குண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் உணர்வுள்ள சித்திரமிது இந்த “மதராசப் பட்டினம்”.
கல்லுடைத்து கிட்டிய பணத்தை வீடுவாங்க சேமித்தவனின் வெற்றியைப் போல, உயிர் கொன்று தலைகளைச் சேகரித்த வெள்ளையனின் அடிமைத் தனத்தை தகர்க்க ஒரு கிராமம் பட்ட அவஸ்தையின் வழியே முழு பட்டணத்தின் வாழ்க்கையையும், இரு இதயங்களின் துடிப்பையும் மீட்டெடுத்து எத்தனைமுறை பார்த்தாலும் கண்கலங்கும் காட்சிகளால் நம் இதயத்தில் இடம் கொண்டுவிடும் வெற்றி இந்த மதராசப் பட்டிணம்.
நெஞ்சறுக்கும் ராகம், உணர்வினை துல்லியமாக வெளிப்படுத்துமிசை, பார்வையில் பிரம்மிப்பை ஒருவித படபடப்பினை ஏற்படுத்தும் அந்நாளைய நகர்தலின் காட்சிப் பதிவுகள், பார்க்க பார்க்கச் சிலிர்க்கும் துடிக்கவைக்கும் வசனங்கள், அடுத்தடுத்த காட்சியின் நகர்விற்கிடையே நெஞ்சத்தைப் பதறவைக்கும் திரைக்கதை, ஆள் தேர்வு மற்றும் யதார்த்தம் குலையா சண்டைக் காட்சிகளென நமை நூறாண்டுகளுக்கு முன்னே கொண்டுச்சென்று மண்ணின் காதலையும் விடுதலையின் வேள்வி தகித்த பாரத்தையும் விழி சிவக்கச் சிவக்க பார்க்கவைக்கும் படமிது, இந்த மதராசப் பட்டினம்.
ஒரு தேசத்தின் வெற்றி எதுவாக இருக்கும்? இருநூற்று ஐம்பது வருடத்திற்கும் மேலாக அடிமைப்பட்டுக் கிடந்ததோடல்லாமல் ஆள்பவனின் கையால் கழுத்தறுந்துப் போன கொடூர நாட்களின் விளிம்பில் கிடைத்தச் சுதந்திரம் எத்தகைய கனம் மிக்கது? என்பதையெல்லாம் அந்த வெள்ளையத் துரையை அடித்துவீழ்த்தி ஒரு ஊரையே கதாநாயகன் வெல்லுமொரு காட்சியில் தமிழரை கம்பீரமாய்ப் பதிவுசெய்துவைத்திருக்கிறார் இயக்குனர் திரு. விஜய்.
சுதந்திரம் என்பது என்ன? அதை அடையும்போது நாம் எப்படி புது உணர்வினால் பூத்துப் போயிருப்போம்? கண்ணற்றவனுக்கு கண் வந்ததைவிட, உயிரில்லா பிணத்திற்கு உயிர் வந்ததைவிட, என் நாட்டிற்கு சுதந்திரம் வந்தபோது நாம் எத்தனைப் பூரித்துப் போயிருப்போம் எனுமுணர்வை புதுரத்தம் பாய உடம்பெல்லாம் சிலிர்க்குமொரு காட்சியில் காட்டுகிறார்; அப்பப்பா ஒரு நொடி நமை நிகழ்காலத்திலிருந்துப் அந்த போராட்டக் களத்திற்கே கொண்டுச் செல்கிறது இந்தத் திரைப்படம்.
சுதந்திரம் சுதந்திரமென்று உயிர் பல கொடுத்தும் ஓயாத பலரின் தொடர் போராட்டத்தில் வெள்ளையரின் மனம் மாறுகிறது. இனியும் இங்கே இருந்துப் பயனில்லை என்றுக் கருதி நம் மண்ணை நம்மிடமே விட்டுப் போக முடிவெடுத்து இரவு பன்னிரண்டு மணிக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவிக்கின்றனர். இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு தேசத்தின் விடியல் வரப்போகிறது. தியாகிகளெல்லாம் கொடி பிடித்துக் கொண்டு வந்தேமாதரம் வந்தே மாதரமென்றுச் சொல்லி, மாலையில் கூடடையும் குருவிகளைப் போல ஒரு கொடிக்கம்பத்தின் கீழ்வந்து அமர்கின்றனர். கொடியின் நிழலென மக்கள் வெள்ளம நெருங்கி அமர்ந்திருக்க சிலர் நின்றுகொண்டும் சிலர் நடந்துகொண்டுமென கூட்டம் கூட்டமாக பரபரத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த கூட்டத்தின் நடுவே கதாநாயகனைத் தேடி அலைகிறாள் நாயகி.
இவனொரு புறம், அவளொரு புறமென்று ஒருவரையொருவர் தேடியலைய வெள்ளையக் கழுகுகள் அந்த அன்பிதயங்களை சுடுவதற்கென்றே பின் துரத்திவர, வானவேடிக்கைகளெல்லாம் அழகு நட்சத்திரங்களைப் போல் மின்னி விழ, சுதந்திரகீதம் காற்றில் கலக்கிறது, தேசியக் கொடி மடிப்பு பிரிந்து பூச்சொரிந்து பட்டொளி வீசிப் பறக்கிறது, விடுதலை விடுதலை என்று உள்ளம் கோஷமிட்டுக் கொள்கிறது. நாயகனும் நாயகியும் பார்க்கிறார்கள், கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீரோடு காதலாய் கரைகிறார்கள், வெள்ளையக் கூட்டம் பின்னே துரத்திக் கொண்டு ஓடி வருகிறது, சிங்கத்தைக் கண்டு உயிர்பிழைக்க ஓடும் மான்களைப் போல தன் காதலை வாழ்விக்க எண்ணி அந்த இரண்டு ஜீவன்களும் ஓடி ஓடி ஒளிகின்றன. ஆக, ஒருபுறம் காதல், மறுபுறம் தேசத்தின் விடுதலை வேட்கை தீரும் கணமென ஒரு சில மணித் துளிகளுக்கு நமை ஜென்மம் தொலைக்கச் செய்து விடுகிறது இந்த மதராசப் பட்டினம்..
வந்தேமாதரத்தின் வலி என்ன, வந்தேமாதரம் என்பதன் பலமென்ன, ஒரு தேசியக்கொடி குத்திக்கொள்ளும் நெஞ்சின் மீது படர்ந்திருக்கும் இத்தேசத்தின் விடுதலையானது எப்படி காக்கத்தக்கது என்பதையெல்லாம் ரசம் குறையாது பல காட்சிகளுக்கிடையே காட்டுகிறார் இயக்குனர்.
இசையின் லாவகத்தில் அசையும் நாயகியின் கால்களில் சலங்கைக்கு பதில் மேற்கத்திய இசை வந்து ஒட்டிக் கொள்கிறது அந்த ஆங்கிலப் பாடலின் போது. இன்னொரு காதலூறும் தருணங்களின் ஒரு காட்சியில் கதாநாயகியைப் நீ நாளை பெரியவளாகிவிட்டால் என்னவாக வருவாய் என்று சிறுவர்கள் கேட்க அவள் தனது கனவுகளை வார்த்தைகளில் உதிர்க்கிறாள். வெறுமனே வானமளப்பேன், பூமி பிளப்பேன், கடலைக் குடிப்பேன் என்பது போல வண்ண வண்ணக் கனவுகளை காதலின் பிஞ்சுக் கரத்தின் மீது வாரிக் குவிக்கிறாள். அந்தச் சுமைகளை தன் உழைப்பினால் தாங்கி மெய்யாக்குமொரு லட்சிய இளைஞனின் வெற்றியாக முடிகிறது இந்தத் திரைப்படம்.
அவளின் ஆசையை அவன் மெய்யாக்கும் காட்சிகளை கடைசியில் துரையம்மா இலவச மருத்துவமனை, துரையம்மா கல்லூரி, துரையம்மா முதியோர் இல்லம், துரையம்மா சேவை மைய்யமென எல்லாவற்றையுமே நாயகி எமி ஜாக்சனின் பெயரில் செய்துவைக்க, கடைசியில் தன் உயிரை விடவேண்டி நம் மதராஸ் மண்ணில் மீண்டும் கால்பதிக்கிறாள் வயது முதிர்ந்து தோள் சுருங்கி கண்கள் இடுக்கிக் கொண்ட அந்த கதாநாயகி.
காதல் அப்படி என்ன செய்துவிடும் என்று கேட்போர் இருப்பின், உண்மைக் காதல் இதெல்லாம் செய்யுமென்று ஒரு பரிசுத்த அன்பின் மெச்சுதலக இந்தத் திரைப்படத்தை உதாரணம் காண்பிக்கலாம் போல்.
வாழப் பிறந்த மனிதன், இல்லை இல்லை சாகப் பிறந்த மனிதன் வாழும் காலத்தில் சாதிக்க எத்தனையோ உண்டென்பதற்கும் இந்தத் திரைப்படம் முழு சாட்சியாக நிலைக்கிறது.
காலச்சுழற்சியினால் வேறொருவரை மணந்துக்கொண்டப் பிறகும், தனது விதியை நொந்தவாறு காதலனைத் தேடி, தான் அன்று மெய்யுனர்வோடு வாழ்ந்த அதே மண்ணின் மாண்பை தரிசிக்க, தமிழகத்தின் அதே அன்றைய தேதியில் அவர்கள் ஆண்ட மண்ணின் தெருவெல்லாம் அலைகிறாள் அந்த வயதான கதாநாயகி.
நமக்கு அவளை பார்க்கப் பார்க்க மனதை யாரோ மென்றுத் துப்புவதுபோல் ஆகிறது. நகரும் ஒவ்வொரு காட்சியிளும் அந்த மூதாட்டியின் கண்கள் திரைமுன் அமர்ந்திருப்பவர்களிடம் சப்தமின்றி பேசுகிறது. கவலையை அடக்கிக் கொண்டு மனதார தவிக்கும் காதலுணர்வை மானசீகமாய் வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் அந்த மூதாட்டி வாழ்ந்திருக்கிறார். சில இடங்கள் என்பதை விட பல இடங்களில் மனது கனத்துதான் போகிறது.
ஆக எப்படியோ கடைசியில் எல்லா திரைப்படங்களைப் போன்று இப்படமும் முடிந்து வெளியே வருகையில்; தனது மண் மீது ஒரு காதலும், காதலின் அவதூறுகள் அறுபடும் தெளிவும், தெளிந்த ஞானத்தில் ஒளிரும் மண்ணுமாய் நம் மாண்பு ஒரு படி மேலேறி நின்றுகொள்கிறது மனதிற்குள்.
அதிலும் ஆர்யா வெறும் சினிமாக் காரராகத் தெரியவில்லை, ஒரு சாதனை மனிதராகவும், துரையய்யாவாகவுமே தெரிகிறார். உண்மையில் கதாபாத்திரம் மனதில் நின்று வாழும் தரமே இயக்குனரின் வெற்றியும் மற்றும் இப்படத்தில் நடித்த மொத்த கலைஞர்களின் வெற்றியும் என்றால் அது மிகையில்லை. ஒலிப்பதிவு, இசை, ஒப்பனைகள், கட்டடக் களை வசனம் சண்டைக் காட்சிகள் நடனம் என எல்லாவற்றிலுமே சோடை போயிடாததொரு தரமான திரைப்படத்தை தந்த இயக்குனருக்கு இத்தேசத்தின் ஒரு பிடி மண்ணின் மதிப்பை பரிசாகத் தரலாம்.
என்றாலும், இதயம் கனத்துப் போகும் முடிவில் மனசு காதலை சுவாசித்து, விடுதலைத் தேடும் கண்களை இருகமூடி, விழும் ஒரு சொட்டுக் கண்ணீரில் உணர்வுகள் மறுத்து மனசு நனைய திரையரங்கம் விட்டு வெளியே வருகையில் துரையம்மா மனசெல்லாம் வியாபித்துக் கொள்கிறாள்..
அந்த துரையம்மாவை சுமந்த மனசு ஒன்று இதே சென்னையில் காற்றோடு காற்றாகக் கலந்து மதராசப் பட்டினத்தின் பாடல்களை முனுமுனுத்துக் கொண்டேயிருக்கும் காலத்திற்கும் என்பதில் துளி ஐயமுமில்லை..
அங்ஙனம் எனக்குள் கேட்பதான அந்த சப்தத்தின் நன்றியோடு இயக்குனர் விஜய்க்கும், மற்றும் அவரோடு இணைந்து இதிரைப்படத்தைச் செய்த அனைத்துக் கலைஞர்களுக்கும், கலைத் தொழிலாளர்களுக்கும் மொத்த காதலின் நன்மையையும் சமர்ப்பித்து, ஒரு சுதந்திர தாகத்தின் துடிப்பில் உறைந்திருக்கும் அடிமன நன்றியையும் கூறி, நிறைவோடு வாழ்த்திடுவோம்..
வணக்கமும் காதலின் ஈரம் காயாத அன்பும்..
வித்யாசாகர்
மதராசப் பட்டினம் பட விமர்சனப் புகைப்படங்கள் அனைத்தும் கூடல்.காமிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகும். மிக்க நன்றி.
LikeLike
நான் இந்தப் படம் பார்க்கவில்லை; ஆனால் படம் உங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு உங்கள் விமர்சனத்தின் நேர்த்தியில் தெரிகிறது..
LikeLike
நன்றி ஐயா, விமர்சனம் எனும் பெயரில் முழு கதையைச் சொல்வதைக் காட்டிலும் அது பாதித்த உணர்வுகளைப் பதிந்து வைப்பதையே சரி என்று எண்ணுகிறேன். அதன்மூலம், பொழுது போக்கிற்கானது கலை என்பதை’ பொழுதை ஆக்கக் கூடியதாக மாற்றும் முயற்சியாகவே இது போன்ற விமர்சனங்கள் எழுதப் படுகிறது..
LikeLike