கடலெல்லாம் நீரள்ளி கரையெல்லாம் மணற்பொருக்கி கிளிஞ்சல்களின் சப்தத்தில் காதுபுதைத்து பொழுதெல்லாம் உறங்கியும் தீராத வாழ்க்கையில் ஒட்டியிருக்கும் சொச்ச வாழ்க்கை எப்படிக் கடலைப் பற்றி மட்டுமே பேசுமோ அப்படி மனசு அந்த படத்தைப் பற்றியேப் பேசிக்கொண்டுள்ளது.
கடற்கரையில் ஒதுங்கிநின்று அவளின் காதலனை எண்ணி எண்ணி கண்ணீராய் விடுமந்த அழுகைமாறாத மனசை என்ன செய்ய ? வேண்டுமெனில் இன்னொரு முறைப்போய் பார்க்கலாமா அந்த நீர்ப்பறவையை (?) என்று உணர்வுமுழுதும் கனத்து, மனசு எங்கெங்கோ லயித்து அப்படத்தோடு ஒன்றிப் போய்விடுவதை நல்லுணர்வுள்ளோரால் நிச்சயம் மறுக்கவே முடியாது.
போனவன் வருவான் வருவானென்று கடலைப் பார்த்தே காலம் முழுதும் தனது வாழ்க்கையை வாழாதுத் தீர்த்த அத்தனைப் பெண்களின் விசும்பலையும் காதில்வந்து கடலலைகள் முனுமுனுப்பதை யென்னால் கேட்காமல் நிறுத்திக்கொள்ளவே இயலவில்லை.
கடல்வயலில் உயிர்புதைத்துப் புதைத்து நம் கோரப் பசிக்கு மீனளக்கும் கரைச் சாமிகளுக்கு பொங்கலிட்ட கை நம் சீனு ராமசாமியின் கையெனும் நன்றியை எப்படிச் சொல்லாமலிருப்பது (?)!
எட்டி நெற்றியில் சுட்டவனை ஏனென்றுக் கேட்க திராணி போதாத அரசை அரியணையில் அமரவைக்க ஆங்காங்கே போஸ்டர் ஒட்டிய கைகளை பிடித்திழுத்து வந்து இந்தப் படத்தைப்பார்க்கச் சொல்லி உட்கார வைத்தால் கண்ணீர் ததும்ப ததும்ப பார்த்துவிட்டுச் சென்று அவர்களின் சட்டையைப் பிடித்திழுத்து இனி இறக்க இருக்கும் மனிதனையாவது சுட்டுவிடாதே என்று சொல்லுங்கடா என்று கேட்பார்களோ யென்றொரு துடிப்பு இந்தப் படம் முடிகையில் எனக்குள் வந்தோடியது.
கரை தாண்டினான் சுட்டோம் கரைதாண்டினான் சுட்டோம் என்று சொல்லிச் சொல்லியே நம் மனிதர்களை சுடும் மிருகங்களுக்கு அந்த சடலத்தின் வீடு எப்படி சுடுகாடாக தகித்துப் போகிறதென்பதை காட்சிகளாக செதுக்கி கட்டங்களுள் அடைத்திருக்கும் பாத்திரங்களை கண்டு அழுதால் தெரியும் அவர்கள் எந்த கரையை தாண்டினார்கள், அந்த மிருகங்கள் எதற்கு அவர்களைச் சுட்டதென்று.
அரசு இருக்கிறது தான், காவலர்கள் இருக்கிறார்கள் தான், சட்டம் நீதிமன்ற புத்தகம் விரிய நிரம்பிக் கிடக்கிறது தான்; ஆனால் கிடந்தென்ன பயன்? அவர்கள் இருந்தென்ன பயன்? எவரெவரோ ஆளும் ஆட்சிக்கு இடையேயும் விழுகிறதே பிணம் அது யார் செய்த கொலை? கடல் கொன்றாலே சபிக்கும் மனிதஜாதி மனிதனை மனிதன் கொள்கையில் சட்டைக்குள் கைவிட்டுக் கொண்டு திரிகிறதே’ இனி யாரிருந்து என்ன பயன் த்தூ!!!!!!!!! என்பதுபோல் ஒரு உணர்வுப் பீறிட காவலாளியையும் நீதிபதியையும் பார்க்கும் நந்திதாதாசின் பார்வைக்கு நம்மிடையே பதிலில்லை’ என்பதை அறுதியிட்டுக் கூறுகிறது இந்த நீர்ப்பறவை எனும் திரைப்படம்.
காதல் கசக்காமல், காமம் கண்களில் சிவக்காமல், மதம் வலிக்காமல், மனிதர் நம்பும் கடவுளைப் பழிக்காமல், மனிதத்தின் உச்சபட்ச பார்வையில்’ ஒரு குடும்பத்தை’ ஊரை’ கரையொதுங்கிய மக்களின் வாழ்க்கையை இத்தனைக் கச்சிதமாக கலைப் பொக்கிஷமாக்கியிருக்கும் இப்படத்தின் அத்தனைப் படைப்பாளிகளையும் என் எழுத்து நன்றியோடு நினைவில் கொள்கிறது.
மதத்தால் மனிதனையறுத்து அதையும் ஜாதியகப் பிரித்து இவன் அவன் என்று சொன்னதையெல்லாம் கீழ் மேலாக்கி, மேல்நின்றுக் கொண்டிருப்பதாய் எண்ணி மார்தட்டிக் கொண்டு, கீழுள்ளவர் மனதிற்குள்ளெல்லாம் வெடிகுண்டுகளைத் திணித்து, என் ஒரு பாதி உறவுகளை தீவிரவாதியாகக் காட்டி ஊறுகாய் நக்கிய ஜாம்பவான்களுக்கு சங்கு செய்து ஊதியிருக்கிறார் சீனு ராமசாமி.
என் வீட்டுத் தெருமுனையில் நட்ட கொடிமரத்தின் கீழமர்ந்திருக்கும் இஸ்லாமிய அண்ணன்மார்களின் கைகளில் துப்பாக்கிகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த அதிகபட்ச மனிதநேயர்களுக்கு மத்தியில்; பாசத்தில் தொப்பியணியப்பட்டு பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் கண்ணியம் பேசும் அத்தா’வாக நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் வாயிலாக ஒரு நெடுங்கால பாவத்தை திரைச்சுருள் வைத்து துடைத்திருக்கிறார்கள் இந்த திரைப்பட நேர்த்தியாளர்கள்.
கடலுக்கு இருபுறமும் கைநீட்டி நமை கட்டியணைத்துக் கொண்டிருக்கும் கடலன்னைக்கு சிலுவை மாட்டி படம் முழுக்க திரியவைத்தாலும் அது அந்த மண்ணில் அப்படித் திரிந்தவர்களின் கதை என்று ஏற்பதில் எந்த இழுக்கு வந்துவிடும்?
தாழ்த்தப்பட்டவன் ஒதுக்கப்பட்டவன் தீண்டப் படாதவன் கீழ்சாதி குறவன் பறையன் சேரி குப்பம் காவாய் நாற்றம் என்றெல்லாம் சொல்லி ஒரு தாய்ப்பறவை தனது சிறகுகுக்குள் அடைந்திருக்கும் குஞ்சுகளைப் பிடுங்கி தெருவில் தானே வீசியதைப் போல’ நம் சமூகத்தால் வீசப்பட்ட ஒரு குடி நூற்றாண்டு காலங்களாய் குனிந்து குனிந்து கூன்விழுந்திருக்க, அதை நிமிர்த்திக் கொண்டிருக்கும் மாதாவை கையெடுத்து வணங்கும் கரங்களுக்கு விலங்குபூட்ட யாருக்கிங்கே உரிமையுண்டு?
கொட்ட கொட்ட குனிந்து, தரைக்கும் கீழாகி, மலமள்ளி, பாதுகைத் துடைத்து படைத்தவனைக் கூட சற்று தூர நின்றே வணங்கி வணங்கி பழகிப் போன பறவைகள் இன்று தனது கூடு தேடி அலைகிறது. தனக்கான வீடு திறமை அந்தஸ்த்து என சமபங்காக நின்று மார்தட்டிக் காட்டுகிறது. அந்த மார்தட்ட நீளும் இரு கரங்கள் மாதாவிடமிருந்து நீளுமெனில் நீளட்டுமே; மனிதர்கள் எல்லோரும் சமமாக வாழமுடியுமெனில் வாழட்டுமே…, அப்படி வாழ்பவர்களின் கதையிது; இந்த நீர்ப்பறவை!
குடிப்பவன் மகனெனில் சாராயத்தைக் கூட அவனுக்கான சந்தோசமாகயெண்ணிக் குவளையில் ஊற்றிக் கொடுக்கும் தாய், உடைப்பது பானை என்றாலும் அதிலிருந்து மண்ணூறி தரையெல்லாம் வியாபிப்பது தனக்கான வருமானமென்றுத் தெரிந்தும் அந்த பானையை தனது மகனுக்காய் உடைக்கும் அன்னை, ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட அத்தனை எளிதில் வெளியே சிந்தாமல்’ கனக்கும் மனதை கண்கள் சிவக்கச் சிவக்க வெறித்துப்பார்த்தே தனது பிள்ளையின் நல்ல வளர்சிக்காக இரவு பகல் பாராமல் நோகும் மனதால் அவனின் நன்மைக்கென ஏங்கிக்கொண்டிருக்கும் அன்பூறிய அப்பா, சண்டைப் போட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை போகட்டும் வேலை கொடு பாவம் பிழைத்துப் போகட்டுமென்று பரிந்துரைக்கும் பல நல்ல மனிதர்களென; பாதிரியாரைப் போல’ உதுமான் கனியைப் போல’ தமிழாரிசிரியர் ஜோசப் பாரதியைப் போல’ மகளுக்காகப் பரிதவிக்கும் சிஸ்டர் பெனீட்டாவைப் போல’ படத்திற்குள் வந்துப்போன மீனவ முதலாளி சிலுவையிலிருந்து நம்மைச் சாமியாக்கிய நரிக்குறவரைக் காட்டும் காட்சிகள்வரை படச்சுருளுள் முழுதும் வந்துப்போகும் அத்தனை மனிதர்களையும் மிக நல்ல மனிதம் நிறைந்தப் பாத்திரங்களாகவே அமைத்த விதம் ‘மனிதன் இயல்பில் நல்லவந்தான்’ எனும் தத்துவத்தை மறைமுகமாகச் சொல்வதாக முடிகிறது இத் திரைப்படம்.
கரையில் கால் நீட்டி கடலில் தலைவைத்து வானத்தின் எட்டிய தூரம் வரைத் தெரியும் பறவையின் இறக்கைவிரிப்பை சிமிட்டாதக் கண்கொண்டு பார்க்கும் ஈர்ப்பில்; இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் வெகுநாட்களுக்கு மனதிலிருந்து நீங்கா இடத்துள் புதைந்துதான் கொண்டது.
என்றாலும், முன்னணி நடிகர்களின் படமென்றால் திரையரங்கம் முழுதும் நிறைந்துக் குவிந்து விசில் சப்தத்தில் காதுமூடச் செய்த இதே திரையரங்கத்தின் இருக்கைகள் எல்லாம் இன்று விரிச்சோடியிருக்க வெறும் நாங்கள் எட்டு பத்து பேர் மட்டுமேயிருந்துப் பார்த்த நிலையில்’ இந்த கட்டிடத்தையே இடித்துப்போட்டால் தானென்ன என்றிருந்தது.
படம் முடிந்ததும் வெளியிறங்கி நடக்கையில் கூட்டநெரிசல் அழுத்த நின்று நின்று வெளியேறக் கூட வழிகிடைக்காமல் திணறடிக்கும் திரைப்பட ரசிகர்களின்று ஒரு நல்ல படம் என்றதும் வீட்டிற்குள் முடங்கிப்போன அநியாயத்தை எந்தத் தீயிலிட்டு எரிக்கவோ என்றெழும் கோபத்தை அடக்க கடினமாகவே இருந்தது.
ஒரு திரைபபடம் காண்கையில் அந்த படக்கதை யாரோவின் வாழ்தலை நமதாக்கி, நம் மனதிற்குள் உணர்விற்குள் தனதாக நிறைக்கிறது எனில்; அது எப்படி ஓடாத படமாகிப் போகிறது? சுடும் குண்டினை பல்லில் கடித்து நிறுத்தும் கதாநாயகர்களைத் தாண்டிவந்து யதார்த்தம் குறையாது ஒரு ஊரின் கதையினைப் பேசியிருக்கும் இம்முழுப் படத்தையும் இரவு பத்து மணிக் காட்சிக்கு வந்தும் தூங்காமல் முழுக்க முழுக்க கண்விரிக்கப் பார்த்த என் நான்கு வயது மகன் மற்றும் இரண்டு வயது மகளுக்குப் புரிந்த கதை’ ரசிப்பூட்டிய கலை’ புரியாதோரின் கண்களுக்குள் புதையுண்டு தான் போகுமெனில்; போகட்டும் அம்மனிதர்களோடு!
விருதுக்கென்று எடுத்த படங்களின் காலத்தையெல்லாம் மறந்து விருதுகளை மதிக்காமல் உணர்வுகளை மதித்து வரும் இதுபோன்ற படங்கள் மண்ணில் புதைந்தாலும் புதைந்ததன் வரலாறாகவாவது நிலைக்காமலாப் போகும்.. (?)
காட்சி புதிதாக வீசும் காற்றையும், மணலின் வாசத்தையும், பேசும் குருவிகளின் சப்தத்தையும், அலையின் மூச்சிரைப்பையும், மனித நடமாட்டத்தில் காணக்கிடைத்த துள்ளல்’ தன்னம்பிக்கை’ விரக்தி’ வேகம்’ வியாக்யானம்’ வெல்லும்வழி’ காதல்’ மரணம்’ கண்ணீர்’ கடவுள் என இம்மூன்று மணிநேரத்திற்குள் ஒரு காவியத்திற்கீடான அத்தனை கவிநயத்தையும் ஒரு திரைப்படத்திற்குள் புதைத்த வெற்றி வெற்றிதான்.
யாரையும் நோகாமல் எல்லோரின் கன்னத்திலும் அறையும் வசனங்களும், கேள்விகளை எல்லோர் மனத்திலும் எழுப்பும் தடுமாறாத திரைக்கதையும், மனதை சில இடங்களில் அறுத்துப் போட்டுவிடும் சிலிர்த்திடவைக்கும் குதூகலம் நிறைந்த இசையின் துள்ளலும், அழுகையை’ சிரிப்பை’ கோபத்தை’ அப்படியேக் கொட்டிவிடாமல் மென்றுவிழுங்கும் உணர்வுகளையும் கனகச்சிதமாக அழகு நிரம்ப படம்பிடித்து’ நடித்தவர்களுக்கே தெரியாத முகத்தை நமக்குக் காட்டத் துடிக்கும் காமிராவின் கண்களும் உண்மையில் அபாராம் தான்.
கிணற்றில் விழுந்துவிட்ட சிறு கல் ஆழத்தின் எந்த தூரத்தில் போய் விழுந்ததென்றுத் தெரியாமலே மேல்நின்றுக்கொண்டு கிணற்றைப் பார்த்தவாறே திரும்ப அந்த கல் மேலே வருமா வருமாயென்றுப் பார்க்கும் ஒரு குழந்தையின் வருத்தமான மனநிலைக்கு ஒத்து கடலுக்குப் போன தனது நாயகனும் வருவான் வருவானென்றே கரையில் நின்று வெறித்துவிட்டு, ‘நாட்கள் கரையும் வேகத்திற்கு நடுவே அவனில்லாத வெறுமையை உயிர்வலிக்க அழுது தீர்க்கையில்; பார்வை சிலும்பி, மூக்கு சுருக்கி, வாய் கோனி உணர்வுகளின் மொத்த அழையையும் தனது ஒற்றை அழையின் நடிப்பில் காட்டிய கதாநாயகிக்கு எந்த பரிசு கொடுத்தாலும் ஈடாகாது; வேண்டுமெனில் திரையரங்கில் சென்றுப் பாருங்கள் அவள் அழும் நேரம் கண்களில் ஈரம் பணித்தால் மனதிற்குள்ளாவது ஒரு சொட்டு ஈரம் கண்ணீராகச் சொட்டுவீர்கள். அந்த ஒரு சொட்டுக் கண்ணீர் இந்தப் படத்தின் மொத்த உழைப்பிற்கான கிரீடமாகப் போய் நின்றுக் கொள்ளும்..
தங்கை காதலிக்கிறாள் என்பதைவிட இன்னொருத்தியைக் காதலிப்பவன் எனும் மதிப்பை பெரிதாக நினைக்கும் உப்பளத்து முதலாளி மனதில் நிற்பதைப் போலவே அந்தப் பெண்ணும் ஒரு பூமித் தாய்க்கு ஈடாக உணர்வுள் பூத்துப் போகிறாள். அவளைப் பார்க்கும் பார்வையிலிருந்து; அவளுக்கே வலிக்காமல் அவளிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ளுமிடம் வரை’ விஷ்ணு பேசும் வசனமும், சண்டைகளில் தெரியும் யதார்த்தமான வாளிப்பும் சுனைனாவின் அழகிய காதலில் சிக்கித் தவிக்கும் தவிப்பிலும், மோகத் தீயில் எரியும் ஆண்கர்வத்தின் போதும் விஷ்ணு பெரிய நடிகனுக்கான முயற்சியொன்றில் வென்றுதான் காட்டுகிறார்..
அதிலும் அந்த உப்பல முதலாளி உதவி செய்ய பணத்தோடு சமுத்திரக்கனியைப் பார்க்கச் செல்கையில் “உட்காருய்யா பணமென்னய்யா பணம்; அது கெடக்குது உன் வல்லத்தைக் கொண்டுபோய் நீ பெரிய ஆளா வா”வென்று சொல்லும் மனசு பளிச்சென்று உள்ளே ஒரு விசும்பலை உண்டாக்கி மறைவதற்குள் அருளப்ப சாமியின் அப்பா வல்லத்தைப் பார்க்க வந்து ஆனந்தக் கண்ணீர் சொட்ட தடவிப் பார்க்கையில், மேலிருந்து எப்போ உன் வல்லத்தை கடலில் விடப்போற என்று கேட்டுக் கொண்டே அதை கடலில் விடவேண்டி ஏற்பாடுகளைச் செய்து அதற்கு மாயிலை தோரணம் கட்டி அதற்குக் கீழே விஷ்ணுவை நிற்கவைத்து பாலபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து செய்யும் தொழிலை ஒற்றைக் கடவுளாக எண்ணி எல்லோரும் எந்த மதப் பார்வையையுமேக் கொள்ளாது வணங்கி உள்ளனுப்பும் காட்சி ஒரு ஏழையின் வெற்றி வானளாவி நிற்பதைக் காட்ட எத்தனைப் பொறுப்போடு இயங்கியுள்ளார் இயக்குனர் என்பது நன்றாகவேப் புரிகிறது.
கடைசியாக இனி திரும்பவே மாட்டான் என்பதை மறைமுகமாக சொல்லும்முகமாக அணையயிருக்கும் தீபம் சுடர்விட்டு எரியும் என்பதைப் போல, ஒரு பெரிய மகாராஜன் பாய்மரம் கட்டி படகினைப் போருக்கு கடலுள் செலுத்துவதைப் போல எத்தனை கம்பீரமாக விஷ்ணு மீனுக்கு வேண்டி கடலுள் போகும் காட்சி ஒரு சாண்டில்யன் நாவலின் கம்பீர கதாநாயகனை கண்முன் கொண்டு நிறுத்தியது.
ஒலிப்பதிவிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி, நடிப்பிலும் சரி, இசையிலும் சரி, பாடல்வரிகளிலும் சரி, வசனத்திலும் சரி, திரைக்கதை இயக்கத்திலும், ஆட்களைத் தேடி தேடி தேர்வு செய்ததிலும் சரி; பெரியதொரு நிறைவைத் தந்திருக்கிறார் சீனு ராமசாமி.
ஆனாலும், நண்பனைக் காட்டும் இடத்தில் கூட நன்னடத்தையை போதிப்பவனாகவும் நண்பனிருத்தல் வேண்டுமென்பதை சிரிப்பூட்டச் சொல்லும் நீர் பறவையின் சிறகில் சின்ன சின்ன சிராய்ப்புகள் சில இருந்தாலும் அதன் முதுகில் பல பொறுப்புக்களைக் கட்டிக் கொண்டு வானில் பறக்க எத்தனிக்குமொரு கடமையையும் கொண்டுள்ளது என்பதை எண்ணுகையில் இப்படம் பெருமைக்குரியதொரு திரைக்காவியமகவே புத்தியை எட்டுகிறது.
கடலின் கரையிலமர்ந்து நிலா பார்த்து கதைபேசி கரையில் அலைமிதித்துவிட்டு காலடிப் பதிந்துதுப் போகும் பலருக்கு மத்தியில் அக்கடலின் கரையோர மக்களின் கதையை எடுத்து அதை அவர்களின் கண்ணீராலேயே குழைத்து ஒரு நினைவுச் சின்னத்தை வெள்ளித் திரைமூலம் வரைந்திருக்கிறார் இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள். அதற்கு ஏற்ற வண்ணங்களைப் பூசி எண்ணத்திலிருந்து மறையாத காட்சியை இன்னும் அழுத்தமாகப் பதிக்க முழு முயற்சியோடு உழைத்துள்ளனர் இப்படத்தின் அத்தனைக் கலைஞர்களும். அனைவருக்கும் எனது பெரிய பல விருதிற்கிணையான வாழ்த்துக்களும் வணக்கமும்..
வித்யாசாகர்
குறிப்பு – மேலுள்ள புகைப்படங்கள் தமிழ்த்திரையிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.
வணக்கம்
அண்ணா
நீர்ப்பறவை படத்தின் திரை விமர்சனம் படிக்கும் போது எம்மை ஒருகனம் கண்களில் இருந்து கண்ணீரை வரவைக்குது விமர்சனம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
வணக்கமும் அன்பும்பா., மிக தரமான நல்ல படம். மனம் அதன் உணர்விலிருந்து வெளிவரவே மறுக்கிறது. எழுத இன்னும் கூட ஏராளம் உண்டு, இன்னும் பெரிதாகிப் போகுமோ என்று நிறுத்திக் கொண்டேன். தமிழரின் வெற்றியை திரைத் துறையிலும் இனி யாரும் வெல்வதற்கில்லை..
LikeLike