ட் எங்…”

“பௌத்த மாநாட்டுக்கு போறேங்க, அனுமதி கடிதமிருக்கு பாருங்க.., இதோ பாஸ்போர்ட்”

“ம்ம் போ போ..”

“என்னடா மன்னாரு வழியெல்லாம் இப்படிதானா? நெறைஞ்சிக் கிடக்குறானுங்களே..”

“நம்மலை மட்டும்தான் இப்படி சலிப்பானுங்கண்ணே..”

“சரி என்னை அங்க கூட்டிகிட்டு போயேன் வன்னி பக்கம்”

“ஐயோ ஆபத்துண்ணே!!”

“ஏன் இப்படி பதருற?”

“உயிரோட திரும்பி வர முடியாது”

“எனக்கு உயிர் வேண்டாம் மன்னாரு, அந்த மண்ணுக்குப் போகணும், அப்படி ஒருவேளை நான் அங்கேயே இறந்துட்டா, பின்ன அங்கருந்து என் தோழர்கள் இம்மண்ணுக்காக என் மரணத்திலிருந்து தொடங்குவாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு மன்னாரு, நீ நேரா வண்டியை அங்கே விடு..”

“இல்லைண்ணே, இப்ப வேண்டாம், மாட்டிகிட்டா, அநியாய சாவாப் போகும், இன்னைக்கு இரவு வேணும்னா காட்டு வழியாப் போவோம்..”

அவர்கள் பேசிக்கொண்டே, அந்த விழா நடக்குமிடம் சென்று சேர்ந்தனர். கலிங்கன், எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்த்தான். அங்கே அதே மண்ணின் ஒரு புறத்தில் போர் நடந்துக் கொண்டிருக்க, இங்கே இவர்கள் ஆடிப்பாடி களித்துக் கொண்டிருப்பதை காண வேதனையாக இருந்தது. மனதை அடக்கமுடியாமல், அங்கிருந்து புறப்பட்டான்.

மறுநாள் விடியும் நேரத்தில் வன்னி வந்திருந்தான்.

போர் நடக்குமிடம் அதிபயங்கரமாக இருந்தது. புகை மூடிய வெளிச்சத்தில் சூரியன் மறைந்திருக்க, எங்கும் வெடி சப்தமும் ஓட்டமும் கத்தலும் கதறலுமென அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் பூமியைக் காண்கையில் கைகாலெல்லாம் மனசோடு சேர்ந்து கலிங்கனுக்கு நடுங்கத்தான் செய்தது. குத்திட்டு நின்ற கால் கை மயிர்களை நீவி விட்டுவிட்டு, அருகிலிருந்த ஒரு குளத்தில் இறங்கி நீர் மோந்து முகத்தில் அடித்தான். தலையிலெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொண்டான்.

நனைந்த தலையில் துணி வைத்து சுத்திக் கொண்டு, குளத்திலிருந்து ஏறி ஒரு காட்டிற்குள் புகுந்து வன்னிப் போர் நடக்குமொரு ஊரின் ஒரு ஓரப்பகுதியில் மக்கள் வாழும் இடத்தை நோக்கி வந்து ஒரு பெரிய மரத்தின் மீதேறி ஒசரமாக நின்றுக் கொண்டான்.

மேலிருந்துப் பார்க்கையில், பச்சைநீர் பரவி ஊரெங்கும் கவிழ்ந்துக்கொண்டதுபோல், ஒரு செந்தாமரை ஊரெங்கும் இதழ்பரப்பி பச்சையாக விரிந்திருப்பதுபோல் பசுமை பூரித்து; எழில் செறிந்த ஒரு மண்ணின் நடுவே, எரிமலை குமுறுவது போல் வெடித்து புகைந்துக் கொண்டிருந்தன அந்த உரிமைக்கான போருக்கு நடுவேயிருந்த அந்த வன்னி மண்.

சிங்களர் நெருங்கி வன்னியின் பாதியை நெருங்கிவிட்ட செய்தி மரணத்தை காற்றில் கலந்ததுபோல் கலந்து காற்றோடு காற்றாக வந்து காதில் விழ, பதற்றமெங்கும் பரவி, இருக்கும் இடத்தை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் உயிரை துப்பாக்கியில் அடைத்துக்கொண்டு போராடினர் மொத்தத் தமிழரும் களத்திலிறங்கி.

ஒரு இனத்தின் விடுதலைக்கான வேட்கையை, தான் ஒடுக்கப்பட்டதன் நியாயத்தைக் கோரிய மனிதர்களை, மண்ணில் மார்தட்டி விளைந்திருந்த வீரத்தையென தமிழரின் ஒட்டுமொத்த பெருமதிப்பையும் தனது நயவஞ்சகத்தால் கொச்சைப்படுத்தி அவர்களுக்கு தீவிரவாத முகத்தை அணிவித்து கூண்டோடு கொண்றுதீர்க்கும் நாடுகளை சபித்துக் கொண்டிருந்தனர் அம்மக்கள்..

திடீரென மேலே பறந்துவந்த விமானமும் அடுக்கடுக்காக வீசும் குண்டுகளும் கைக்கெட்டிய உயிரைப் பறித்துக்கொள்ள; கலிங்கனும் அவனோடு சிலருமாய் சேர்ந்து ஓடி ஓரிடத்தில் மறையவேண்டி அருகிலிருந்த ஆற்றின் வழியே இறங்க அங்கொரு ஆர்மி கும்பல் அவர்களை கண்டு விரட்டியது..

திரும்பிச் சுட முடியாத ஒரு நிலையில் அந்த கூட்டம் கலிங்கனையும் சேர்த்தணைத்துக் கொண்டே ஓடியது. கலிங்கனுக்கும் உயிரென்றாலென்ன யெனும் கேள்விக்கான பதில் தெரியும் நேரமிதாகயிருந்தது. முடிந்தால் ஓடிப் பிழைத்துக்கொள்ளெனும் சவாலொன்றினை எதிர்கொள்ளுமொரு உணர்வொன்று வெளியெழும்பிவிட, முழு பயமும் வந்து முகத்தில் அறைந்ததுபோல் ஓடினான்..

தன் மக்களைப் பார்க்கவேண்டும் அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டு வந்தாலும் அவனுக்கு இப்படி ஒரு அனுபவம் மரணவாசல் வழியே ஓடும் ஒரு கொலைக்காரனைப் போல், தன்னை தானே பார்க்குமிந்த அனுபவம் மிக மரணவலி கொண்டதாக இருந்தது.

வேறு வழியின்றி, ஓடி ஓடி ஓரிடத்தில் மொத்தபேரும் புகுந்துக் கொள்ள அந்த கூட்டத்திலிருந்து ஒரே ஒருவன் அந்த ஆர்மிக் காரர்களிடம் மாட்டிக்கொள்ள அவனைப் பிடித்து துப்பாக்கியால் குத்தி மண்டையில் அடித்து வாயில் துப்பாக்கி முனையைக் கொண்டு தாக்கி ஏதோ விசாரிக்கிறார்கள், அவன் மரணத்தை காரி எச்சிலின் வழியே அவர்களின் முகத்தின் மீதுமிழ.. அந்த அரக்க மனிதர்கள் கத்தி அடுத்து உயிரிருக்கும் போதே கை வேறாக கால் வேறாக வெட்ட இன்னொருவன் துப்பாக்கியை வைத்து அவரின் உடல் முழுதையும் சல்லடை சல்லடையாக சுட்டு தூர எறிகிறான். அந்த செத்த உடம்பை வேறு இன்னும் இரண்டு பேர் சென்று காலால் எட்டி உதைத்து விட்டு புகைப்படம் எடுக்கிறார்கள். பின் அங்கிருந்து இவர்கள் இருக்கும் இடம் நோக்கித் தேடியவாறு வெறிபிடித்தாற்போல் ஓடி வருகிறார்கள்.

கலிங்கனுக்கு கண்கள் சிவந்து உடம்பெல்லாம் வியர்த்து கைகாலெல்லாம் ஆடி ஒரு கிலி பிடித்ததுபோல ஆகியிருந்தான். அடுத்த நொடியின் எந்த நகர்விலும் நான் இறந்துவிடுவேன் எனும் பயம் உள்ளே அவனை பற்றிக் கொண்டது..

இங்கே நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை இவ்வாறு கேள்வியுற்று சிலதை படங்களில் நண்பர்கள் மூலம் பார்த்து பல இரவுகளை தூங்காமல் கழித்திருக்கிறான் கலிங்கன். என்றாலும், பௌத்த விழா வந்து தன் மண்ணைத் தொட்டுப் போகும் பார்த்துப்போகும் ஆசையொன்றே இருந்து இங்கு வந்திருந்தான். ஆனால் – இங்கு நடக்கும் சம்பவங்களைப் போன்றெல்லாம் அவன் கனவில் கூட கண்டதில்லை.

சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே வந்துசூழ்ந்த தமிழ்போராளிகளில் சிலர் அவனை அடையாளம் கண்டுக்கொள்ள “டேய்.. நம்மட தமிழ்நாட்டண்ணன் இடமறியாது வந்திருப்பார் கொண்டுபோங்கள்” என்று சொல்லி ஓடி வந்து சூழ்ந்துக்கொண்டனர். அவன் பயத்தில் மூர்சையாகிவிடுவதைப் போலிருந்தான்.

“அண்ணே.. உங்களை யாரு இங்க வரச் சொன்னது, பயப்படாதீங்க, மூச்சை நல்லா இழுத்து இழுத்து விடுங்க, அதிகமா பயப்படாதீங்க மூச்சு நின்னு போயிரும், அதுக்குபதிலா நீங்க ஒரே ஒரு எதிரியையாவது கொன்னுட்டு சாவலாம்..” என்றொருவர் சொல்ல –

கலிங்கனுக்கு அந்த வார்த்தை அசுர பலத்தைத் தந்தது. “ஆம், ஆம் அதுதான் சரி. இல்லை, எனக்கொன்றும் பயமில்லை, புறப்படுங்க புறப்படுங்க நான் வரேன் வாங்க போகலா…ம்…”

“ஷ்… சத்தம் போடாதீங்க, இங்க எப்படியும் ஆமிக்காரர்கள் வந்துவிடுவார்கள், இங்கருந்து முதலில் ஓடணும்.., ஓடி எப்படியாவது அந்த கட்டடம் மேல ஏறிட்டா போதும் அடுத்த ஒன்றிரண்டு மணித்துளியில ஏர்பஸ் வந்திடும் சீக்கிரம் மூவ் மூவ்.. கார்மல் குரலெழுப்பி கட்டளையிட எல்லோரும் நகர்ந்து நாலுக்கால் பாய்ச்சலில் ஓடினார்கள்.

ஓடி அவர்கள் அந்தக் கட்டிடத்தை நெருங்கப் போவதற்குள் கலிங்கனுக்கு மூச்சிரைத்து மார்பை அடைத்தது. அதற்குப் பின் ஒரு நொடி கூட ஓடமுடியாதது போல் பொதீரென அவன் கீழே விழ, ஆர்மிகாரர்கள் அங்கு வந்து நிற்க அதை கலிங்கன் வேறு பார்த்துவிட..

ஐயோ செத்துட்டமோ எனும் பயத்தில் எழுந்து மீண்டும் ஓட எத்தனிப்பதற்குள் இன்னொருவர் வந்து கலிங்கனை தூக்கி விட்டு போ போ ஓடு ஓடுன்னு விரட்டி நகர்வதற்குள் ஆர்மிகாரனில் ஒருவன் தன் துப்பாக்கியை தூக்கி எரிய.. மேலே அதேநேரம் விமானம் வர, அவர்கள் ஓடி ஏறிவிடுவதற்குள் அந்த துப்பாக்கிசீறி வந்து அந்த தூக்கிவிட்டவனின் மீது பட்டு அவன் கீழே விழுந்து எழுவதற்குள் ஆர்மிகாரர்கள் ஓடிவந்து அவனைப் பிடித்து விடுகிறார்கள்.. விமானம் மேலே சர்ரென பறந்துவிடுகிறது.

விமானத்தை விட்டுவிட்ட கொந்தளிப்பில் அவனைப் பிடித்துக்கொண்டுபோய் அருகே கொதிக்க கொதிக்க இருந்த தார் காய்ச்சும் எந்திரம் போன்ற ஒன்றினைத் திறந்து அவன் மீது கொதிக்க கொதிக்க பாய்ச்சிவிட, அது அவனைக் கரைத்துக்கொண்டு வெப்பத்தில் தாரோடு தாராக உருக்கி ரத்தமும் தாருமாக கலந்து வேறொரு நிறத்தில் ஒரு பிண்டம்போல ஆக்கி தரையில் உருட்டிவிட..

கலிங்கனின் கண்கள் அழையினாலும் கதறலினாலும் அலறி மூடிக்கொள்ள உடம்பெல்லாம் துடிதுடித்துப் போனது. அவனின் காமிரா கண்கள் மட்டும் இவைகளை எல்லாமே கண்கொட்டப் பார்த்துக் கொண்டிருந்தது, அவன் இயக்கியபோதெல்லாம் அந்த காமிரா கண்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதின் அசைவையும் சேகரித்து வைத்துக் கொண்டேயிருந்தது.

அதற்குள் விமானம் மேலே பறந்து வேறொரு எல்லைக்குள் போக.. அவனை சமாதானப் படுத்தி, வந்த விவரம் மற்றும் அவனைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு அவனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான் கார்மல்.

கார்மலின் வீடுநிறைய யிருந்த பொதுவான மரணபயத்தைக் காட்டிலும் அன்பு அங்கே மிக அதிகமாகயிருந்தது. விடியலின் பொழுதொன்றில்தான் அவர்களின் விமானம் வந்திறங்கி நிற்க, கார்மலின் அம்மா ஓடிவந்து உபசரிப்போடு அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து, உடைமாற்ற சொல்லி, விவரங்களை கேட்டு நிலவரம் அறிந்துக் கொண்டு ‘பல் விளக்கி வாருங்கள் பசியாறலாமென்று கேட்க, அவன் மறுப்பதற்குள் அவள் தன்னுடைய பிரெஷினையெடுத்துக் கொடுத்து பல்விலக்கி வா என்கிறாள். கலிங்கன் அவளை அணைத்துக்கொண்டு அழுதான். அந்த தாய்மடியின் மீதிருக்கும் மண்ணின் களங்கமகற்ற மேலுமவன் துடித்தான்.

அவனுக்கு இப்படியெல்லாம் காண்பது புதிது. மனசு அதிர்ந்தபடியே யிருக்க ஓடி வந்த பயம் உடம்பெல்லாம் காய்ச்சலாகி கனத்தது. சாப்பிடும் எண்ணமெல்லாம சற்றுமில்லை. ஓரிடத்தில் அமர்ந்து இதுவரை எடுத்ததை எல்லாம் விண்டோவ்ஸ் வீடியோவிற்கு நடுங்கிய ,மனதோடு மாற்றி ஜிப் செய்து இந்திய நண்பர்களுக்கு அனுப்பினான். நடந்த விவரமெல்லாம் சொல்லி இனி நான் திரும்பி வருவதில் உறுதியில்லை என்றும் மின்மடல் செய்தான்.

அந்த ஊர் மிக அழகாக மலைக்குன்று போல் இருந்தது. பார்க்க கிராமம் போல் இருந்தாலும் எளிதில் யாரும் தொட்டுவிடமுடியாத ஒரு பெரிய நெட்வொர்க் அங்கே இயங்கியது. தமிழீழப் போராளிகளின் அசைக்க முடியாத இடமாக அது விளங்கியது. உலகை ஒரு புள்ளியில் இணைக்கும் எல்லாம் வசதியையும் அங்கே அவர்கள் செய்துவைத்திருந்தனர். எங்கும் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்க, காணுமிடமெல்லாம் ஈழத்தின் நேர்த்தியை அடையாளப்படுத்தியது அந்த சிறிய ஊர்.

என்றாலும், நேரம் நெருங்க நெருங்க விசகுண்டு ஏந்தி எதிரியொருவன் உட்புகும் இடைவெளிக்கான சுதந்திரமாகவே அந்த தருணம் விளங்கியது. அதற்குள் கார்மலின் குடும்பத்தார் அவனைநோக்கி ஓடிவந்து யாருக்கேனும் பேசுவதானால் ஊருக்கு பேசு வா, பாதுகாப்பாக இருக்கிறாய் என்று தகவல் சொல்லு வா என்றழைத்தனர். அதலாம் இனி எனக்கு யாருமில்லை, யாரிடமும் பேச எனக்கென்ன உண்டு, நாம் வேறெங்கேனும் போக வேண்டுமா சொல்லுங்கள் அங்கேப் போவோமென்றான் கலிங்கன்.

அவனுக்கு மனசெல்லாம் வலித்தது. துடிதுடித்தது. விட இருக்கும் தனதுயிரை இம்மண்ணுக்கென விடுவதாக தீர்மானித்தான். கண்களெல்லாம் சிவந்து ஒரே எண்ணத்தில் ஒரே மூச்சாக ஒரே திசையில் சொருகிக் கொண்டிருந்தது. கார்மல் அதைப் புரிந்துக் கொண்டு ஒரு இடம் போகலாம் வா என்று அழைத்துப் போக, போகும் வழியில் ஆர்மிக் காரர்களின் விமானம் சாரை சாரையாக நுழைய, மாறி மாறி சுட்டுக் கொள்வதும் குண்டு வீசி எறிவதும், சில வீடுகள் சிதறி உயிர்கள் பிரிவதுமாக இருக்க, அதைக் கண்கூடாக கண்டு மேலும் பதறிபோனான் கலிங்கன்.

குழந்தை ஒன்று வெடிபட்டு பாதி சிதறியபடி துடித்தது, பெண்கள் கையிழந்து காலிழந்து கதறினர், வயோதிகர் நடுத்தர ஆண்களின் முகம் பிய்ந்து தலை வெடித்து முன்பாதியாகவும் பின்பாதியகவும் தமிழன் துண்டுதுண்டாகக் கிடந்தான்.. கலிங்கனால் தாளமுடியவில்லை, இரண்டுகைவைத்து மார்பில் அடித்துக் கொண்டு கத்தினான். வெறிவந்த சிங்கமொன்று தன் கைகளால் மார்பிலடித்துக் கொண்டு சீறுவது போல் சீறினான்.

சப்தம் கேட்டுத் திரும்பிய எதிரிப் படையினர் துப்பாக்கியினால் சரமாரியாக அவனைநோக்கிச் சுட்டனர், கலிங்கன் ஒதுங்கி ஓடி கீழிருந்த துப்பாக்கி எடுத்து நேரே எதிரியை சுட்டுக்கொண்டே ஓடினான். கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டு சல்லடையாக்கினான். எதிரேயிருந்த பீரங்கி நோக்கி ஓடி, அதிலிருந்தவரை இழுத்துக் கீழே போட்டு துப்பாக்கியினால் நெஞ்சுக் குழியில் வைத்துச் சுட்டான். அவன் சரிந்ததும் புயலென எகுறி பீரங்கியின் மேலமர்ந்து வெறிபிடித்ததுபோல் எதிரிகளை நோக்கிச் சுட்டு சுட்டு வீழ்த்தினான். அடங்கிக் கிடந்த பாம்பொன்று அதன் வால் மிதித்ததும் திமிறியதைப் போல் திமிறி பொங்கும் கடலின் உச்சியென கலிங்கனின் மார்பு விரிய விரிய வன்னி மண் தமிழர்களின் மூச்சுக் காற்றைத் திருப்பி தன்பக்கம் வாங்கி சுதந்திரமாக சுவாசிக்கத் துவங்கியது..

யாருக்கும் கட்டுப்பட்டுவிடாத ஒரு கடல் திமிங்கிலம்போலவனுடல் இங்குமங்குமென அளவலாவி தனது மண்ணிற்கான விடுதலையை மிக வேகமாக மீட்டுக் கொண்டிருக்க; எட்டியதூரம்வரை சுட்டு சுட்டு பொசுக்கிய இடத்திலெல்லாம் எத்தனை உயிர்கள் செத்துமாய்ந்ததோ தெரியவில்லை, ஆனால் அந்த தருணத்தில் ஒரு வீரியம் மிக்க போராளி தமிழ்மண்ணிற்கெனப் பிறந்திருப்பதை எதிரிகள் தன் கணக்கில் எழுதிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று…

ஈழவிடுதலைக்கான முதல் வெற்றிக்கொடி அநேகம் இன்றிரவு அங்கே பறக்குமெனும் செய்தியை எல்லோருக்கும் மின்னனஞ்சலில் அனுப்ப கார்மல் ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தான்..

அடுத்தடுத்த ஊர்களில் அந்த வெடிகள் இன்னும் வீரியமாக வெடிக்கத் துவங்கின, ஒவ்வொரு வெடி வெடிக்கும் சப்தத்தின்போதும் ஒரு விதை அந்தந்த மண்ணின் சுதந்திரத்திற்கென ஆங்காங்கே முளைத்துக் கொண்டேயிருந்தது..

——————*——————*——————
..முற்றும்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to 3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    தமிழினத்திற்கு துரோகம் செய்யும் இனத்திலிருந்து ஒருவன் வந்து நடுநிலை மனதோடு அவர்களின் அட்டூழியத்தைப் பார்த்திருந்தால் நிச்சயம் அவர்களைத் தான் எதிர்த்திருப்பான் எனும் ஒரு மனிதத்தின் மீதான நம்பிக்கை இந்தக் கதையின் நாயகன் கலிங்க தராசி மீது எனக்கிருந்தது… அதை மெய்ப்பித்த கதை நாயகனுக்கு நன்றி!!!!!

    வித்யாசாகர்

    Like

  2. உமா சொல்கிறார்:

    மிக மிக அருமை. ஒரு சினிமா படம் பார்த்தது போல் இருந்தது. மிகவும் அழகாக கதையை கொண்டுசென்று இருந்தீர்கள். கதை என்று சொல்வதை விட உண்மை சம்பவத்தை மிகவும் தத்ரூபமாக, காட்சிகளை கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, மனமும் முழுமையாக அதில் ஒன்றிகலக்க வைத்துள்ளீர்கள். பல இடங்களில் கண் கலங்கிதான் போனது. அருமை!!!

    Like

  3. Jeevaraani சொல்கிறார்:

    இது நல்ல கதை, உண்மையில் நடக்கும் விஷயம்போல் உள்ளது…, தமிழர்களை எப்படியெல்லாம் வதைக்கிறார்கள்…, ராவணன் ஆண்ட பூமி இன்று கண்டவர்களுக்கெல்லாம் சொந்தம்.., என்ன ஒரு கொடுமை… எப்போதான் மாறுமோ தமிழர்களின் நிலை..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மாறும் ஜீவா. நிச்சயம் நியாயம் வெல்லும். ஆனால் அந்த வெற்றியின் சப்தம் காதில் விழ வாய்ப்பில்லாமலே பலரின் வஞ்சகத்தால் கருகிப் போன பல உயிர்களுக்கான பதைப்பு இது. விடுதலையின் உணர்வு ஒரு எள்ளளவும் மனதிலிருந்து குறையாததொரு ‘அனலை’ அந்த உயிர்விட்ட உயிர்களின் தியாகத்திற்கு அர்த்தம் பெறவேண்டி தக்கவைத்துக் கொள்ளுமொரு முயற்சி. ஒரு உணர்வுள்ள மனிதனை தனது மண்ணிற்கு வேண்டி தனது தேசத்திலேயே போராடும் சூழலை ஏற்படுத்திவிட்ட ஒரு அரசு சார் அராஜகத்தின் சாட்சி இந்த கதை..

      Like

  4. SHAN NALLIAH GANDHIYIST சொல்கிறார்:

    GREAT STORY…WAKE UP CALL TO ALL!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றிங்கையா, ஆம் விடுதலை உணர்வு மறுத்துவிட வேண்டாமே என தோழமையோடு கிள்ளி எழக் கேட்குமொரு நட்பின் வேண்டுதலே இது. இனி இருக்கும் நாளிலேனும் நமது உதிக்கும் தமிழ்மண்ணிற்கான விடுதலையின் சுவடு காண நமை தயார்செய்வோம்..

      தவறை தவறென்றே உரக்கச் சொல்வோம்; அவனின் அநீதி அவனைக் கொல்லட்டும்!!

      Like

  5. தமிழ்நிலா சொல்கிறார்:

    “அக்கிரமத்தை கண்டு பொங்கி எழும்
    ஒவ்வொரு தனி மனிதனும் தமிழனே” என்னும் கருத்தை அருமையாய் வெளிபடுத்தியது இந்த சிறுகதை.

    கதையில் வரும் கலிங்கா தராசியின் கதாப்பாத்திரம் தன் குடும்பத்தயே மறக்க துணிந்த தியாகமும், இம்மண்ணிற்காக தன் உயிரையே உயில் எழுதிவைத்த வீரமும் ஒவ்வொரு தமிழனும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இக்கதை.

    அக்கிரமத்தை கண்டு அமைதி காப்பவன் நம் இனத்திற்கும் தகுதியானவன் அல்ல என்பதை சொல்லாமல் சொன்ன சாமர்த்தியம் மிகவும் அருமை, மிக மிக அருமை.

    தங்களின் எழுத்து நடை கிரைம் சக்கரவர்த்தியை நினைவு படுத்தியது.

    வாழ்த்துக்கள்
    தமிழ்நிலா

    Like

  6. sathyan,kuwait சொல்கிறார்:

    ஈழப் பகுதிகளுக்குள் செல்லாமலே எப்படி இத்தனைத் தத்ரூபமாய் எழுதமுடிகிறது உங்களால்? தீவிரவாதிகள் பிறப்பதில்லை, நடக்கும் அக்கிரமங்களால் உருவாக்கப் படுகிறார்கள். கருத்தாழம் மிக்கதொரு கதையிது..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சத்யா, உண்மையை சொல்வதெனில், ஈழத்திற்குச் சென்றுள்ளேன், நேராக என் உறவுகளின் அவஸ்த்தைக் குறித்து பேசி வருந்தி மனதால் கலங்கியுள்ளேன். எதையும் ஆராயாமல் சாட்சியின்றி எழுதத் துணிவதில்லை. என்றாலும், இது வேறு.. இது ஒரு மனிதம் தாங்கிய துடிப்பு; என் மக்கள் என்று அவர்களை உயிருக்கு நிகராக ஏந்தி தவிப்பது கூட அவர்களின் மறுக்கப்படும் நீதியினால் என்றும் சொல்லலாம், என் மக்களுக்கு போதிய நியாயம் கிடைக்காமல் இவ்வுலக அரசியலினால் வஞ்சிக்கப் படுகிறார்களே எனும் ஆதங்கத்தின் பேரில் எழும் மன உந்துதலின் பொருட்டே இங்ஙனம் எழுத வேண்டி வருகிறது. என்றாலும் மறுப்பதற்கில்லை, எனக்கு முன்பு என் பெற்றோர் அல்லது முன்னோர் அங்கிருந்து வந்திருக்கலாம், ஒரு வேலை முன்ஜென்மங்கள் உண்மையெனில்; ஏதோ ஒரு ஜென்மத்தில் அம்மண்ணில் வாழ்ந்திருக்கலாம் பிறந்திருக்கலாம் இறந்திருக்கலாம் ஏதோ ஒன்று இனம் கடந்தும் அம்மண்ணிலுண்டு சத்யன்.. நமக்கும் அவர்களுக்குமாய்!!

      Like

  7. vidhyakaran சொல்கிறார்:

    கொழும்பு பயணம் முடித்து திரும்பியது போல்

    மனம் கனத்தது படித்து முடிக்கும் பொது

    ஒவ்வொரு வரிகளிலும் அவர்களின் துயரம் நம்மை துக்கத்தில் அழ்த்துகிறது.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உண்மைதான் வித்யாகரன், உலக தமிழர்கள் அவர்களின் வலிகளை தனதாய் சுமக்கவேண்டும். அந்த தெருவெங்கும் மலரவிருக்கும் ஆயுட்கால விடுதலைக்காய் நாமெல்லோரும் சேர்ந்து நல்ல வழியில் நியாயம் பிறப்பதற்கான வகையில் ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அல்லாத வகையில் ஒன்றுமே செய்யாதேனும் அவர்களின் வலிகளைக் கூட வியாபாரம் ஆக்காமல் விட்டுவிடவேண்டும்..

      அவரவருக்கான நியாயம் உரிய நேரத்தில் எவரின் துணை கொண்டேனும் தானே பிறந்துகொள்ளும் என்பது நியதி..

      தங்களின் கருத்திற்கு மிக நன்றியும் வணக்கமும்!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக