குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

லகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் குமார்.

கவலை மறக்கும் வித்தை, காற்றில் கையலசிவிட்டு கடவுளைத் தொட்டதாய் வாய்பூத்து மலரும் விளையாட்டு, கண்முன் காணும் கடவுளுக்கும் கையிலிருக்கும் பொம்மைக்கும் ஒரே மதிப்பைத் தரும் சமன்பாடு, விரும்பியதை விசமாயினும் உடனே தின்றுவிடும் சுயசுதந்திர மனப்போக்கு, கண்ணில் நீர்பூத்தாற்போல் பூரிப்பு பொங்கிவரும் மகிழ்ச்சிக்கான தருணங்களின் ஆளுமையென அத்தனையையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளதொரு தெய்வீக கொடையான குழந்தைகளின் ஆடல்பாடல்களையும் அதிசயக் குறும்புகளையும் உள்வாங்கிக் கொண்டு, அக்குழந்தைகள் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாகவே பாவித்து அசையாப் பொருள்களினிடத்தும் அளவலாவிக்கொள்ளும் அத்தனை ரசனைமிகு தருணங்களையும் எழுத்துக்களாக்கி கவிதைகளுக்குள் கோர்க்க முனைந்திருக்கிறார் கவிஞர் நா. சுரேஷ்குமார்.

பொதுவாகவே குழந்தைகள் மரத்தினிடம் பேசுவது, பொம்மைகளிடம் பேசுவது, காக்கா குருவிகளைக் கூட விரட்டி விளையாடுவது, கைமீதுவந்து அமருமொரு ஈயைக் கூட முதன்முறைப் பார்க்கையில் உடனே விரட்டிவிடாமல் அதை என்னவென்று பார்த்துவிட்டு பின் பிடிக்க எத்தனிப்பதென அவர்கள் செய்யும் அத்தனை செயல்பாடுகளுக்குள்ளும் தனது காமிரா கண்களைப் புகுத்தியிருக்கிறார்.

குழந்தைகளின் செய்கைகளில்
ளிந்திருக்கின்றன
எழுதப்படாத கவிதைகள்” எனும் வரிகள் என்னைச் சற்று புரட்டியேப் போட்டது. காரணம் அதே மனநிலையில் நான் தேடியபோதெல்லாம் எனக்குக் கவிதையைக் கொடுத்ததாலேயே என்னொரு ‘குழந்தைகளின் உணர்வுசார்ந்த கவிதைத் தொகுப்பிற்கு ‘ஞானமடா நீயெனக்கு’ என்று தலைப்பிட்டுள்ளேன். அதுஒத்த கவிஞரின் இச்சிந்தனை ‘அவர்களின் வளர்ந்துவிட்ட நிலையிலுள்ள அடுத்தகட்ட நகர்வையும் எழுத்தாக்கிக்கொள்ள அவசியப்படுத்தும் தூண்டுதலை எனக்கு ஏற்படுத்துகிறது.

ஒரு குழந்தைக்கு விளையாட சொப்புகளில்லா சமயம் நாமே கூட அவர்களின் விளையாட்டுப் பொருள்களாய் ஆகிவிடுகிறோம். குழந்தை தன் மீதேறி மீசைப் பிடித்து இழுப்பது, கண்களில் விரல் நுனியிட்டு நோண்டுவது, உதட்டைப் பிடித்துக் கிள்ளுவதென நம் வலிகளின் மறுபக்கம் தாவி தனது பொம்மையிடம் விளையாடும் மனப்பாங்கை இத்தொகுப்பின் கவிதைகள் ஆங்காங்கே வெளிப்படுத்துகின்றன.

உதாரணத்திற்கு –

பொம்மையாய் மாறினேன்
எதிர் இருக்கையில்
குழந்தை”

“தன்அண்ணனின் ஆடைகளை அணிந்து
சோளக்காட்டு பொம்மையாய் நின்றது
குழந்தை”

“தூங்கிப்போனது குழந்தை
அழத் தயராகிவிட்டன
பொம்மைகள்”

“தூங்கவில்லை பொம்மை
கதைசொல்லத் துவங்கியது
குழந்தை”

இப்படி பொம்மைகளுக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை கவிதைகளால் நிரப்பிக் கொண்டிருக்கும் இப்படைப்பு மெல்ல கரையொதுங்கி என் உறவுகளான ஈழதேசத்து குழந்தைகளைத் தேடுகையில், கண் பெயர்த்து கண்ணில் வைப்பதுபோன்று, இடம் பெயர்ந்து இடமாக வாழும் ‘ஒரு தாயின் மண் விடுதலைக்கான வேதனைக்குள் அடைபடுகிறது பாருங்கள், அவ்வுணர்வே கவிதையின் உச்சம்.

இதோ அந்த மூன்று வரியில் எப்படி உள்நின்று ஒரு படைப்பாளி பேசுகிறான் என்பதையிங்கே காணலாம் –

இடுப்பில் குழந்தை
நகரும் இருப்பிடம்
வேதனையில் ஈழத்தாய்

இத்தகு குறுகிய வார்த்தைகளுக்குள் ஒரு இனத்தின் இத்தனைவருட சோகமும் ‘தீரா ரணமென புதைந்துகொண்டது படைப்பாளிக்கே தெரியாத படைப்பின் ஆழஉணர்வுபோல் எண்ணுகிறேன்.

அடுத்து அங்கிருந்து எழுத்தாணியின் முனையாக மனசு நகர்ந்து வேறிடம் பார்க்கிறது. பார்க்குமிடத்தில் தாய் முகம் தெரிகிறது, பிள்ளை துப்பாக்கியில் எல்லோரையும் சுட்டு விளையாடுகிறாள், அவள் சுடச் சுட துப்பாக்கி முனையிலிருந்து சிந்துகிறது கவிஞனின் பார்வை முழுதும் கவிதைகளாக இப்படி –

சுட்டது குழந்தை
வலிக்கவில்லை தாய்க்கு
பொம்மைத்துப்பாக்கி”

“புயல்மழையில் விளையாட்டு
கரைசேருமா கப்பல்
கவலையுடன் குழந்தை”

‘’குளிரில் நடுங்கின பொம்மைகள்
ஸ்வெட்டர் அணிவித்து விட்டது
குழந்தை” ஆஹா!! எத்தகைய மனப்பாங்கிது?!! புறாவிற்கு சதையறுத்துத் தந்த சிபியின் தாராளமன அடையாளமில்லையாயிது? ஒரு குழந்தையாய் பிறக்கையில் உண்மையிலேயே அது தனது உயிரில்லா பொம்மைக்குக் கூட வலிக்குமோ எனும் கருணைநிறைந்த நுட்ப மனதோடுதான் பிறக்கிறது என்பதன் வெளிப்படில்லையா? பின் நாம் கற்றுதரும் பேச்சும் செயலும் வாழ்தலுமே அக்குழந்தையை மாற்றத் தக்கது எனில்; இச்சமுதாயம் இப்படி சுயநலக்கிடங்கில் வீழ்ந்துக்கிடக்க நாமும் ஏதோவொரு வழியில் நிச்சயமாகக் காரணமாகியிருக்கிறோமெனும் தனைநோக்கியதொரு குற்றவுணர்வு படர்வதை மறுப்பதற்கில்லை.

பொம்மைகள் உலகத்தில்
தலைவனென்று யாருமில்லை
குழந்தைகளும் பொம்மைகளே”

“குழந்தைகளின் பார்வைகளில்
பொம்மைகளாய்த் தெரியவில்லை
பொம்மைகள்”

கப்பல்கள் தயார்
குழந்தைகள் எதிர்பார்க்கின்றன
மழையை”

ச்ச!! இது தான் ஒரு கவிதை ஏற்படுத்த வேண்டிய தாக்கமென்று கருதுகிறேன். கையளவு சர்க்கரை, இரண்டு ஏலக்காய், கொஞ்சம் மாவு, சொச்சத்திற்கு தேவையான உபரிகள்சேர சர்க்கரையின் இனிப்புச்சுவை; பலகாரத்தின் சுவையாகிவிடுவதைப் போல, மூன்று வரிகள்’ அதற்குள் ஐந்தாறு வார்த்தைகள்’ இடையே வானமும் பூமியுமாய் இனிப்பு போல காரம் போல உணர்வு கொப்பளிக்கும் ஒரு மனசு இங்குமங்குமாய் விரியுமிடத்தே கவிதை வெல்கிறது. கவிஞனும் வெல்கிறான்.

தன் கையிலிருந்த காகிதம் கப்பலானதும் மழைக்கு கையேந்தும் மனசு தான், வயிற்றில் பசி என்றதும் கண்களில் கண்ணீர் உதிர்த்த மனசு தான், காடு கனக்கும் பொருள்கள் சூழ்ந்திருந்தும் தூக்கம் இமையை நிறைக்க உடனே தூங்கிப்போன மனசுதான்; வளர்ந்ததும் தனக்கான அத்தனைத் தேவைகளைப் போல பிறருக்கான தேவைகளையும் நாம்கூட தீர்க்கக் கடமைப்பட்டுள்ளோம் எனும் சமதர்மத்தையும் மறந்துப் போகிறது’ என்பதையெல்லாம் உணரவைக்கும் வைர வரிகளுக்குச் சொந்தமானவனே சொல்லில் மனசுபூக்க, மஞ்சளாய் சிவப்பாய் கருவண்ணங்களாய் நிறைய, வெள்ளைத் தாளெல்லாம் கவிதையாய் கவிதையாய் கவிதையாய் நிறைகிறான்.

இங்கும் அப்படி சின்ன சின்ன வார்த்தைகளுக்குள் சிக்கி பெரியதொரு உணர்வோடு தவிக்கும் சிந்தித்தலை நமக்கு இப்புத்தகத்து கவிதைகள் நிறையவே தருகின்றன.

மிட்டாய் வாங்கியது குழந்தை
நாக்கில் எச்சில் ஊறியது
பொம்மைகளுக்கு என்று பார்ப்பது, பொம்மையை உயிரோட்டத்தோடு பார்ப்பதொரு குழந்தையின் மனோநிலை. ஐயோ மழைப் பெய்கிறதே என தாயொருத்தி பிள்ளையை சேலைக்குள் மூடுகிறாள், அப்படியா, நனைதல் தகாதா’ என்று யோசித்த மறுகணமே குழந்தை தனது பொம்மையையும் மார்புக்குள் அடைத்துக் கொள்ளும் தாய்மை பிரதிபலிக்கும் பல சில்லுகளைப்போன்ற சிந்தனைத் தீப்பொறிகளை இப்புத்தகத்தின் வெளியெங்கும் கனமாக அடைத்திருக்கிறார் கவிஞர்.

அதுபோல், கடைசியாய், தீக் கங்கு அடங்காத ஒரு கரித்துண்டின் வெப்பந் தகிக்கும் இவ்வரிகளோடு, வரிகளின் ஆழத்து எண்ணங்களோடு நிறுத்துகிறேன். அந்த எண்ணத் தீமூட்டும் வரிகளைப் பாருங்கள் –

“மதவெறியைத் தூண்டும்
கோயில்கள் வேண்டாம்
குழந்தைகள் போது(ம்)மெனும் வலி, ரணத்தின் ஆழம் என்னவென்று அறியவேண்டுமெனில், குழந்தைப் பேறுக்காகக் காத்திருக்கும் தாய்களைக் கேளுங்கள், அவர்களின் மாதந்தோறும் சிந்தும் கண்ணீரின் துளியெடுத்து சோதனையில் சேருங்கள், குழந்தை குழந்தை என்றே ஏங்கும் தாய்மையின் கனத்தை தாளாமல் தாங்குங்கள் புரியும். பின், ‘மதவெறியைத் தூண்டும் கோயில்கள்’ என்று முடிவேற்றுக் கொண்ட நம் புரிதல் முரண்பட்டுப் போனதன் நோதல் போல்; வாழ்தல் தடம் மாறியதன் வார்த்தைகளினி உயிரற்று வீழ்தலும் நேரும்.

ஆக, இப்படி, ஒரு வெற்று மனசாக கவிதைபடிக்க வந்தஎனை ஊர் கடந்து நாடு கடந்து உலக தெருக்கள் தாண்டி உயிர்களின் வேரினில் ஊடுருவும் பாதைக்கு நகர்த்திய இப்படைப்பின் ஆசிரியர் திரு. முனைவென்றி நா.சுரேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்.

மேலும், நிழல் கண்டு நின்றுவிடும் எண்ணத்திலிருந்து அகன்று, ஊருலகின் தாகம் தீர்க்க பாயும் நதியென, தமிழுள்ளங்களின் இதயக் கரைவரை படைப்புக்களாக நீண்டு நிற்கும் பேறுமிக்க அரிய படைப்பாளனாய்த் திகழ, எழுத்தும் எழுத்துசார் எண்ணங்களுமாய் ‘வாழ்தல் வெற்றியோடு அமைய’ இப்படைப்பின் வழிநின்று வாழ்த்தி பெருமிதத்தோடு நிறைகிறேன்.

அனைவருக்குமென் பணிவான வணக்கங்கள்!!

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அணிந்துரை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s