நாங்களெல்லாம் அப்போது
சிறுவர்களாக இருந்த சமையமது
அம்மா இல்லாத வீட்டை எங்களுக்கு
பிடிப்பதேயில்லை
அம்மா இல்லாத அந்த வீடு
இருண்டுப் போன மாதிரியிருக்கும்
யாருமேயில்லாமல்
தனித்துவிடப்பட்டதொரு படபடப்பில்
எல்லோரும் அமர்ந்திருப்போம்
இரவு நெருங்கநெருங்க
மனசு அம்மா அம்மா என்று ஏங்கும்
எனக்குக் கொஞ்சம் அழுகைவர
தம்பிகளும் அழுதுவிடுவார்களோ என்றஞ்சி
அழுகையை அடக்கிக் கொள்வேன்
என்றாலும் சற்று நேரத்தில் தம்பியோ தங்கையோ
அழ ஆரம்பித்துவிடுவார்கள்
அம்மா அம்மா என்று
அழுதுகொண்டே நாங்கள் ஐவரும் வந்து
தெருவில் அமர்ந்துக் கொள்வோம்
எங்களோடு அப்பாவும் வந்து
அமர்ந்துக் கொள்வார்
அம்மாயில்லாத வீடு அவருக்குக் கூட
இருட்டாகத் தான் இருந்திருக்கும் போல்
எல்லோரும் அப்பா மடிமீதும் தோள்மீதும்
சாய்ந்துக் கொள்ள
நாங்கள் தெருமுனையில் அம்மா வருவார்களா என்றே
பார்த்து அமர்ந்திருப்போம்..
திடீரென ஒரு தருணத்தில்
அம்மா அந்த முனையில் திரும்பி
தெருக் கோடியில்
வருவது தெரியும்
கூட்டிலிருந்து குஞ்சுகள் ஓடி
தாய்ப்பறவையின் அலகைக் கொத்தி
உணவைப் பிடுங்குவதைப் போல
நாங்களெல்லோரும் ஓடி அம்மாவின்
கால்களை கட்டிக் கொள்வோம்
அம்மா இயன்றவரை தங்கையை
தம்பியை
யாரேனும் ஒருவரைத் தூக்கிக் கொள்ள
சற்று தூரத்திற்கெல்லாம்
அப்பாவும் எழுந்துவந்து பைகளை வாங்கிக்கொள்ள
அம்மா அப்பாவை கடிந்துக்கொள்வாள்
கொஞ்சம் கடைத்தெரு போய்வருவதற்குள் இப்படியா
செய்வீர்கள் ?
வீட்டிற்குள் அமர்ந்தால்தானென்ன
பார் ஒரு விளக்குக் கூட ஏற்றி வைக்கவில்லை
எல்லாம் போட்டது போட்டபடியே இருக்கே என்பாள்
சற்று கடிந்துதான் கொள்வாள்
அம்மாவிற்கு அப்போதெல்லாம்
நாங்கள் எடுத்துச் சொன்னதில்லை
அம்மா இல்லாத வீட்டில் எங்களுக்கு விளக்கோ வெளிச்சமோ
தேவைப் பட்டிருக்கவில்லை என்பதை..
————————————————–
வித்யாசாகர்
Reblogged this on kunjo's Blog.
LikeLike
அம்மா ஆண்டவன் எழுதியக் கவிதை; உலகில் வாழுகின்ற கடவுள், உயிர்த்துளிக்கு உள்ளே வைத்து உருவம் கொடுத்த சிற்பி..
வாழ்த்துக்கள் கவியே!!
LikeLike
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா.. அம்மா என்று சொல்ல சொல்ல உள்ளினிக்கும் அந்த சுகம்; மரணம் வரை வேண்டும், அல்லது அது இல்லாதுப் போகும் நாளில் இல்லாமலே போகவேண்டும்…
LikeLike
மிக்க நன்றியும் அன்பும் தண்டபாணி.. தொடர்ந்து வரவும், படைப்புக்களைப் படித்து கருத்திடவும்.. வணக்கம்!!
LikeLike
மின் மினிப்பூச்சி மாதிரி அம்மாவுடன், தாய்மை ஏர்பட்டவுடன் உடன் பிறக்கும் ஒளி அது. ஒளி இல்லாத போது அருமை தெறியவரும்.
LikeLike
ஆஹா, நல்ல மேற்கோள் சகோதரி. அவர் இருக்கும் போதே கூட அவரின் அருமையை உணர்கிறேன். ஆனாலும் மூப்பைத் தான் என்னால் தொலைக்க முடிவதில்லையே..
எதுவாயினும் இறைவன் செயல்… சகோதரி!!
LikeLike