கவிதைகள் உரசிக்கொள்ளும் இரவின்
மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான
சிநேகம்..
இருட்டை உடைத்துப் பிறக்கும்
கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான
வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்..
கொட்டித் தீர்க்கும் ஆசைகளை
வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில்
பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்..
எழுதிக் கரையாத உணர்வுகளாய்
ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில்
உள்புகுந்த தேவதையாய் நீயே நிறைகிறாயென் அகமெங்கும்..
உன் உயிர் குடிக்க மூச்சிரைத்து
உனைத் தொடாத தூரத்தில் ஓடிவரும் என் உணர்வுகளும்
உயிர் நிறைய அன்பும் பல முன்ஜென்மத்து மீதங்களாயுனை விரட்டுகிறது..
மனதில் பதுங்கும் உன் நினைவுகளை
காதல் திரையினை விலக்கியவாறு பார்க்கிறேன்
சப்பாத்திக் கள்ளியாய் நாளை தைத்துவிடும்போல் காதல்
ஒரு சின்ன முத்தத்தின் வேண்டுகோளும்
பெரிய ஆசைகளின் எதிர்பார்ப்புமின்றி
பார்வையின் ரசனைக்குக் காத்திருந்ததில் கட்டுண்டிருக்கலாம் காதல்..
காதல்;
காதலென்றதும்
“காதலென்னச் செய்யும் ?
உடம்போடு உடம்பைத் தேய்த்து காமத்தில் எரித்து
கரியாக்கும் நமது நட்புதனை” என்று அலறி விரிகிறது நம் கண்களிரண்டும்..
நட்பு;
“நட்பு உயிர்குடிக்கும்
உனக்கும் எனக்குமான வாழ்க்கையொன்றை வசந்தமாக்கித் தரும்
கூடலின் தொலைதூரத்தில் கரையொதுங்கும் நம் கனவுகளை
சந்தோஷம் மலரும் விதைகளாக்கித் தூவும் வாழ்வில்” என்று
நட்பிற்கான கற்பிதங்கள் மொத்தமும் மழைநீர் காளானைப் போல
மனதில் முளைத்துவிடுகிற கணமொன்றில் –
காதலைக் கையுதறும் நெருக்கத்தில்
பதறிய நீயும் நானும் சுதாரிக்கிறோம்
உடல்சிலிர்க்கிறோம்
மனதிற்குள் நட்பு காதலுக்கும் மேலென்றுத் தெரிகிறது
சட்டென எல்லாம் உதறிவிட்டு
நட்பு நட்பாகவே நீளும் தெருவொன்றில்
நீயும் நானும் கைவீசி நடக்கிறோம்
காதல் வேண்டாத மனசு தெருவில்போகும் யாரையும் கண்டு
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..
//காதல் வேண்டாத மனசு தெருவில்போகும் யாரையும் கண்டு
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..//
SEMA BOSS
REALY FANTASTIC
LikeLike
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி கார்த்தி. பெரியவங்க சொல்லுவாங்களே “மடியில கனமில்லையேல் வழியில் பயமில்லையென்று, அதுபோல்தான். காதல் மிக கனமானது. அந்த கனத்திற்கான பேரிழப்பு நம் குடும்பங்களாக இருப்பதற்குத் தக சூழலை நாம் அமைத்துவைதுள்ளது வருத்தத்திற்குரியதாகும். எனவே நட்பைப் பெருக்குவோம். நட்பு ஆழமாக மனதிலும் நடத்தையிலும் இருக்குமெனில், நட்பின் கண்ணியத்தை உணர்வுப் பூர்வமாக நம்மால் காக்க இயலுமெனில், பின் காதல் வெறும் டம்பத்திற்கென்றோ, கண் மறைத்தோ, எவரின் உயிர் குடிக்கவோ நமைத் தூண்டாத களமாக ஆண் பெண் இருவருக்கும் அமையலாம் என்பதென் எண்ணம்..
அன்பும் வணக்கமும்..
LikeLike
// உனைத் தொடாத தூரத்தில் ஓடிவரும் என் உணர்வுகளும் //
நாகரீகத்தை வளர்த்த காதலுக்கு ஒரு நாகரீகத்தைக் கற்பிக்கும் வரிகள்..!
LikeLike
காலம் ஒரு படிப்பிணையாக வந்துக் கொண்டிருக்கிறது ஐயா. காலத்தின்பின் காலத்திற்கேற்ப படித்துக் கொண்டேயிருப்போம்.. நன்றியும் வணக்கமும் ஐயா!!
LikeLike