இயக்குனர் மிஸ்கினின் நான் பார்த்த முதல் படமிது. நான் பார்த்த படங்களில் என் கண்ணாடியைக் கழற்றுவது போல் எண்ணங்களை கழற்றிவைத்துவிட்டு அவர் கதைக்கு பின் மட்டுமே அவர் ரசித்த ரசனையோடு ஒரு இயக்குனர் என்னைக் கொண்டுசென்ற முதல் படமும் இதுவே.. என்று மெச்சத்தக்க நல்லபடம் செய்திருக்கிறார் மிஸ்கின்.
வெறும் கொலையெனும் முட்களை கலை எனும் வண்ண மலர்களோடு கலந்து வெள்ளித் திரையில் விரைத்து, அதைக் காணும் மனங்களையெல்லாம் ஆஹா ஆஹா என ஆச்சர்யத்தோடு பார்கைவைத்து, நமை அவர் நினைத்த இடத்திலெல்லாம் தொலையச் செய்த உழைப்பு, தான் விரும்பிய’ ரசித்த’ கனவுகண்ட காட்சிகளின் தோற்றத்தை தனது நாயகர்களின் முகத்தில் காட்டிய ஒரு மகா கலைஞனின் புதிய திரை யோசனை இந்த “முகமூடி” எனும் திரைப்படம்!
தற்காப்புக் கலை எனும் ஒரு வெளிவட்டத்தை கிழித்து அதற்குள் அடங்கிப் போகும் காதல் சாதல் வாழ்க்கை வெற்றி என ஒரு இளைஞனின் மெத்த நகர்வுகளுக்கான துடிப்பு’ ஆச்சர்யம்’ கனவுப் பார்வையென அனைத்திலும் புதிய யுத்தியை புகுத்தி தமிழ் பட தரத்தை இன்னொரு புதிய கோணத்திற்கு மாற்ற முயன்ற பொழுதுபோக்குச் சித்திரமிது.
என்றாலும், அந்த பொழுதுதனை எப்படி ரசித்து ரசித்து கழிப்பதென்னும் கேள்விக்கு பதிலாக ‘இம்முகமூடியை மட்டும் ஒருமுறைப் பாருங்கள், அதும் திரையில் சென்று அவர்கள் தீர்மானித்த அளவீடுகளோடு பாருங்கள், ஒரு மர்மம் நிறைந்த திரைப்படம் இப்படியும் ஒரு புதிய மொழியில் புதிய நடையில் புது சப்தத்தோடு இருக்கலாமென்று நம்பவைத்துவிடுவதை தானாக உணர்வீர்களென்பதே இப்படத்தின் சிறப்பு.
உண்மையில் திரும்பித திரும்பிச் சொல்வதெனில் இப்படத்தில் தெரிவது ஒன்றே ஒன்று தான்; அது அப்பட்டமாக காணக்கிடைக்கும் மிஸ்கினின் இயக்குனர் திறமைக்கான முகமன்றி வேறில்லை. அப்படி அவருடைய ஆளுமையை விட்டுவிட்டு வேறென்ன உண்டென்று ஆராய்ந்தால் அடுத்த இப்படத்தின் புது ஆட்கொள்ளலாக வருபவைகளில் ஒன்று மனதை மெய்மறக்கச் செய்யுமந்த பின்னணியிசை. அல்லது மனதிடம் பேசுமந்த புதிய இசைமொழி. அந்த இசைமொழியின் நறுமணத்தை தனக்குள் அச்சு பிசகாமல் தக்கவைத்துக் கொள்ளும் ஒளிப்பதிவும், பின் நடிப்புமென பல ஆச்சர்யங்களை மறைத்துக் கொண்டு மேலே முகமூடியாகத் தெரிவதும் இயக்குனரின் யோசனைக்குட்பட்ட அம்சங்களேயென்பதை மறுப்பதற்கேயில்லை.
அதுபோல் நடிப்பென்று பார்த்தால் ஜீவாவை உழைக்கச் சொல்லியிருகிறார், நரேனை மட்டுமே நடிக்கக் கேட்டிருக்கிறார் இயக்குனர். அத்தனை அழகு நரேனின் நடிப்பும் ஜீவாவின் உழைப்பும். அழகு எனில் அது ஒரு திரை மொழி வாசனை. புது மணம். புது ருசி. பார்த்தால் மட்டுமேப் புரியக்கூடிய காட்சிகளது.
அதுபோல், ஒரு வில்லனை கம்பீரமான திறமையான எந்த மகா அழிச்சாட்டியமுமின்றி காட்டுகிறது இந்த முகமூடி. யாரையும் கற்பழிக்காமல், கண்முன்னே பொடீர் பொடீரென்று சுடாமல், கழுத்தில் கத்தி விட்டு மூச்சை படக்கென நிறுத்தாமல்; அவ்வளவு ஏன் ஒரு கொலையைக் கூட கண்ணில் காட்டாமலேயே பல கொலைகளைப் பற்றிய பீதியை அரங்கமெங்கும் பரவச் செய்யும் திறன் பாராட்டத் தக்கதுதானே?
என்ன பெருஸ்ஸ்சா ஃபைடர்மேன், பிளாக்மேன், சூப்பர்மேன்? எங்க ஜீவாவுக்கு இணை யாரிருக்கான்னு கேட்குமளவு ஒரு கதாநாயகனின் திறமைகளை வெளிக் கொண்டுவருவதில் வல்லவரெனும் பட்டத்தை இப்படத்தின் மூலம் பெறுகிறார் இயக்குனர் மிஸ்கின் என்பதை இப்படத்தை பார்ப்பவர் ஏற்கலாம்..
ஒரு சங்கர் படம் பார்த்தால் சமூக அக்கறைகள் பிரம்மாண்ட பார்வையில் தெரியும், பாலாவின் படம் பார்த்தால் நாம் பார்க்க மறந்த அல்லது மறுக்கும் எளிய மனிதர்களின் முகங்கள் தெரியும், பாலாஜி சக்திவேலின் படத்தைப் பார்த்தால் நமது வாழ்தலில் வந்துவிட்ட சீரழிவுகள் அருங் கலையாக பதிந்திருக்கும், சேரனின் படமொன்றுப் பார்த்தால் நம் உணர்வுகள் அனைத்துமங்கே மொழியாக்கக் காட்சிகளாக மாறி கண்ணெதிரே மிளிரும், இப்படி சமகாலத்தின் யதார்த்தம் பிசகாத தங்கர்பச்சானிலிருந்து, சசி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன் என எல்லோரையும் விட்டு விலகி தூரமாக நின்று திரைப்படங்களை நுகர்ந்துப்பார்த்தால் மணிரத்தனத்தை மீள்பதிவு செய்து பின் அதிலிருந்தும் மாறுபடும் புதிய மணமொன்று கமழ்கிறது அது மிஸ்கினின் தனித்ததொரு நறுமணமாக மட்டுமே திகழ்கிறது..
அத்தகு, நிறைய ரசிக்கத் தக்கக் காட்சிகள் நிறைந்துள்ளது இப் படத்திலென்றுச் சொன்னால் ‘அதென்ன எல்லாப் படத்திலுந் தானேயிருக்கு என்று தோன்றும். ஆனால் இந்த படத்தைக் கண்டதும் தான் புரியும் ‘தனது குரு இறந்துப்போகும் காட்சியை’ கதறிக் கொண்டே அந்த குருவின் மாணவன் பார்க்க ஓடிவரும் காட்சியை’ ஒரு புதிய சப்தத்தின் உணர்வில் இதுவரைப் பார்த்த மரணத்தின் ஓலமின்றி உள்ளே பதறுமொரு யதார்த்த நிகழ்வின் துடிப்பாக மட்டுமேகூட காட்டமுடியுமென்று.
முக்கியமாக இவ்வுலகத்தை தனது மூன்றாவது கண் கொண்டு அவரின் புதிய கட்டத்திற்குள் காண்கிறார் இயக்குனர். அந்த கட்டத்தில் வெள்ளையடிக்கப்படாத சுவர்கள் பல அழகாகத் தெரிகிறது, விளக்கிட்டிடாத வீடுகள் உள்ளே வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது, வண்ணங்களின் அழகு விழித்திரையில் ஜொலிக்கிறது, புத்தர் சிலையின் அழகு ஞானத்தில் கனக்கிறது, இன்னும் உருவத்தின் அழகு’ பார்வையின் அழகு’ பேச்சின்’ நடையின்’ உடையின்’ பாவத்தின்’ ஏன் இருட்டிற்குக் கூட ஒரு அழகு உண்டென்று சொல்லி அதை புதுமையோடு பிசைந்துக் காண்பிக்கிறார் இப்படத்தின் இயக்குனர் மிஸ்கின் அவர்கள்.
ஆத்திரம் பொங்கி எழுந்து வராத சண்டை, வில்லனை கொல்லனும் கண்டம் துண்டமா வெட்டனும் காக்கா கழுகு கொத்தனுமென்றெல்லாம் எந்த உணர்வையும் நமக்குள் எழவிடாமல் அந்த படம் என்ன நினைக்கிறது, அந்த கதை என்ன சொல்ல வருகிறது, அவன் அடுத்தென்ன செய்யப் போகிறான், அந்த நாயகன் நாயகி அந்த பாத்திரம் என்ன செய்ய எண்ணுகிறது அதை மட்டும் பார்; உற்றுப் பாரென்று சொன்னால் எப்படிப் பார்ப்பார்கள் நம் மக்கள்? அப்படி மொத்த சனத்தையும் கண்கொட்டாமல் பரபரப்போடு பார்க்கவைக்கிறது இம் முகமூடி திரைப்படம்.
இப்படத்தில் இசை பெரிதா? ஒளிப்பதிவு பெரிதா? சண்டைக் காட்சிகள் பெரிதா? நடிப்பு பெரிதா அல்லது ஒப்பனை பெரிதா எனும் போட்டியொன்றினை வைத்தால், இந்த படம் எல்லாவற்றிற்குமான ஒவ்வொரு பாராட்டுக்களைப் பெற்றுக் குவிக்குமென்பதில் சந்தேகமில்லை. அதற்காக, ரொம்ப பெரூசா ஒரு சீரிய சிந்தனையோடெல்லாம் படம் பார்க்க போகனுமென்றில்லை, மிக சாதாரணப் படம் தான், என்றாலும் அதற்கான ஒரு பாடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது இம்முகமூடியின் திரைக் கரு.
பெரிய்ய தத்துவம் சொன்னாதான் ஆச்சா..? ஒரு சின்ன காற்றிலலையும் நெருப்பு போதாதா ஒரு ஊரெரிக்க? ஒரு நொடி காற்றை விரட்டினால் போதாதா ஊரழிய ? ஒரு துளி தண்ணீரற்றுப் போனால் அழியாதா இவ்வுலகம் ? அப்படித்தான், பெரிய போதனை கற்பிதம் பிரம்மாண்டமென்றெல்லாம் ஒன்றுமேயின்றி ஒரு தனிமனிதனின் திறமையில் உலகத்தைக் கொண்டு அடைக்கிறார் மிஸ்கின். ஒரு சின்ன பொடியை கண்களில் தூவி இமைகளை அரக்கிக்கொண்டு நிற்கும் இடைவெளியில் ‘நீ யார்? நீ யாராக இருக்கிறாய்? யாராக வேண்டும் நீ? போ.. போய் யோசி.. எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய் போ.. என்கிறார். நல்லதாக உன்னை நீ யோசி நல்லதாக மாறுவாய் என்று திரைக்குப் பின்னிருந்துக்கொண்டு திரைக்கு முன்னால் நிற்கும் கலைஞர்களின் மூலம் பேசுகிறார். எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் எனும் உயர்ந்த உண்மை நிறைந்த தத்துவத்தை கண்முன் காட்சியாக்கி தனது திரைப்படத்தைக் காணவரும் இளைய சமுதாயத்திற்கு ‘நீ எதுவாக ஆகப் போகிறாயெனும் கேள்வியை’ உள்ளே திணித்து தனது சமுதாய அக்கரையில் வழுவாது படம் செய்திருக்கிறார்.
விவிலியத்தில் சொல்வார்கள், ஒருவன் இறைவனுக்கு உபசரனையாக நல்லவனாக இருந்தான் நன்றாக வாழ்ந்தான், இன்னொருவன் சைத்தானின் வழியில் நடந்தான் சைத்தானாக முடிந்தான் என்பார்கள். இதிலும் ஒரு குரு வருகிறார். அவருக்கு நன்மை தீமை என்று இரு மாணவர்கள். அதில் தீமை தாமாக வலியவந்து அழிகிறது, நன்மையையும் தாமாக வலிய வந்து வாழ்வில் வென்று முடிகிறது. எனவே நல்லதை நினையுங்கள் நல்லதே நடக்குமென்று சொல்லாமல் சொல்கிறது இம் முகமூடி திரைப்படம்.
ஓரிடத்தில், ஒரு போதையில் ஆடிப்பாடும் பாடலொன்று வருகிறது. அதில் இச்சமுகத்தால் விரட்டப் படுபவர்களை நாசுக்காக காட்டுகிறார் பாருங்கள், உண்மையில் அதாலாம் புரிய ஒரு பார்வை வேண்டும். உனக்கந்த பார்வை இல்லாவிட்டாலென்ன நீ போ பொய் எந்த சுவற்றில் வேண்டுமோ முட்டிக் கொள் என் நாசாமகிப்போன சமுகமே; நான் அவர்களை அரவணைப்பேன், அவர்கள் என்னோடிருப்பார்கள், என் திரைப்படம் அவர்களையெல்லாம் தாங்கிக் கொள்ளுமென்று காண்பிக்கிறது இப்படத்தின் திரைக்கதை. அந்த திரைக்கதை உத்தியில் வந்துப் போகிறார்கள் நம்மால் அசட்டை செய்யப்படும் பலர். அதிலும் –
குறிப்பாக இவ்வுலகத்தால் ஓரங்கட்டப்பட்ட திருநங்கைகள், தீய வழி தேடி அல்லது வேறு வழியறியாது குடிபழக்கத்திற்கு அடிமையுற்றவர்கள், கூன் விழுந்ததன் வலி, ஒரு கலைஞனின் மதிப்பறியா இவ்வுலகின் முகத்தை தன் வயலின் நூலிழையில் அறுத்தெறியும் பெரியவர், வெட்டிப் பயல்களென நாமொதுக்கிய குருபக்தி நிறைந்த நட்பு பெருத்த நம் இளைஞர்கள், மரணம் வரை’ ஏன், தான் இறந்தப்பின்பும் தன் நண்பனுக்கென கலங்கி அவனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லும் உயிர் காத்த நண்பன், இவனை எப்படிக் கொன்றேன் தெரியுமா இப்படி’ அவனை எப்படிக் கொன்றேன் தெரியுமா அப்படி என்று சொல்லிச் சொல்லியே உணர்ச்சிவசப்படவைத்து எதிராளியை செயலிழுக்கச் செய்து பின் எளிதாகக் கொல்லும் பகையாளியின் தந்திரம் நிறைந்த ரத்த சுவை ருசித்த ஒருவன் என, கதையெங்கும் குவாட்டரிலிருந்து கம்பியூட்டர் வரை ஒரு மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளது இம்முகமுடி திரைப்படம்.
என்ன இசையது, மனதை விட்டு நீங்காத அந்த ஒளிப்பதிவைப் போலவே அந்த காட்சியின் சப்தமாக வருமந்த இசையும், இசையின் முகமாக தெரியுமந்த காட்சிகளும் பின்னிப்பிணைந்து நம் வாயடைத்துவிட்டு உணர்வுதனில் நிறைந்துதான் போகிறது இப்படம்..
தெருவில், வாழைப்பழத் தோலைப் போடுபவனின் காரில் மீண்டும் அதே வாழைப்பழ தோலை போடும் காட்சி, நரேன் பேசும் காட்சி, ஜீவா பேசும் காட்சி, கதாநாயகியின் உடல்மூடியும் மிளிரும் அழகிய கண்கள், லீ யின் நண்பன் இறந்து கீழே விழுகையில் மேலிருந்து காண்பிக்கும் அருகே உதிர்ந்த சிவந்த மலர்கள், கிறிஸ்மஸ் தத்தா வந்து கடைசியாக செய்யும் கொலைகள், அப்போது அவர்கள் ஊதும் நீற்குமிழிகளின் நிறம், டியூட்களின் சிகை அலங்காரம், யதார்த்தமாக நம்மை சிரிக்கவைக்கும் சில வசனங்கள், ஒவ்வொரு முறையும் ஜீவா செல்வா குழுவினைக் காண்பிக்கையில் காட்டும் பழைய இடிந்த நலிவுற்ற வீடுகளின் அறைகள், அறைகளின் ஜன்னலோரம், மாடிப்படிகளை கீழிருந்துக் காட்டுவது, டவர் கிரேனின் மேலிருந்துக்கொண்டு சண்டைப்போடுவது, அதைக் கீழிருந்து அழகாக காட்டுவதுமென’ மரணத்தை கொலையைக் கூட ரசிக்கும் ஒரு துணிச்சலை லாவகமாக கொடுக்கும் இத்திரைப்படத்தில் மனசு ஒன்றித்தான் போகிறது என்றால், அதை வெளிப்படையாக சொல்ல மறுப்பேதுமில்லை.
உலகிடம்’ பல இடங்களில் எப்போதிலிருந்தோ தோற்றுக்கொண்டிருக்கும் தமிழினம் இத்திரைக் கலையில் இனி இதுபோன்ற திரைப்படங்களால் வென்று நிற்கும். தமிழன் இனி தன் வாழ்தலை ஒவ்வொரு புள்ளியாக வெற்றியினிடத்து நகற்றி இறுதியில் தன் மரபு பரப்பும் சாதனையாளனாக தன்னை மாற்றிக் கொள்வான் என்று நம்புமளவிற்கு நமது தனிமனித திறன்களை மூன்று மணிநேரத்திற்குள்ளான திரைப்பத்திற்குள் அடக்கி, ரசிக்க ரசிக்க பார்க்குமொரு அருமையான பொழுதுபோக்குச் சித்தித்தைத் தந்திருக்கும் இத்திரைப்படத்தின் மொத்த கலைஞர்களையும் மனம் திறந்து பாராட்டுவோம்..
இயக்குனர் சேரனின் பாண்டவர்பூமி திரைப்படத்தில் கோபுரங்களின் நிர்வாணம் பிரதிபலிக்கும் சிலையழகினூடாக நகரும் காமிரா சட்டென பெண்ணின் இடுப்பிற்கு மேலெழாமல்மல் பக்கவாட்டில் ஒதுங்கி கிராமத்தைப் பார்க்குமொரு பார்வையாக மாறுவது போல, ஆங்கில படங்களுக்கு நிகராக ஏன் எந்த பிற மொழியில் இப்படத்தை எடுத்தாலும் அம்மொழியிலும் நிச்சயம் வெல்லும் என்று சொல்லுமளவிற்கு திரைத் துறையின் நேர்த்திக்கு ஒரு புதிய பலத்தைக் கொடுத்திருக்கும் இத்திரைப்படத்தை, சபலக் காட்சிகளில்லாத கொடூர காட்சிகளில்லாத முகஞ் சுழிக்கும் நிலையில் நம்மை ஆழ்த்தாத, பயமற்று பார்க்கவைக்குமிந்த மர்ம திரைமொழியை மனமுவந்து அங்கீகரிப்போம்..
இப்போதெல்லாம் பல படங்கள் புதுமையாக பிரம்மாண்டமாக வந்துப் போகிறது தான். சிலது வந்து வந்ததறியாது போகவும் செய்கிறது தான். ஆனால் இப்படம் நிற்கும். நம் எண்ணங்களில், நம் திரையுலக வரலாற்று காலத்தில் மறக்கமுடியாத ஏதேனும் ஒரு ராஜேஷ்குமாரின் நாவலைப் போல இப்படமும் நம்மோடு நிற்கும். எப்படி ரோபோ செய்கையில் சங்கர் இத்திரை உலகிற்கு வேண்டி ஏதோ ஒன்றை பிரம்மாண்டமாய் செய்தாரென்று நினைத்தோமோ அப்படி, 7ஜி ரயின்போ காலனி எனுமந்த திரைப்படம் பார்க்கையில் தமிழ் திரைப்பட இசை எப்படி சற்று தனது பல பழைய விதிகளிலிருந்து மாறியதோ அப்படி, இராவணன் எனும் திரைப்படம் பார்க்கையில், கன்னத்தில் முத்தமிட்டால் பார்க்கையில் அக்னி நட்சத்திரம் மற்றும் அஞ்சலியைப் பார்க்கையில் எப்படி ஒளிப்பதிவை எண்ணி மகிழ்ந்தோமோ அப்படி, சூர்யவின் ஏழாமறிவு திரைப்படத்தைக் காண்கையில் கடைசி சண்டைக்கு எழுந்து எப்படி கை தட்டினோமோ அப்படி படம் முழுக்க இதுவரை நாம் பார்த்த பல ஆச்சர்யங்களையும், கேட்பதற்குப் பிடிக்கும் இசையோடும் கடக்கச் செய்து புதியதொரு பரவசத்தில் நமைத் தொலைக்கவே வைக்கிற இம் ‘முகமூடி’ திரைப்படத்தின் புதுமையை தவிர்க்கப்படவேண்டிய பல திரைப்படக் காட்சிகளுக்கு முன்னுதாரணப் படுத்துவோம்..
உண்மையில் மிஸ்கினின் தலைகிரீட படமிது. இதில் உழைத்த நட்சத்திரங்களும் அக் கிரீடத்தோடு நிச்சயம் ஜொலிக்கப் படுவார்கள். வெகுவாக பாராட்டப்படுவார்கள். மேலும் பல இடங்களின் வெற்றிக்கு நகர்வார்கள். எனவே அவர்கள் அனைவருக்குமென் முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!
வித்யாசாகர்
அற்புதமான விமர்சனம் வித்யா. நானும் இன்றுதான் பார்த்தேன். உண்மையிலேயே சிறப்பான படம். உங்களின் விமர்சனம் படத்தை விட சூப்பர். வாழ்த்துகள்.
LikeLike
நன்றி சகோதரி. எதுமே இதற்கு முன்பு சொல்லாதவையில்லை, உண்மையில் எல்லாமே மீண்டும் மீண்டும் வெவ்வேறு களங்களைக் கொண்டு பிறக்கும் மீள்பதிவு சம்பவம் தான் என்றாலும், அதை இன்றைய சூழலுக்கேற்ப சிறப்பாக சொல்பவர்கள் சிறப்பிக்கப் படுகிறார்கள். இப்படத்திலும் மிஸ்கின் அதை சரியாக செய்திருக்கிறார். நன்றாக ரசனை அல்லது ஒரு புதுமையோடு மாறுபட்டதொரு பார்வையில் பார்க்கத் தந்திருக்கிறார். மற்றபடி முன்பு படித்த அல்லது பார்த்த ஏதோ ஒரு படம் அல்லது படித்த கதைகளில் ஒன்று அவ்வளவு தான்..
LikeLike
உண்மைத் தமிழன் உங்களின் பதிலாக குருவா
அல்லது ஒரே வகுப்பில் படித்தவர்களா
ஒரு வில்லனை கம்பீரமான திறமையான எந்த மகா அழிச்சாட்டியமுமின்றி காட்டுகிறது இந்த முகமூடி. யாரையும் கற்பழிக்காமல், கண்முன்னே பொடீர் பொடீரென்று சுடாமல், கழுத்தில் கத்தி விட்டு மூச்சை படக்கென நிறுத்தாமல்; அவ்வளவு ஏன் ஒரு கொலையைக் கூட கண்ணில் காட்டாமலேயே பல கொலைகளைப் பற்றிய பீதியை அரங்கமெங்கும் பரவச் செய்யும் திறன் பாராட்டத் தக்கதுதானே
அக்னி நட்சத்திரம் உமாபதி, சத்யா வின் கிட்டி ஆகியோர் காலத்திலேயே வந்து விட்டதே சாமி இதெல்லாம்
LikeLike
// உண்மைத் தமிழன் உங்களின் பதிலாக குருவா அல்லது ஒரே வகுப்பில் படித்தவர்களா //
வணக்கம், முதலில் அத்தனைப் புரிபடவில்லை உங்களின் கேள்வி. எனினும் உண்மைத் தமிழன் என்று கூகுளில் அடித்துப் பார்த்தேன் ஒரு வலைத்தளம் திறந்தது. அவர் அட்டைகத்திக்கு விமர்சனம் பதிந்துள்ளதைக் கண்டுவிட்டு கூடுதல் படிக்க நேரமின்றி மூடிவிட்டேன். ஒருவேளை அவரைத் தான் கேட்கிறீர்கள் எனில், அவரைப் பற்றியெல்லாம் அத்தனை எனக்கு பரிட்சயம் இல்லை. எழுதுவதை மட்டும் கடனாக எண்ணி எழுதக் கிடைக்கும் நேரத்தில் இயன்றதைச் செய்கிறேன். தவிர அஞ்சலி அக்னி நட்சத்திரம் என்றெல்லாம் மணிரத்னம் சாயல் பற்றி மணிரதனம் பற்றியும் இவ்விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதலாம் கடந்து ள்ளது அதொத்து இவர் செய்த மாறுபட்ட பல இடங்கள் ரசிக்கும்படி இருந்தது. எனினும், எதையும் எதோடும் ஒப்பிடவோ அல்லது வாதத்திற்கு எடுத்துக் கொள்ளவோ இல்லை நான். இது நன்றாக இருந்தது அவ்வளவே. அன்று அதை சிலாகித்தது போல் இன்று இதைக் கண்டது சிலாகிப்பது ஒரு கலைஞனை அவரின் உழைப்பை அவரோடு சேர்ந்தோரின் வெற்றிகளை மெச்ச அங்கீகரிக்க மட்டுமேயன்றி வேறில்லை. மற்றபடி அவர் யாரோ.. நானாரோ..
தங்களின் கருத்திற்கு நன்றி..
LikeLike
உண்மைத் தமிழன் உங்கள் பதிவு உலக குருவா , lol
LikeLike
நான் படிக்கும் மனிதர்களில் இவரென்று எவரையும் தனியாக குருவென்று சொல்லிக்கொள்ளும் அவசியம் வரவில்லை. அந்த நோக்கில் எதையும் படிப்பதோ அதிகம் பதிவர்களை ஆராய்வதோ இல்லை. கண்ணில் எங்கேனும் எழுத்து பட்டால் யாரேனும் அழைத்தால் கருத்தோ வாழ்த்தோ கூறுவதோடு சரி.. வேறு வேலைகள் உண்டு. வணக்கம்..
LikeLike
பதிலுக்கு நன்றி நண்பரே/எழுத்தாளரே/பதிவரே.
உண்மைத் தமிழன் நீண்ட கால வலைப் பதிவர், சினிமா பார்வை பதிவுகள் அதிகம் எழுதியவர்/பகிர்ந்தவர்
இரண்டு அரை மணி நேரப் படத்திற்கு அவர் எழுதும் பதிவைப் படிக்கவே இருபத்தைந்து நிமிடம் ஆகும்.
அந்த அடிப்படையில் , நீளமான உங்கள் சினிமா பதிவைக் குறித்து நகைச்சுவைக்காக கேட்டேன்.
LikeLike
வணக்கம், தவறில்லை, நிறுவன வேலையாக அழைத்திருந்தார்கள். அவ்வேளை என்பதால் அவசரமவசரமாகப் பதிலுரைத்தேன். இது ஒரு பார்வை. மூன்று மணிநேரம் அமர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் எனில் அதனால் நமக்கு பயனென்ன? நாம் செய்யும் எதுவுமே நம் பொழுதினை ஆக்குபவையாக இருத்தல் வேண்டும் அன்றி போக்குபவையாக அல்ல என்று எண்ணுகிறேன். எனவே அது எவ்விதம் நமக்குப் பயன்படுகிறது, எந்த தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது? கலைக்கும் நமக்குமான ஈடுபாடுகள் எப்படி இருத்தல் நலமெனும் யோசனைகளுக்குட்பட்டு அமைகிரகுடு என் ஒவ்வொரு திரைப்படத்திற்கான விமர்சனமும். அதும் இங்கே நாங்கள் வாழும் குவைத் நாட்டில் நாம் விரும்பும் படங்களை அல்ல இங்கே இடப்படும் படங்களை மட்டுமே பார்க்க இயலும். அங்ஙனம் இங்கு வெளியாகி காண இயன்ற படத்திற்கு மட்டுமே அதன் பாதிப்பை என் உறவுகளிடத்தில் என்னைப் படிப்பவரிடத்தில் பகிர்ந்துக் கொள்ளும் நோக்கில் பகிர்ந்துக் கொள்கிறேன். தங்களின் கணிவான பதிலுக்கும் கருத்துக்களுக்கும் நட்பு நாடிய நகைச்சுவை உணர்விற்கும் நன்றிகள் பல..
எழுத்தாலும் தமிழாலும் உணர்வாலும் இணைந்திருப்போம்.. வணக்கம்!
வித்யாசாகர்
LikeLike