ஒவ்வொரு எரியும் தீக்குச்சியாய்
விளக்கேற்றி விட்டு
அணைந்துவிடுகின்றனர்
உழைப்பாளிகள்;
எடுக்கும் பணத்தின் நன்றிகளையும்
வட்டிக்கு விட்டுவிட்டு
உழைப்பவர்களின் ரத்தத்தில் நீந்தி
தலைமுறைகளைக் கடந்துவிடுகிறார்கள்
முதலாளித்துவ அட்டைகள்;
மூக்கடையும் சாக்கடையில்
உயிர்மிதக்கும் கனவுகளுக்கு
பொறுப்பில்லா கயமைதனத்தை
எண்ணவும் மறுக்கிறது
சமுதாயம்;
குடித்துமிழும் சாராயத்தின்
எச்சில் நோண்டி
நாற்றமென்று
முகம்பொத்திக் கொள்கிறது
மனிதம் தொலைக்கும் மக்கள் கூட்டம்;
வியர்வையில் நிலம் நனைத்து
பயிர்வளர்க்கும் விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்கயியலாச் சிம்மாசனத்திலமர
தேர்தல் போட்டிநடத்தி வென்றவரின் திசைநோக்கியே
சாய்ந்துகிடக்கிறது அரசியல் தராசுகள்;
ரவுடிகளின் கத்தியில்
அறுக்கப்படும் கழுத்தையும்
அதிகாரிகளின் தோட்டாக்களால்
துளையிடப்படும் அநீதியையும்
பணமாக்குகின்றன பல ஊடகங்கள்;
செருப்பு தைக்கும் மனிதனையும்
செருப்பு விற்கும் மனிதனையும்
செருப்பு வாங்கும் மனிதனையும்
இடம் மாற்றி இடம் மாற்றி; தீண்டாமையை
ஒழிக்கவிடாமலே நகைக்கிறது காலம்;
பக்தியை காசுக்கு ஆக்கி
படிப்பை வாசிக்க விற்று
மருத்துவத்தில் கட்டிடங்கள் எழும்பி
மனிதத்தை விலைபேசுகிறது நாகரிகம்,
மறுபடியும் மறுபடியும் சிந்துகிறது ஏழைகளின் வியர்வை;
இணையத்தில் இதயங்களை காட்டி
எதிர்படுகையில் முகம் திருப்பிக் கொண்டு
தட்டச்சு சப்தத்தில் உடல்வளர்க்கிறது
நட்பும் காதலும் –
தட்டிக்கொடுத்துப் பெருக்கின்றன பணக்கார முதலைகள்;
ஆக வானந்தொடும் வெற்றிகளுக்கடியில்
பூமி நனைக்கும் தொழிலாளிகளின்
உழைப்பைச் சுரண்டும் உலகமே’ உலகத்தீரே’
உமக்கென் மேதின சாபங்கள்
இவ்வருடமும் உரித்தாகட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்