யதார்த்தமாக சுயம்புவாக சுழலும்
உலகமிதை
தனக்கு வசியப்படவேண்டி
மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்;
கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற
ஓட்டைகளையிட்டே
நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும்
அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்;
சரி தவறு சிக்கல்களிலிருந்தே
மாறுபடும் மனிதனுக்கு
விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல்
சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை;
சாட்சிக்கு நான்கு புத்தகமும் –
சாலையெல்லாம் பல சட்டங்களும்
புதிது புதிதாய் பிறப்பித்துப் பிறப்பித்தே
தனது சுயத்தைத் தொலைத்து, யாரோவின் நகலாக வாழ்வதில்
எப்படி மார்தட்டிக்கொள்ளமுடிகிறதோ மனிதனுக்கு;
வாழ்வும் புரியாமல் சாவும் தெரியாமல்
இடையே பயந்து பயந்து பாதைமாறி
சரியை தவறென்றும் தவறைச் சரியென்றும் சொல்லி
கண்மூடித்தனமாக வாழும் காலம்’ காற்றில் வந்துவிழும்
மனிதனின் ஒரு துளி எச்சில்போல கரைந்துவிடுகிறது;
உலகைச் சொட்டை தட்டுவதாக எண்ணி
அதன் நேர்த்தியை தனக்குத் தெரிந்தப் பக்கமெல்லாம் தட்டி தட்டி
குலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லக் கூட
நாம் அருகதையற்றவர்கள் – ஆனால்
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வோம்;
மனிதன் என்பவன்
(தன்னைத்) தானே – பிறக்கக் காரணமாவதும்
இறக்கக் காரணமாவதும் சரியெனில்
இரண்டுப் புள்ளியிலும் சந்திக்கும் இடைப்புள்ளியில் அவன்
தவறென்றுதானே அர்த்தம் ?
ஒரு சர்க்கரையின் அளவில்கூட ஒத்துப்போகாத
மனித உணர்வின் தராசு
வாழ்வின் ஆதராங்களை எடை நிறுத்திப் பார்க்க
துணியும் போராட்டங்களில்தானே வலுக்கிறது யதார்த்தத்தின் சமமின்மை(?)
நெல் விதைப்பதும் நெல் அறுப்பதும் போல
ஆடுமாடுகளை வளர்ப்பதும் கொல்வதும் போல
தன்னையும் வளர்த்து வளர்த்து துண்டித்துக்கொள்வதும்
தண்டித்துக் கொள்வதும்
மானுடத்தின் இயல்பு குணம் எனில்;
அது சரியா எனில் –
கேள்விகளோடு திரியும் வாழ்க்கைதான் இது
கேள்விகளை கேட்டுக்கொண்டேயிருப்போம்!!
—————————————————————————
வித்யாசாகர்
”சாட்சிக்கு நான்கு புத்தகமும் –
சாலையெல்லாம் பல சட்டங்களும்
புதிது புதிதாய் பிறப்பித்துப் பிறப்பித்தே
தனது சுயத்தைத் தொலைத்து, யாரோவின் நகலாக வாழ்வதில்
எப்படி மார்தட்டிக்கொள்ளமுடிகிறதோ மனிதனுக்கு;”
படிப்பறிவு கானல் நீர்..
பட்டறிவு.. கடலின் ஆழம்..!
மூழ்கி முத்தெடுப்பவர்…
தத்துவத்தோடு..சரசமாடலாம்..!
ம்..ம்.. ஆடுங்க..ஆடுங்க ..!
LikeLike
விரக்தியில் எழுத்து தீட்டி தனது புடைத்த மார்பை தன்னாலேயே உடைக்க முடிகிறதேயொழியே வேறென்ன செய்ய.. எழுதமட்டும் முடியலாம்போல்; எழுதுவோம் ஐயா..
LikeLike