கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா?
பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல
அமரும் மௌனத்தின் கணம்
கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி
கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு.,
ஒவ்வொரு வார இதழ்களின்
பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப்
புரட்டுகையில்
தனது கவிதை வெளிவராத இதழ்
தீயைப் போலே உள்ளே
இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது.,
பசிக்கும் குழந்தை ஓடிச் சென்று
சமையலறைப் புகுந்து
ஒவ்வொரு சட்டியாக இதில் சோறிருக்கா
இதில் சோறிருக்கா யெனத் தேடுமொரு
வலி நிறைந்தப் பசியது.,
என்றாலும், தன்னை புதைத்துக் கொள்ளாமலும்
எரித்துக் கொள்ளாமலும்
வாரவாரம் சாகும் பல இதயங்களின் மரணத்தை
மிதித்துக் கொண்டு யாரோ ஒருசிலரின் கவிதைகள்
எங்கோ ஒரு சில இதழ்களில்
எப்படியோ வந்துதான் விடுகிறது.,.
வெளிவராத கவிதைகளெல்லாம்
வெறுமனே யாரோ படிக்காத அல்லது
பிரித்துக் கூடப் பார்த்திடாத தபால்களிலோ
மின்னஞ்சல் வந்துவிழும் இன்பாக்ஸ்களிலோ
யாருக்கும் அனுப்பப் படாமலே பெருகிக்கிடக்கும்
டிராப்டாகவோ நிறைந்து நாட்களை மட்டுமே தின்கிறது.,
பின் நாளொன்றில்
மொத்தமாக ஒரு கிளிக் அடித்து
எழுதியக் கவிஞர்கள் குப்பைகளாய் வந்துக் குவிந்திருக்கும்
மின்னஞ்சல்களின் பெயரோடு சேர்த்து
டிலிட் செய்யப்பட்டதில் –
நானும் பலமுறை இறந்துதான்போனேன்…
வித்யாசாகர்
உணர முடிகிறது. உண்மையான வலிகளை..
LikeLike
எழுதுவதைப் போலவே ஆர்வமான மனசு தனது எழுத்தின் அங்கீகாரத்திற்கும் சேர்த்துதான் துடித்துக் கொண்டுள்ளது. அங்கிகாரம் எனில், யாரோ அழைத்து மாலையிட்டு மரியாதை செய்து பொன்னாடைப் போர்த்தி பெரிய கவிஞனென்று கூவ அல்ல; பதக்கம் சுமந்து பட்டத்தோடு திரிய அல்ல, தனது வியர்வையின் அர்த்தம் தேவைக்குரியதென புரியத் தகும் அங்கிகாரமது. தனது எழுத்தின் தேவையை அதன் பயனை அருகிலிருக்கும் இரண்டுப் பேரிடமிருந்து கேட்ட மதிப்பீட்டை உலகின் நெடுக்களில் காணக் கிடைக்குமெனில் அதற்குப் பின் அடங்கிப் போக கேட்கும் எழுத்தின் பயணத்திற்கான ஒரு உத்வேகத்தை அளிக்கும் அளவிற்கே அந்த அங்கிகாரம் தேவைப் படுகிறது.
அதை அதிகமாக இன்றைய வார மாத தின இதழ்களும், சினிமாப் பாடல்களும் தக்கவைத்துக் கொண்டதன் பேரில்; என் படைப்பும் அப்படி நாலு பேர் பார்க்க வந்துவிடாதா என்ற காத்திருப்பில், என்னையும் மதித்து என் எழுத்தையும் தேர்வு செய்யும் அளவிற்கு என்னால் எழுதமுடியுமோ எனும் ஆசையில் பார்த்த பக்கங்களெல்லாம் ஏமாந்துத் திரும்பிய மனசின் ஒற்றை அங்கிகாரம் தேடும் வலி மட்டுமே இது.
பேருக்ககவோ பெருமைக்காகவோ காசுக்காகவோ எழுதிடாமல் எனக்குள் தைத்தவைகளை மட்டுமெழுதி, தான் பெற்ற குழந்தைக்கு தக்க மரியாதை செய்யக் கோரி ஏங்கும் ஒரு தாயின் அக்கறைக்குரிய ஒரு ஆழ் பசி இது.. என்று புரிந்துக் கொள்வீர்களேயானால் நன்றி!!
LikeLike