1
மருத்துவர் சொல்கிறார்
உப்பு சேர்க்கக்கூடாதாம்
சர்க்கரையை விஷம்போலெண்ணி
ஒதுக்கிவிடவேண்டுமாம்
காரம் கூடவேக் கூடாதாம் –
வேறென்ன சமைப்பாள் எனக்காக
என் மனைவி ?
ஒரு சொட்டுக் கண்ணீரை
விடுவாள்…
கண்ணீரின் ஈரத்தில்
கடக்கிறதென் காலம்..
——————————————————————-
2
பொதுவாக
எல்லோரும் வாழ்த்தும்போது
நூறாயுசு என்று வாழ்த்துவார்கள்
இந்த மனித ஜென்மங்களோடு
நூறு வருடம் வேறு தேவையா என்று நினைப்பேன்
வெயிலில் வற்றிப்போன
குளம்போல –
இப்போதெல்லாம் உயிர்ப்பிற்கான நாட்களை
மாத்திரைகள் தின்று வருகின்றன
நானும்
மனிதர்களோடு நெருங்கி வாழும் ஆசையில்
மருத்துவர் சொல்லும்படியெல்லாம்
கேட்கிறேன்
மரணம் கடைசியில்
யார் சொல்வதைக் கேட்குமோ…
——————————————————————-
3
அந்த ஜன்னல் கம்பிகளின்
வழியேப் பார்த்தவாறு
சுவரருகில் நிற்கிறேன்
வெளியே பறக்கும் பறவைகளுக்கு
மாத்திரை மருந்துப் பற்றியெல்லாம்
கவலையிருக்கப் போவதில்லை
எனக்குண்டு
மாத்திரைகளால் விடும் மூச்சு
என் மூச்சு
மின்சாரத்தில் எரியும்
விளக்கைப் போல
மாத்திரைகளில் ஒளிரும் நிலவு நான்;
ஒரு நாள்
மாத்திரையோ
மாத்திரைக்குப் பணமோ
அல்லது நானோ இல்லாமல் போகலாம்
அப்போதும் வெளியே
பறவைகள் பறக்கும்
ஜன்னலின் வழியே ஒளிரும் நிலவு தெரியும்
ஒரு விளக்கு எனக்காகவும் எரியும்!!
——————————————————————-
வித்யாசாகர்
நீங்கள் வாழ்வது ஆழிசூழ் உலகம் அல்லவே…
அது.. அன்புசூழ் உலகம்….!
மருத்துவர்கள்…மாத்திரைகள் ….
மரணத்ததை மறைத்துவைக்கும் மா…திரைகள் …!
தூரப்பார்வைக்காரர்களுக்கு…துலங்காமல் போகலாம்..!
அது உமக்கெதற்கு..
ஞானப்பர்வைக்கு …நமன் நிழலும் நடுங்குமன்றோ ..!
மனவுறுதிக்கு நீர்தானே….மருந்தருள்வீர் …?
கணக்கில்லையே..உம் கைப்பிடித்து எழுந்தவர்க்கு ..!
துணுக்குற்றேன்..உமது துவளுகின்ற கவிதைக்கு…
புண்பட்டோர்…நெஞ்சத்தில் நீர் பூசிவிட்டத் தைலக் கவிதைகள்
பொன்பட்டுத் துகிலினிலே பொதிந்துவைக்கும் தரமன்றோ …!
பண்பட்ட மனத்தோனே…
அன்புக் கூட்டுக்குள் அடைபட்ட என் உறவே….!
கண்பட்டா போவான் நீர் கைதொழுத கடவுள்..?
கலங்காதீர்…கலங்காதீர்…!
கலங்கரைவிளக்கமே …
கரை சேர்ப்பதுதானே.. உம பணி …?
கண்ணீர்த்துளிகள் உப்புமட்டும் கரிப்பதில்லை..!
உமக்காக உயிரையும் கரைக்குமன்றோ ..?
ஆழிசூழ் உலகமல்ல..உம உலகம்..
அது அன்புசூழ் உலகம்..!
LikeLike
என் தாயவள் இந்தக் கவிதையைப் பார்த்திருந்தால் எனைப் பெற்ற வயிறு கருக எப்படித் துடித்திருப்பாளென்று உங்களின் மனப்புண் நெடிக்கும் எழுத்தின் வாசனையில் புரிகிறது ஐயா. இந்த அன்பு எனது உயிர்விளக்கின் எண்ணெய்யை எரிவிக்கும் வேண்டியக் காலத்திற்குமென்று நம்பிக் கொள்கிறேன் ஐயா. நன்றியும் நிறைய அன்பும்..
LikeLike
matthiraikal yarukku udalai nesikkum manitharkalukku.nam ullam parkkum manudarkal.madrai tamil sankathil andavanai kelvi kettavan kavingan.namrkkum kudiyallam namanai anjom.
LikeLike
நன்றி ஐயா, உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தை தருகிறது. நலமொடுள்ளோம் தற்போது.. பெருத்த அன்பும் வணக்கமும் ஐயா!!
LikeLike