“என்னங்க சாப்பிட்டீங்களா?”
“ம்ம் சாப்பிட்டேம்மா”
“நேரத்துக்குத் தூங்குறீங்களா?”
“தூங்குறனே?”
“மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?”
“ம்ம்…”
“ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“
கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்..
எனக்கு அவள் உடனில்லாததை விட
பசியோ, உறங்கா விழிகளோ
மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ
தொண்டைக்குழி அடைப்பதில்லை..
மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து
அவளை நினைத்துக் கொள்கையில்
குணமாகிப் போகிறது என் மனசும்
உடம்பும்..
மரமெல்லாம் பூக்கும் பூக்களும் துளிர்க்கும் இலையும்
வருடந்தோறும் உதிர்ந்துப்போகையில்
தனித்து விடப்பட்ட வெற்றுமரத்தின் கிளைகளாக
வலித்துக்கொண்டு போகும்
வெறுமையான நாட்களிந்த
அவளில்லாத நாட்கள்..
கைநழுவி உடைந்துவிட்ட கண்ணாடிக் குவலைபோல்
எங்களுக்கில்லாத யிந்த ஒரு மாதம்
வருடத்தின் விளிம்பிலிருந்து விழும் இத் தனித்த
நாட்களின் அவஸ்தையில்
வருடமெல்லாம் பிரிந்தேயிருந்து மாதத்தில் மட்டும் வாழ்ந்துகொள்ளும்
வெளிநாட்டினரை நினைக்கையில்
மனசெல்லாம் தீப்பற்றி அவர்களுக்காய் எரிகிறது..
பசியோ பஞ்சமோ
மழையோ காற்றோ
மரணமோ வாழ்வோ
குடும்பத்தோடு வரக் கேட்கும் மனசுதானே
பிரிந்துச் சுமக்கிறது எல்லோரின் கனத்தையும்.. ?
தொலைபேசியில் அவர்கள் விசும்பும் சப்தமும்
மின்னஞ்சலில் புதைக்கும் இதயமும்
மடல்களாக நீளும் காத்திருப்பும்
நாள்காட்டியோடு கிழியும் ஆசைகளும்
அதே சிவப்பு ரத்தம் ஓடும் மனித தசைக்குள்தானே
ஊமையாகிக் குவிகிறது.. ?
அவர் வருவார் என்று கடக்கும் வருடத்தையும்
அவளுக்காக என்று சேமிக்கும் பணத்தையும்
அப்பாவிற்கென்று படிக்கும் படிப்பும்
பிள்ளைகளுக்கென்று சிந்தும் வியர்வையும்
சாபமுடுச்சுகளால் முடியப் பட்டவை என்று சொல்ல
அவளில்லாத இந்த ஒரு மாதத்தின் நாட்கள்
சாட்சியாகி நகர்கிறது..
பார்வையின் இரண்டு கண்களைப் போல
காலத்தின் இரண்டு வண்ணத்தைப் போல
காட்சியின் இரு துருவங்களாக
‘அவனையும்’ ‘அவளையும்’ கலந்துச் செய்த வாழ்க்கையிது
கல்லும் முள்ளும் குத்தும் வலிகளோடு நகர்கிறது
அவளின்றி..
குழந்தைகள் களைத்துப் போட்டத் துணிகளில்
கீழே சாய்த்த குவளைநீர் ஈரத்தில்
அழுது அடம்பிடித்து அடிவாங்கும் கவலையில்
கடைக்குப் போய் கைவத்தலுக்கு பதிலாக சிப்சும் மஞ்ச்சும்
வாங்கிவந்துக் கொடுக்கையில்
பிள்ளைகள் ஓடிவந்து மடி தாவிய கணத்திலுமிருந்த வாழ்க்கையை
பெட்டியில் கட்டியத் துணிகளோடு
அவளே கொண்டுபோயிருந்தாள்..
“திட்டிக் கொண்டும்
அதுசரியில்லை இது சரியில்லையென்று
அதட்டிக் கொண்டுமிருந்தாலும்
நீங்கள் அருகில் இருந்தீர்களே அது வாழ்க்கை” என்றவள் சொன்னபோது
உள்ளே ‘சோ..’வென பெய்துக்கொண்டிருந்த ஆதிக்க மழை
சடாரென நின்றது காலத்திற்குமாய்..
தனிமையில் செய்த சமையலும்
பெருக்கிய வீடும்
கழுவிய பாத்திரங்களும்
குழம்பு தாளிக்கும் சப்தமும்போல என்னையும்
ஒரு நல்ல கணவனாய் சமைத்துக் கொண்டிருக்கும் இப்பொழுதுகளை
அவள் ஊரிலிருந்து வந்துவிடும் நாளிற்காக
உயிரெல்லாம் தேக்கிவைத்திருக்கிறேன்..,
அவளுக்கான புன்னகை
அவளுக்குப் பிடித்த சட்டையின் அலங்காரம்
அவளின் தொடுகையில் உணர்வுப் பூச்சொரிக்கும் மனசு
அவள் விரும்பிப் பார்க்கும் கண்களென
அவளுக்கான அத்தனையையும் பத்திரப்படுத்தி
வீடெல்லாம் நிறைக்கிறேன் –
வீடும் என்னோடு சேர்ந்து அவளுக்காகக் காத்துக்கிடக்கிறது!!
—————————————————————————-
வித்யாசாகர்
”எனக்கு அவள் உடனில்லாததை விட
பசியோ, உறங்கா விழிகளோ
மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ
தொண்டைக்குழி அடைப்பதில்லை..”
கழிவிரக்கத்தின் கணத்தில் இவ்வரிகள் …
படிப்பவர்களுக்கு மிடறு விழுங்க முடியாமல்
ஒரு தவிப்பு…!
LikeLike
நன்றி ஐயா, வாழ்வின் மூப்பு உங்களின் வரிகளில் உணர்வுகோர்த்து நிற்கிறது.. வணக்கம்!!
LikeLike