நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது
வார்த்தைகள்..
உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும்
கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை;
கவிதையின் லயம் பிடித்து
வரிகளாய்க் கோர்க்கிறேன்
உள்ளே நீயிருக்கிறாய்,
என் பசியறிந்தவளாய்
என் உறக்கத்தின் அளவறிந்தவளாய்
என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்..
காற்று
வீட்டுச் சுவர்
உன் துணிகள்
எங்கும் தொடுகையில் உன் முகம் உன் குரல் உன் அன்பு
உன் வாசனைமுழுதும் நான் கலந்து
என் எல்லாமுமாய் நீ மட்டுமேயிருக்கிறாய்..
உன் பார்வை விடுபடுகையில்
போகமாட்டேனென்றுக் கதறியதை நானறிவேன்
போகையில் மறுக்குமுன் பாதங்களின் தவிப்பை நானறிவேன்
போய் கடைமுனையில் நின்று திரும்பிப் பார்க்கும்போதே
ஓடிவந்துவிட துடித்த மனசையும் நானறிந்து
கூடவே நான் கதறியதையும் இந்த வரிகளுக்குச்
சொல்லிவைக்கிறேன்..
இந்த வரிகள் நம் பிள்ளைகளுக்கு நம்
அன்பைச் சொல்லும்
அன்பு அவர்களையும் வளர்க்கும்
அவர்களால் வலுக்கட்டுமிந்த சமுகம்’ போய் வா
ஊர்போய் நீ திரும்பி வரும்வரை,
நீ விட்டுச்சென்ற உன் மனசாக
துடித்துக்கொண்டேயிருப்பேன் நானும்’ உனக்காய்!!
வித்யாசாகர்
மிகவும் அருமையான வரிகள்,
நான் இந்த கவிதை படிக்கையில் உங்களின் மனதின் அழுகுரல் கேட்கிறது,
வாழ்த்துக்கள்..!
LikeLike
உறவு பிரிகையில் வருத்தம் மிக அது கண்ணீராய் கசிவது உணர்வு பெருத்த உயிர்களின் இயல்பு. அதில் நானும் விதிவிலக்கில்லையே யமுனா, எனக்காகவே தூங்கி எனக்காகவே எழுமொரு ஜீவனில்லையா பின் பிரிகையில் மனது துடிக்காமலாயிருக்கும்? இருந்தும் நன்மையைப் பயக்கட்டும் இந்த உறவுகளின் பயணம்..
உன் மனம் புரிந்த கருத்திற்கு மிக்க நன்றிகளும் அன்பும் வணக்கமும்மா..
LikeLike