உன் முகம் தீய்ந்த தீயில்
அமிலங்கள்
நெஞ்சில் சுரக்கின்றன
வாழ்நாளின் பக்கங்கள்
கண்ணீரில் கடக்கின்றன;
சமூகத்தின் குற்றத்தில்
காதலும் கைதானதே –
தான் தைத்த நாகரிகச் சட்டையை
தன் கையால்
கிழித்துப் போட்டதே;
கண்ணில் தூசெனில்
துடிக்கும் கரங்களிரண்டில்
கசங்கிப் போய் வீழ்ந்தவளே
இன்று காணாமல் போனதேன்…?
காலத்தின் தீர்ப்பில்
கலையும் மைவாங்கி
வாழ்க்கையை திருத்த எண்ணி
உன் குரலை சாட்சி வைத்தவள்
உயிரையா விட்டுப் போவாய்..?
வினோதினி என்றும்
வித்யா என்றும்
உயிர்கள்
சொட்டு சொட்டாய்
சொட்டு சொட்டாய்
கொப்பளித்து கொப்பளித்து வடிந்த ரத்தத்தில்
காதல்’ அமிலத்தினும் காரமனதே, வாழ்க்கை
பெண்ணைப் பெற்றவர்க்குச் சாபமானதே;
ஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை
உடம்பெல்லாம் தாங்கி
உயிர்வலிக்க வலிக்க
நீ முனங்கிய முனகல்களில்
எரித்தவனின் கையை விட
அவனை அப்படிவளர்த்த இச் சமுகத்தின் கைகளுக்கே
அதிகம் வலித்திருக்கக் கூடும்..
இனி யாருக்கு வலித்து
யாருக்கென்ன லாபம்
நீ போனவள் போனவளில்லையா?
எரிந்தவள்
சாம்பல் தானில்லையா.. ?
ஆனால்
பெண்ணைப் பெற்றவளுக்கு
அடி வயிற்றில் எரியும் நெருப்பொன்று உண்டு
தோள்மீது தாங்கியவனுக்கு
மார்மீது சுடும் தீயொன்று உண்டு
அது இனி எல்லோருள்ளும் சுடர்விட்டு எரியும்
காட்டுத் தீயேனப் பரவி
அவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்
அவர்களின் மரணத்தில் –
இனி உனைப்போன்ற வினோதினிகளும் வித்யாக்களும்
காப்பாற்றப் படலாம்..
————————————————————————
வித்யாசாகர்
உங்கள் கவிதை வரிகளின் நாங்களும் கசிந்துருகினோம்.
வினோதினிகளும், வித்யாக்களும் நிச்சயம் காப்பாற்றப் பட வேண்டியவர்களே.
இவர்களது அகால மரணங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ண வேண்டும்.
உங்கள் கவிதை படித்து மனம் தவித்துப் போய்விட்டது.
அமிலத்தில் தோய்ந்துப் போகும் முகங்களை வலியோடு எழுத்துக்களில் சேகரிக்கிறேன். முகங்களின் எண்ணிக்கை நீள்கின்றன, கவிதை நெடியதொரு வலியோடு நின்றுக்கொள்கிறது..
வேறென்ன செய்ய உணர்வுகளில் உழும் மனதைச் சேகரித்து இத்தகைய கொடூரங்களை நடவாமல் தவிர்க்க முயல்வோம் சகோதரி..
உண்மைக்காதல் நம்முடன் இல்லையென்றாலும் காதலியை வாழவைக்கும். உடலை மட்டுமே நேசிப்பவனே உயிரையும் எடுக்கிறான். அமிலத்தையும் வீசுகின்றான்…
எப்படித் தான் மனம் வருகிறதோ ஐயா. ஒரு பூ பறிக்கக் கூட அஞ்சுமொரு இனம். மரமும் செடியுமென் ஜாதி என்று சொன்னவனின் இனம் இன்று இப்படி அறிவு கெட்டு அலைவதை நினைக்கையில் அவர்களை அப்படி வளர்த்த, அல்லது அப்படி அவர்கள் வளர காரணமான சமூகமான நம் மீதே எனக்கு கோபம பொங்கி வருகிறது. முதலில் நம்மை மனதால் திருத்திக் கொண்டு, அதோடு பிறரையும் சரி செய்வோம். அதன் பயனாக எதிர்கால பெண்குழந்தைகள் அமிலத்திலிருந்து எஞ்சி வளமோடு வாழட்டும்…
உங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றியும் வணக்கமும் ஐயா..