நட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் மனதிற்குள் பதிவாகும். உறவுகள் கூடி சிரிக்கிறது தான் குடும்பம், அக்கம்பக்கத்தார் சூழ அரவணைத்து வாழ்வதுதான் வாழ்க்கைன்னு இப்படத்தின் பாத்திரத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பார்க்கையில் ஒரு சாத்வீக குணம் யதார்த்தமாக உள்ளூறும். ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லி குறையினைப் பெரிதாக எடுத்துக்காட்டி அடித்துக்கொண்டு வெட்டிமாளுவதை விட சம்மந்தப் பட்டோர் கூடி பேசி சரிதவறுகளை அலசிப் பார்த்துக்கொண்டால், நியாயத்தராசினை நான்குக் கைகொண்டு தூக்கிப் பிடித்துவிட்டால் வரயிருந்த இழப்புகள் விட்டு நீங்கி வெற்றியைத் தரும் வாய்ப்பாக மாறிப் போகுமென உலகைப் புரட்டிப் போடுமொரு அறிவுரையை காதல் தீயிட்டுக் கொளுத்தி இளைஞர்களின் கண்களில் வீசுகிறார். காதலின் ரசத்தைக் காட்டி அதன் இருட்டைப் போக்குமொரு வெளிச்சத்தில் வசனங்களைத் தீட்டி பசுமை குறையாத வெளியெங்கும் வீசும் காற்றுப் போன்று மனதெங்கும் படரும் நல்லுணர்வுகளை இள ரத்த வெப்பத்தில் சுடும் காதலினுள் தோய்த்து திரைச்சுருளெங்கும் வண்ணவண்ணமாக அடைத்திருக்கிறார் இந்த “சுந்தர பாண்டியனின்” இயக்குனர் திரு. எஸ். ஆர். பிரபாகரன். அந்த வண்ண வண்ணங்களில் மிளிர்கிறது இயக்குனர் சசியின் லட்சிமிமேனனின் சூரியின் இன்னும் நாயக நாயகியின் குடும்பமாக நண்பர்களாக வந்துப் போகும் அனைவரின் நடிப்பும்.
சிரிக்கவைக்கும் வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, உணர்ச்சிவசப்பட வைக்கும் திருப்பங்கள், ஆமென்று ஒவ்வொரு பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் நடிப்பு, மனம் துள்ளும் பாடல்களின் வரிகள் காட்சிகள் ஒளிப்பதிவென மீண்டும் நல்லதொரு திரைப்படத்தில் கரைந்துப் போகப் போகின்றன நம் இளநெஞ்சங்களெல்லாம்.
அத்தகைய மிக அழகான காட்சிப் பதிவு, திகட்டாத உணர்வினை காட்சிகளோடு ஒன்றிப்போன மனசாகப் பார்த்து நரம்பின் அசைவெங்கும் அதிரவைக்கும் ரசனைமிகுந்த பின்னணி இசை, லாவகமாக ஒரு இளைஞன் செய்யக்கூடிய கதாநாயக வித்தைகள், இத்தனைக் கோபம் வந்தால் இந்த இடத்தில் நானும் இப்படியேனும் சண்டைப் போடுவேனென ஏற்றுக் கொள்ளத்தக்க போலித் தனம் கூடுதலில்லா சண்டைக் காட்சிகள், நம்மூர் கிராமத்துக் குறும்புதனில் சொட்டும் இனிப்பும் குசும்புமாக கலந்த நட்பு வட்டத்தோடு நகைச்சுவை படமெங்கும் படர்ந்த, ‘அகன்ற மார்பினன் சுந்தப் பாண்டியனின் தீரம்’ அழகிய சசியின் புன்னகைப் பார்வையில் வெளிப்படும் மிக நல்ல காதல் திரைப்படம்.
மனைவிக்கு வலிவந்ததும் இங்கும் அங்குமென ஓடும் கால்களோடு மனதும் ஓட, பெற்றெடுத்த பிள்ளையை வாங்கி உயிர்நுகரும் வாஞ்சையோடு முத்தமிட்டு’ விழுந்தால் பயந்து’ எழுந்தால் தோள்தந்து’ சரிந்தால் இதயத்தில் தாங்கும்’ எந்த அப்பனுக்கு தன் மகளையும் மகனையும் பிடிக்காமல் போகும்?
தவறெனில் கோபப்படும் தாய் தந்தைகளின் ஒவ்வொரு அனல் வார்த்தைக்குப் பின்னும் பிள்ளைகளின் நலன் நோக்கிக் கதறுமொரு சப்தம்தான் உண்டென எத்தனைப் பிள்ளைகளுக்குப் புரிகிறது? அது புரியும் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் இப்படித் தான் பெரிய மனதினர்களாக இருப்பார்களென ஒரு மாதிரியை இந்தப் படத்தின் மூலம், நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இரு பாத்திரங்களின் தகப்பனார்களின்மூலம் காட்டுகிறார் இயக்குனர்.
எப்பொழுதும் திட்டிக் கொண்டிருக்கும் அப்பா அவளின் ஒவ்வொரு சந்தோச நகர்வுகளையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் ‘சரிம்மா நீ விரும்பியவனையே கட்டிக்கோ போ’ன்னு சொல்லும் போது அந்த மகளின் சந்தோசத்தின் அளவு ‘கடலின் இரு கரைகளை எட்டித் தொட கைவிரித்து இன்னும் ஏழு கடலைத் தேடுமளவிற்கும், கூடுதலாகப் பெரிது’ என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள லட்சுமி மேனனின் நடிப்பும் அழுகையும் அவளுடைய அப்பாவின் அரவணைத்துக் கொள்ளும் நெருக்கமும் மனதை ஒரு நல்லுணர்வில் ஆழ்த்துகிறது.
வேறென்ன இருக்கு மனசுல, வெறும் கர்வமும் சுயநலமும் பேராசையும் மேலதானே அப்பிக் கிடக்குது, அதை சட்டுன்னு உதறி விட்டுட்டா நீ நானு இந்த ஊரு உலகம் எல்லோருமே நல்லவங்க தானே?ன்னு ஒரு கேள்வியை உள்ளுக்குள்ளே மிக நாசுக்காக எழுப்புகிறது இப்படத்தின் நிறைய காட்சிகள்.
அப்படி ஒரு காட்சியில், “மகனுக்கு பிடித்துப் போச்சு, அவனுக்கு பிடித்த நல்ல வாழ்க்கை அமையனும், அப்பாவே வந்து வீடு ஏறி ரொம்ப நேர்த்தியா கம்பீரமா மிடுக்கு குறையாம பண்பு மிளிரப் பேசி இப்படிப் பட்ட என் பைய்யனுக்கு உன் பொண்ணக் கொடுங்களேன்னு கேட்கிறார். அதைக்கண்டு அந்த நாயகி காதலில் அடக்கிவைத்திருந்த தனது ஆழ்கடல் மனதை எடுத்து வெளியே உணர்வாக வலிமையோடு வெளிப்படுத்துகிறாள். அவளின் தந்தைக்கு பேச நாவெழவில்லை, தன் வீரத்தை கோபத்தை எல்லாம் பாசத்திற்குள் அடக்கிக் கொண்டு கண்கள் சிவக்க நின்று பார்க்கிறார். அடுத்தடுத்தாற்போல் நாயகனின் தந்தை மிக திறமாக அங்கே தனது ஆளுமையைத் திரையிடுகிறார். உண்மையிலேயே அந்த காட்சி மிக நல்ல காட்சி. அதுபோல மிக நல்ல இயக்கத் திறமைன்னு மெச்சத் தக்க மத்தாப்புகள் இக்காட்சிகளைப் போன்று இப்படத்தின் நிறைய இடங்களில் பல வண்ணங்களாக அழகாக கொளுத்திப் போடப்பட்டுள்ளது.
அதிலும், அந்த கடைசி காட்சி, உண்மையிலேயே இயக்குனரைப் பாராட்டவைக்குமொரு சவாலான உத்திதான். ரொம்ப நல்லா ஆரம்பித்து ரொம்ப நல்லாவே முடித்திருக்கிற இந்தப் படத்தைப் பத்தி அப்படி இன்னும் ஆகா ஓகோன்னு எல்லாம் எழுத வேண்டியதில்லை. அது ஆகா ஓகோ தான். ஆனால் படம் என்ன சொல்ல வருதுன்னு சிந்திக்கத் தவறக்கூடாது.
பொதுவாகச் சொன்னால் காதல் தவறில்லை. காதலெனும் இயற்கையான அந்த உணர்வுகுறித்து நாம் நம் தேவைக்கேற்ப மட்டுமான நமக்கொத்ததுபோன்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதில் அல்லது புரிதலை நமக்கு வேண்டியப்படி ஒரு சமுதாயமாகச் சேர்ந்து நாம் அமைத்துக் கொண்டதன்பேரில் மட்டுமே இளையப் பருவத்தினருக்கான பல சிக்கல்கள் நேரிடுகிறது.
முதலில், அறிவோட நிதானமா தன் வாழ்க்கைப் பற்றி எதிர்காலம் பற்றி தன் குடும்பம் பற்றி உற்றார் உறவினர் ஊரென நம் அக்கம்பக்கத்து மனிதர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்து தன் ஒவ்வொரு அடிகளையும் எடுத்துவைக்கும் நல்ல பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பக்குவப்பட்டிருக்கனும்.
அப்பா புரிந்து அம்மா புரிந்து யாரின் மனசும் வலிக்காம நடந்துக்குற குணமும், வெல்லும் திறமும் பெருக பிள்ளைகள் வளரனும்.
காதலின் புள்ளி எதையுமே யோசிக்காம உள்ளே வந்து விழுந்துவிட்டாலும் அதன் தொடர்புள்ள அனைத்தைப் பற்றியுமே சிந்தித்து அதனைச் சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யத்தை காதலர்கள் வளர்த்துக்கனும்.
பெண்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, பெண்கள் பற்றி நாராசமாகப் பேசுவது, பெண்களென்றால் தக்க மதிப்புகளை விட்டு துச்சமாகக் கருதுவது, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் கிண்டலடிப்பது, வெறுப்பேற்றி கோபப் படுத்தி ரசிப்பது போன்ற குணங்களையும், ஆண்களை சும்மா அலைய விடுவது, மனது புரிந்ததும் ஏற்றோ அல்லது பிடிக்கலை இப்படிச் செய்யாதே என்று முகத்திற்கு நேரே சொல்லிவிடவோ எச்சரிக்கவோ தயங்குவதும், பிடித்திருந்தால் காதலித்திருந்தால் வீட்டில் பேசி’ புரியவைத்து’ ஒப்புதல் வாங்கி’ தனது வாழ்க்கையை தான் விரும்பியதுபோல் அமைத்துக்கொள்ள முனையாததும், குறைந்தபட்சம் அது சரியா தவறா என்று கூட வீட்டில் கலந்துக் கொள்ளாததும், வெறுமனே ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் கவரும் வண்ணம் பீடிகைப் போடுவது அல்லது அலங்காரத்தை உடல் வசீகரத்தை இன்னொரு மனம் பித்தாகித் தவிக்க அமைத்துக் கொள்வதையுமெல்லாம் இனி வரும் காலத்து இளநெஞ்சங்கள் தவிர்த்தல் வேண்டும். அல்லது அத்தகைய உடல்கூறு புரிந்த விசயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டு சட்டென அதிலெல்லாம் விழாத ஒரு திடநிலையை எல்லோரும் கொள்ளல் நலம்.
அல்லாது தோற்றத்தை மாற்றிக் கொள்வதும், தாடியில் சோகத்தை வெளிப்படுத்துவதும், மது அருந்துவதும் புகைப்பிடிப்பதும் மேலும் நம்மை பலமிழக்கச் செய்து மனதின் வடிகால் வழியே வாழ்வையே இழக்கச் செய்யுமேயொழியே நல்ல மனநிலையை’ வாழ்விற்கான தீர்வைத் தராது.
மாறாக, தனது அன்றாட விருப்பங்களை சொல்லாவிட்டாலும், வெறுப்புக்களை சிக்கல்களை வீட்டில் அப்பா அம்மா அக்கா அண்ணன் போன்ற மூத்தொரிடத்தில் சொல்லி தன் பார்வையை நடத்தையை சூழலை சரிபடுத்திக் கொள்ள முனைதல்வேண்டும். பெண்களை தனது தோழிகளாகவும் நம் தங்கையை காதலியை மனைவியை நாம் வைத்துக் கொள்ள விரும்புவது போன்றும் பண்போடு நடத்தல் வேண்டும். ஒரு ஆண் தனைப் பார்ப்பதை பார்வையாக நேரேடுத்து பேசி தெளிவாக பதில் சொல்லி கடந்துப் போதல் வேண்டும்.
அதேநேரம் வீடும் தனது பிள்ளைகளின் மீது அக்கறைக் கொள்ளுமளவு அவர்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்ளல் அவசியம். ஒரு பெண்ணை ஆண் பார்ப்பதும் ஆணைப் பெண் பார்ப்பதும் ஒரு இனக்கவர்ச்சி. அதில் தவறுகள் நேர்ந்திடா வண்ணம் வாழ்வின் தன்மைகளை’ ரசங்களை’ மதிப்பீட்டை’ பாசத்தை’ நட்பை’ புரிந்துணர்வை’ குறைகளை’ வலிகளை’ ஆபத்துக்களை’ தெளிந்து வெளிவரும் வழிகளை நாம் தான் நம் குழந்தைகளுக்கு நட்புநிறை மனசோடு அவர்களின் மொழியோடு ஒன்றி நின்று சொல்லித் தரனும்.
காதல்னா முதல்ல என்ன? “தனித் தனியா முளைத்து இரண்டும் ஒன்றெனக் கலந்துப்போகிற, ஒரே சிந்தனையாய் ஒன்றிப்போகிற, உயிர்களிணையும் அன்பை எதற்கும் விட்டுக் கொடுத்திடாத, பிரிந்தால் உயிர் போய்விடுமொரு வலியையடையும், ஒரு மனசுக்குள்ளிருக்கும் இரு சிறகுகளில்லையா?
பின்ன அந்த ரெண்டு சிறகும் ஒருங்கே முளைக்கனுமில்லையா? அது முளைத்திருப்பது ரெண்டுப் பேருக்கும் தெரியனுமில்லையா? அதைத் தெரிந்துக் கொள்ள தெளிவாப் பேசிக்கிற அளவுக்கு நாம் நம் ஆண் பெண் நட்பினை வளர்க்கணும். ஆண் பெண் உறவினை ஏற்றத் தாழ்வுகளின்றி புரிதலோடு பழகுமொருப் புள்ளிக்கு நம்மை நாம் நகர்த்தனும். ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு ஆண் பெண்ணிடமோ அல்லது பெண் ஆணிடமோ கனமா பேசுற, சுயமா எடுத்து தன் மன உணர்வுகளை சொல்லி புரியவைக்கிற, அதேநேரம் ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா ஒருத்தர் உடனே விட்டு விலகி அவரின் மனதை நோகடித்திடாத நற்பண்பு மிக்கதொரு மனநிலைக்கு வரனும்.
அப்படி ஒரு இடத்திற்கு வந்துட்டோம்னா, நம்ம காதல் ஜெயிக்கும். நம்ம இளைஞர்கள் வெற்றியின் வாலிப்பில் காதல் புரிவர். அப்படிப்பட்ட காதல் கண்ணியமாக ஏற்கப்படும். ஏற்கப்படாத இடத்தில் இந்த “சுந்தர பாண்டியனைப் போல” எதற்கும் துணிந்து நாமும் நிற்போம். நம் துணிவில், காதலில், பண்பில், நடத்தையில் பிறப்பின் முதிர்ச்சியைக் கற்குமிவ்வுலகு; கவலைப் படாதீர்.
அவ்வழியே, அத்தகைய பண்புகளின் நாடியைப் பிடித்து நமக்குத் திரைப்படங்களாக்கித் தரும் இதுபோன்ற திரையிலக்கியங்களின் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் இதர திரைத் துறைச் சார்ந்த அத்தனைக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து திரைத்துறையின் தேவைக்குரிய அளவுமட்டும் நம் முழு வரவேற்பினை திரைப்படங்களுக்கு நல்குவோம்..
அதோடு, ‘குத்தினவன் நண்பன்னு தெரிந்தா அதை வெளியிலக் கூடச் சொல்லாததுதான் நட்பு’ என நட்பின் பெருமித குணத்தோடு முடியுமிப்படம் நிச்சயம் எல்லோருக்கும் வெகு சாதாரமாகப் பிடித்துவிடக் கூடிய சிறந்ததொரு திரைப்படம்தானென்றும் மெச்சுவோம்..
————-*————-*————–
இப் படத்தின் இதர குறைகளும் நிறைகளும்:
குறைகள்:
புகைப் பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளை “வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல” எனும் வசனங்களோடு மீண்டும் மீண்டும் அதன் ஆசைகளைத் தூண்டுவதாகவே காட்சியமைத்துள்ளது. படத்தை நாம்தானே எடுக்கிறோம்? யதார்த்தம் என்பதற்காக தீயப் பழக்கங்களைத் தான் சேர்த்துக்கனும்னு இல்லையே. நல்ல செயல்களை பழக்கவழக்கங்களை அத்தகைய செயல்களின் வீரியன்களைக் காட்டி செய்யக்கூடாதென்பது போன்ற காட்சிகளை திணித்தாவது சமுதாயத்திற்குத் தீமைகளை விளைவிக்கக் கூடிய அத்தகைய செயல்களை செய்யத் தூண்டும் காட்சிகளைத் தவிர்க்கலாமே.
முதல் காதல் மறக்காது, காதலில் இது வெற்றி இது தோல்வி, தோற்றால் குடிக்கணும் புகைப் பிடிக்கணும் தன் நிலை மறந்துத் தவிக்கணும் போன்ற உத்திகள் அடங்கிய அதே பழைய காட்சிகளின் உட்புகுத்தல்கள் என்னதான் இன்றும் இளைஞர்களால் ஏற்றுக் கொண்டு விசில் பறக்கவைக்கிறது என்றாலும் அதெல்லாம் இனி தேவையா? என்று யோசித்திருக்கலாம்.
அடுத்து, அடமாக அதிக பாட்டிகளைக் காட்டி அவர்களில் சிலரை நகைச்சுவையின் பொருட்டாக ஏளனப் படுத்தும் காட்சிகளை இத்தகைய சிறந்த இயக்கத் திறனுள்ள படத்தில் தவிர்த்திருக்கலாம். மாறாக பெரியோரை மதிக்கத் தக்க பண்புகளை வளர்த்தல் நலம். இதலாமென்ன பெரிய விசயமா? ஊர்ல இல்லாததா? எனலாம், ஆனால் இப்படி சின்னஞ்சிறு துளி துளிகளாகத் தான் விழப்படுகிறது பண்பைக் கெடுக்கும் நஞ்சுகள் நம் கலச்சாரத்திற்கிடையே.
அடுத்து அப்புக்குட்டி இறக்கும் தருனமாக வரும் காட்சியில் அவனுடைய நண்பர்கள் கடைசிவரை போலிசு போலிசு என்றே கதறுவது. ஒரு கட்டத்தில் காவலாளிகள் வந்துவிட்டதும் அப்புக்குட்டியின் உடலை வண்டிக்குள் ஏற்றுகையில் அவன் பெயரைச் சொல்லி வருந்துவதாக அங்கே மாறியிருப்பின், ஒரு லேசான செயற்கைத் தனம் அங்கே ஒட்டிக்கொண்டிருந்திருக்காது. இருப்பினும் எல்லோரும் கவனிக்கத் தக்கதுமல்ல. இதுபோல் எல்லோருக்கும் புரிபடாத வகைகளில் இடைபுகுந்திருக்கும் மிக சில குறைகளையே வருங்காலப் படங்களை இன்னும் திறமாக செய்வற்தகென்று சொல்லிவைக்கலாம்.
நிறைகள்:
அழகான காட்சிகளுக்கு அகப்படக்கூடிய, பார்க்கப் பார்க்க ஈர்க்கும் ரம்மியமான இடங்களின் தேர்வும் மற்றும் அதைப் பதிவுசெய்த ஒளிப்பதிவுத் திறனும், அதுபோல், பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் கனகச்சிதமாக நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பென்பதையும் மீறி வாழவிட்டிருப்பதும் சிறப்புதான். குறிப்பாக அந்த சுந்தரப் பாண்டியனின் அப்பாவும் அர்ச்சனாவின் அப்பாவும் மனதில் நிற்கிறார்கள். (பாட்டிகள் இதில் அடக்கமில்லை)
முழுக்க முழுக்க காதல் படம்தானே என்று இரு உதடுகள் உரசி வெப்பமேற முத்தமிட்டுக்கொள்வது போன்ற காட்சியையும் மற்றும் அரைகுறை ஆடைகளில் மார்புக்கூடு தழுவி கழுத்துவரை நெளிந்து பார்ப்போரை காமப்பசிக்கு ஆளாக்கும் பாடல்கள் தான் காதல் பாடல்களென சித்ரவதை செய்யாது ரசிக்கும் காட்சிகளை காதலின் மனது பதறும் அதேவேளை அன்பு வெளிப்படும் அருமையான காட்சிகளோடு பாடலையும் காதல் கதையையும் இயக்கியது.
லட்சுமி மேனனின் நடிப்பை நேர்த்தியாக பயன்படுத்தியது. தன் காதலை வீடு ஏற்றுக் கொள்ளுமென்று புரிந்ததும் ஒரு மகள் படும் சந்தோசத்தை ஒரு மயிலாடும் ஆட்டம் போல் அழகாகக் காட்டியது. குறிப்பாக மருமகளே தண்ணிக் கொண்டுவாவென்று சுந்தரபாண்டியனின் தந்தை சொன்னதும் நாயகி தன் முகத்தில் காட்டிய நடிப்பு’ அவரையும் இயக்குனரையும் மெச்ச வைக்கும்.
அதுபோல் நாயகி நாயகன் இருவரின் உயரத்தை சமநிலையாக காண்பிக்க நேராக இருவரையும் காண்பிக்கும் காட்சிகளிலெல்லாம் குனிந்து இழுப்பது ஏதேனும் விளையாடுவது போன்ற காட்சிகளை அமைத்துக்கொண்ட இயக்குனரின் ஒளிப்பதிவாளரின் புத்திசாலித் தனம்.
கடைசியில் தன்னைக் கொல்லவந்த மூவருமே தன் உயிருக்குயிரான நண்பர்கள் என்று தெரிய வருகையில், குறிப்பாக அந்த மூன்றாம் நண்பன் பின்னாலிருந்து கத்தியில் குத்துகையில் மனசு அவனின் துரோகத்தை எண்ணி அழும் ஆழியை அவனின் கன்னத்தில் வழியுமொரு சொட்டுக் கண்ணீராகக் காண்பித்தது.
மிக முக்கியமாக, தனியாக நகைச்சுவைக்காக இடமமைத்து நம்மை மிரட்டாமல் படத்தினூடையில் யதார்த்தமாக வரும் வசனங்கள் மூலமாக எல்லோரையுமே சிரிக்க வைக்கும் எளிய வார்த்தைகளின் ஜோடனையும் அதற்கேற்றாற்போல் நடித்துள்ள சூரியின் நடிப்பும் ரசனைக்குரியது.
ஒரு சாதாரண பாத்திரமாகவும், அதேநேரம் நம் நண்பர்களுக்கிடையே ஒரு நாயகத்துவமுள்ள ஒரு தோழனைப் போலவும், கண்ணியமான காதலனாக, நல்ல மனிதனாக நல்ல நடிகனாகவும் சசியைக் காட்டியதும் அவர் நடித்துள்ளதும் அழகு! பாராட்டுக்குரியதும்!!
அனைவருக்கும் நன்றிகளுடன்..
வித்யாசாகர்