7)
சோர்வென்பது மனதின் வீழ்ச்சிதானன்றி வேறில்லை. உடைந்த சுவற்றில் வரையும் சித்திரம் முழுமையில்லாது போகலாம் ஆனால் அர்த்தமில்லாது போய்விடாது. முயற்சிப்பவருக்கு மூச்சுக்காற்று கூட ஆயுதம் தான். கத்தி இருந்தும் துப்பாக்கி இருந்தும் தோற்ற மனிதர்களின் எண்ணற்ற வரலாற்றுக் காகிதத்தில் சர்க்கரை மடித்து வாங்கிச்சென்றதை நாம் மறுப்பதற்கில்லை. வென்றவனுக்குச் சாட்சி கேட்பவர்கள் கண்ணாடியை உற்று நோக்குவதில்லை. காலங்காலமாகப் போராடும் அலைகள் சற்று மூச்சிரைத்துக் கொள்ளக் கூட ஓய்வு கொண்டதில்லை. பாவம் நமக்குத் தான் எட்டு பத்து மணிநேரத்து தூக்கத்தைக் கடந்தும் ஓய்வு தேவைப்படுகிறது. நடக்கத் துவங்கும் முன்பே மனதால் சோர்ந்துப்போகிறோம். உழைப்பதற்கு பதிலாக ஆசைகளைச் சேகரித்துக்கொண்டு கனவுகளால் மூச்சுவாங்கி நிற்கிறோம். சாதிப்பதற்கு உடல்பலத்தை விடவும் மனபலம் அதிகம் தேவைப்படுகிறது என்பதை உணருகையில் உற்சாகம் ஊற்றெனப் பிறக்கிறது. சாதிக்க வேறென்னவேண்டும்; காற்றடித்தப் பையிற்கிணங்க நம்பிக்கையடைத்த மனவுறுதி போதுமென்பதையுணர தலையில் தயிர்க்கூடைச் சுமந்துச்செல்லும் பாட்டியின் வீங்கியக் கால்களை கண்டால் புரிபவர்கள் மிகையாகக் குறைந்துப்போகிறோம்..
சற்று யோசித்துப் பாருங்கள்; அவசரமாகச் சிறுநீர் கழிக்க வரும். உடனே போகவேண்டும்போல உந்தித்தள்ளும். அதேநேரம் நடக்கும் ஏதேனும் வேறு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அது மறந்து வெகுநேரம் கடந்துவிடும். மீண்டும் நினைவு வருகையில் ஓ அப்போதே போக நினைத்தோமே என்று நினைத்துக் கொள்வோம். அதுபோல் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குப் போவோம், சாப்பிடக்கொடுத்த மருந்தைக்கூட குழந்தை சாப்பிட்டிருக்காது, ஆனால் மருத்துவமனை சென்றுவந்ததும் அதிகபட்ச குழந்தைகள் விளையாடத் துவங்கிவிட்டிருக்கும். காரணம் குழந்தைகள் நம்பிவிடுகிறது; நம்மை உடம்பு சரியாகவேண்டி பெற்றோர் எங்கோ கூட்டிப்போய் வந்தனரென்று. மனசும் அப்படித் தான், நம்பி விடுகையில் சோர்வைக் காரி வெளியே உமிழ்ந்துவிடுகிறது. உடம்பை உசுப்பேத்தி உசுப்பேத்தி வெல்ல தயார்செய்துவிடுகிறது. ஆறடி தாண்டவேப் போராடும் நமக்கு மத்தியில் இருபத்தியிரண்டடி தாண்டி உலக வெள்ளிக் கோப்பையை வென்ற அஞ்சுஜார்ச் நமக்கெல்லாம் உதாரணமாக வேண்டாமா? உண்மையில் எதையும் வென்றுதீர்க்க உடம்பு தேவைதான், அதேநேரம், உடம்பு இயங்க எண்ணமும்’ எண்ணத்தை சீர்படுத்தி தன்னை முன்செலுத்தும் அறிவும்’ அறிவு நம்பும் மனதும்கூட சோர்வைக் களைந்து வாழ்க்கையை நாம் விரும்பத் தக்க வகுத்துத் தருகிறது என்பதையும் புரிதல் வேண்டும்.
முதலில், செய்யவேண்டிய எதையும் செய்யமுடியுமென்று நம்புங்கள். மனதால் சோர்ந்துவிடும் முன் முயன்று ஒரு அடியையேனும் முன்னெடுத்து வையுங்கள். பிறகு பாருங்கள் பத்தடி நடக்கவும் உடம்பு தானே தன்னை தயாராக்கிக்கொள்ளும்; சோர்வு நூறடிக்கு நமைவிட்டு விலகிப் போகும்..
போக வாழ்த்துக்கள்..
வித்யாசாகர்