ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!

சுதந்திரம் என்று சொன்னாலே
உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்;

ஏன்?

அதன் ஒவ்வொரு எழுத்திற்கும்
எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும்
காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின்
வலிபற்றிய பயமுமது;

நிற்க முறைத்தலும்
பார்க்க அடித்தலும்
எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென
நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில்
வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் தேசத்தின்
ஒற்றைதின சிரிப்புசப்தமாகக் கேட்டாலும்
இன்னுமன்றைய வலிக்கான கண்ணீர்
ஓய்ந்தபாடில்லையென்பது வருத்தமில்லையா ?

சேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும்
மனிதசாணத்தில் வைத்துக்கொண்டதைப் போல
வெள்ளையனை வெளியேற்றிய கையோடு
ஒற்றுமையை மண்ணில் புதைத்தோம்
வீட்டிற்குள்ளும் விடுதலையைத் தொலைத்தோம்
வேறுபல வரலாற்றைப் படித்து நம்மை நாமறியவும் மறந்தோம்;

அலுவலிலிருந்து அரசியலமைப்புவரை
இன்றும் வலிக்கிறது அடிமைத்தனம்,
எதிர்த்துக் கேட்க வரும்தீவிரவாதப் பட்டத்தில்
பயந்து முடங்கிக் கொள்கிறது – அன்று
வாளெடுத்துச் சுழற்றிய நம்
பச்சைத் தமிழரின் வீரம்..

பகைவரை அடையாளம் காணத் துணியாத
அறிவில்
பகல்வேசக் காரர்கள் பதவியேற்று
நல்லோராய்த் திகழும் நாலுபேரின் முகத்தில்
கரிபூசும் அவலத்தில் மகிழவில்லை மனசு – நாம் பெற்ற
குடியரசையெண்ணி..

ஒருபக்கம் சாயும் தராசின்
சமபலத்தை
பணக்கட்டுகள் தாங்கிப்பிடிக்கும் அவலம் மாற
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம்
கண்ணுள்ள
குருடராய் வாழ்வோமோ(?)

ஓரிடம் வெளிச்சமும் வேறிடம் இருட்டுமாக
இருக்குமொரு பரப்பில்
கேட்க நாதியற்று சாகும்
பல உயிர்களின் இழப்பில்
எங்கிருந்து நிலைக்கிறதந்த
சமத்துவத்தின் தோற்கா வெற்றி?

நீருக்குச் சண்டை
மின் நெருப்புக்குப் போட்டி
யாருக்கு என்ன ஆனாலும் ஆகவிட்டுச் சேர்க்கும்
சொத்துக் கணக்கை வெறுக்கும்
மக்கள் பற்றியெல்லாம் ஒரு சிந்தையுமில்லாது வெல்லுமொரு
அரசியல் கூட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்
எம் சமகாலக் கூட்டம், சிந்திய ரத்தத்தின் வலியை மட்டுமே
மிச்சப்படுத்தி
கைக்கு குச்சிமிட்டாய் கொடுத்து கொடி ஏற்றுகையில்
விடுதலைக்காக உயிர்விட்ட தியாக நெஞ்சங்கள்
மீண்டுமொரு முறை சாகக் கேட்டு
நமைச் சபிக்குமோயெனும் பயமெனக்கு..

எம் பெண்கள் வீசிய வாளில் சொட்டிய
ரத்தமும்
இளம்பிஞ்சுகள் அறுபட்ட கழுத்தில் கசிந்த வீரமும்
என் தாத்தாக்கள் தடியெடுத்து நடந்த
சுதந்திரக் காற்று நோக்கியப் பயணமும்
இன்னும் முடிவுற்றிடாததொரு ஏக்கமெனக்கு..

கொதிக்கும் உலையின் அடிநெருப்பாகவே
அன்று சுதந்திரம் இருந்தது, உணர்வுகளை
மிதிக்கும் கால்களின் தலை நசுக்கி
விடுதலை யாசித்தபோது
அஹிம்சை அன்று ஆயுதமாக முளைத்தது,

இன்று அகிம்சையின் வழித்தடங்களையும்
விற்கத் துணிந்த
வியாபார உத்தியின் மனோபாவத்தில்
நம் அத்தனை போராட்ட உணர்வும்
அடிப்பட்டே கிடக்கிறது..

விடுதலைக்காக
தகித்த அன்றைய வேள்வியிலிருந்து
துளிர்த்த எம் போராட்டத்தின் விதைகள்
வெறும்
துண்டாடப்பட்டுக் கிடக்கின்றன..

சிந்திய ரத்தம் அத்தனைக்கும் அர்த்தம்
சுதந்திரம் சுதந்திரமொன்றே என்று
வெள்ளையன் அன்று நீட்டியத் துப்பாக்கிக்கெல்லாம்
மார்பு காட்டிய வேகத்தை
வெறும் கொடி மட்டும் ஏற்றி மறக்கிறோம்;

விரைத்து திமிர்ந்த மார்பில்
அடிவாங்கி அடிவாங்கிச் சொன்ன வந்தேமாதரமின்று
திரும்பிநின்று நமைப் பார்த்துச் சிரிக்கையிலும்
கையுயர்த்தி தனதுதேசம் தனதுதேசமென்றே நம்பி இன்றும்
வந்தேமாதரமென்றே முழங்குமொரு இனம்
கேட்பாரன்றி சுட்டு வீழ்த்தப் பட்டதின் நினைவில்
வலிக்கிறதுதான் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதான
அந்த எண்ணம்;

சுதந்திரமெனில் என்ன?

கட்டப்பட்ட வெள்ளையக் கைகளின்
கட்டுகளைத் தகர்த்து வெளியேற்றி
தன் மண்ணில் தான் நடைபோடுவது எனில்;
நடக்கையில் தடுக்கும் மாற்றுக் கை எதுவாயினும்
மீண்டும் தகர்க்குமந்த கோபம்
உணர்வு சுட பொங்கியெழ வேண்டாமா?

என் கண்முன்னே எனைச் சார்ந்தோரை
அடிக்கும் கைகளை முறிக்கா என் தேசத்தின்
விலங்கு உடைபடும் நாள்
என் விடுதலை நாளெனில்,
அதற்கென சுமக்கும் உணர்வுகளில் ஜெயிக்குமொரு தினம்
என் குடியரசை நானும் –
முழுமையாக பெருமொரு நாளாகுமோ?

அடிமைத் தீ சுட்டுயெரித்த
இடமெங்கும் தாகம் தாகம்
சுதந்திர தாகமென்று தவித்த அந்த நாட்களின் வலிநீளும்
ஒரு மண்ணின் மைந்தர்களென்று
நமை நாம் நினைக்கையில்
ஒன்றுசேர்ந்துப் பெற்ற சுதந்திரமின்று
வேறு கைகளில் மட்டுமிருக்கும் வேதனையை
ஆற்றமுடியவில்லைதான்..

என்றாலும் –
இன்று சிலிர்க்கும் அழகின் காற்றுவெளியில்
இடைநிறுத்தாத கொடிகள் அசையும் தருணத்தில்
கண்ணீரின் ஈரம் காயாவிட்டாலும்
எம் வீரத் தியாகிகளை நினைவுகூறும்
நன்றிசெலுத்தும் நன்னாளின் மகிழ்வாக
பட்டொளி வீசிப் பறக்குமந்த தேசியக்கொடிக்கு
என் தாயகமண்ணின் முழு விடுதலையை மனதில் சுமந்த
வீர வணக்கமும்
தீரா கனவுகளின் மிச்ச வலியும்..
———————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    முதலில் குடியரசு தினம் கொண்டாடும் மகிழ்வில் நான் எந்த ஒரு குற்றத்தையும் காணவில்லை என்பதை அறிவிக்கிறேன். சுதந்திரம் பற்றிய நன்றியுணர்வில் எனது பங்கும் மகிழ்வும் நெஞ்சம் நிறைத்து உண்டு. தெருவில் இறங்கினாலே பல சட்டங்களை கடுமையாக தாங்கித் திரியும் பல நாடுகளைச் சுற்றி வரும் எனக்கு நம் தேசத்து அருமையும் விடுதலை என்பதன் பூரிப்பும் தெரியாமலில்லை. என்றாலும் ஒட்டுமொத்த ஜனநாயகமாக எண்ணி நமைப் பார்க்கையில்; வாங்கிய சுதந்திரத்தை இன்று நாம் எப்படி வைத்துள்ளோம், எங்ஙனம் அவமதிக்கிறோம், அதை நாம் எவ்வாறு பாகுபாடோடு பங்குபோட்டுக் கொண்டு பேருக்கு எங்கள் இந்தியா என்று உசுப்பேத்தி வாழ்கிறோம் என்பதான கேள்வியின் கணைகள் ஒரு சமதர்ம உணர்வினை உலுக்கி ஒரு ஏமாற்ற மயக்கத்தை ஏற்படுத்துகையில் அது வலிக்கிறது.

    அதன் பொருட்டு எனக்கு உள்ளூறாத மகிழ்வை வெளிப்படுத்தி எனது மண்ணை முழுக்க விடுதலையின் உண்மை தேசமாய் மாற்றிக் கேட்கும் உரிமையும் எனக்குண்டு என்பதை முன்வைத்து அத்தகைய வருத்தம் மட்டுமே எனது என்றாலும்; அதையும் கடந்து நாம் எப்பாடுபட்டு வாங்கிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பத்தில் அதிக அக்கறையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம், எல்லோரும் சமமாக நலமாக வாழும் வண்ணம், எல்லோரும் அடிமைத்தலையில் அகப்படாவண்ணம் நமது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வோம் எனும் வேண்டுதலோடு எனது குடியரசு தினம் பற்றிய மகிழ்வையும் எல்லோருக்குமான உலகம் தாங்கிய எம் இனத்திற்கான விடுதலையினை வெல்லும் வாழ்த்தினையும் இவ்வேளையில் தெரிவித்து –

    பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடியின் மண்ணைச் சார்ந்த ஒரு குடிமகனின் கடமையாக என் தாயகத்திற்குரிய வணக்கத்தையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்..

    உறவுகள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களும் குறையா அன்பும்..

    வித்யாசாகர்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s