ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள்
எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்
வந்துவிழுந்தது அவரின் மரணம்..
மரணம்; பெரிய மரணம்
இல்லாதுப் போவது மரணமா?
பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்
அவர்களென்ன பிணமா?
பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்
அவரின் மரணத்திற்குப் பின் அவளின்
பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்
மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் ?
உடன்கட்டையை மட்டும் உதறிவிட்டு
இன்னும் உயிரோடு கொல்லும் விதவை கோலத்தைப்
பூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு
கணவன் போனதற்கு நிகராக
பூவும் பொட்டும் போகும் கணம்
இன்னொரு மரணமென்று எண்ணி
அவளுக்காக நானுமழுதேன்;
என் கண்ணீரும்
அவளின் கண்ணீரும் இன்றில்லாவிட்டாலென்ன
நாளையேனும் இச்சமூகத்தைச் சுடும்;
சுடட்டும் சுடட்டும்
சுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்
அதன்பின் –
விதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்
அவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று
பொட்டினைக் கலைத்துக்கொள்வாள்..
பூவை அறுத்துக்கொள்வாள்..
உயிரைக் கூட விட்டுமாய்ப்பாள்,
அது; அவளது உரிமை!!
————————————————————–
வித்யாசாகர்
உண்மையிலேயே அந்த இரவு எனையும் மிக வருத்தியது. அத்தையின் கணவருக்கு அண்ணன் மரணம் என்று கேள்வியுற்று பாண்டிச்சேரி போயிருந்தேன். ஊருக்கு வந்தசமையம் உறவினர்கள் எல்லோரையும் அங்குவைத்து மொத்தமாக பார்க்க இயலுமே என்றே அன்றுப் புறப்பட்டேன்.
எல்லோரும் கத்தி கதறி அழ; எனக்கு அத்தனை ஒட்டுதல் இல்லாமையால் பெரிதாக வருத்தம் வரவில்லை. என்ன செய்கிறார்கள். எதற்கு செய்கிறார்கள். எதெல்லாம் சரியாகப் பொருந்துகிறது என்பதை மட்டுமே ஒரு பரவலான சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் நடுப்பகலில் ஒருவருக்குப் பின் ஒருவரென முடிகையில் கடைசியாக அவரின் மனைவியை தெருவில் சடலத்தோடு அமரவைத்து தலையில் தண்ணீர் ஊற்றி கழுத்தில் புடவைப் போட்டு மாமா அழுத காட்சி எனை மிரள வைத்தது. கண்கலங்கி மழையிலேயே நனைந்து அவரின் பிணத்திற்கு பின் நானும் அவரைக் கொண்டு சென்றவர்களோடு போனேன்.
என் கண்ணீரின் காரணம் அந்த அம்மாவும் அவரின் போட்டும் பூவும் மட்டுமாகவே இருந்தது. அடுத்து அந்த தாலியறுக்கும் நாளும் அப்படித்தான் இருந்தது. அவர்களுக்கு இதலாம் சம்பிரதாயம் என்று எடுத்துக் கொள்ள முடிந்தாலும் எனக்கு ஒரு சுய சுதந்திரமில்லா செயலாகவேப் பட்டது. நான் சென்று பாவம்மா எவ்வளவு அழகா தாய் மாதிரி வருவாங்க பாவம் பொட்டு பூ எல்லாம் எடுக்காம என்று ஆரம்பித்தேன். போடா போய் வேலையைப் பாரு, இங்கெல்லாம் இப்படித் தான். இதலாம் மாத்த முடியாது போ என்றார்கள். வேறென்ன செய்ய, அந்தம்மாவின் கண்ணீருக்கு ஒரு சின்ன காணிக்கையாக இதை எழுதத் தான் முடிந்தது..
இதெல்லாம் நம் பழக்கவழக்கங்களை நாமே குறைசொல்லிக் கொள்ளவோ குற்றப் படுத்தவோ எழுதவில்லை. அன்று நடந்தவைகள் அநேகம் அன்றைக்கு சரியானதாகவே இருந்திருக்கலாம். இன்று; இன்றைய வாழ்வுநிலைக்குச் சாதகமாகப் பார்க்கையில் சில விசயங்களை பழக்கப்பட்டே போயிருந்தாலும் வலுக்கட்டாயமாகவேனும் தற்போதய வாழ்வுநிலைக்கு உகந்ததாக மாற்றிக் கொள்ள இயலுமெனில் மாற்றிக் கொள்ளல் மேலும் நலம் பயக்கலாம்..
LikeLike