அவள் பாவம்..
அவளின் உடம்புதான்
அவளுக்கு சோறுபோடும் எந்திரம்
அவளின் உடம்பு தான்
அவளின் உயிர்குடிக்கும் சாபமும்.,
உடம்பை உடம்போடு எரித்துதான் சோறு சமைக்கிறாள்
உடல்நெய்துதான் ஆடை அணிகிறாள்
குழந்தை வளர்க்கவும் கணவன் குடிக்கவும்
உடல்தான் அவளுக்குப் பணமாகிறது.,
இரவின் அழகை உடுத்தி
உடம்பின் வெளிச்சத்தில் மயக்கி
குவியும் பணத்தில் சோகந் தாங்கி
சொர்கத்தின் வாசலைத் திறந்து சுடுகாடுகளைச் சேகரிக்கிறாள்.,
இல்லா வாழ்க்கையை கண்ணீரால் முடிந்து
இருக்கும் தருணத்தை முந்தானையில் விரித்து
கசக்கும் மனதில் காசுக்குப்பூக்கும் சிரிப்பினை வாங்கி
உடம்பெல்லாம் வலியோடு தைத்துக் கொள்கிறாள்.,
பணத்துக்குப் படுத்து
பணத்துக்குச் சிரித்து
பணத்தால் சாகும் அவள்’களை
அரி(றி)ந்துப் பார்த்தால்தான் தெரியும் வாழும்போது அவளை
சாகடித்தவர் யார் யாரென்று.,
சோற்றுக் கவளத்தை பசியள்ளித் தின்ன
உறங்காக் கண்களில் நிர்வாணம் மூடி
உடம்பை மினுக்கி உடம்பை மினுக்கி
அவள் விற்றதெல்லாம் வாழ்க்கை வாழ்க்கை –
அவள் வாழாததும் வாழ்க்கை வாழ்க்கை.,
எதுவானாலென்ன வேசிதானே (?)
இறந்தால்கூட அவளுக்கு இதயமா இருக்கு ?
எடுத்து ஓரம் வீசுவோம் – அவளின் உடம்போடு சேர்ந்து
நம் சமூகமும் நாறும்;
நாற்றமடித்தால் போகும் பாதைமாற்றுவோம்!!
—————————————————————————-
வித்யாசாகர்
//நாற்றமடித்தால் போகும் பாதை மாற்றுவோம் //
எல்லா சமூக அவலங்களையும் நாம் இப்படித்தான் கடந்துபோகிறோம் என்ற குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டீர்கள்..!
LikeLike