எங்கள் வீட்டை
அன்று நாங்கள் வெடிசப்தமில்லா
தருணத்தில் தான் கட்டினோம்..
இன்று அந்த வீடும்
வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும்
சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது
காய்ந்த ரத்தமுமே இருக்கிறது..
நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து
அழுகிறோம்
அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று
எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்..
ஒருவேளை அந்த வீட்டின் உடைந்த சுவரும்
சுவற்றின் ரத்தமூறிய மண்ணும் நாளை
வேறொரு இனத்தின் வீடாக மாறலாம்
மாறியபின் எங்களை வென்றதாக
அந்த இனத்தின் மக்களும் குழந்தைகளும்
பேசிக்கொள்ளலாம் –
ஆனால் அந்த வீட்டின் உயிர்ப்பில்
ஒரு கனவுண்டு
நாங்கள் கண்ட கனவின் வலியூறியதன் வடு
அந்த வீட்டின் மண்ணோடு மண்ணாக கலந்துண்டு
அப்படிக் கலந்த
எங்களின் உயிர்பிசைந்த வீடுகளங்கே
அம்மண்ணில் நிறைய இருக்கின்றன –
அவ்வீடுகளால்
அம்மண்ணிலிருந்து மீண்டும் முளைவிடும் எமது சுதந்திரம்
எமது சுதந்திரத்தைக் கொண்டாட
அன்று அந்த வீடு மீண்டும் எங்களுக்குச் சொந்தமாகும்..
அந்த வீட்டின் சுவர்களுக்கு மீண்டும்
தமிழ்பேசுமெங்கள் குரல் கேட்கும்..
அந்த தெரு வழியே போகும் ஜனங்கள்
மீண்டும் நாங்கள் வந்துவிட்டதைக் கண்டு
சிரித்துக் கொள்வார்கள்
மயிர்க்கால் சிலிர்க்க பூரித்துப் போவார்கள்..
அதுவரை
அந்த வீட்டில் அடைபட்டிருக்கும்; எங்களின் சிரிப்பொலியும்,
நாங்கள் கத்தி கதறி ஓலமிட்ட குரல்களும்,
ஒரு மூத்தக் குடியின் விடுதலை வேட்கையும்!!
——————————————————-
வித்யாசாகர்
// அம்மண்ணிலிருந்து மீண்டும் முளைவிடும் எமது சுதந்திரம்
எமது சுதந்திரத்தைக் கொண்டாட
அன்று அந்த வீடு மீண்டும் எங்களுக்குச் சொந்தமாகும்…..// உறுதியுடன் நிச்சயமாய் நாம் அனைவரும் ஒன்றுபடும் போது. எப்போது?
LikeLike
ஈழம்னா என்ன, அது யாரோ எல்டிடியோட சண்டை தானே என்று நினைத்திருந்த பொதுமக்கள் கூட அது என் உறவுகளின் பிரச்சனை என்று உணர்ந்து அதை நாம் தான் தீர்த்து வைக்க போராட வேண்டும் என்று நம்பி தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள் யாழ். இன்னும், கடைசி ஒரு துளி உயிர் உடம்பிலிருந்து பிரியும் வரை நம்பிக்கையோடு மட்டுமே இருப்போம்; நம் நம்பிக்கை நமக்கான நியாயத்தை உலகறியச் செய்து நமது மண்ணிற்கு டேஹ்வையான நம் சுதந்திரத்தையும் மீட்டுத் தரும். அந்த இரண்டாம் பட்ச பார்வை மாறி நாம் நமது முதல்தர குடியினராய் இம்மண்ணில் மீண்டும் வாழ்வோம், எல்லோருமாய், என்று ஆக்கப்பூர்வமகவே நம்புவோம். யாரை முடக்குவதும் அழிப்பதும் ஒழிப்பதுமல்ல நமது எண்ணம் நமக்கானதொரு விடுதலையை நம் மண்ணிற்கென மீட்பது மட்டுமென்று உறுதியோடிருப்போம் யாழ்!!
LikeLike
வேதனையாக இருக்கிறது.
LikeLike
வேதனையில் வெடிக்கும் வார்த்தைகளே கவிதைக்குள் கட்டுப்படுகிறது ஐயா.. ஒரு மலர் கொய்ய்யக் கூட மனசு அஞ்சுகிறது; அக்கணம் மனிதர்கள் மாய்கின்றனரே வலியில்லையா? வலிக்கத் தான் செய்கிறது ஐயா..
தீர்வை சமமாக எதிர்பார்த்திருப்போம்!!
LikeLike