கழிவுநீரில் களவுபோன மனிதம்..

ந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம்
அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது
கால்களங்கே தானே நகர்கிறது
உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் – நாசியை
துளைக்கிறது,
குடல் புரண்டுவிடுமளவின் வாடையில்
மூக்கை
மோவாயய்
மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள்
பார்ப்பேன்;

தலைநனையக் குனிந்து
அலுமினியச் சட்டியில்
தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும்
உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த
வயதானவர்
இருக்கிறாராயென்று பார்ப்பேன்;

இன்று வேறொருவர் தெரிந்தார்
ஐயோ பாவம் ‘சிறுவனாயிற்றே!!’ என்று மனசுப் பதறியது
முகத்தை வெளிவாங்கிக் கொண்டு
தூரம் ஒதுங்கிக் கொண்டதும்
அந்த சிறுவன் எழுந்து வெளியே வந்தான்

நான் சற்று தூரம் ஒதுங்கிப் போக
அவன் என்னருகே வந்து “என்ன ஐயா என்றான்

அவர் எங்கே அந்த பெரியவரென்றேன்
அவர் போனமுறை
வேறொரு பழந் தொட்டியில்
இறங்கி அடைப்பெடுத்தபோது விஷவாயு அடித்து
இறந்துப் போனாரென்றான்

‘கடவுளே!!
அப்போ உனக்குப் பட்டால் என்னாகும் ?
நீயென்ன செய்வாய்.. ?’ என்றேன்

‘எங்கள் உயிருக்கு இந்நாட்டில் ஏதையா விலை,
பட்டாலென்ன இறந்துப்போவேன்
வேறென்ன’ என்றான்

எனக்குத் தலை சுற்றியது
நான் விருட்டென்று நடந்து
வீடுநோக்கி வந்தேன்
கால்கழுவிக்கொள்ள
முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது

என் மனைவி நான் சப்தமின்றி
வேகமாக உள்நுழைந்ததன்பொருட்டு
வெளியே ஓடிவந்து –
‘என்னங்க
ஏதேனும் பிரச்சனையா..’ என்றாள்

‘இல்லை இல்லை அ…’

‘என்னாச்சுங்க ஏன் முகமிப்படி… (?)’

‘இல்லைம்மா அவன் செத்துட்டானாம்’ என்றுசொல்ல
என்னால் முடியவில்லை

‘எவன் யார்
எத்தனைப் பேரோ (?) ஐயோ கடவுளே!!!!!!’

‘என்னங்க என்னாச்சுங்க சொல்லுங்க..’

‘அதலாம் ஒன்னுமில்லை
நீ போ போய் ஒரு குச்சி கொண்டுவா’ என்றேன்

அவள் நீள குச்சொன்றைக்
கொண்டுவந்தாள்
நான் வேட்டியைக் கழற்றி யெறிந்துவிட்டு
கால்சட்டையோடு தெருவிற்கு வந்தேன்
மனைவி கைப்பிடித்துத் தடுக்க
கையைத் தட்டிவிட்டேன்
சற்றுநேரத்தில் சாக்கடைக்குள் இறங்கி
அடைப்பையெடுக்க நானும்
என் மனைவியும் தயாரானோம்

மூக்கைப் பிடித்துக்கொண்டு
உள்ளே இறங்கினேன்
கழிவுநீருள் மூழ்கியதும்
தீண்டாமையின் பாவங்கள் பெருக்கெடுத்து
நாற்றமாக
நெஞ்சையடைத்தது

அடக்கிக் கொண்டு
அடைப்பைத் துழாவியதும்
சாக்கடையிலேயே மாய்ந்த தலைமுறையொன்றின்
உயிர்கள் வந்து
புழுக்களாக உடம்பைச் சீண்டின

அடைப்பினைக் குச்சிவைத்து குத்தி
இழுத்ததும்
பீறிட்டு வந்த சாக்கடையின் வேகத்திற்கு
நானும் மேலேறி
மேல்மூச்சு கீழ்மூச்சி விட

‘ஐயோ போதும் வாங்க’ என்று
மனைவி பதைபதைத்தாள்

‘எப்பையும் நீயே இறங்கி எடுப்பியா ?’
அருகிலிருந்த குரல்கள் பிறர் வாயிலிருந்து
வந்துவிழ,

‘உள்ளிறங்கும் பயத்தில்
அடைந்துப்போகாதவண்ணம்
பார்த்துக் கொள்வோமில்லையா’ என்றேன்

‘எத்தனைநாளைக்குன்னு பார்ப்போம்’ என்றனர்
நம் சனம் அந்த சாக்கடையிலிருந்து
வெளிவரும் வரையென நான் சொல்லிக்கொள்ளவில்லை

தலைவழியே கழிவுகள் வழிந்து
எச்சினுள் கலந்தது
காரி தூ தூ வென வெளியே உமிழ்ந்தேன்

ஒரு கறைபடிந்த
மனிதச் சாலை அந்த உளிழ்நீரில்
நனைந்து சுத்தப் பட்டுப் போகட்டுமென எண்ணி எண்ணி
உமிழ்ந்தேன்

‘யோவ் எதிர்க்க ஆள் வரது தெரியலையா
மூதேவி’ என்று திட்டிக் கொண்டுப் போனார்
ஒருவர்

‘ஆமாய்யா
இதுதான் மிச்சமா இருந்தது
இதிலும் கைவெச்சிட்டீங்களா (?)
நாங்கல்லாம் எப்படிய்யா பொழைக்கிறது?’ என்றார்
இன்னொருவர்

நான் மூடியிருந்த கண்களை
அழுந்த வழித்துப் போட்டுக்கொண்டு
என் மனைவியைப் பார்த்து ‘மனிதம்
எப்படி களவுபோயிருக்கிறது பார்த்தாயா’ என்றேன்

அவள் ‘வீட்டினுள் போகலாம் வாங்க’ என்று
கைபிடித்து இழுத்தாள்
நானும் நகர அவளும் நகர
இருவரும்
வீட்டினுள் போனோம்

‘உடம்பெல்லாம் பதறுதேங்க
ஏதேனும் ஆகப்போகுதோ தெரியலையே,
அவுங்கல்லாம் விஷயம் தெரிந்தவங்கங்க
நம்மளால..’

‘விடும்மா..
அவுங்களுக்குத் தெரியவேண்டிய விஷயமின்னும்
வேறென்னென்னவோ நிறையயிருக்கு,
அதை யவர்கள் தெரிந்துகொள்ளட்டும்,

நீ வா.. வந்து தண்ணியெடுத்து ஊத்து
இந்த ஜென்மத்தின்
பலிகொடுத்த பாவத்தை எல்லாம் கழுவனும்’ என்றேன்

அவள் தண்ணீரெடுத்து
பித்தளை வாளியில் ஊற்றிக் கொண்டிருந்தாள்
உடம்பெல்லாம் ஒட்டியத் துணி உடம்புச் சூட்டில்
காய்ந்துகொண்டிருக்க
நான் அசையாமல்
மனிதவாடை பட்டும் இறவாது –
என் மீது நிண்டிக் கொண்டிருக்கும் சில
சாக்கடைப் பூச்சிகளை பார்த்துகொண்டிருந்தேன்

உடம்பெல்லாம் நடுநடுங்கியது
அவள் சுடுநீர் கொண்டுவந்து
வாளியில் மீண்டும் ஊற்ற
அதன் நீராவி மேலெழுந்து குளியலறையெங்கும் பரவியது

நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்

‘ஒருவேளை, அந்த பெரியவருடைய ஆத்மா
இனியாவது சாந்தி அடையலாம்,
அல்லது ஒருவேளை நாளையிந்த
கழிவுநீர்த் தொட்டியில்
மீண்டும் விஷவாயு சேருமெனில் அது
என்னை மட்டுமே கொல்லலாம்

அந்தச் சிறுவர்கள் இனி
மெல்ல  பிழைத்துக்கொள்வார்கள்..
—————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கழிவுநீரில் களவுபோன மனிதம்..

  1. mahalakshmivijayan சொல்கிறார்:

    சக மனிதர்களை, மனிதர்களே,மதிக்கவில்லை எனில், வேறு யார் மதிக்க போகிறார்கள்! பலரை, சிந்திக்க வைக்கும் பதிவு!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி சகோதரி. நிச்சயம் இதில் மாற்றம் வேண்டும். இங்கெல்லாம் அவரவர் வீட்டை அவரவர் சுத்தம் செய்துக் கொள்கிறோம். தவிர இரண்டுமூன்று தினங்களுக்குள் தவறாது துப்புரவு தொழிலாளர்கள் வந்து “வேக்கம் லாரி டேங்கர் மூலம்” தொடர்ந்து எடுத்துவிடுவார்கள். அவ்வப்பொழுது கழிவுநீரினைக் கூட சோதனை செய்கின்றனர். கோளிபார்ம், பி.எச் அளவு, எண்ணெய் பிசுகு என எல்லாவற்றிற்கும் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை மீறிப் போனால் கழிவு நீர் எடுப்பதை ரத்து செய்துவிடுகிறார்கள். KEPA (Kuwait Environmental Public Authority) யின் நியதிகளின் படி கழிவுநீர் வரம்பிற்குட்பட்டு இருக்கிறதா என்பதைப் பார்க்க நிறுவனங்களில் கூட வருடத்திற்கு ஒருமுறை சோதனை நடக்கிறது.

      இதெல்லாம் இதுபோன்ற சிறிய நாடுகளில் சாத்தியம் நமது இந்தியதேசம் போன்ற கோடான கொடி மக்கள் தொகையுள்ள இடத்தில் அவ்வளவு நேர்த்தியாக நடக்காது என்பதை எல்லாம் புரியமுடிகிறது. ஆனால் ஏற்கமுடியவில்லை. என்னதான் புரிந்தாலும் மனிதம் என்ற உண்டு உண்டுதானே, தலை மூழ்கி சாக்கடைக்குள் இறங்கி புழுக்கள் மொய்க்க தூர் வாறுவது, அடைப்பெடுப்பது, கழிவுகளை கையில் வாரிக் கொட்டுவது போன்றதையெல்லாம் எப்படி சகித்துக் கொள்வது. அதிலும் ஒருவர் மாறி ஒருவரென அந்தக் குடும்பமே அதைத் தான் செய்யவேண்டும் என்பதை எல்லாம் மாற்றத் தானே வேண்டும்? எல்லாவற்றிற்கும் எந்திரம் வந்து விட்டது, அதலாம் பயன்படுத்த அரசு ஆவன செய்யலாம். நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நாம் பழகிக் கொள்ளலாம். எவராயினும் மனிதர் தானே என்பதைப் புரிந்து அது போன்ற வேலைகளைச் செய்வதைத் தடுக்க முயற்சிக்கலாம். அப்படி ஒரு அவசியம் வந்தால் கழிவுநீர் வெளியேற்றம் செய்துவிட்டு பெரிய சவுல் வைத்து உரிய பாதுகாப்பு கவசங்களோடு தூர்வாறலாம் எதிரம் மூலம் அடைப்பெடுக்கலாம். வேக்கம் சிஸ்டம் பயன்படுத்தலாம். மாற்றம் என்பது நம் கையில் தான் உள்ளது. உடனே நாளைக்கே இல்லையென்றாலும் மெல்ல மெல்லவேனும் நாம் தான் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்.

      நம் சுற்றம் நம் மக்கள் நமது சக மனிதர் நம்மால் பாதிக்கின்றனர் எனில் அதைத் தவிற்பதற்கான யோசனையைச் செய்து ஒரு சரியான வழியை செய்துக்கொள்ளவேண்டியது நம் சமுதாயக் கடமையாக இருப்பதை சற்று முன்வைக்கவே எனது சிற்றறிவுக்கு எட்டிய இப்பதிவு சகோதரி.

      ரொம்பநாளாக மனதை உறுத்தியது. பல மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டப் போதிலும் இந்நிலை முற்றிலும் மாறிடாததை எண்ணி மனது குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது, எல்லோரின் கவனத்திற்கும் கொண்டுவரவேண்டி எதையேனும் எழுதுவோம் என்று சில நாட்களுக்கு முன் எழுதியது..

      உணர்வு புரிந்தமைக்கு மிக்க நன்றியும் வணக்கமும் சகோதரி..

      Like

  2. munu. sivasankaran சொல்கிறார்:

    veraik kalaiyaamal vishach sedi azhiyaathu..!

    Like

பின்னூட்டமொன்றை இடுக